பத்திரிகை சுதந்திரம் - அடிப்படை உரிமையா?

பல அரசியல் மாற்றங்களுக்கு வித்திட்டது பேனா முனைதான் என்றாலும் தங்களது கருத்துக்களை பலரும் பார்க்கும் வகையில் பிரகடனம் செய்வதற்கென பத்திரிகையாளருக்குத் தனி உரிமையோ சட்டமோ இருக்கிறதா?
பத்திரிகை சுதந்திரம் - அடிப்படை உரிமையா?

பல அரசியல் மாற்றங்களுக்கு வித்திட்டது பேனா முனைதான் என்றாலும் தங்களது கருத்துக்களையும், விமர்சனங்களையும் பல லட்சம் பேர், பல கோடி பேர் பார்க்கும், படிக்கும் வகையில் பிரகடனம் செய்வதற்கென பத்திரிகையாளருக்குத் தனி உரிமையோ சட்டமோ இருக்கிறதா?

“இது எங்களின் அடிப்படை உரிமை, எங்களது கருத்துக்களை தடுக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை , இது பத்திரிகையாளர் சுதந்திரம்” என்றெல்லாம் இவர்கள் சொல்வது படி உண்மையில் பத்திரிகையாளர்களுக்கென தனிச் சட்ட மசோதாவோ, அடிப்படை உரிமமோ தனியே நமது சட்ட அமைப்பில் இல்லை.

இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 19 - கருத்து சுதந்திரம் பற்றிய சட்ட உரிமைகளை விவரிக்கிறது. அதில் சொல்லப்பட்டுள்ளதாவது “அனைவருக்கும் கருத்து சுதந்திரம் உண்டு; தகவலையும் எண்ணக்கருக்களையும் தேட, அறிய, கற்பிக்க அடிப்படை உரிமை உண்டு”, என்பதே ஆகும். இது இந்திய குடிமகனான அனைவருக்கும் பொதுவானதே தவிற தனியே பத்திரிகையாளருக்கென எந்தவித சட்ட மசோதாவும் இயற்றப்படவில்லை என்பதே பலரும் அறியாத உண்மை.

பத்திரிகைத் துறையின் அடிப்படை நோக்கமானது மக்களுக்குத் துல்லியமாக, நடுநிலைமை தவறாமல், ஒழுக்கமான முறையில் செய்தி, கருத்து மற்றும் தகவல்களை தருவதே ஆகும். ஆனால் இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்கும் சில குறிப்பிட்ட விதிமுறைகள் உள்ளன, பிறரின் உரிமைகள் மற்றும் மதிப்பைக் கருத்தில் கொண்டு, தேசியப் பாதுகாப்பிற்கு எந்தவிதத்திலும் பங்கம் விளைவிக்காத வகையில் கருத்துக்களை பகிர வேண்டும் என்பதே ஆகும்.

"கருத்து சுதந்திரம் என்பது சுதந்திரமாக நம் கருத்துக்களை கூறுவதில் மட்டும் இல்லை, அந்த கருத்தை கூறிய பின்பும் நமக்கு சுதந்திரம் இருக்கிறதா என்பதிலேயே உள்ளது"

கடந்த ஆண்டு 2016-ல் ஒரு சர்வதேச தனியார் நிறுவனத்தால் நடத்தப்பட்ட உலக அளவிலான பத்திரிகை சுதந்திரம் கொண்ட நாடுகளின் வரிசையில் 133-வது இடத்தை இந்தியா பெற்றுள்ளது. மொத்தம் 180 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த கணக்கெடுப்பில் 2015-ல் இருந்த 136-வது இடத்திலிருந்து 133-வது இடத்திற்கு இந்தியா முன்னேறி உள்ளதுதான் என்றாலும் கடந்த ஆண்டு மட்டுமே 200-கும் மேற்பட்ட அவதூறு வழக்குகள் பத்திரிகையாளர்கள் மீது பதியப்பட்டுள்ளன. 

சட்ட ரீதியாக அவதூறு வழக்குகள் நிரூபிக்கப் பட்டால் குற்றவாளிக்கு 6 மாதங்களில் இருந்து 2 வருடங்கள் வரை சிறை தண்டனையோ அல்லது குறிப்பிட்ட அளவு அபராதமோ விதிக்கப்படும். இவை அனைத்தையும் தாங்கள் சார்ந்துள்ள நிறுவனங்களின் உதவியோடு பல பத்திரிகையாளர்கள் சந்தித்துத்தான் வருகிறார்கள். 

2015-ல் உத்திர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஜகேந்திர சிங் என்ற ஒரு பத்திரிகையாளர், அமைச்சர் ஒருவர் செய்த ஊழல்களைப் பற்றி ஆதாரத்துடன் தனது முகநூலில் பதிவேற்றியதற்காக கொடூரமான முறையில் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பல கிளர்ச்சிகளை ஏற்படுத்தியது. 

அதே சமயத்தில் பெண்களின் ஆடைகளைப் பற்றி அநாகரீகமான புகைப் படங்களுடன் ஒரு பிரபல தமிழ் பத்திரிகை வெளியிட்டிருந்த செய்தி பத்திரிகையாளர்களின் கருத்து சுதந்திரம் குறித்த கேள்விகளை எழுப்பியது. புலனாய்வு செய்யப்பட்ட பிரத்தியக செய்திகள் என்ற பெயரில் பத்திரிகை தர்மத்தை இவர்கள் மீறுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்த வண்ணமே உள்ளன. 

நமது இந்தியாவில் மட்டும் சுமார் 82,222 பத்திரிகை நிறுவனங்கள் உள்ளன. 16 ஆங்கில நாளிதழ்கள் உட்பட 800 செய்தி ஊடகங்களும், 1,500 வானொலி நிலையங்களும் உள்ளன. மேலும் இன்று மலையளவு வளர்ந்து நிற்கும் தொழில்நுட்ப வளர்ச்சியில் கையில் ஒரு ஸ்மார்ட் ஃபோன் இருந்தால் போதும் நாமும் ஒரு செய்தியாளர் ஆகலாம்.

பத்திரிகையாளர்களுக்கு எனத் தனி சட்டங்கள் ஏதும் இல்லை என்றாலும் அவர்களுக்கு என ஒரு சில நெறிமுறைகள் இருக்கின்றன, ஆனால் இன்றைய சூழலில் யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் பல லட்சம் பேர் பார்க்கும் வகையில் பதிவேற்றலாம் என்பதால் ஒரு பத்திரிகையாளருக்கு இருக்க வேண்டிய பொறுப்புகள் கேள்விக்குள்ளாகி இருக்கிறது. இந்த வளர்ந்து வரும் சமூக வலைத்தள செய்தியாளர்களை கட்டுப் படுத்துவதற்காகவாவது பத்திரிகையாளர்களுக்கு என தனி சட்டங்கள் நமது இந்திய சாசனத்தில் இனி இயற்றிப்பட்டாலும் ஆச்சரியத்திற்கு இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com