நாதுராம் கோட்ஸேவின் வாக்குமூலமும், கடைசி ஆசையும்: வன்முறை தீர்வாகாது!

மகாத்மா காந்தியைச் சுட்டது யார்? என்ற கேள்வியை யாரிடம் கேட்டாலும் டக்கென்று ‘ நாதுராம் கோட்ஸே' என்று பதில் வரும். காந்தி கொலை வழக்கில் யாருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது?
நாதுராம் கோட்ஸேவின் வாக்குமூலமும், கடைசி ஆசையும்: வன்முறை தீர்வாகாது!

மகாத்மா காந்தியைச் சுட்டது யார்? என்ற கேள்வியை யாரிடம் கேட்டாலும் டக்கென்று ‘ நாதுராம் கோட்ஸே' என்று பதில் வரும். காந்தி கொலை வழக்கில் யாருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது? என்று கேள்வியை கேட்டால், சட்டென்று ‘கோட்ஸே' என்று பதில் வரும். காந்தி கொலை வழக்கில் தூக்கிலிடப்பட்டது கோட்ஸே மட்டுமல்ல, நாராயண் தத் ஆப்தே என்ற மற்றொரு நபரும்தான் என்ற உண்மை பலருக்குத் தெரிவதில்லை. காந்தி கொலையைப் பற்றி நன்கு அறிந்தவர்களுக்கு மட்டுமே நாராயண்தத் ஆப்தே பற்றி தெரியும்.

வன்முறையால் எந்த ஒரு விஷயத்தையும் நியாயப்படுத்த முடியாது. மாகாத்மா காந்தி கொலையும் அப்படித்தான். காந்தி கொலை வழக்கில் நீதிமன்றத்தில் யாருடைய உதவியில்லாமல் தொடர்ந்து ஐந்தரை மணி நேரம் பேசினான் கோட்ஸே. கொலைக்கான காரணங்களை பட்டியலிட்டான்.

கொலைக்கு அவன் சொல்லும் பெரும்பாலான காரணங்கள் காந்தியின் முஸ்லிம் ஆதரவு நிலை. மேலும் சில காரணங்களாக அவன் பட்டியலிட்டதை படிப்போம்:

காந்தி யாரையும் கலந்தாலோசிக்காமல் முடிவெடுப்பது.

முஸ்லிம்களின் அன்பை பெறுவதற்காக இந்தியையும், உருதையும் கலந்து ஹிந்துஸ்தானி என்ற பேச்சு மொழியை முன்னிலைப்படுத்தினார். இந்தியின் அழகும் புனிதமும் கெட்டுவிட்டதாக நினைத்தான்.

காந்தி எழுதிய ராமாயணத்தில், பாதுஷா தசரதன், பீவி சீதா என்றெல்லாம் எழுதியிருந்தார். இது இதிகாசத்தை இழிவுபடுத்தியதாக நினைத்தான்.

பாகிஸ்தானிலிருந்து விரட்டப்பட்ட இந்து அகதிகள் டெல்லியில் கோவில், மசூதி, சர்ச் என்று எல்லா இடங்களில் தங்கியிருந்தனர். மசூதியில் தங்கியிருந்த அகதிகள் உடனடியாக வெளியே வரவேண்டும் என்று சொல்லி சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தார் காந்தி. பாகிஸ்தானில் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்திய போது அவர்களைப் பற்றி ஒரு வார்த்தைகூட பேசவில்லை.

பாகிஸ்தானில் இந்துக்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள். இந்துப் பெண்கள் கற்பு சூரையாடப்பட்டது. ஆனால், பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு ஐம்பத்தி ஐந்து கோடி ரூபாயை இந்தியா கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி காந்தி சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தார். இதைத் தொடர்ந்து இந்திய அரசு ஐம்பத்தி ஐந்து கோடி ரூபாயை பாகிஸ்தானுக்கு வழங்கியது.

கிலாபத் இயக்கத்துக்கு காந்தி ஆதரவு அளித்தார்.

ஆப்கானித்தான் அமீர் ஊடுருவலை ஆதரித்தார்.

ஆர்ய சமாஜ்க்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வந்தார்.

சுவாமி சாரதாநந்தாவை ஒரு முஸ்லிம் இளைஞன் கொலை செய்த போது, அதை காந்தி கண்டிக்கவில்லை. மாறாக, ‘சுவாமி முஸ்லிம்களின் விரோதியல்ல. ஒருவருக்கொருவர் துவேஷத்தை கிளப்பிவிட்டவர்களே குற்றவாளிகள். இந்த கொலைக்கு அவர்களே காரணம். முஸ்லிம் இளைஞன் குற்றவாளியல்ல”, என்று அறிக்கை விட்டார்.

ஜின்னாவுக்கும், முஸ்லிம் லீக்'கும் ஆதரவாக அவர் செயல்பட்டார்.

இந்துக்களை கட்டாய மதம் மாற்றம் செய்ததால் ஏற்பட்ட மோப்லா (Moplah Riots ) கலவரங்களை, ஆதரங்களுடன் எடுத்துச் சொல்லிய போதும், காந்தி அதை கண்டுகொள்ளாமல் இருந்தார்.

வந்தே மாதரம்' பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

பசு வதையை ஆதரித்தார்.

சத்ரபதி சிவாஜி உருவம்பொறித்த கொடிகளை உபயோகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

இப்படிப் பட்டியலிட்ட கோட்ஸே, இறுதியாக பேசியவை:
“காந்தியை நான் கொன்றால், நாட்டு மக்களிடம் நான் மதிப்பை இழப்பேன். மக்கள் என்னை வெறுப்பார்கள். என் உயிரைவிட மேலானதாகக் கருதப்படும் மரியாதையை இழப்பேன். அதே நேரத்தில் காந்தியில்லாத அரசியல், நடைமுறைக்கு சாத்தியமானவற்றை யோசிக்கும். தேவைப்படும் நேரத்தில் பதிலடி கொடுக்கும். இந்தியா ராணுவ ரீதியாக பலம் வாய்ந்த நாடாகும். காந்தியை நான் கொல்வதால், சந்தேகமே இல்லாமல் என்னுடைய எதிர்காலம் நாசமாகப் போகும். ஆனால், என் நாடு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பிலிருந்து தப்பிக்கும். 

எல்லாவற்றையும் யோசித்து நான் ஒரு முடிவெடுத்தேன். என் முடிவு குறித்து யாரிடமும் ஆலோசிக்கவில்லை.

“காந்தியை நான் கொலை செய்தது என் சுய நலத்திற்காக அல்ல. என் தாய்த் திருநாட்டின் மீது நான் கொண்டிருந்த தூய அன்பினாலும், அதை புனித கடமையென்று கருதியதாலும் இதை செய்தேன். இதன் பின் விளைவுகளை தெரிந்தே அந்த புனிதக் கடமையைச் செய்தேன். என் கழுத்தைச் சுற்றி இறுக்கப்போகும் கயிற்றை நான் இப்போதே நினைத்துப் பார்க்கிறேன். இருந்தும் நான் மேற்கொண்ட பணியிலிருந்து என்னை அது திசைதிருப்பாது. அந்த முடிவைக் கண்டு நடுங்கி, அதிலிருந்து தப்பிக்க முயற்சிக்க மாட்டேன். என் மரணத்தை நான் விரும்பி வரவேற்கிறேன்”.

“இப்போது இந்த நீதிமன்றத்தின் முன் நிற்கிறேன். நான் செய்ததற்கு முழுமையாக பொறுப்பேற்கிறேன். நீதிபதி எனக்கு என்ன தண்டனை பொருத்தமாக இருக்குமோ அதை அளிக்கட்டும். என் மீது கருணை காட்டவேண்டாம். என் மீது கருணை காண்பிக்கும்படி யாரும் கெஞ்ச வேண்டாம். எல்லா திசைகளிலிருந்தும் என்னை விமர்சிக்கின்றனர். ஆனாலும் என் மனம் தடுமாறவில்லை. வரலாற்றை எழுதும் நேர்மையான எழுத்தாளர்கள் என்னுடைய செயலை சரியாக எடைபோட்டு அதில் இருக்கும் உண்மையை எதிர்காலத்தில் சொல்லுவார்கள் என்று நம்புகிறேன்”.

இவ்வாறு கோட்ஸே பேசி முடித்தான்.

காந்தி கொலை வழக்கின் விசாரணை உயர் நீதிமன்றத்தில் ஏறத்தாழ ஐம்பது நாட்கள் நடந்தது. 21 ஜூன், 1949 அன்று அந்த வழக்கு முடிவடைந்தது. கோட்ஸே, ஆப்தே ஆகியோரின் தூக்கு தண்டனையை உறுதி செய்தது உயர் நீதிமன்றம். இதைத் தொடர்ந்து பிரிவி கவுன்சிலுக்கு (Privy Council) மேல்முறையீடு செய்யப்பட்டது. அவை தள்ளுபடி செய்யப்பட்டன. கடைசியாக ஆப்தே சார்பில் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பப்பட்டது. கோட்ஸே சார்பில் அவர் உறவினர் ஒருவர் கருணை மனுவை தாக்கல் செய்தார். இருவருடைய மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.

15 நவம்பர், 1949 தூக்கு தண்டனை என்று முடிவானது. அதற்கான ஏற்பாடுகள் அம்பாலா மத்திய சிறையில் செய்யப்பட்டன

கோட்ஸேவும், ஆப்தேவும் தூக்கு மேடைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கோட்ஸே அன்று கொஞ்சம் நடுக்கத்துடன் காணப்பட்டான். ஆனால், ஆப்தேவின் பயம் வெளியே தெரியவில்லை. தூக்குக் கயிற்றின் முன் நிறுத்தப்பட்டனர். அப்போது கோட்ஸே தடுமாற்றத்துடன் கூடிய குரலில் “அகண்ட பாரதம் (Akhand Bharat) என்று சொன்னான். “நீடூடி வாழ்க” (Amar Rahe) என்று உரக்கக்கூறினான் ஆப்தே. ஆப்தேயின் குரலில் இருந்த அழுத்தம், கோட்ஸேவிடம் இல்லை. அதற்குப் பிறகு இருவரும் அமைதியாக இருந்தனர். அவர்கள் மனத்தை ஏதோ ஒன்று அழுத்திக் கொண்டிருந்தது. அதன் விளைவுதான் இந்த மவுனம். எந்த தருணத்திலும் மனம் கலங்காத கோட்ஸேவிற்கு மரண வாசல் ஒரு நடுக்கத்தை ஏற்படுத்தியதை புரிந்து கொள்ள முடிந்தது.

கோட்ஸேவிடம் கடைசி ஆசை என்ன? என்ற கேள்வி கேட்கப்பட்டது.

‘தனது அஸ்தியை ஒன்றுபட்ட, அகண்ட இந்தியாவில் ஓடும் சிந்து நதியில் கரைக்க வேண்டும்', என்று கேட்டுக்கொண்டான். பிறகு இருவரும் ஒரே நேரத்தில் தூக்கிலிடப்பட்டார்கள். சிறிய நடுக்கத்துடன் ஆப்தேயின் உயிர் துடிப்பு அடங்கியது. ஆனால், கோட்ஸே உடனடியாக மரணிக்கவில்லை. கிட்டத்தட்ட இருபது நிமிடங்கள் வரை அவன் உடலை முறுக்கிக் கொண்டிருந்தான். பிறகு டாக்டர்கள் அவர்களை பரிசோதித்தனர். உலகையே பேரதிர்ச்சியில் தள்ளிய இருவரின் மரணம் உறுதி செய்யப்பட்டது.

கொலை வழக்கின் மேல் முறையீட்டை விசாரித்த சிறப்பு பென்ச் நீதிமன்றத்தின் நீதிபதி கோஸ்லா வழக்கைப் பற்றி தன்னுடைய தனிப்பட்ட கருத்தை பின்வருமாறு தெரிவித்தார்.

“இந்த மேல் முறையீட்டில் முக்கியமான ஒன்று கோட்ஸே பேசிய பேச்சுக்கள். அவர் பல மணி நேரம் தொடர்ந்து பேசினார். தடுமாற்றமில்லாமல் முதல் முறையிலேயே வழக்கைப் பற்றியும், கொலையின் நோக்கத்தைப் பற்றியும் தெளிவாகப் பேசினார். வழக்கு நடக்கும்போது பார்வையாளர்கள் அங்குமிங்கும் நகர்ந்து கொண்டிருந்தார்கள். கோட்ஸே பேசத் தொடங்கியவுடன் அந்த இடமே அமைதியானது. பெண்களின் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. ஆண்களிடமிருந்து இருமல் சத்தம் கேட்டது. அவர்கள் தங்கள் கைக்குட்டையைத் தேடிக்கொண்டிருந்தார்கள். ஒருவேளை அங்கிருந்தவர்கள் சட்டவல்லுநர்களாக இருந்து, கோட்ஸேவின் மேல்முறையீட்டு மனுவின் மீது முடிவெடுக்கும் அதிகாரம் அவர்களுக்கு அளிக்கப்பட்டிருந்தால், “கோட்ஸே குற்றமற்றவர்” என்ற கருத்தையே அங்கிருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் வெளிப்படுத்தியிருப்பார்கள்”, என்றார் நீதிபதி.

நவம்பர் 15, 1949 குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டார்கள் என்று படித்தோம். அதன் பிறகு இருவரின் உடலும் அதே இடத்தில் தகனம் செய்யப்படவேண்டும் என்பது டெல்லியிலிருந்து வந்த கட்டளை. அவர்களது உடல் அம்பாலா சிறைச்சாலைக்குள் தகனம் செய்யப்பட்டது. அவர்களது அஸ்தி சேகரிக்கப்பட்டது. தகனம் செய்த இடத்தை யாரும் கண்டுபிடிக்க முடியாதபடி சிறை நிர்வாகம் சில ஏற்பாடுகளை செய்தது. பிறகு அஸ்தியை எடுத்துக் கொண்டு ஒரு வாகனம் புறப்பட்டது. அதற்கு காவலாக ஆயுதங்கள் தாங்கிய போலிஸ் உடன் சென்றனர். அது காகர் நதிக்கு சென்றது. பிறகு ஒரு படகில் அஸ்தி எடுத்துச் செல்லப்பட்டு, யாரும் பார்க்காத ஒரு இடத்தில் கொட்டப்பட்டது.

கோட்ஸே, ஆப்தே என்ற இருவர் உலகத்தில் இருந்ததற்கான கடைசி அடையாளமும் கரைந்துபோனது. வன்முறை மீது நம்பிக்கை இருக்கும் ஒவ்வொருவருக்கும் கோட்ஸே, ஆப்தே வாழ்க்கை ஒரு பாடம். இந்தியாவும், பாகிஸ்தானும் ஒன்றுபடப்போவதில்லை என்ற எண்ணத்தில் அவர்களுடைய அஸ்தி காகர் நதியில் யாருக்கும் தெரியாத இடத்தில் கரைக்கப்பட்டதா? அல்லது இவர்கள் வாழ்ந்ததற்கு எந்த தடையமும் இருக்கக்கூடாது என்பதற்காக கரைக்கப்பட்டதா? பதிலை காலத்தின் அனுமானத்திடம் விட்டுவிடுவோம்.

ஒரு தவறை மிகச் சரி என்று நியாயப்படுத்துவதும், பட்டியலிடுவதும் முறையற்ற செயல். வாழும் போது ஏற்படும் பிரச்னைகளை மரணத்தினால் தீர்க்க முடியாது. உலகமே போற்றிப் புகழும் காந்தி என்ற மகாத்மாவை கொலை செய்ததை யாரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். வன்முறை எந்த பிரச்னைக்கும் தீர்வாகாது. கோட்சேவும் அவனது சகாக்களும் செய்த இந்த கொடூரச் செயல் அன்றோடு முடிந்துவிடவில்லை. தனிப்பட்ட மனிதர்கள் எடுத்த ஒரு மோசமான முடிவு ஒட்டுமொத்த இந்துக்களையும் இன்றுவரை தலைகுனிய வைத்துவிட்டது. ஆதி தலைவர்கள் முதல் நேற்று முளைத்த காளான்கள் வரை இந்துக்களை தீவிரவாதிகள் என்றும், ‘இந்துத் தீவிரவாதம்' என்ற பதங்களை உபயோகிக்கும் அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. தீவிரவாதம் எங்களிடம் இல்லை. அவை காளான்களின் சிந்தனையில்தான் இருக்கிறது என்பதை இந்த உலகிற்கு புரியவைப்போம்.

-சாது ஸ்ரீராம்
saadhusriram@gmail.com
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com