மக்களின் உணவு சுதந்திரத்தில் தலையிடும் மத்திய அரசின் புதிய சட்டத் திருத்தம் செல்லுபடியாகுமா?

1960 ல் கொண்டு வரப்பட்ட விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொண்டு தற்போது விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் 2017 என புதிய சட்டத்தை மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் கொண்டு வந்துள்ளது
மக்களின் உணவு சுதந்திரத்தில் தலையிடும் மத்திய அரசின் புதிய சட்டத் திருத்தம் செல்லுபடியாகுமா?

1960 ல் கொண்டு வரப்பட்ட விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொண்டு தற்போது விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் 2017 என புதிய சட்டத்தை மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத்திருத்தத்தின் படி நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகள் விற்பனை செய்யப்படுவதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது அதுமட்டுமல்ல மாட்டுச் சந்தைகளில் மாடுகள் விற்பனை செய்யப்படுவதில் உள்ள முறைகேடுகளை ஒழுங்குபடுத்தவும் சில சட்ட விதிகள் தற்போது உருவாக்கப் பட்டு புதிதாக விலங்குகள் வதை தடை சட்டத்தில் சேர்க்கப் பட்டுள்ளது. திருத்தப் பட்ட புதிய விலங்கு வதை சட்டத்தின் சில சாராம்சங்கள்;

  • பிறந்து 6 மாதங்களுக்குக் குறைவான கால்நடைகளை இறைச்சிக்காக விற்பனை செய்யக் கூடாது. அதே போல வயதான மாடுகளையும் அடிமாடுகளாக விற்பனை செய்யக் கூடாது.
  • மத விழாக்களில் மாடு, ஒட்டகம் முதலிய விலங்குகளை வெட்டிப் பலி கொடுக்கக் கூடாது.
  • கால்நடைகளின் கொம்புகளை சீவக் கூடாது, கொம்புகளில் வர்ணம் தீட்டக் கூடாது.
  • கால்நடைகளைப் பாரம் சுமக்கப் பயன்படுத்தக் கூடாது.
  • எந்த விலங்குகளுக்கும் அணிகலன்கள் முதலியவற்றை அணிவிக்கக் கூடாது.
  • கால்நடை மருத்துவர்கள் தவிர வேறு யாரும் கால்நடைகளுக்கு மருந்துகள் அளிக்கக் கூடாது.
  • கால்நடை சந்தைகளில் விலங்குகள் விவசாயக் காரியங்களுக்காக மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன என ஆதாரபூர்வமாக எழுதி சமர்பிக்க வேண்டும்.
  • கால்நடையின் உரிமையாளரோ அல்லது அவருடைய அதிகாரப்பூர்வமான முகவரோ கையொப்பமிட்ட எழுத்து வடிவிலான ஒப்பந்த ஆவணம் இல்லாமல் கால்நடைகளை  சந்தைக்கு கொண்டுவரக் கூடாது.
  • கால்நடைகளின் அடையாளம் குறித்த விவரங்கள் சமர்பிக்கப் பட வேண்டும். அதே சமயம் கால்நடைகளின் உடலில் அடையாளங்கள் பொறிக்கப் பட்டிருக்க கூடாது.

இத்தகைய சரத்துகளை அடிப்படையாகக் கொண்டு புதிய விலங்குகள் வதை தடைச் சட்டம் நேற்று முதல் அமுலுக்கு வந்திருக்கிறது.

நாடு முழுவதும் மாட்டிறைச்சி உண்போரிடையே மிகுந்த அதிர்வலைகளை எழுப்பியுள்ள இந்த தடைச் சட்டம் குறித்து பலரும் பலவிதமான கருத்துகளை வெளியிட்டுவருகின்றனர். அவற்றுக்கு பதிலளிக்கும் விதமாக மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் மத்திய அரசின் இந்தப் புதிய சட்டத்தால் நாட்டில் இயற்கை விவசாயம் காக்கப் படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சரான ஹர்ஷ வர்த்தன் வெளியிட்ட அறிக்கையில்;  மாடுகள் அடிமாடுகளாக விற்பனை செய்யப் படுவதில் இருக்கும் முறைகேடுகளைத் தடுக்கவே இப்படி ஒரு நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த விதிகள் கால்நடைச் சந்தைகள் மற்றும் இறைச்சிக் கூடங்களுக்கு மட்டுமே பொருத்தமானவை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனாலும் மாட்டிறைச்சி உண்போரை அதிக எண்ணிக்கையில் கொண்ட இந்திய மாநிலங்கள் அனைத்திலும் இந்த புதிய சட்டத் திருத்தமானது மாட்டிறைச்சி உண்போரின் உரிமையைப் பறிக்க வந்த சட்டமாகவே கருதப் படுகிறது. ‘இன்று மாட்டிறைச்சி உண்ணக் கூடாது என்று தடைச் சட்டம் போடக் கூடியவர்கள் நாளையே மீன் உண்ணக் கூடாது என்பார்கள்’ என்று இவ்விசயத்தில் தனது கோபத்தையும் பதிவு செய்திருக்கிறார் கேரள முதல்வர். மத்திய அரசு தனது மக்களின் உணவுண்ணும் சுதந்திரத்தையே ஆட்டம் காண வைக்கும் அளவுக்கு இப்படி ஒரு சட்டம் கொண்டு வந்தது எத்தனை தூரம் செல்லுபடியாகப் போகிறது என்பதற்கு வருங்காலமே சாட்சி!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com