வீட்டை விட்டு வெளியில் செல்லும் பெண்கள் கையில் கத்தி வைத்துக் கொள்ள வேண்டுமா?

பாலியல் வன்முறைக்கு உள்ளாகும் பெண்களுக்கு அம்மாதிரியான ஆபத்தான சூழல்களில் தங்களது போராட்டமும், தற்காப்பு நடவடிக்கையும் எப்படிப் பட்டதாக இருக்க வேண்டும் என்று யோசிப்பதில் குழப்பம் இருக்கிறது
வீட்டை விட்டு வெளியில் செல்லும் பெண்கள் கையில் கத்தி வைத்துக் கொள்ள வேண்டுமா?

ஆந்திர மாநில மகளிர் ஆணையத் தலைவியாக பொறுப்பேற்றது முதல் தெலுங்கு தேசக் கட்சி உறுப்பினரான ராஜகுமாரி ஊடகங்களில் அவ்வப்போது பரபரப்புச் செய்தியாகி விடுகிறார். 

சில மாதங்களுக்கு முன்பு நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிக்க தொலைக்காட்சி சீரியல்கள் தான் காரணம் என ஒரு பேட்டியில் கூறி இருந்தார். கடந்த காலங்களை விட தற்போது ஒளிபரப்பாகி வரும் தொலைக்காட்சி சீரியல்களில் மிக அதிக அளவில் குடும்ப வன்முறை அதிகமாகக் காட்சிப்படுத்தப் படுகிறது எனவும், சீரியல்களில் வரும் வில்லன்கள், வில்லிகள் அனைவருமே சாதாரணமாகக் காண்பிக்கப்படுவதில்லை, வெறுப்பினாலும், குரோதத்தினாலும் சொந்த குடும்ப உறுப்பினர்களையே விசம் வைத்தும், கத்தியால் குத்தியும் கொள்பவர்களாகவும், சதா வேறு வேலைகள் எதுவுமின்றி சதித் திட்டம் தீட்டிக் கொண்டே இருப்பவர்களாகவுமே மிக மிக மோசமானவர்களாகச் சித்தரிக்கப் படுகிறார்கள். இதனால் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மிதமிஞ்சி நாடு கெட்டுக் குட்டிச் சுவராதைத் தவிர வேறு பலன்கள் இல்லை. இப்படியான மோசமான தொலைக்காட்சி சீரியல்களைத் தடை செய்ய வேண்டும். என்று தன்னுடைய ஆதங்கத்தை கோபம் பொங்க அந்தப் பேட்டியில் தெரிவித்திருந்தார். 

அது மட்டுமல்ல சமீபத்தில் விசாகபட்டிணத்தில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளான இரு சிறுமிகளை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ப்பித்து விட்டு குற்றவாளிகள் மீதான மிகுந்த ஆத்திரத்துடன் கண் கலங்கி அவரளித்த பேட்டி மேலும் வைரலானது;

“ஒன்றும் அறியாச் சிறுமிகள் என்றும் பாராது இந்த இரு குழந்தைகளின் மீதும் நிகழ்த்தப் பட்ட வன்முறைக்கு காரணமானவர்களை அடித்துத் தோலை உறிக்க வேண்டும்... நட்ட நடுச் சாலையில் ஊர்வலமாக அழைத்துச் சென்று செருப்பால் அடிக்க வேண்டும்” என்று சொன்னதோடு கோபத்தின் உச்சத்தில் அவர் ஒட்டு மொத்த பெண்கள் சமூகத்தைப் பார்த்தும் ஒரு அறிவுரை கூறினார். “இது போன்ற வன்முறைகள் நிகழ்வது தொடர்கதையாகி வருவதால் இனி வீட்டை விட்டு வெளியில் செல்லும் பெண்கள் தங்களது கைகளில் கத்தி வைத்துக் கொள்ள வேண்டும். கேரளாவில் தன்னைப் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கிய ஒரு சாமியாரின் ஆணுறுப்பை வெட்டி தனது கோபத்தைக் காட்டிய சிறுமியைப் போல எல்லாப் பெண்களும் ஆபத்து என வந்து விட்டால் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள தைரியமாக முன் வர வேண்டும். சட்டம் அவர்களுக்குத் துணையாக நிற்கும் பொருட்டு பெண்கள் பாதுகாப்புக்காக இருக்கும் சட்டங்களில் திருத்தம் கொண்டு வரப்படும்” என்றும் அவர் கூறினார்.

ஆந்திர மகளிர் ஆணையத் தலைவியான ராஜகுமாரியின் இந்தப் பேச்சு ஊடகப் பரப்பில் பரபரப்பான பேசுபொருளாகி விட்டது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் இவரது கருத்தை ஒட்டியது தான் கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அம்மாநில மகளிர் ஆணையத் தலைவி பிரமிளா தேவியின் கருத்துகளும். ஆனால் ராஜகுமாரியின் கருத்துகள் மிகவும் வைரலானதற்குக் காரணம் அவர் அந்தக் கருத்துக்களை வெளியிட்ட போது காட்டிய உருக்கமும், கோபமுமே! மகளிர் ஆணையத் தலைவி எனும் பொறுப்பான பதவியில் இருந்து கொண்டு “கத்தி வைத்துக் கொள்ளுங்கள், ஆணுறுப்பை வெட்டி வீசுங்கள்” என்றெல்லாம் பரபரப்பாக ஊடகப் பேட்டி அளிப்பது அவரது பதவிக்கு அழகல்ல என்று ஊடகங்களில் பல்வேறு விதமாக விவாதிக்கப் பட்டாலும் ... அவர் சொல்வதில் விசயமில்லாமல் இல்லை.

பெரும்பாலான நேரங்களில் பாலியல் வன்முறைக்கு உள்ளாகும் பெண்களுக்கு அம்மாதிரியான ஆபத்தான சூழல்களில் தங்களது போராட்டமும், தற்காப்பு நடவடிக்கையும் எப்படிப் பட்டதாக இருக்க வேண்டும் என்று யோசிப்பதில் குழப்பம் இருக்கிறது. மானபங்கப் படுத்த வரும் ஆணை எந்தளவுக்குத் தாக்கலாம்? எந்தளவுக்கு காயப் படுத்தலாம்? ஒரு வேளை அவனது உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டால் தனக்கு தண்டனை கிடைக்குமோ? தான் குற்றவாளியாக்கப் பட்டு விடுவோமோ?1 என்றெல்லாம் பெண்களிடையே நிறையக் குழப்பங்கள் நிலவுகின்றன. தற்போது கேரள முதல்வரும், ஆந்திர மகளிர் ஆணையத் தலைவியும் பாதிக்கப் பட்டவர்களுக்காக பேசிய பேச்சுக்கள் நிச்சயம் பெண்களிடையே தங்களது தற்காப்பு குறித்த மனக்கவலைகளை சற்றுக் குறைத்திருக்கும் என்பது நிஜம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com