நீங்க படிச்ச பள்ளியில் இதை உங்களுக்கு கற்றுக் கொடுத்தாங்களா? ஷேரிங்!

பலமுறை நம்மிடம் இருப்பதை மற்றவருடன் பகிர்ந்து கொண்டிருக்கிறோம். அப்படிப் பகிர்ந்துகொள்வதில் அலாதி இன்பமும் பெறுகிறோம்! 
நீங்க படிச்ச பள்ளியில் இதை உங்களுக்கு கற்றுக் கொடுத்தாங்களா? ஷேரிங்!

பலமுறை நம்மிடம் இருப்பதை மற்றவருடன் பகிர்ந்து கொண்டிருக்கிறோம். அப்படிப் பகிர்ந்துகொள்வதில் அலாதி இன்பமும் பெறுகிறோம்! 

பகிர்ந்துகொள்ளும் குணம் வளர, நம் கலாச்சாரத்தில், தீபாவளி மற்றும் பல பண்டிகைகள் நல்ல வாய்ப்பாக அமைகின்றது. உதாரணத்துக்கு, தீபாவளி பண்டிகையைக் கொண்டாட நம்முடைய தேவைக்கு பலகாரங்கள், துணிமணிகள் போன்றவை வாங்குவோம். அத்துடன், நம் வீட்டில் வேலை செய்பவர்களுக்கும் புத்தாடை, இனிப்பு, காரம், சில சமயங்களில், தீபாவளி போனஸாக ஒரு தொகையும் கொடுப்பது வழக்கம்.

வீட்டு வாசலில் கோலம் போடுவது, காக்கை, குருவி மற்ற ஜீவராசிகளுக்கு உணவு, தண்ணீர் வைப்பது, வீட்டு வேலையாள்களுக்குக் காபி, சாப்பாடு கொடுப்பது, வெளியில் அன்னதானம் செய்வது, பேருந்தில் முதியோர்களுக்கு இடம் கொடுப்பது என்று நம்முடைய அன்றாட வாழ்க்கையிலும் பலவிதங்களில் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்புகள் நிறைய உள்ளன. 

ஏதோ அவசரத்தில், அலுவலகத்துக்கு மதிய உணவு எடுத்துச்செல்ல மறந்துவிட்டால், உடன் சாப்பிடும் நபர்கள், அவர்கள் கொண்டுவந்ததை நமக்கும் கொடுத்து சாப்பிடச் சொல்வார்கள். ஒவ்வொன்றும், இயல்பாகவும் தானாகவும் நடப்பதே!

பகிர்ந்துகொள்வதை உணர்த்தும் பல குட்டிக் கதைகளைக் கேட்டிருக்கிறோம். கர்ணனின் தாராளத்தைப் பற்றி பலமுறை கேட்டதுண்டு. அதேபோல், குசேலர் தன்னிடம் குறைவாக இருந்தும், அதிலிருந்து தன் நண்பன் கிருஷ்ணனுக்குப் பிரியமாகக் கொடுத்த ஒரு பிடி அவல். சமீபமாகப் பல மேடைகளிலும், தொலைக்காட்சியிலும் இதையும் தெரிந்துகொண்டோம். வைணவர்களின் ஆச்சாரியாரான இராமானுஜர், தனக்கு பிரத்தியேகமாகக் கிடைத்த பீஜ மந்திரத்தை தன் குருவிடமிருந்து பெற்றவுடன், ஒரு நாழிகைகூட வீணாக்காமல், ஜாதி, மத, பேதமின்றி, எல்லோரிடமும் பகிர்ந்துகொண்டார். அவருடைய குரு, "நீ இப்படிச் செய்ததால், உனக்கு நரகம்தான்” என்று சொன்னதும், “இவர்கள் எல்லோரும் சொர்க்கம் செல்வார்களே" என்று சொல்லி மகிழ்ச்சி அடைந்தார் என்பார்கள். முல்லைக் கொடிக்கு தன் தேரைக் கொடுத்த மாமன்னன் பாரி வள்ளல் பகிர்ந்ததும் நாம் அறிந்ததே!

நம் இடது கை கொடுப்பது வலது கைக்கு தெரியக்கூடாதுதான். இதற்கு, தினம் ஒரு கைப்பிடி அரிசியை எடுத்துவைத்து, பொதுவாகச் சேகரிக்கும் இடத்தில் சேர்த்துவிடுவதும் அடங்கும் (யார் கொடுத்தார் என்பதும் தெரியாது; யாருக்கு போய்ச் சேர்கிறது என்ற தகவலும் தெரியாது). நாம் பகிர்ந்துவிட்டு பேஸ்புக்கில் போஸ்ட் செய்வது இதில் அடங்காது!

அதே சமயம், இதையும் பார்த்திருக்கிறோம். "இதோ பார் உனக்கு சாக்லெட்" என்று  குழந்தையிடம் தந்ததும், உடனே குழந்தையும் தனக்கு மட்டும்தான் என்று நினைத்து வாயில் போட்டுக்கொள்ளும். “உனக்குத்தான்” என்று ஒவ்வொரு முறையும் சொல்வதால், தனக்கு மட்டுமே என்று குழந்தை நினைக்க ஆரம்பிக்கும். இதன் விளைவு, உடன் விளையாடும் குழந்தையுடன் கூட பகிர்ந்துகொள்ள மறுத்துவிடும். இப்படி வளர்ந்த குழந்தைகள் பள்ளியிலும், மற்ற குழந்தைகளுடன் கூட்டு விளையாட்டிலும், எப்படிப் பகிர்ந்து விளையாடுவது என்ற குணாதிசயம் வளராததால், மற்ற குழந்தைகளுடன் சேரமாட்டார்கள். 

ஒருவேளை, அவர்கள் உபயோகிக்கும் பொருளைக் கேட்டாலும் தர மறுப்பார்கள். பெரியோர்கள் கேட்டுப் பார்த்தாலும், இல்லை என்ற பதில்தான் வரும். பகிர்ந்துகொள்ள விரும்பாததால், அடம் பிடிப்பார்கள். பேரம் பேசி, லஞ்சமாக வேறு ஏதாவது தந்தால் மட்டுமே அந்தப் பொருளை கொடுப்பார்கள் (லஞ்சம், பேரம் சரியானதும் இல்லை).

நாம், "நன்றாக" பார்த்துக்கொள்கிறோம் என்ற எண்ணத்தில், நிறைய வாங்கித்தருவதும், “வேறு யாருக்குச் செய்யப்போகிறோம்? எல்லாம் உனக்குத்தான்” என்பதால், எல்லாம் “தனக்கு மட்டும்தான்” என்றே குழந்தைக்குத் தோன்றிவிடும். நாளடைவில், தங்கள் உரிமை என்று எடுத்துக்கொள்வார்கள். 

பெற்றோர் வசதி இல்லாமல் வளர்ந்திருந்தால், என் குழந்தைக்குக் குறையே இருக்கக் கூடாது என்று நினைத்துச் செய்யக்கூடும். சில சமயம், ஒரே குழந்தை அல்லது, கல்யாணமாகிப் பல ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த குழந்தைகளிடம் இதைப் பார்க்கலாம். உடன் இருக்கும் நபர்கள் பகிர்ந்துகொள்ளும் பழக்கத்தைக் கடைப்பிடித்தால், மற்றவரைப் பற்றி சிந்திக்கும் மனப்பான்மை குழந்தைகளுக்கு வளரும்.

போட்டியும், வெற்றியும் மட்டும் மையமாக இருந்தால், பகிர்ந்துகொள்வதைத் தம் வெற்றிக்குப் பங்கமாகவே பார்ப்பார்கள். நாளடைவில் சுயநலவாதியாக மாறிவிடுவார்கள்.

பகிர்ந்துகொள்வது என்பது பொருட்களுக்கு மட்டும் அல்ல; நாம் அறிந்ததற்கும் பொருந்தும். தெரிந்ததைப் பகிர்ந்துகொள்வது ஒரு வட்டத்துக்குள் மட்டும் வைக்கப்பட்டால், "ஸைலோ எஃபெக்ட்" ("Silo effect) ஆகிவிடக்கூடும். அதாவது, தெரிந்த தகவலை அந்த ஒரு வட்டத்துக்குள் மட்டும் பகிர்ந்துகொள்ளப்படும்.

“ஸைலோ எஃபெக்ட்” விஷயத்தை மாற்ற முடியும். நமக்குத் தெரிந்ததை எல்லோரிடமும் சேரக்கூடிய இடத்தில் வைத்துவிட்டால், பல பேருக்குப் பயனாகும். இப்படிச் செய்வதை, கற்போரின் சமூகக் குழு (Community of Learners - CoL) என்ற குறிப்புப் பெயரால் இந்தச் சமூக வலையை அழைப்பார்கள். இங்கு, நம்முடைய கற்றலை, மற்றவருடன் பரிமாறுவதை கணினி மூலமாகவோ, நேருக்கு நேராகவோ செய்துகொள்ளலாம். இதில், பகிர்ந்துகொள்வது மட்டுமே குறிக்கோளாக இருக்கும்.

இந்தக் குழு, படிப்பு சம்பந்தப்பட்டதாக தொடங்கப்பட்டதால், மாணவர்கள் ஒருவருக்கு ஒருவரும், ஆசிரியர்களுடனும், ஆசிரியர்கள் மற்ற ஆசிரியர்களுடன் பகிர்ந்துகொள்வதாகவும் அமைந்தது.

“கற்போரின் சமூகக் குழு” சந்தேகங்களைத் தெளிவு பெரும் இடமானதால், அங்கு நம் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ளும் பொழுது, அதுகுறித்த பலரின் கருத்துகளையும் தெரிந்துகொள்ள முடியும். மேலும், தெரிந்த விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பாகவும் அது அமையும். அத்துடன், மற்றவர்களின் தகவல்களையும் நாம் ஆவலோடு படிப்போம்!

இப்படி, பகிர்ந்து கேட்டுத் தெரிந்துகொள்ளும்போது, நம்முடைய கேள்வி கேட்கும் திறன் வளரும். சந்தேகங்களைக் கேட்க கேட்க, கேள்விகள் கூர்மையாகிறது. நமக்கு ஒன்று புரிய வேண்டும் என்றால், நாம் கேட்கும் கேள்விகளும், அதற்குத் தேர்ந்தெடுக்கும் வார்த்தைகளும் முக்கியம். இதற்காகவே, நாம் உபயோகிக்கும் வார்த்தைகளைக் கவனித்து தேர்ந்தெடுப்போம். தகவல்களை மற்றவருக்குப் புரியவைப்பதால், பகிர்ந்துகொள்வது என்பது ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு உட்பட்டதாக இருக்காது.

இதிலிருந்து, படிப்புடன் மற்ற திறன்களும் வளர வாய்ப்புகள் உண்டாகிறது என்பதும் தெளிவாகிறது. சிலவற்றைப் பார்ப்போம் - யார் வேண்டுமானாலும் சந்தேகங்களைக் கேட்டு விளக்குவதால், ஒருத்தருக்கு ஒருத்தர் உதவி செய்யும் மனப்பான்மை வளரும். அனைவரும் கூடும் மேடையாக அமைந்திருப்பதால், வயது வித்தியாசமின்றி பகிர்வதும் ஒரு கற்றல் என்றாகிவிடும். நட்புகளை வளர்க்கும் முறையைக் கற்றுக்கொள்ளும் இடமாகிவிடும்.  இதை எல்லாம் செய்தால், தன்னம்பிக்கை வளரும் வாய்ப்புகள் அதிகம். ஒற்றுமை வளர்வதால், மறைக்கத் தேவை இல்லை. இவை, நம் ஒவ்வொருவரிடமும் இருக்கும் அடிப்படைக் குணங்களை உறுதிப்படுத்துவதால், இதை “life skills” என்பார்கள்.

எப்படிப் பார்த்தாலும், எல்லோரும், எப்பொழுதும் எதையாவது கற்பது உண்டு. இருந்தும், கற்றுக்கொள்பவர் என்று மாணவர் சமூகத்தை மட்டும் நினைத்துவிடுகிறோம். நாம் எல்லோருமே, வயது வித்தியாசம் இல்லாமல் வாழ்வில் கற்றுக்கொண்டே இருக்கிறோம். அதை உணர்த்தவும், “கற்றது கை மண் அளவு; கல்லாதது உலகளவு” என்று நம் முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள். குறிப்பாக, கற்றுக்கொண்டே இருக்கிறோம் என்பதை நாம் ஏற்றுக்கொண்டால், தன்னடக்கமும், பரந்த மனப்பான்மையும் உருவாகும். அப்போது, நம் கண்ணோட்டத்தில் "புத்திசாலி", "முட்டாள்" என்ற பேதம் இருக்காது. "கற்றுக்கொண்டு இருக்கிறோம்" என்பதை “கற்போர் சமூகக் குழு” காட்டும்.

ஸைலோ எஃபெக்ட் இல்லாமல் இருக்க இன்னொரு பகிர்தலும் செய்யலாம். அதாவது, நாம் ஒரு விஷயத்தை சொல்லித் தரும் விதத்தை, செய்யக்கூடிய முறையை, செய்து பார்த்த விதத்தை முடிவில் வெற்றிபெற்றதையும் வர்ணிக்கலாம். கற்றுக்கொள்வதை ஒரு சுவாரஸ்யமான அனுபவமாக்கலாம். 

“கற்போர் சமூகக் குழு”, மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பயன்படுவதுபோலவே, அலுவலக விஷயத்திலும் அமைக்கலாம். நமக்குத் தெரிந்த விஷயங்களை, அறிவை, உத்தியை, நுட்பங்களை, பலருடன் பகிர்ந்துகொள்வதால், அந்தத் துறையின் வளர்ச்சி மேலோங்கும். வேலை பார்க்கும் இடத்தில் என்பதால், இன்னும் பல திறன்களை வளர்த்து, கூர்மைப்படுத்தலாம். 

ஆக, நம் வாழ்க்கையின் வளர்ச்சிக்குப் பகிர்ந்துகொள்வது அவசியம்.

கற்றுக்கொள்வது, வளரச் செய்யும்!
பகிர்ந்துகொள்வதால், 
இன்னும் பலர் துளிர்விட்டு,
நாமும், நம்முடன் பலரும் வளர்வதைப் 
பார்த்து மகிழலாம்!

மாலதி சுவாமிநாதன்
(மனநல மற்றும் கல்வி ஆலோசகர் - malathiswami@gmail.com)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com