தமிழர்கள் அறியவேண்டிய வரலாறு: ஆஷை வாஞ்சிநாதன் சுட்டுக்கொன்ற நாள்

வாஞ்சிநாதனின் துப்பாக்கியிலிருந்து வெளிப்பட்ட குண்டுகள், நூற்றாண்டுகளாக அடிமைப்பட்டுக் கிடக்கும் இந்த தேசத்தை நிமிர்ந்து நிற்கச் செய்திருக்கிறது
தமிழர்கள் அறியவேண்டிய வரலாறு: ஆஷை வாஞ்சிநாதன் சுட்டுக்கொன்ற நாள்

106 வருடங்களுக்கு முன் இதே நாளில் அதாவது 17.6.1911 அன்று திருநெல்வேலி கலெக்டர் ஆஷ் கொடைக்கானலில் படிக்கும் தனது பிள்ளைகளைப் பார்க்க மணியாச்சிக்கு ரயில் மூலம் 10.38 மணிக்கு வந்து சேர்ந்தான்.  உடன் அவனது மனைவி மேரியும் இருந்தார். ‘தி சிலோன் போட் மெயில்’  என்ற ரயிலின் வருகைக்காக காத்திருந்தனர். ஆஷ் அமர்ந்திருந்த முதல் வகுப்பு ரயில் பெட்டியை தனியாக பிரித்து அதை போட் மெயிலோடு இணைத்து கொடைக்கானல் பயணத்தை தொடங்குவதற்காக அந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. போட் மெயில் 10.48 மணிக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த இடைவெளியில் ஆஷின் பாதுகாவலன் தண்ணீர் பிடிப்பதற்காக சென்றிருந்தான்.  இந்திய சுதந்திர போராட்டத்தில் முக்கியமான மணித்துளிகள் அவை.   ‘இந்தியன் எதைக் கொடுத்தாலும் சாப்பிடுவான், எப்படி அடித்தாலும் தாங்கிக்கொள்வான்’, என்ற பிரிட்டிஷ் ஏகாதிபத்திய சிந்தனைக்கு சாவு மணி அடித்த மணித்துளிகள். 

ஒரு டிப்டாப் ஆசாமி.  நீளமான தனது தலை முடியை மடித்து கட்டியிருந்தார்.  ஏதோ அலுவலகத்திற்கு செல்வது போல உடை.  ஆஷ் இருந்த முதல் வகுப்பு பெட்டியில்  நுழைகிறார்.   அவர் தான் வாஞ்சிநாதன்.  இருபத்தி ஐந்து வயது இளைஞர். கலெக்டர் ஆஷும், அவரது மனைவியும் பெட்டியில் எதிரெதிரே அமர்ந்திருந்தனர். வாஞ்சியின் கையில் பெல்ஜியம் நாட்டு பிரவுனிங் வகை துப்பாக்கி இருந்தது. ஆஷின் நெஞ்சை குறிபார்த்தது. நிலைமையின் விபரீதத்தை ஆஷ் உணரும் முன் துப்பாக்கி மூன்று முறை வெடித்து ஓய்ந்தது. ஆஷ் தரையில் சரிந்தான்.  மனைவி மேரி அலறினார்.  வாஞ்சி ஓட, பாதுகாவலர் அவரைத் துரத்த அந்த இடமே கலவர பூமியானது.   இனி தப்பிக்க முடியாது என்ற நிலையில், ரயில் நிலையத்தில் இருந்த ஒரு கழிவறைக்குள் சென்று உட்புறமாக தாளிட்டுக் கொண்டார் வாஞ்சி.    

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அவரை வெளியே கொண்டு வர பகீரத பிரயத்தனம் மேற்கொள்ளப்பட்டது. பிரயோஜனமில்லை. நீண்ட நேர அமைதிக்குப் பின் கழிவறையிலிருந்து ‘டுமீல்’ என்று ஓசை எதிரொளித்தது. எல்லாமே முடிந்து போனது. வெள்ளைக்காரனின் கையில் உயிருடன் பிடிபடக்கூடாது என்பதற்காக துப்பாக்கியை வாய்க்குள் சொருகி தானே சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டார் வாஞ்சி.
 

அடுத்த நாள் உலகச் செய்திகளில் ஆஷ் படுகொலை முதன்மை இடத்தை பிடித்தது.  பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக மட்டுமே இந்தியர்கள் போராடுவார்கள். வெள்ளைக்காரர்களுக்கும், அதிகாரிகளுக்கும் எதிராக தனிப்பட்ட முறையில் கோபத்தை வெளிப்படுத்த மாட்டார்கள் என்று நினைத்திருந்த வெள்ளைக்கார அரசுக்கு இந்த சம்பவம் பேரிடியை ஏற்படுத்தியது.  

யார் இந்த ஆஷ்?

ராபர்ட் வில்லியம் எஸ்கோர்ட் ஆஷ் என்கிற ஆஷ் நவம்பர் 23, 1872-ம் ஆண்டு அயர்லாந்தில் பிறந்தவர்.  அயர்லாந்தின் தலை நகரான டப்லினில் தனது பள்ளிப் படிப்பை முடித்தவர். 1892 ம் ஆண்டு டிரினிட்டி கல்லூரியில் உயர் படிப்பை தொடங்கினார். 1894ல் நடந்த இந்திய சிவில் சர்விஸ் தேர்வில் நாற்பதாவது இடத்தை பிடித்தார். 1895ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதி இந்தியாவிற்கு வந்து சேர்ந்தார்.  துணை கலெக்டராக பதவியேற்றார்.  பிறகு படிப்படியாக மாவட்ட மாஜிஸ்டிரேட்டாகவும், கலெக்டராகவும் பதவி உயர்வு பெற்றார்.  1907ம் ஆண்டு திருநெல்வேலி கலெக்டராக பணியமர்த்தப்பட்டார். என்ன காரணமோ தெரியவில்லை, உடனடியாக பணியில் சேராமல் நீண்ட கால விடுமுறையில் இருந்தார்.  பிறகு பிப்ரவரி 17, 1908 ல் பணியில் சேர்ந்தார். ஏதோ உள்ளுணர்வு அவரை எச்சரித்திருக்கிறது என்பது நமக்குப் புரிகிறது.    

அந்த நாட்களில் தூத்துக்குடி முக்கியமான துறைமுகம்.  அதோடு மட்டுமின்றி நெசவுக்கும், பவழங்களுக்கும் புகழ் பெற்றது. ஐரோப்பாவைச் சேர்ந்த  A&F ஹார்வி என்ற நிறுவனம் இந்த துறைகளை தன் வசம் வைத்திருந்தது.  இதே நிறுவனம்தான் ‘பிரிட்டிஷ் இந்திய ஸ்டீம் நாவிகேஷன் கம்பெனி’, என்ற நிறுவனத்தின் ஏஜெண்டாகவும் செயல்பட்டு வந்தது. தூத்துக்குடிக்கும், கொழும்புவிற்கும் கப்பல் வர்த்தகங்களை கவனிப்பது இவர்களின் பணி.  இந்த தொழிலில் இவர்களை எதிர்க்கவோ, போட்டியிடவோ யாரும் இல்லை.  ஒரு ‘தனிக்காட்டு ராஜ்ஜியம்’ என்றே சொல்லலாம்.  

ஆஷுடைய திருநெல்வேலி நாட்கள் அசாதாரணமானவை.   பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக இடைவிடாது சிக்கல்களை உருவாக்கிக் கொண்டிருந்த  மாவட்டம் அது. கர்சனுடைய வங்கப்பிரிவினைக்கு பிறகு ஒவ்வொரு நாளும் பிரச்னைகளோடு நகர்ந்தது. நாடு முழுவதும் சுதேசி இயக்கம் நலிந்து வந்த வேளையில் தூத்துக்குடியில் மட்டும் வலிமையுடம் வலம் வந்து கொண்டிருந்தது  அதற்கு காரணம் வ.உ.சிதம்பரம் பிள்ளை. இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் காங்கிரஸின் தீவிரவாத பிரிவை சேர்ந்தவர். பாலகங்காதர திலகரை தலைவராக ஏற்றுக் கொண்டவர்.  பிரிட்டிஷ் கப்பல் வர்த்தகத்துக்கு போட்டியாக ‘சுதேசி ஸ்டீம் நாவிகேஷன் கம்பெனி’ என்ற கப்பல் நிறுவனத்தை தொடங்கினார்.  இரண்டு கப்பல்களை தனது சொந்தப் பணத்தில் வாங்கினார். 

அந்த நாளில் தூத்துக்குடியிலிருந்து இலங்கைச் செல்ல ஆங்கிலேயர் கப்பல்களில் பயணக் கட்டணம் 16 அணா என்று இருந்தது. சுதேசி இயக்கத்தை வளர்க்க வ.உ.சி. தனது கப்பல்களில் இதே பயணத்திற்கு எட்டணா மட்டுமே வசூலித்தார். மக்கள் ஆர்வத்துடன் சுதேசிக் கப்பல்களில் பயணம் செய்தனர். வ.உ.சியின் இந்த செயல் ஆஷிற்கு எரிச்சலை ஏற்படுத்தியது. சுதேசி இயக்கத்தின் முதுகெலும்பை உடைத்தெறிவது என்று முடிவெடுத்தான்.  

சுதேசி கப்பல்களை செயலிழக்க செய்யும் வகையில் ஒரு திட்டத்தை கொண்டுவந்தான். அதன்படி ஆங்கிலேய கப்பல்களில் கட்டணமே இல்லாமல் பயணிக்கலாம் என்று அறிவிப்பை வெளியிட்டான். அதாவது எல்லோருமே ஓசியில் பிரயாணிக்கலாம். எந்த செலவும் இல்லாமல் இலங்கையை அடையலாம். அதோடு நிறுத்தாமல், பயணம் செய்பவர்களுக்கு ஒரு குடையையும் இலவசமாக வழங்கினான்.  ஓசிப் பயணத்திற்கு இலவசம் ஒரு குடை. இலவசங்களும், விலையில்லா பொருட்களும் தன்னையும், தன் நாட்டையும் சேர்த்து அழிக்கவல்லது என்பதை அன்றே நமக்கு உணர்த்தியது இந்த சம்பவம். தன்மானத்தையும், சுதேசி இயக்கங்களையும் புறக்கணித்த மக்கள் ஆங்கிலேய கப்பலில் பயணிக்கத் தொடங்கினர். ஆஷின் திட்டம் மகத்தான வெற்றி பெற்றது. சுதேசி கப்பல் பயணிக்க ஆளில்லாமல் கரை ஒதுங்கியது. மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்தார் வ.உ.சி. பிற்காலத்தில் வேறுவழியில்லாமல், இரண்டு கப்பல்களும் ஏலத்தில் விடப்பட்டது. அதையும் ஆங்கில அரசே ஏலத்தில் எடுத்தது. 

சூரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிற்கு பிறகு, 1907ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தூத்துக்குடி கடற்கரையிலும், திருநெல்வேலியிலும் தொடர்ச்சியாக கூட்டங்களை நடத்தினார் வ.உ.சி. அந்தக் கூட்டங்களில் சுப்ரமணியம் சிவாவின் பேச்சு தீப்பொறியை கக்கியது. இது அரசுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது. இத்தகைய கூட்டங்களை அரசு உன்னிப்பாக கவனிக்கத் தொடங்கியது.    

பிப்ரவரி, 27, 1908ம் நாள் தூத்துக்குடியில் ‘கோரல் மில்ஸ்’ தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.  இதை முன்னிருந்து நடத்தியவர் வ.உசி.  அந்த போராட்டத்தை கையாளும் பொறுப்பில் இருந்தவன் ஆஷ்.   நிலைமையின் விபரீதத்தை உணர்ந்து பேச்சுவார்த்தைக்கு அழைத்தான். வ.உ.சி தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இது வ.உ.சிக்கு கிடைத்த வெற்றி.  ஆனால், தனிப்பட்ட முறையில் தனக்கு கிடைத்த தோல்வியாகவும், அவமானமாகவும் கருதினான் ஆஷ். வ.உ.சி.யை ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற ஒரு முடிவுக்கு வந்தான்.

இது தெரியாமல் வ.உ.சியின் சுதேசி கூட்டங்கள் வழக்கம் போல நடந்தது. வங்காளத்தை சேர்ந்த பிபின் சந்திர பால் அவர்களின் விடுதலை நாளை ‘சுதந்திர நாளாக’ கொண்டாட முடிவு செய்தனர் சுதந்திர போராளிகள்.  அதை விரும்பாத அரசு மார்ச் 12, 1908 அன்று வ.உ.சி, பத்ம நாப ஐயங்கார், சுப்ரமணியம் சிவா ஆகியோரை கைது செய்தது. இதைக் கண்டித்து பெரிய ஊர்வலம் நடந்தது. இதைக் கலைக்க துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டான் ஆஷ். அதில் நான்கு பேர்கள் இறந்தார்கள். அத்தோடு நிறுத்தாமல், கைது செய்யப்பட்டவர்களை புரட்சிக்காரர்கள் என்று முத்திரை குத்தினான். இதன்மூலம் வ.உ.சி.க்கு நாற்பதாண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்பட்டது. ஆஷ் தனது முயற்சியில் வெற்றி பெற்றான்.  

ஆஷினுடைய இந்த செயல் இந்திய போராளிகளிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.  

ஆஷ் கொல்லப்படும் போது அவரது மனைவி மேரி லில்லியன் பேட்டர்சன்உ டன் இருந்தார் என்று படித்தோம். இந்த சம்பவம் நடைபெறுவதற்கு சில நாட்கள் முன்புதான் அவர் அயர்லாந்திலிருந்து வந்திருந்தார். அவர்கள் இருவருக்கும் 6 ஏப்ரல், 1898-ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆஷைவிட மேரி ஒரு வயது மூத்தவர் என்றும், அவர்களுக்கு நான்கு குழந்தைகள் இருந்தனர் என்றும் குறிப்புகள் தெரிவிக்கின்றன. ஆஷ் கொலைக்குப் பிறகு மேரி தனது குழந்தைகளுடன் ஏப்ரல் 1912-ம் ஆண்டு தனது தாய் நாட்டிற்கு திரும்பினார். திருப்தியளிக்கும் வகையில் அவருக்கு பென்ஷன் வழங்கப்பட்டது. தன் கண் முன்னே கணவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அவருடைய இறுதி மூச்சுவரை அவரிடம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது.  அவர் மறுமணம் செய்து கொள்ளவில்லை. ஆஷின் மூத்த மகன் இந்தியாவில் ராணுவத்தில் கர்னலாக பணிபுரிந்து 1947ம் ஆண்டு ஓய்வு பெற்றான். இரண்டாவது மகன், இரண்டாவது உலக யுத்தத்தில் பங்கு கொண்டு அதில் உயிரிழந்தான்.  மகள்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை.  

இனி வாஞ்சிநாதனைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.  

வாஞ்சிநாதன் செங்கோட்டையைச்  சேர்ந்தவர். அவருடைய தந்தை ரகுபதி ஐயர், திருவாங்கூர் தேவஸ்தானத்தில்  ஊழியராக இருந்து ஓய்வு பெற்றவர். வாஞ்சி, திருவாங்கூர் சாமஸ்தான வனத்துறையில் புனலூர் என்ற இடத்தில் பணியாற்றி வந்தார். அவருடைய மனைவி  பொன்னம்மாள். வாஞ்சிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து இறந்துவிட்டதாக குறிப்புகள் சொல்கின்றன.  

வ.உ.சிக்கு எதிராக ஆஷ் எடுத்த நடவடிக்கைகள் வாஞ்சியின் மனத்தில் ஆறாத ரணத்தை ஏற்படுத்தியது. இனி பொறுக்க வேண்டாம் என்று முடிவெடுத்தார். தனது சகாக்களுடன் கூடினார். அங்கு ஆஷ் கொலைக்கு சதித்திட்டம் தீட்டப்பட்டது.  யார் ஆஷை சுடுவது என்றும் விவாதிக்கப்பட்டது.  எல்லோரும் நான், நீ என்று போட்டிபோட, இறுதியில் அனைவரின் பெயரையும் துண்டுச் சீட்டில் எழுதி குலுக்கல் முறையில் ஒருவரை தேர்ந்தெடுப்பது என்று முடிவானது. பெயர்கள் தாங்கிய சீட்டுக் குவியலிலிருந்து ஒரு சீட்டு எடுக்கப்பட்டது. அதில்  எழுதப்பட்டிருந்த பெயர் ‘வாஞ்சிநாதன்’. வாஞ்சிக்கு மகிழ்ச்சி.   அலுவலகத்திற்கு மூன்று மாதங்கள் லீவு எடுத்தார்.  அனைவரிடமும் விடைபெற்று பாண்டிச்சேரிக்கு ஆயுத பயிற்சிக்காக புறப்பட்டார். அவர் சென்ற பின் மற்ற துண்டுச் சீட்டுகளும் பிரித்து பார்க்கப்பட்டதாம்.  எல்லா சீட்டுகளிலும் தன் பெயரையே வாஞ்சி எழுதி வைத்திருந்தார் என்று சொல்லப்படுகிறது.

பாண்டிச்சேரியில் வி.வி.எஸ். ஐயரை சந்தித்தார்.  வி.வி.எஸ். ஐயர், பாரத மாதா என்ற அமைப்பை நடத்தி வந்தார். அதில் தன்னையும் இணைத்துக் கொண்டார் வாஞ்சி. இது சாவர்க்கரின் அபிநவ் பாரத் என்ற அமைப்பின் கிளை. முதலில் புதுச்சேரியிலும், பிறகு பரோடாவிலும் ஆயுதப் பயிற்சி எடுத்துக் கொண்டார் வாஞ்சி. பிறகு ஊர் திரும்பினார். ஆஷை கொலை செய்ய சரியான தருணத்திற்காக காந்திருந்தார். வாஞ்சியின் செயல்பாடுகள் அவரது தந்தைக்கு பிடிக்கவில்லை.  வெறுப்புடன் நாட்களை நகர்த்தி வந்தார்.

இந்த நிலையில் ஜூன் 17, 1911 அன்று மணியாச்சி ரயில் நிலையத்தில் சுட்டுக்கொல்லப்படார் என்றும், ரயில் நிலைய கழிவறையில் மறைந்து தன்னையும் மாய்த்துக் கொண்டார் வாஞ்சி என்று படித்தோம். அதே நேரத்தில் வாஞ்சிநாதன் கலெக்டர் ஆஷை சுடும் போது வேட்டியணிந்த மற்றொருவரும் உடன் இருந்தார். அவர் மாடசாமி பிள்ளை. சுதந்திர இந்தியா மறந்து போன மற்றொரு போராளி. வாஞ்சியை மற்றவர்கள் துரத்தும் போது, அந்த குழப்பத்தை உபயோகப்படுத்தி தப்பினார் மாடசாமி பிள்ளை.  

வாஞ்சியின் உடலை கைப்பற்றிய காவல்துறை அவரின் சட்டைப் பைகளில் சோதனை செய்தனர். ஒரு இரண்டாம் வகுப்பு பிரயாண டிக்கெட்டும், இரண்டு காகிதங்கள் கிடைத்தது. ஒன்று, பிரான்சிலிருந்து வெளிவந்த ‘வந்தே மாதரம்’ பத்திரிக்கையின் தலையங்கப் பகுதி. அதில் ‘வெள்ளையர்களைக் கொன்று பாரத மாதாவுக்கு ரத்த அபிஷேகம் செய்ய வேண்டும்’ என்று அச்சிடப்பட்டிருந்தது. மற்றொன்று காவல்துறைக்கு வாஞ்சி எழுதி வைத்திருந்த கடிதம். அதில் குறிப்பிடப்பட்டுள்ள வாசகங்கள் இவைதான்.

‘இங்கிலாந்து கயவர்கள் நமது நாட்டை கைப்பற்றி சனாதன தர்மத்தை அழிக்க முயல்கிறார்கள்.  ஒவ்வொரு இந்தியனும் அவர்களை விரட்டியடித்து சனாதன தர்மத்தை நிலை நாட்ட அவரவர் பங்கிற்கு முயல்கிறார்கள். ராமன், கிருஷ்ணன், வீர சிவாஜி, குரு கோவிந்த், அர்ஜுனன் போன்றவர்கள் ராஜ்ஜியம் செய்து தர்மத்தை பாதுகாத்தனர். அப்படிப்பட்ட நம் நாட்டில் ஐந்தாம் ஜார்ஜ்க்கு முடி சூட்டி அழகு பார்க்க நினைக்கிறது பிரிட்டிஷ் அரசு. நமது மதராஸிகள் மூவாயிரம் பேர் ஐந்தாம் ஜார்ஜ் இந்திய மண்ணை மிதித்ததும் அவரை கொல்ல சபதம் எடுத்திருக்கிறார்கள். எங்களது எண்ணத்தை மற்றவர்கள் அறிந்து கொள்வதற்காக, எங்கள் கூட்டத்தின் மிகச் சிறியவனாகிய நான் இந்த காரியத்தை செய்திருக்கிறேன். இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரும் இது போன்ற செயல்களை செய்வதை தங்கள் கடமையாக கருதுகிறார்கள்’ என்று எழுதி ஆங்கிலம் மற்றும் தமிழில் கையொப்பம் இடப்பட்டிருந்தது. வாஞ்சியின் கடிதத்தில் தேதியிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.  ஆஷை கொல்ல சரியான தருணத்தை எதிர்பார்த்து காந்திருந்தார் என்பதை இது நமக்கு உணர்த்துகிறது.

இந்தப் படுகொலைக்குப் பிறகு மிகப் பெரிய அளவில் தேடுதல் வேட்டையை தொடங்கியது அரசு.  

காவல்துறை வாஞ்சி நாதனின் இல்லத்தில் சோதனையிட்டனர். நடந்த கொலை தனி மனித செயல் அல்ல என்பதும், இந்தச் சதியில் பலர் சம்பந்தப் பட்டிருக்கிறார்கள் என்பதும் தெரிய வந்தது. கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் ஆறுமுகப் பிள்ளை, சோமசுந்தரம் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டார்கள். பின்னாளில் அவர்கள் இருவரும் அப்ரூவராக மாற்றப்பட்டார்கள்.  அவர்கள் அளித்த தவலின் அடிப்படையில் 16 பேர் கொண்ட பட்டியலை தயார் செய்தது அரசு. அவர்களை கைது செய்யும் நடவடிக்கையை தொடங்கியது. காவல்துறையின் கொடுமைகளுக்கு பயந்து தர்மராஜா ஐயர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். வேங்கடேச ஐயர் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைசெய்து கொண்டார். மீதமுள்ள 14 பேரையும் கைது செய்தது அரசு.  

1.  நீலகண்ட பிரம்மச்சாரி (முக்கியக் குற்றவாளி)
2. சங்கர கிருஷ்ண ஐயர் (வாஞ்சியின் மைத்துனர்) - விவசாயி
3. மாடத்துக்கடை சிதம்பரம் பிள்ளை - காய்கறி வியாபாரம்
4. முத்துக்குமாரசாமி பிள்ளை - பானை வியாபாரம்
5. சுப்பையா பிள்ளை -  வக்கீல் குமாஸ்தா
6. ஜகனாத அய்யங்கார் - சமையல் தொழில்
7. ஹரிஹர ஐயர் - வியாபாரி
8. பாபு பிள்ளை -  விவசாயி
9. தேசிகாச்சாரி - வியாபாரி
10. வேம்பு ஐயர் - சமையல் தொழில்
11. சாவடி அருணாச்சல பிள்ளை - விவசாயம்.
12. அழகப்பா பிள்ளை - விவசாயம்
13. வந்தே மாதரம் சுப்பிரமணி ஐயர் - ஆசிரியர்
14. பிச்சுமணி ஐயர் - சமையல் தொழில்

ஆஷ் கொலை சதித் திட்டத்தில் பங்கிருப்பதாக மேலும் ஐந்து நபர்களின் மேல் சந்தேகப்பட்டது ஆங்கில அரசு. அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கியது.  

1. வி.வி.எஸ். ஐயர்
2. சுப்பரமணிய பாரதி
3. ஸ்ரீனிவாச ஆச்சாரி
4.  நாகசாமி ஐயர்
5. மாடசாமி பிள்ளை

இதில் மாடசாமி பிள்ளை, மணியாச்சி ரயில் நிலையத்திலிருந்து தலைமறைவானார். அதன் பிறகு அவர் என்ன ஆனார் என்பது பற்றிய தகவல்கள் இன்றுவரை நமக்கு கிடைக்கவில்லை. மீதமுள்ள நான்கு பேர்களும் பாண்டிச்சேரியில் தங்கிவிட்டார்கள். பிரெஞ்சு ஆதிக்கத்துக்கு உட்பட்ட பாண்டிச்சேரியில் அவர்களை உடனடியாக கைது செய்ய முடியவில்லை. அதனால் அவர்களை கண்காணிக்க ஒற்றர்களை நியமித்தது அரசு.  

பொதுவாக குற்றாம் எந்த இடத்தில் விளைவிக்கப்பட்டதோ, அந்த இடத்தின் மீது அதிகார வரம்புள்ள நீதிமன்றத்தில்தான் வழக்கு விசாரணை நடைபெறும். அதன்படி ஆஷ் கொலை வழக்கு திருநெல்வேலி அமர்வு நீதிமன்றத்தில்தான் நடந்திருக்க வேண்டும். ஆனால், வழக்கத்திற்கு மாறாக சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கை தானே விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. காரணம், கொலை செய்யப்பட்டவர் ஒரு ஆங்கிலேயர், கலெக்டர்.

கைது செய்யப்பட்ட 14 பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தது மூன்று நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச். நீலகண்ட பிரம்மச்சாரிக்கு ஏழு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், சங்கர கிருஷ்ணனுக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும், ஏனைய குற்றவாளிகளுக்கு குறைந்த தண்டனையும் வழங்கப்பட்டது. இதை எதிர்த்து ஐந்து நீதிபதிகள் கொண்ட பெஞ்சுக்கு அப்பீல் செய்யப்பட்டது. பிரயோஜனமில்லை. தீர்ப்பு திருத்தப்படவில்லை.   

தென் இந்தியாவில் படுகொலை செய்யப்பட்ட முதலாவதும், கடைசியுமான பிரிட்டிஷ் அதிகாரி ஆஷ். மனைவியின் கண் முன்னே கணவன் கொல்லப்படுவது மிகவும் கொடுமையானது. வேறுவழியில்லை, இது காலத்தின் கட்டாயம்.  

இந்தியர்களின் அஹிம்சையை கேடயமாக உபயோகித்த ஒரு பிரிட்டிஷ் அதிகாரிக்கு ஒரு வீர தியாகி அளித்த பரிசு மரணம். இந்த பரிசு ஒவ்வொரு இந்தியனுக்கும் வருத்தத்தை கொடுத்தாலும், ஆஷ் என்ற கேன்சர் கட்டிக்கு அஹிம்சை என்ற பச்சிலை மருந்து உதவாது, அறுவை சிகிச்சை மட்டுமே பலனை அளிக்கும் என்பதை புரியவைத்தவர் வாஞ்சிநாதன்.

காயமடைந்த ஆஷ் துரையை அவ்வழியாக வந்த சரக்கு ரயிலில் ஏற்றி திருநெல்வேலிக்கு கொண்டு சென்றனர். கங்கைகொண்டான் பகுதிக்கு வந்தபோது ஆஷ் உயிர் பிரிந்தது. அதே சமயம், வாஞ்சியின் உடல் திருநெல்வேலி சந்திப்பு பாலம் போலீஸ் நிலையத்தில் இரு நாட்கள் வைக்கப்பட்டிருந்ததாக குறிப்புகள் தெரிவிக்கின்றது. வாஞ்சிநாதனின் இறுதி முடிவு குறித்த பல்வேறு தகவல்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவரது உடலை ஆங்கிலேயர்கள் என்ன செய்தார்கள் என்பதற்கான விடை இன்றுவரை கிடைக்கவில்லை. இந்தத் தகவல்களை திரட்டி அதை ஆவணப்படுத்த வேண்டும்.

வாஞ்சியின் செயல்கள் அவரின் தந்தைக்கு பிடிக்கவில்லை என்று படித்தோம். வாஞ்சி இறந்துபோனதும், அவருக்கு செய்ய வேண்டிய ஈமக்கிரியைகளை நடத்த அவரின் தந்தை மறுத்துவிட்டார் என்றும் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

2011-ம் வருடம் ஆஷ் மற்றும் வாஞ்சிநாதன் மறைந்து நூறாண்டுகள் முடிந்ததை மனத்தில் கொண்டு ஆஷ் குடும்பத்தினர், வாஞ்சிநாதன் குடும்பத்திற்கு “நடந்ததை மறந்து சமாதானமாக இருப்போம்” என்று கடிதம் எழுதினார்கள். ‘ஆஷின் வாரிசுகள் இந்தியா வந்தால் வரவேற்போம்’ என்று பதிலனுப்பியது வாஞ்சிநாதனின் குடும்பம். இதை மனிதநேயம் என்று பாராட்டலாம். ஆனால், 25 வயது இளைஞன் தன்னைச் சுற்றி வளர்ந்திருந்த கனவுக் கோட்டையையும், குடும்பத்தின் கனவையும் கலைத்த நாள் இன்று. வாஞ்சிநாதனின் மனைவி 1967-ல் மரணமடைந்தார் என்றும், அதுவரை அவருக்கு சுதந்திர இந்தியாவை ஆட்சி செய்த அரசு எந்த சலுகையோ, பென்ஷனோ தரவில்லை’ என்ற செவி வழிச் செய்தி நமக்கு வருத்தத்தை அளிக்கிறது.

சுபாஷ் சந்திர போஸ், சாவர்க்கர், வாஞ்சிநாதன், பாரதியார், வ.உ.சி, மாடசாமி பிள்ளை, வாஞ்சிநாதன் போன்ற தீவிரவாதத்தில் நம்பிக்கை கொண்ட காங்கிரஸ் சாரா தியாகிகளின் வாரிசுகளுக்கு சுதந்திர இந்திய ஆட்சியாளர்கள் இழைத்த அநீதி மன்னிக்க முடியாதது. அரசு பென்ஷன் தரும், பாராட்டும் என்றெல்லாம் எதிர்பார்த்து இவர்கள் தியாகங்களைச் செய்யவில்லை. தகுதியில்லாதவர்களுக்கு அளிக்கப்படும் மரியாதையும், தகுதியானவர்களுக்கு மறுக்கப்படும் மரியாதையும் பயனற்றுப்போகும் என்று ஒரு வாசகம் மகாபாரத்தில் உண்டு. இது உண்மை என்பதை இன்றைய ஆட்சியாளர்கள் நமக்கு உணர்த்தியிருக்கிறார்கள்.

சுதந்திர போராட்ட தியாகியாகிய வாஞ்சிநாதனின் பெயரைத் தாங்கி ‘வாஞ்சி மணியாச்சி சந்திப்பு’ என்று ரயில் நிலையத்திற்கு பெயர் மட்டுமே சூட்டப்பட்டிருக்கிறது. இதைத் தவிர வாஞ்சிநாதனுக்கு சிலைகளோ, நினைவுச் சின்னமோ இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், ஆஷ் கொல்லப்பட்ட பிறகு வெள்ளைக்காரனின் அடிவருடி இந்தியர்கள் 32 பேர் சேர்ந்து வசூல் வேட்டையில் இறங்கினர். மொத்தம் 3002 ரூபாய் வசூலித்தனர். அந்தப் பணத்தில் ஆஷ் உடல் புதைக்கப்பட்ட பாளையங்கோட்டை மிலிட்டர் லைன் இங்கிலீஸ் சர்ச் கல்லறை தோட்டத்தில் ஒரு நினைவிடம் அமைத்தனர். இதைத் தவிர தூத்துக்குடியில் ஆஷுக்கு ஒரு மணி மண்டபமும், பாளையங்கோட்டையில் ஒரு சிலையும் வைத்தார்கள்.  

ஆஷ் கொலையைத் தொடர்ந்து, மேடம் காமா தன்னுடைய பத்திரிகையான வந்தே மாதரத்தில் தெரிவித்த கருத்துகள் இவைதான்.

‘அலங்கரிக்கப்பட்ட இந்திய அடிமைகள், லண்டன் நகரத்தின் தெருக்களில் ஜார்ஜ் மன்னரின் முடிசூட்டு விழாவில் சர்க்கஸ் நடனம் நடத்தி, தங்களுடைய அடிமைத்தனத்தை வெளிப்படுத்திய வேளையில், நம் தேசத்தின் இரண்டு இளைஞர்கள் மட்டும் தங்களுடைய தீர செயலால், இந்தியா இன்னும் உறங்கிக் கொண்டிருக்கவில்லை என்று உணர்த்திருக்கின்றனர். வாஞ்சிநாதனின் துப்பாக்கியிலிருந்து வெளிப்பட்ட குண்டுகள், நூற்றாண்டுகளாக அடிமைப்பட்டுக் கிடக்கும் இந்த தேசத்தை நிமிர்ந்து நிற்கச் செய்திருக்கிறது’ என்று எழுதியிருந்தார்.  

- சாது ஸ்ரீராம் (saadhusriram@gmail.com)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com