என்றாவது ஒருநாள், மாஞ்சி தன் அம்மாவைத் தேடி இந்தியா வந்தால்... அம்மாவென யாரைக் காட்டுவீர்கள் மருத்துவர்களே?!

கருமுட்டையை தானம் வழங்கிய தனது அன்னை யார்? என்ற ரகசியம் மாஞ்சிக்காக உடைபடும் சாத்தியம் உண்டா?
என்றாவது ஒருநாள், மாஞ்சி தன் அம்மாவைத் தேடி இந்தியா வந்தால்... அம்மாவென யாரைக் காட்டுவீர்கள் மருத்துவர்களே?!

மலையாளப் பத்திரிகையாளர் பிரஜேஷ்ஸென் என்பவரது ‘வாடகைத் தொட்டில்’ எனும் கட்டுரைத் தொகுப்பில் தான் நான் முதல் முறையாக மாஞ்சியின் கதையை வாசித்தேன். யூமா வாசுகியின் அருமையான மொழிபெயர்ப்பில் ‘மாஞ்சி’யை வாசிக்கும் போது, அவள் நம் மனதை உருக்கி ‘நான் யாரையாவது அம்மாவென்று அழைக்கிறேனே’ எனக் கெஞ்சுவது போலான சித்திரம் தோன்றி சில மணி நேரங்களுக்காவது நம்மைத் தூங்க விடாமல் செய்து விடுகிறது. யார் இந்த மாஞ்சி?!

மிஞ்சிப் போனால் மாஞ்சிக்கு இப்போது 8 அல்லது 9 வயதிருக்கலாம். சின்னஞ்சிறுமி. இப்போது அவள் தன் தந்தையோடும், தந்தை வழிப் பாட்டியோடும் ஜப்பானில் வாழ்ந்து கொண்டிருப்பாள். வாழ்வது ஜப்பான் ஆனாலும் பிறந்ததென்னவோ இந்தியாவில் தான். அன்றைய தினம் அவளுக்கு மிக, மிகத் துரதிருஷ்டமான ஒரு நாளாக அமைந்திருந்தது.  2008 ஆம் ஆண்டு, ஜூலை 25 ஆம் நாள் குஜராத் மாநிலம், ஆனந்தில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையின் குளிர் நிரம்பிய பிரசவ அறையில் வாடகைத் தாயின் வயிற்றிலிருந்து அறுவை சிகிச்சை மூலம் வெளியிலெடுக்கப் படுகையில் மாஞ்சிக்குத் தெரிந்திருக்கவில்லை தான் அம்மா என்று அழைக்க வேண்டிய ஒரு உயிரை இந்த பூமியில் என்றென்றைக்குமாக தான் கண்டடையப் போவதே இல்லை என்று. ஆம் மாஞ்சியின் நிஜமான அம்மா... அதாவது பயலாஜிகல் மதர் யாரென்று மாஞ்சிக்கு மட்டுமில்லை அவளது அப்பாவுக்கும் தான் தெரியாது! 

30 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தியாவில் அம்மா என்றால் அந்த உறவு ஒரே ஒருவரை மட்டுமே குறிக்கும். அதாவது... ரத்த உறவின் அடிப்படையில் பெற்றெடுத்த அம்மா மட்டுமே அம்மா. மன்னர்கள் காலத்தில் செவிலித் தாய்கள் இருந்தார்கள், குழந்தைப் பாக்கியம் இல்லாதோர் சிலர் குழந்தையை தத்தெடுத்துக் கொண்டு வளர்ப்பு அம்மா ஆனார்கள். சட்ட ரீதியாக இவர்களை லீகல் மதர் என்று குறிப்பிடுகிறார்கள். இந்த சோதனைக் குழாய் குழந்தை கலாச்சாரம் வளர்ந்த பிறகு மேற்கண்ட 3 அம்மாக்களைத் தாண்டி ‘வாடகை அம்மா’ என்றொரு வார்த்தைப் பிரயோகம் புதிதாகத் தோன்றியது. சட்ட ரீதியாக இவர்களது பெயர் ‘சரோகேட் மதர்’. 

ஆக இன்றைய நிலையில்... நமது இந்திய வாழ்க்கை முறையில் 4 விதமான அம்மாக்களுக்கு இடமுண்டு. பிள்ளைப் பெற்றுக் கொள்ள முடிபவர்கள் ‘பயலாஜிக்கல் மதர்கள்’ ஆகிறார்கள், குழந்தைப் பேறு இல்லை, சோதனைக் குழாய் குழந்தைக்காக பட வேண்டிய அயற்சிகளை எல்லாம் தாங்க முடியாது, பேசாமல் ஒரு குழந்தையை தத்தெடுத்துக் கொள்ளலாம் என்று முன் வருபவர்கள்  தங்கள் குழந்தைக்கு ‘லீகல் மதர்கள்’ ஆகிறார்கள். பெரும் பணக்காரர்கள் விபத்திலோ, அல்லது விவாகரத்திலோ தாயை இழக்கவோ, பிரியவோ நேர்ந்தால் வளர்ப்புத் தாய்க்கு அவசியம் வரும். அதாவது செவிலித் தாய்கள். இவர்களைத் தாண்டி, குழந்தை இல்லாத தம்பதிக்காக, தான் ஒரு குழந்தையை 10 மாதம் வயிற்றில் சுமந்து பெற்றுத் தரத் தயார் எனத் தனது கருப்பையை வாடகைக்கு விட முன் வரும் இளம் தாய்மார்கள் ‘வாடகை அம்மாக்கள்’ ஆகிறார்கள். அதாவது ‘சரோகேட் மதர்’!

இதில் என்ன சோகம் என்றால், மாஞ்சிக்கு இந்த 4 விதமான அம்மாக்களுமே அவள் இந்த பூமியில் பிறந்த விழுந்த தினத்தில் கைகொடுக்கவில்லை என்பது தான். இந்த 2017 ஆம் ஆண்டுக்குள்... மாஞ்சிக்கு இப்போதாவது ஒரு வளர்ப்பு அம்மாவோ அல்லது லீகல் மதரோ, ஸ்டெப் மதரோ கிடைத்திருக்கலாம். ஆனால் ஒரு சிசு பிறந்த மறுநொடியில் ஏங்கி எதிர்பார்க்கும் தாயின் கதகதப்பு மாஞ்சிக்கு கிடைக்கவே இல்லை என்பது தான் அவளது கதையின் மிகப்பெரும் சோகம்.

ஜப்பான், டோக்கியோவைச் சேர்ந்த டாக்டர் இக்ஃபுமி யமதாவும், அவரது மனைவி யூகி யமதாவும் குழந்தைப் பேறு இல்லாதவர்கள். அவர்கள் ‘ஆரோக்கியச் சுற்றுலா’ என்ற பெயரில் இந்தியாவுக்கு வந்து குஜராத், ஆனந்த் நகரில் இருக்கும் ஒரு பிரபல தனியார் ஃபெர்டிலிட்டி மருத்துவமனை வாயிலாக சோதனைக் குழாய் முறையில் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என முடிவெடுத்தார்கள். அதன்படி இந்தியாவுக்கு வந்து மருத்துவமனை நிர்வாகத்துடன் ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொண்டார்கள். இதற்காக மருத்துவமனையில் இக்ஃபுமி மற்றும் அவரது மனைவி யூகியிடம் இருந்து கருமுட்டைகளும், விந்தணுக்களும் பெறப்பட்டு, அவற்றில் திறன் மிகுந்தவை மிக மெல்லிய கண்ணாடி ஊசி மூலம் ஒன்று சேர்க்கப் பட்டு வெற்றிகரமான கருவாகி பாதுகாப்பில் வைக்கப் பட்டது. சோதனைக் குழாய் குழந்தைப் பேற்றில் கருமுட்டையும், விந்தணுக்களும் இப்படி சேகரிக்கப் பட்ட பின்னரே மூலத் தாய், தந்தையின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற வாடகைத் தாயை தேடும் பணியைத் தொடங்குகிறார்கள். இவர்கள் விசயத்திலும் அப்படித் தான். மருத்துவமனை ஆய்வறையில், மைனஸ் 190 டிகிரி வெப்பநிலையில் திரவ நைட்ரஜனில் சேகரிக்கப் பட்டு  ‘இந்தியன் மேட்’ என்று விவரச் சீட்டு எழுதப்பட்டு, பாதுகாப்பில் வைக்கப்பட்டது இவர்களிடமிருந்து உருவான ஜப்பானியக் கரு.

அதிகம் நாட்களைக் கடத்தாமல் குஜராத்தில் தன் வறுமையோடும், வயதான கணவரோடும் போராடிக் கொண்டிருந்த பிரீத்தி பென் மேத்தா எனும் அழகான இளம்பெண், பணம் பெற்றுக் கொண்டு,  ஜப்பானியக் கருவை 10 மாதங்கள் வயிற்றில் சுமந்து பெற்றுத் தர முன் வந்தாள். இப்போது மருத்துவமனை நிர்வாகத்துக்கும், ஜப்பானியத் தம்பதிக்கும் இடையில் மீண்டும் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. கருவை வாடகைத்தாயின் கருப்பையில் சேர்ப்பதிலிருந்து தொடங்கி, குழந்தைப்பேறு முடிந்து ஒரு மாத காலம் வரையிலான செலவுத் தொகைகளை மூலத் தாய், தந்தையர் தவணைமுறையில் செலுத்துவது என ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. இது வரையில் எல்லாம் சரியே! இதற்குப் பிறகு தான் அந்த சிசுவின் வாழ்வில் புயலடிக்கத் தொடங்கியது.

இப்போது மருத்துவமனை ஒப்பந்தத்தை ஏற்று தங்களது கருவை அவர்களது பராமரிப்பில் கண்ணாடிக் குழாயில் விட்டு விட்டு ஜப்பானியத் தம்பதியினர் தங்கள் ஊருக்குத் திரும்பி விட்டார்கள். பல கட்டச் சோதனைகளுக்குப் பிறகு பாதுகாப்பாக சோதனைக் குழாயில் இருந்து இடம் மாற்றப்பட்ட ஜப்பானியக் கரு, இப்போது பிரீத்தி பென் வயிற்றில் ஆரோக்கியமாக வளரத் தொடங்குகிறது. 10 மாதங்களில் தான் ஒரு அழகான குழந்தைக்கு தகப்பன் என்ற கனவில், டாக்டர் இக்ஃபுமி யமதாவுக்கு சந்தோசம் தாங்கவில்லை. ஆனால் ஏனோ தெரியவில்லை ஊர் திரும்பியதிலிருந்து அவரது மனைவி யூகி சகஜமாகவே இல்லை. சின்னச் சின்ன விசயங்களுக்கெல்லாம் இருவருக்குமிடையே சண்டை வந்து ஓய்ந்தது, அப்படி ஒரு சச்சரவின் இடையில் யூகி தன் கணவரின் மீது சாட்டிய குற்றச்சாட்டு, அவர்களை விவாகரத்து வரை செல்லத் தூண்டியது. யூகியின் குற்றச்சாட்டு என்னவென்றால்... ‘தன் கணவர், தன்னால் ஒரு குழந்தைக்குத் தாயாக முடியாது என்பதால், தனது கருமுட்டைகளுக்குப் பதிலாக மருத்துவமனையில் வேறு யாரோ ஒரு பெண்ணிடமிருந்து பெறப்பட்ட கருமுட்டைகளோடு, அவரது விந்தணுக்களை இணைத்து கரு உருவாக்கச் சொல்லி அனுமதி தந்து தன்னை இவ்விசயத்தில் ஏமாற்றி விட்டார்’ என்பதே. மனைவியின் குற்றச்சாட்டை டாக்டர் இக்ஃபுமி மறுத்தாலும் கூட... ஒரு கட்டத்தில் சண்டை வலுத்து, யூகி அவரிடமிருந்து விவாகரத்து பெற்று, பிரிந்து விடுகிறார்.

சரியாக இந்த நேரத்தில் தான் இங்கே 2008, ஜூலை 25 ல் ப்ரீத்தி பென்னுக்கு இந்தியாவில் பிரசவம் ஆகிறது. ஜப்பானியக் குழந்தை பிறக்கிறது. ஒவ்வொரு தாய்மையும், பிரசவ வலியைத் தாண்டி, உடனடியாக ஸ்பரிசிக்கத் துடிப்பது, பிறந்து விழுந்த தனது குழந்தையின் மெத்தென்ற உடல் சூட்டைத் தான். ஆப்ரேஷன் தியேட்டரின் அரை மயக்க நிலையிலும், உடனிருக்கும் குழந்தைகள் நல மருத்துவர் தூக்கிக் காட்டும் பச்சிளம் சிசுவின் தரிசனம் கண்டு புன்னகை தோய்ந்த முகத்துடன் அதைத் தொட்டு தடவியவாறு மீண்டும் ஆழ் மயக்கத்துக்குச் செல்லும் எத்தனையோ அம்மாக்களை நாமறிவோம். இயல்பான தாய்மையின் வெளிப்பாடு அது. ஆனால் வாடகை அம்மாக்களுக்கும் இப்படித் தான் இருந்தாக வேண்டுமென்பதில்லையோ என்னவோ?! அல்லது மருத்துவமனை நிர்வாகம் அவளை அப்படிச் செய்ய அனுமதிக்கவில்லையோ என்னவோ? பிறந்த சிசு உடனே வேறு ஒரு காப்பக அறைக்கு மாற்றப்பட்டு, செவிலியர் பாதுகாப்பில் வைக்கப்பட்டது என்று தான் கட்டுரையில் விவரித்திருக்கிறார்கள். அந்தக் குழந்தை தான் மாஞ்சி.

மாஞ்சி பிறந்த தகவல், முறைப்படியும், சட்டப்படியும் அவரது மூலத் தந்தையான டாக்டர் இக்ஃபுமிக்கு அறிவிக்கப் பட்டது. இக்ஃபுமிக்கு விவாகரத்து ஆகி விட்டதால் மனைவியின்றி இந்தியா வந்தார். நமது இந்தியச் சட்டப்படி மனைவியில்லாமல் ஒரு ஆண், தனக்கே பிறந்திருந்தாலும், அந்தக் குழந்தையை தனது சொந்த ஊருக்கு கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. வேறு வழியின்றி குழந்தையைப் பராமரிக்க இக்ஃபுமி தனது தாயாரை ஜப்பானில் இருந்து வரவழைத்து மருத்துவமனையில் விட்டு விட்டு, குழந்தையுடன் நாடு திரும்பும் அனுமதிக்காக இந்திய நீதிமன்றத்தின் படிகளில் ஏறி, இறங்கத் தொடங்கினார். அப்போது வழக்கு விவகாரங்களுக்காக சூட்டப்பட்டது தான்  ‘மாஞ்சி யமதா’ என்ற பெயர். மாஞ்சி பிறந்த அன்று வாடகை அம்மாவின் ஸ்பரிசத்தை உணர்ந்தவளில்லை. பிறந்து ஜப்பானுக்குத் திரும்பும் முன்னே அவளது லீகல் மதர் என்று கருதப்பட்ட யூகியும் விவாகரத்துப் பெற்று ஒதுங்கி விட, தந்தை வழிப் பாட்டியின் ஸ்பரிசம் தான் மாஞ்சிக்கு கிடைத்த முதல் பாசமான ஸ்பரிசமாக இருந்திருக்கக் கூடும். அதுவும் கூட எப்போது? வழக்கு விசாரணைகள் அனைத்தும் முடிந்து காப்பகத்தில் வைக்கப் பட்ட குழந்தை உரியவர்களுக்கு வழங்கப்பட சில, பல வாரங்கள் ஆனது. அது வரை அந்த சிசுவின் அழுகையோசை ஒவ்வொன்றுக்கும் என்னென்ன அர்த்தங்கள் இருந்திருக்கக் கூடுமென்று யார் அறிவார்?

வயலில் வேலை செய்யும் பெண்கள், தூங்கும் தங்களது குழந்தைகளை மரத்து நிழலில், தூளி கட்டிப் போட்டு விட்டு வேலை செய்து கொண்டிருப்பார்கள். காற்றின் ஓசையை விட மிக மெலிதாக, திடீரெனக் குழந்தை சிணுங்கும் ஒலி அவர்களுக்கு மட்டும் எப்படித் தான் கேட்குமோ! ஓடோடிச் சென்று குழந்தையைத் தூக்கிக் கொஞ்சி அரவணைத்து அமுதூட்டி அதன் பிஞ்சு முகத்தில் தங்களது யோசனைகளைத் துறப்பார்கள். இது இயல்பான தாய்க்கும், அவளது குழந்தைக்குமான ஒரு அனுபந்தம். இதுவே கடவுள் என்று கருதப் படுபவரால் விதிக்கப் பட்டது என்று உலகம் முழுக்க எல்லாப் பெண்களும் நம்புகிறார்கள். அது ஏன் மாஞ்சிக்கு மட்டும் கிட்டாமல் போனது? ஏனெனில் அவளொரு சோதனைக் குழாய் குழந்தை என்பதாலா? அவளது லீகல் மதர், லீகல் ஃபாதரை விட்டுப் பிரிந்ததாலா? எதனாலோ ஒரு இயல்பான தாயன்பு அவளுக்கு இல்லை என்றே ஆகி விட்டது.

சோதனைக் குழாய் குழந்தை முறையில், குழந்தை விரும்பினால் அதன் 18 வயதில் அதனைப் பெற்றெடுத்த அம்மா யார்? என அதற்குத் தெரிவிக்க வேண்டிய கடமை அதன் சட்டபூர்வமான பெற்றோருக்கு உண்டு என்கிறது நமது இந்தியச் சட்டம். இப்போது மாஞ்சி, தன் அப்பாவிடம்... என் உண்மையான அம்மா யார்? எனக் கேட்டால் டாக்டர் இக்ஃபுமி யமதா யாரைக் காட்டுவார்? தனியார் மருத்துவமனையின் சேமிப்புக் காப்பகங்களில் பல நூறு சோதனைக் குழாய்களில் அடைபட்டிருக்கும் பல்லாயிரக் கணக்கான கரு முட்டைகளில் திறன் வாய்ந்த ஒன்றிலிருந்து உருவாக்கப் பட்ட தனக்காக கருமுட்டையை தானம் வழங்கிய தனதன்னை யார்? என்ற ரகசியம் மாஞ்சிக்காக உடைபடும் சாத்தியம் உண்டா? இல்லை என்பதே நிஜம். அதை அறிந்து கொள்வதில் மருத்துவ ரீதியாகவும், சட்ட ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் ஆயிரமாயிரம் சிக்கல்கள் உள்ளன. இப்போது நம் முன் இருப்பது ஒரே ஒரு கேள்வி தான். மாஞ்சி வளர்ந்து விவரமறிந்த இளம்பெண் ஆனதும், அவளுக்குத் தனது சொந்தத் தாயைப் பார்க்க வேண்டும்... ஒரே ஒரு முறையாவது அவளை.. அம்மா என்று அழைக்க வேண்டும் என்று ஆசை வந்தால் அவளுடைய அம்மா என்று யாரை அடையாளம் காட்ட முடியும்? 

மூலத் தாயாக மருத்துவமனை ரெக்கார்டுகளில் பதிவு செய்யப்பட்ட யூகியோ, உறவே வேண்டாம் என்று ரத்து செய்து விட்டு ஒதுங்கி விட்டார். அதோடு பிரச்னையே, இந்தச் சிசு தனது கருமுட்டையில் உருவானது இல்லை என்பது தானே?! எனவே யூகி, மாஞ்சியின் அம்மா இல்லை. பணம் வாங்கிக் கொண்டு பெற்றுப் போட்ட பிரீத்தி பென்னும் குழந்தை மண்ணில் விழ்ந்த அடுத்த சில நாட்களில் அந்நியமாகிப் போனாள். பணக்கணக்கு முடிந்ததில் இருந்து அவளும் மாஞ்சியின் அம்மா இல்லை. 

இப்போது மாஞ்சிக்கு அம்மா யார்? உணர்வு ரீதியாக இது அவளது வாழ்நாள் சோகம் அல்லவா? இந்தக் கட்டுரையை வாசிக்கும் போதே கண்கள் கசியத் தொடங்கி விட்டன. குழந்தை என்பதைக் காட்டிலும், ஒரு சிசு என்றே மாஞ்சியைக் கற்பனை செய்து பாருங்கள். குழந்தைப் பேற்றின் போது ஒரு சிசுவுக்கு கிடைக்க வேண்டிய எத்தனை, எத்தனையோ பேரன்பு மிக்க நிமிடங்கள் அனைத்துமே மாஞ்சிக்கு சட்டத்தின் பெயராலும், மருத்துவத்தின் பெயராலும் மறுக்கப் பட்டிருக்கின்றன. இது ஒரு சிசுவுக்கு இழைக்கப் பட்ட அநீதி! இன்று அவள் தன் தந்தையோடும், பாட்டியோடும் செல்வச் செழிப்பான வாழ்க்கையை ஜப்பானில் வாழ்ந்து கொண்டிருக்கலாம். ஆனால் பின்நாட்களில் தந்தை அறிவிக்காவிட்டாலும், அந்தக் குழந்தை தன்னைப் பற்றிய உண்மையை இணையத்தின் வாயிலாக என்றேனும் அறியத்தான் கூடும். அப்போது அவளது சோகத்தை, நிராதரவான உணர்வை எதனால் ஈடு செய்யும் நாமறிந்த மருத்துவமும், இந்த சட்டங்களும்?!

எறும்புப் புற்றுகள் போல பெருகி விட்ட ஏ.ஆர்.டி மையங்கள் இந்த சமூகத்தின் வரமா? சாபமா?

சோதனைக் குழாய் குழந்தை என்பது குழந்தப் பேறு இல்லாத, அல்லது குழந்தை பெறும் உடற்தகுதிகளை இழந்த தம்பதிகளுக்கு ஒரு வரப்பிரசாதம் என்று தானே... நமக்கெல்லாம் தெரியும். 

அதெல்லாம் அது தோன்றிய ஆரம்ப காலங்களில் மட்டும் தான். இன்று அது ஒரு மோசமான வியாபாரமாகி வருகிறது என்பது தான் கண்கூடான நிஜம். இன்று நம் சென்னையை எடுத்துக் கொள்ளுங்கள் எத்தனை எத்தனை ஏ.ஆர்.டி மையங்கள்? எத்தனை... எத்தனை ஃபெர்டிலிட்டி மருத்துவமனைகள்?! வரம் என்றும், தானம் என்றும், ஜனனம் என்றும் அதற்குத் தான் எத்தனை, எத்தனை காரணப் பெயர்கள். 

நிஜத்தில் அவை எத்தனை பேருக்கு வரங்களாகவும், தானங்களாகவும் அமைகின்றன என்று அவர்களே தான் ஒன்றுக்குப் பலமுறை யோசிக்க வேண்டும். 

கடந்தாண்டில் 'குற்றம் 23' என்று ஒரு திரைப்படம் வெளிவந்தது. வெளிவந்ததும் பரவலாக நல்ல முறையில் விமரிசிக்கப் பட்ட திரைப்படம் தான். எத்தனை பேர் பார்த்திருப்பார்கள் என்று தெரியவில்லை. ஆனால் அது சொல்லிச் சென்ற செய்தி மிக முக்கியமானதும், கவனிக்கத் தக்கதுமான ஒன்று. திரைப்படத்தில் டி.வி சேனல் அதிபரின் மனைவியாக வரும் ஒரு இளம்பெண், பிரபல இந்தியக் கிரிக்கெட்டர் ஒருவரின் கருவைத் தாங்கி குழந்தை பெற்றுக் கொள்ள ஆசைப்படுவாள். பணத்துக்கு ஆசைப்படும் ஒரு பிரபல ஃபெர்டிலிட்டி மருத்துவமனை அந்த கிரிக்கெட்டருக்கே தெரியாமல், அவரது விந்தணுவை சேகரித்து அதை இந்தப் பெண்ணுக்கு பெரும் பணத்துக்கு விற்பனை செய்யும். இதை அறிந்து கொண்டு மருந்துகளுடன் பரிச்சயமுள்ள விற்பனைப் பிரதிநிதி வேலையில் இருக்கும் ஒரு சைக்கோ கொலைகாரன், பணத்துக்காக அந்தப் பெண்ணை பிளாக் மெயில் செய்து... பேரம் படியாமல் கொலையும் செய்து விடுவான். இந்தக் கொலையை துப்பு துலக்க நியமிக்கப் படும் போலீஸ் அதிகாரி... கொலைக்கான காரணங்களைக் கண்டறியும் போது, தண்டவாளத்தில் ஏற்றப்படுவது கொலைக்கான காரணங்கள் மட்டுமல்ல அது நிகழக் காரணமாகி விட்ட ஏ.ஆர்.டி மையங்கள் மற்றும் ஃபெர்டிலிட்டி மருத்துவமனைகளின் வண்டவாளங்களும் தான்.

திருமணமாகி குழந்தைப் பேறில்லாமல் 5 ஆண்டுகள் கடந்தாலே போதும் இன்றைக்கும் ஒரு பெண்ணின் வாழ்க்கை ஊசி மேல் தவமிருந்த கதையாகத் தான் மாறிப்போகிறது. ஒரு மழலை தன்னை அம்மாவென்று அழைக்காதா? என்று ஏங்குபவர்களின்  ‘மன உளைச்சலை தீர்க்க வந்த மருந்து’ என்று கருதப்பட்ட சோதனைக் குழாய் குழந்தை எனும் அதி நவீன மருத்துவ கண்டுபிடிப்பு இன்று பல சுயநல மருத்துவர்கள் கையில் சிக்கிக் கொண்டு கண்டம் விட்டு கண்டங்களுக்கு நமது இந்தியக்கருக்களை கடத்தவும் கூட உதவிக் கொண்டிருப்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரிந்திருக்கப் போகிறது.

இதற்கெல்லாம் என்ன தான் தீர்வு?! 

வாடகைத் தாய் முறை வர்த்தகமயமாவதைத் தடுக்க இந்திய அரசு கடந்தாண்டில் இந்திய வாடகைத்தாய் சட்ட மசோதாவில் திருத்தம் செய்து புதிய வரைவு ஒன்றைக் கொண்டு வந்தது. இந்தச் சட்டம், உரிய நடைமுறைகளுக்குப் பிறகு, நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெற்று சட்டமாக்கப்பட்டால் தற்போதுள்ள நடைமுறையில் பல மாற்றங்கள் ஏற்படும். அதன்படி;

வெளிநாட்டவர்கள், இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட வெளிநாட்டவர்கள், தனியாக இருக்கும் பெற்றோர், ஓரீனச் சேர்க்கையாளர்கள் உள்ளிட்டோர், வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வது, இதன் மூலம் தடை செய்யப்படும்.

குழந்தைப்பேறு பெற முடியாத பெற்றோர், திருமணமாகி ஐந்தாண்டுகள் ஆகியும் குழந்தைப் பேறு இல்லாதவர்கள் ஆகியோர் மட்டுமே வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற முடியும். அதுவும், நெருங்கிய உறவினர் மூலமாகவே வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற முடியும்.

என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

ஆனால், குழந்தைப்பேறு இல்லாதவர்கள் அமைப்பு, இந்த உத்தேச சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை, சட்டவிரோத வாடகைத்தாய் முறையை ஊக்குவிக்கும் என்று அவர்கள் கருத்துத் தெரிவித்திருந்தனர்.

ஆக மொத்தத்தில் இந்தியாவில் வாடகைத்தாய் மசோதா, சோதனைக் குழாய் குழந்தைகளுக்காக கருமுட்டை மற்றும், விந்தணு சேகரிப்பில் பின்பற்றப் படும் மருத்துவமுறைகளில் வெளிப்படைத் தன்மை, தாயின் கருப்பையில் செலுத்தப் பட்ட பின்பு மீதமாகும் கருமுட்டைகள் மற்றும், விந்தணுக்கள் பற்றிய விவரங்கள்... அவற்றை சம்மந்தப்பட்ட ஃபெர்டிலிட்டி மையங்கள் யாருக்கெல்லாம் விற்பனை செய்கின்றன? விற்கப் பட்ட அல்லது தானமளிக்கப் பட்ட கருமுட்டை மற்றும் விந்தணுக்கள் யாருடையவை எனும் விவரங்கள் என அனைத்திலும் ஒரு குறைந்த பட்ச வெளிப்படைத் தன்மை கடைபிடிக்கப் பட வேண்டும். வெளிப்படைத் தன்மை என்பது குறைந்த பட்சமாக சம்மந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகத்துக்கும், அவர்களை நம்பி சிகிச்சை எடுத்துக் கொள்ள வரும் தம்பதிகளுக்கும் இடையிலாவது இருந்தே ஆக வேண்டும்.

இல்லா விட்டால் மாஞ்சி போன்ற குழந்தைகளின் சாபம் மருத்துவர்களைச் சும்மா விடாது! யார் கண்டார்கள்? பெருகி வரும் வாடகைத்தாய் வர்த்தகப் பங்குதாரர்களுக்கு மாஞ்சியின் கதை கூட ஒரு வகை விளம்பரமானாலும் இந்தியாவில் கேட்பார் இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com