
டோடோ (Dodo) 350 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்து வந்த பறவை இனம். அது தற்போது அழிந்துவிட்டது. அதிக உயரம் பறக்க இயலாத ஒரு பறவை அது. இந்த விசித்திர பறவை, மடகாஸ்கரின் கிழக்கு தீவில் அமைந்துள்ள மொரிஷியஸ் தீவில் மட்டுமே காணப்பட்டது. 15-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் டோடோவை டச்சு ஆராய்ச்சியாளர்கள்தான் முதன் முதலில் கண்டுபிடித்தனர்.
ரோலன்ட் சாவரி எனும் ஓவியர் டோடோ பறவையின் ஆரம்பகால உருவத்தை சாம்பல் வண்ணத்தில் சிறிய இறக்கைகள் மற்றும் தடித்த கால்கள் கொண்டதாக வரைபடம் ஒன்றை உருவாக்கினார். இப்பறவையின் ஓவியங்களில் பருமனாகவும் அழகற்றதாகவும் இருந்தது. டோடோ பறவையின் பல்வேறு சித்தரிப்புகளாலும், அதன் எலும்புகளின் எச்சத்திலிருந்தும் விஞ்ஞானிகளால் அவற்றின் தோராயமான அளவைத் தீர்மானிக்க முடிந்தது. இப்பறவைகள் சுமார் 3 அடி உயரமும், 40 பவுண்டு எடையுடனும் இருந்துள்ளது என்று கண்டறிந்துள்ளனர். அவற்றின் றெக்கைகள் வலுவற்றவையாக இருந்ததால் அவற்றால் பறக்க முடியாது, இதனால் டோடோ தரையில் வாழும் பறவைகளாக இருந்தன.
டோடோவின் எலும்புக்கூடு
டோடோ ஒரு புராண உயிரினம் என்றும் நிச்சயம் அது கற்பனைதான். அது ஒருபோதும் எங்கும் காணப்படவில்லை என்று சிலரால் கருதப்படுகிறது. ஆனால் உண்மையில் இப்பறவை கடல் மாலுமிகள் மற்றும் அவர்களது வளர்ப்பு விலங்குகளால் தொடர்ந்து வேட்டையாடப்பட்டது.
1662-ம் ஆண்டில் டோடோவைப் பற்றிய குறிப்பு கடைசியாக கிடைத்துள்ளது. முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்ட அத்தகைய சுவாரஸ்யமான ஒரு உயிரினம் சுற்றுச்சூழலின் பாதிப்பாலும், மனிதர்களின் அத்துமீறிய ஊடுருவல் காரணமாகவும் அழிந்துவிட்டது. இவை சுமார் நானூறு வருடங்களுக்கு முன்பாகவே அழிந்துவிட்டது என்கிறார்கள் ஆய்வாளர்கள். கடைசியாக டோடோ ஆலிஸ் இன் வொண்டர்லேண்ட் கதையில் தான் அறியப்படுகிறது.
புதிராகத் தோன்றி புனைவாக முடிந்துவிட்ட டோடோவை நினைத்துப் பார்த்தால் இவ்வுலகில் எத்தனை கோடி பறவையினமும் விலங்கினமும் அழிந்து மண்ணோடு மண்ணாகிவிட்டன என்று ஆச்சரியமாக உள்ளது.
இதைவிட சோகம் என்னவெனில் குட்டி டோடோ என்று அழைக்கப்படும் அதன் வகையையொத்த ஒரு பறவையினம் இன்னமும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், அவையும் கூட அருகி வருவதாக சூழலியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். சமோ நாட்டின் தேசிய பறவையான இதன் பெயர் மனுமேயா. இந்த இனப் பறவைகளை காப்பாற்றுவதற்கான தேடுதல்கள் ஆரம்பித்துள்ளன. அந்தப் பறவையின் ஒரேயொரு புகைப்படம் மட்டுமே இருக்கும் சூழலில், அதை தேடும் பணி சிரமமாக உள்ளது என்கிறார்கள் நிபுணர்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.