அப்துல் ரகுமானின் பால்வீதி வெளியும்... நானும்...

பால்வெளிக்குப் பிறகான அப்துல் ரகுமான் உருவம் பிம்பங்களோடு உறைந்ததோ என்று நான் ஐயப்படுவதுண்டு. அவரை ஆராதித்தவர்கள் எழுப்பும் குரல்கள் வெற்று ஆரவாரத்தோடு இருப்பன அல்ல! என்பதைப் பலமுறை உணர்ந்திருக்கிறேன்
அப்துல் ரகுமானின் பால்வீதி வெளியும்... நானும்...


  
பள்ளியிறுதி, கல்லூரிப்பருவத்தில் வானம்பாடிக் கவிதைகள் அலங்கார மொழியில் வசீகரித்த காலம். வானம்பாடிகளின் குரல் திராவிட அரசியலின் அடுக்குமொழியில் இடதுசாரி சிந்தனாவாதிகளின் கலகக்குரல் என்று ஒரு கணிப்பு எனக்குள் இருந்தது.

வானம்பாடிக்கு ஒரு பொதுமுகம் இருந்தது, அதில் தன் முகத்தைத் கரைத்தவர்களை உணர்ந்த தருணங்களில்... கரையாத இரு முகங்கள் தனித்துத் தெரிந்தன அது அபி மற்றும் அப்துல் ரகுமான். வானம்பாடியில் எழுதியவர்கள் எல்லோரும் வானம்பாடிக் கவிஞர்களாகவே இருக்க வேண்டிய அவசியம் இல்லை, என்று துவக்கத்தில் வானம்பாடிப் பக்கங்கள் வடித்திருந்த, சொல்லோவியம் வழங்கிய பொதுப்புத்தி ஓவியத்தை உடைத்தவர்கள் இவ்விருவரும். இருந்தும் இருவரின் பாடுபொருளிலும், மொழியிலும், வெளிப்பாட்டிலும் தனிப்பாணியைக் கொண்டவர்களாக இருந்தனர். ஒருகோட்டில் பயணிப்பவர்களாகக் காட்சியானதேயில்லை. என் இப்புரிதல் அவர்கள் வார்த்தைகளிலியே பின்னர் வந்தது. “எனக்கும் வானம்பாடிக்கும் ஸ்தானப்பிராப்தம் இல்லை” என்றார் அபி. “நான் வானம்பாடிக்கவிஞன் அல்லன் வாணியம்பாடிக் கவிஞன்” என்று பகன்ற அப்துல் ரகுமான் நேற்று (02.07.2017) தம் மூச்சை அடக்கிக் கொண்டார்.

அப்துல் ரகுமானின் “பால்வீதி” இட்டுச் சென்ற தடம் புறவயமாக இயங்கிய வானம்பாடியின் பொதுமொழியில் இருந்து விலகிய அகவெளியின் தடம். அது ஒவ்வொரு செயலிலும் அகத்தேடுதலை முன்நிறுத்தியது. அகரம்வெளியீடான ‘பால்வீதி’ தொகுப்பு கவிஞர் பிரம்மராஜனின் வரைகோடு ஓவியத்தால் அலங்கரிக்கப் பட்டிருந்தது. வார்த்தைகளில் ஊடாடும் பொருளைத் தேடியும், கண்டடைந்த பொருளை கருப்பும், மஞ்சளும் கோடுகளாய் அலைந்த அட்டை ஒவியத்திலும், சிவப்பில் தீட்டிய உள்ளோவியத்திலும் தேடிய பெருமதிப்பு வாய்ந்த நாட்கள் அவை.     

தம் நிகழ்காலத்தைக் குறித்து சதா நினைவூட்டும் எழுத்துக்களைத் தருபவராக அப்துல் ரகுமான் காட்சியளித்தார். அவரது எழுத்துக்கள் நிகழ்காலத்தின் கயமை, வெக்கை, காதல், தற்குறிப்புத்தனம், சாடல், நெகிழ்சி, நேயம் என விரிந்த அவரது பால்வீதிச் சித்திரங்கள் நிகழ்காலத்தின் சாட்சிகளாக உறைந்தவை. நிகழ்காலத்தின் சாட்சிகளாக மாறியதாலேயே கவிதை மொழி மீயதார்த்தத்துக்குள் பயணம் செய்தது. அப்பயணம் ஒன்றும் கட்டாயமல்ல தான்; ஆனால் இவருக்கு நிகழ்ந்தது. அது அங்கதச் சுவையை வடித்து, உணர்வுகள் துடுக்குற உணர்ச்சிகளில் ஏற்றியது அதுவே பின்னர் மீமெய்யியலுக்குள்ளும் பயணப்பட்டது; தத்துவக் கவிதைகளாக. 

பால்வீதிக்குப் பிறகான அப்துல் ரகுமான் உருவம் பிம்பங்களோடு உறைந்ததோ என்று நான் ஐயப்படுவதுண்டு. அவரை ஆராதித்தவர்கள் எழுப்பும் குரல்கள் வெற்று ஆரவாரத்தோடு இருப்பன அல்ல! என்பதைப் பலமுறை உணர்ந்திருக்கிறேன். ஆராதித்த குரல்கள் எனக்குள் மறுவாசிப்பை உணர்த்திச் செல்லவும் தவறியதில்லை. இருந்தும் நான் மறுவாசிப்பைச் செய்யாத குற்றமிழைத்தவனாகவே இந்நிமிடம் வரை இருக்கிறேன். ஒரு சந்தர்ப்பத்தில் போகிறபோக்கில் காதில் விழுந்த ஆராதித்த குரலொன்று “அலங்காரமான கவித்துவம்” என்றது. இத்தொடர் வழங்கிய அடையாளம் அப்துல் ரகுமானுக்குச் சரியாகப் பொருந்தியிருந்தது. பிற்காலத்தில் கவிதை உருவத்தில் ஹைகூ, கஸல், ஓசையின் நஜ்ம் வடிவம் என வழங்கிய அவரது முயற்சிகள்; அல்லது வழங்கிய பரிசோதனைகள் அவரது கவிதையியலிலும் தமிழ் மொழியிலும் செய்துள்ள தாக்கங்கள் குறித்து ஆராயப்பட வேண்டும்.

நிகழ்காலம் வழங்கிக் கொண்டிருக்கும் பிம்பங்களை அகற்றிய அரூபமான புரிதல் அவரது மார்க்சியப்பள்ளி வழக்கிய கொடையென்றால், பொதுத்தளத்தில், பொதுமக்களோடு உறவாடிய மொழி திராவிட அரசியல் மொழியின் தாக்கம் கூடியது. இவரது மரபுக்கும் புதுமைக்கும் இடையிலான ஊடாட்டம் நெசவாளியின் கைகளில் புழங்கும், ஊடிழை, பாவிழை போன்றது. அது அங்கொருகால், இங்கொருகால் என்ற ஊசலாட்டமன்று. அடுக்குமொழியில் கோசங்கள் நீங்கிய, காணல் நம்பிக்கைப் பிம்பங்களை வழங்காத கவிதைசெய்து கவிதைக்கு புதியதடம் போட்ட அப்துல் ரகுமானின் குரலைக் கேட்க விரும்பும் காதுகள் இனி கொடுத்துவைத்திருக்கப் போவதில்லை என்ற நிஜத்தை அவர் மரணத்தின் மூலம் காலம் தன்னை எழுதிக்கொண்டுள்ளது. 

“இந்த உலகம் நம்முடையதல்ல. நாமும் இந்த உலகத்திற்கு உரியவர்கள் அல்லர்”, (இது சிறகுகளின்நேரம், பாகம்-2) ஒரு தத்துவத்தின் கீற்று என நினைத்த தொடர், மரணம் உருவாக்கிய வெற்றிடத்தில் புதியதாக அறைந்து தாக்குகிறது இன்று.

- த. பார்த்திபன் (thagadoorparthiban@gmail.com)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com