‘சோளகர் தொட்டி’  நாவலை நினைவுறுத்தும் ‘கடம்பன்’ திரைப்படம்!

நாவலில் வீரப்பன் தேடுதல் வேட்டைக்காக மலைவாழ் மக்கள் துன்புறுத்தப் பட்டார்கள் எனில் கடம்பன் திரைப்படத்தில் தனியார் சிமெண்ட் கம்பெனிக்குத் தேவையான சுண்ணாம்புக் கற்களை வெட்டி எடுக்க மலையக மக்கள் தடையாக 
‘சோளகர் தொட்டி’  நாவலை நினைவுறுத்தும் ‘கடம்பன்’ திரைப்படம்!

சில வருடங்களுக்கு முன் எழுத்தாளர் சா.பாலமுருகனின் ‘சோளகர் தொட்டி’ என்றொரு நாவலை வாசித்தேன். வாசித்து முடித்து பல வாரங்களுக்கு அந்த நாவலின் தாக்கத்திலிருந்து வெளியில் வர முடியாத அளவுக்கு நாவல் களம் மனதில் பாதிப்பு ஏற்படுத்தியது. வீரப்பன் தேடுதல் வேட்டைக்காக சத்யமங்கல வனப்பகுதிக்குள் சட்டப்பூர்வமாக நுழைந்த தமிழக சிறப்பு அதிரடிப்படையினர் அங்கிருந்த பழங்குடி மக்களுக்கு அளித்த டார்ச்சர்கள் கொஞ்ச நஞ்சமில்லை. வயது வந்த சிறுமிகள் மற்றும் பெண்களை விசாரணை என்ற பெயரில் தொடர்ந்து மானபங்கப்படுத்தினார்கள். பழங்குடி இன ஆண்கள் காட்டு மிருகங்களைப் போல வேட்டையாடப்பட்டனர். இவையெல்லாம்  சந்தனக் கடத்தல் வீரப்பன் எனும் ஒரு தனி மனிதனைத் தேடுவதற்கான காரணங்களாக காவல்துறையால் அப்போது நியாயப்படுத்தப் பட்டன. நாவலில் வீரப்பன் தேடுதல் வேட்டைக்காக மலைவாழ் மக்கள் துன்புறுத்தப் பட்டார்கள் எனில் கடம்பன் திரைப்படத்தில் தனியார் சிமெண்ட் கம்பெனிக்குத் தேவையான சுண்ணாம்புக் கற்களை வெட்டி எடுக்க மலையக மக்கள் தடையாக இருப்பார்கள் என அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த நினைக்கிறார்கள்.

மொத்தத்தில் தங்களது மூதாதையர்கள் வாழ்ந்த பசுமை மாறாக் காடுகளில் இருந்து அவர்களை விரட்ட ஏதாவதொரு காரணம் அதிகார வர்க்கத்துக்கும் பணக்கார வர்க்கத்துக்கும் எப்போதும் கிடைத்து விடுகிறது. ஒடிசாவின் தண்டகாரண்ய வனப் பகுதிகளில் இருந்த பழங்குடி மக்களை விரட்ட அப்போதைய காங்கிரஸ் அரசுக்கு கிடைத்த காரணம் வேதாந்தா பாக்ஸைட் அலுமினியத் தாது வெட்டி எடுப்பு விவகாரம். இயற்கை வளங்களை வெட்டி எடுக்கிறோம் என்றும் தோண்டி எடுக்கிறோம் என்றும் இவர்கள் செய்யும் அட்டூழியங்கள் கொஞ்ச நஞ்சமில்லை. முன்பு மலைகளையும், காடுகளையும் குறி வைத்தவர்கள் இப்போது பசுமை கொஞ்சும் கிராமங்களையும் விட்டு வைக்கத் தயாராக இல்லை. தமிழகத்தில் நெருப்பாகக் கனன்று கொண்டிருக்கும் நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம் அவற்றில் ஒன்று. இப்போதும் ஒரு தெளிவான முடிவு எட்டப்படாத பிரச்னைகளில் ஒன்றாக புகைந்து கொண்டிருக்கும் இவ்விவகாரத்திற்கான தீர்வு எந்த விகிதத்தில் முடியப்போகிறது எனத் தெரியவில்லை. 

கடம்பன் திரைப்படம் பேசும் விசயம் நிச்சயம் மக்களிடையே பரவலான கவனம் பெற வேண்டிய விசயமே. ஆனால் படம் வெளியான இரு வாரங்களுக்குள் படத்தின் ரிசல்ட் தோல்வி என்று கருதப்படுகிறது. இந்தியா முழுதும் பெரு நகரங்களில் காங்கிரீட் காடுகளில் வாழும் மக்களுக்கு மலைவாழ் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் போய்ச் சேர ஒரே வழி திரைப்படங்களும், காட்சி ஊடகங்களும், செய்தி ஊடகங்களும் தான் எனும் போது அப்படிப் பட்ட வாய்ப்புகள் மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளப்பட வேண்டுமே! கடம்பனில் ஒரு சில காட்சிகள் மிகவும் யோசிக்க வைத்தன. 

தோலுக்காக உறித்துக் கொல்லப்பட்டு மரத்தில் தொங்க விடப்பட்ட புலியுடலின் கோரம்.

வனப்பகுதிகளுக்குச் செல்லும் மனிதன் மது அருந்தி விட்டு தூக்கி எரிந்த கண்ணாடி பாட்டில் குத்தி யானையொன்று அவஸ்தைப் படும் காட்சி.

இயற்கையாக கிடைக்கும் தேனடைகளுக்குப் பதிலாக செயற்கை முறையில் அமேசான் தேனீக்களை வளர்த்து தேன் எடுக்க ஊக்கப் படுத்தும் தன்னார்வத் தொண்டு நிறுவன ஊழியர்களாக ஒய்.ஜி.யும் அவரது மகளும் வரும் காட்சிகள். தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் என்ற பெயரில் இவர்கள் தனியாரின் கைக்கூலிகளாகி அப்பாவி பழங்குடி மக்களுக்குச் செய்யும் அநீதிகளை நினைத்தால் எரிச்சலாக இருக்கிறது.

அதிகார மட்டத்தை விலைக்கு வாங்க அவர்களை பணத்தால் அடிக்கச் சற்றும் தயங்காத பெருமுதலாளி வர்க்கமாக சிமெண்ட் கம்பெனி அதிபரும் அவரது தம்பியும்.

காவல்துறை மற்றும் ரவுடிகளால் ஊர் எரிக்கப் பட்டு வீடிழந்து உள்காடுகளுக்குள் விரட்டப்பட்ட பழங்குடி மக்கள் குளிரிலும், மழையிலும் படும் அவஸ்தைகள்.

பிறந்த சிசுவையும் குண்டு எரிந்து கொல்லத் தயங்காத மனித மிருகங்களின் பணத்தாசை

இப்படிச் சில காட்சிகள் மிகக் கனமாக மனதில் பதியவே செய்தன. இந்தப் படத்தில் தெளிவாக உணர்த்தப் பட்ட ஒரு ரகசியம்; மிகப்பெரிய அளவில் அதிகாரிகளின் அனுசரணையுடன் நடைபெறும் செயல்கள் அனைத்துமே சட்டப்பூர்வமான அனுமதியின் பின் தன் நடைபெறுகிறது அல்லது நடத்தப்படுகிறது எனும் தப்புக் கணக்கை அப்பாவி மக்கள் இனிமேலும் போடக் கூடாது என்பது தான். எனவே ஆள்பலம், பணபலம், அதிகார பலம் உள்ளவர்கள் சட்டப்பூர்வமான அனுமதி பெறாமல் இல்லீகலாகச் செய்யும் காரியங்களை புத்திசாலி மக்களால் முறியடிக்க முடியும் எனப் பொது மக்கள் அல்லது பாதிக்கப்பட்டவர்கள் கண்டிப்பாக உணர்ந்தே ஆக வேண்டும்.

படம் சொல்லும் சங்கதி என்னவோ விழிப்புணர்வைத் தூண்டுவதாக இருக்கிறதே தவிர... மூன்று மணி நேரம் தியேட்டரில் உட்கார்ந்து படம் பார்க்கையில் பார்வையாளர்களைக் கட்டிப் போடும் ஒரு சுவாரஸ்யமான கதை சொல்லல் உத்தி இதில் இல்லை. இந்தப் படத்துக்கு காதரீன் தெரஸா போன்ற ஒரு நாயகி தேவையே இல்லை. படம் பார்க்கையில் அவரை வீணடித்திருக்கிறார்களோ என்று தோன்றியது. 

இன்னும் சற்று சுவாரஸ்யமாகச் சொல்லப்பட்டிருந்தால் கடம்பன் சினிமா ரசிகர்களில் அனைத்து தரப்ப்பினரையும் ஈர்த்திருப்பான். பொறுமையைச் சோதிக்கும் கதை சொல்லல் உத்தியால் தற்போது தேவையான அளவுக்குப் பார்வையாளர்களை சென்றடைந்திருக்க மாட்டான் என்றே தோன்றுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com