ஜெயலலிதா மரண மர்மத்தில் உண்மை சொல்லக் கூடிய தகுதி அப்பல்லோ பிரதாப் ரெட்டிக்கு மட்டுமே உண்டு, அவர் வாய் திறப்பாரா?

தமிழ்நாட்டில் இன்றைக்கு நடப்பது ஜெயலலிதா வலுவூட்டிய அதிமுக ஆட்சி அல்ல! அவரால் அடையாளம் காட்டப்பட்டு பதவியைப் பெற்றவர்கள் தங்களது பதவி ஆசையைத் தக்க வைத்துக் கொள்ள ஆடும் அரசியல் பகடையாட்டம்! 
ஜெயலலிதா மரண மர்மத்தில் உண்மை சொல்லக் கூடிய தகுதி அப்பல்லோ பிரதாப் ரெட்டிக்கு மட்டுமே உண்டு, அவர் வாய் திறப்பாரா?

ஜெயலலிதா மரண மர்மத்தில் ஒவ்வொரு குட்டாய் உடைபடுகிறது.. முழுப்பூசணிக்காய் என்று வெளிப்படும்?!

முதலிலிருந்தே தமிழக மக்கள் அனைவருக்குமே இந்த விஷயத்தில் கடுமையான சந்தேகம் தான். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அப்பல்லோவில் உண்மையிலேயே என்ன தான் நடந்தது? என்று அறிந்து கொள்ளும் உரிமை அவருக்கு ஓட்டளித்து அதிமுக எனும் கட்சியை அரசுக் கட்டிலில் உட்கார வைத்து அழகு பார்த்த அத்தனை அதிமுக தொண்டர்களுக்குமே உண்டு. அவர்களுக்கு மட்டுமல்ல,  அதிமுகவுக்கு ஓட்டுப் போட்டார்களோ இல்லையோ? ஒரு பெண்ணாக, சாமானியப் பெண்களால் சாதிக்க முடியாத பல விஷயங்களைத் தன் வாழ்நாளில் சாதித்துக் காட்டிய ஜெயலலிதாவை ரசிக்காதவர்கள் தான் யார்? விரும்புபவர்களுக்கு மட்டுமல்ல தன்னை வெறுத்தவர்களுக்கும் கூட பல்வேறு தருணங்களில் ரசனைக்குரிய நபராகவே ஜெயலலிதா கடைசி வரையிலும் இருந்தார். அரசு ஊழியர்களுக்கு எதிராக டெஸ்மா சட்டத்தைப் பாய்ச்சி அவர்களது வேலைக்கு உத்திரவாதமின்றி அலைக்கழித்த நிலையிலும் கூட அவரைக் கண்டு பயந்தவர்கள் தான் அதிகமே தவிர குடும்பத்தினர் யாரும் உடனில்லாமல் அந்நியர்களின் ஆதிக்கத்திலும், உதவியிலும் காலம் முழுக்க வாழ நேர்ந்த அந்த அம்மையாரின் மீதான பரிதாபம் பலருக்கும் அப்போதும் இருந்தே வந்தது. 

அப்படிப்பட்டவரை ஒன்றல்ல, இரண்டல்ல முழுதாக 75 நாட்கள்... அப்போதும் அவரே தமிழக முதல்வராக இருந்த நிலையில், சொந்தக் கட்சியின் உயர்மட்டத் தலைவர்களுக்கு மட்டுமல்ல நாட்டின் பிரதமரது பிரதிநிதி, எதிர்க்கட்சித் தலைவர்கள்  உட்பட யாரையுமே பார்க்க அனுமதிக்காமல் ஒரு குடும்பத்தால் வைத்திருக்க முடியுமா? அவர்களால் மட்டுமே அது சாத்தியப் பட்டிருக்கக் கூடுமா?

இன்றைக்கு சசிகலாவை பொதுச் செயலாளர் பதவியிலிருந்து தூக்கி எறியத் தயாராகும் அளவுக்கு தைரியமாகச் செயலாற்ற முடிந்தவர்களால் அன்றைக்கு ஏன்?

‘எங்கள் அம்மாவுக்கு அப்பல்லோவில் என்ன தான் நடக்கிறது? நாங்கள் அறிந்து கொண்டே ஆக வேண்டும்’

- என்று தைரியமாக எதிர்த்துக் கேள்வி கேட்க முடியாமல் போனது? யாருடைய அனுமதிக்காக இவர்கள் இத்தனை நாட்கள் காத்திருந்தார்கள்?!

ஆக இந்த விஷயத்தில் இன்றைக்கு ஓ.பி.எஸ். இ.பி.எஸ் இரண்டு அணியினரும் சேர்ந்து சசிகலா குடும்பத்தினரை மட்டுமே ஜெயலலிதா மரணத்திற்கு காரணகர்த்தர்களாக்கி பலிகடாக்கள் ஆக்க நினைக்கும் முயற்சி அப்பட்டமாகத் தெரிகிறது. இப்படிச் சொல்வதால் ஜெயலலிதா மரண மர்மத்தில் சசிகலா குடும்பத்தினருக்குப் பங்கே இல்லை என்று இங்கே யாரும் வக்காலத்து வாங்குவதாக அர்த்தமில்லை.

ஜெயலலிதா இறப்பை அறிவிப்பதற்கு முன்பே சூட்டோடு சூடாக முதலமைச்சர் நாற்காலியில் உட்கார வைக்கப்படும் போது ஓ.பி.எஸ் ‘அம்மாவின் ஆன்மா குறித்துச் சிந்தித்திருக்கலாம்’ பதவி பறிக்கப்பட்ட பிறகு அம்மாவின் ஆன்மா பற்றிப் பேசியதால் மட்டுமே அவர் மன்னிக்கத்தக்கவராக ஆகி விட்டதாக அர்த்தமில்லை

ஓ.பி.எஸ்ஸுக்குப் பெரும்பான்மை இல்லையென்று சசிகலாவால் முதல்வராக்கப்பட்டவர் இ.பி.எஸ். அவரும் கூட சசிகலா ஜெயிலுக்குப் போன பிறகு, மீதமிருக்கும் 4 ஆண்டுகளுக்கு மாநிலத்தில் தன்னுடைய பதவிக்கும், அதிமுக ஆட்சிக்கும் பங்கம் வராது என்பதை உறுதியாகத் தெரிந்து கொண்ட பிறகே முழுத்துணிவுடன் சசி & கோ வை எதிர்க்கத் துணிந்திருக்கிறார். ஆர்.கே நகர் இடைத்தேர்தல் சமயத்தில் அன்னார் டி.டி.வி தினகரனை ஆதரித்ததை மக்கள் அத்தனை சீக்கிரம் மறந்து விட்டார்கள் என்று இந்நாள் முதல்வர் இ.பி.எஸ் நினைத்தால் அது அவரது ஞாபக மறதியே தவிர மக்களுடையது அல்ல!

ஓ.பி.எஸ்ஸோ, இ.பி.எஸ்ஸோ இருவரையுமே தங்களது தாளத்துக்கு ஆடும் தஞ்சாவூர் பொம்மைகளாகத் தான் பாவித்துக் கொண்டு பதவியை அவர்களுக்கு தாரை வார்த்தது சசிகலா குடும்பம். ஆனால் இன்று கோடாரிக் காம்புகளாக அவர்கள் தங்களைப் பதம் பார்க்கத் தயார் ஆவார்களென்று சிறைக்குச் செல்வதற்கு முன்பு வரை சசிகலா நம்பியிருந்திருக்க வாய்ப்பில்லை. அவர்களது லகான் எப்போதும் தன்னிடமே இருப்பதாக நம்பிக் கெட்டார் சசிகலா. 

தமிழ்நாட்டில் இன்றைக்கு நடப்பது ஜெயலலிதா வலுவூட்டிய அதிமுக ஆட்சி அல்ல! ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டு பதவியைப் பெற்றவர்கள் தங்களது பதவி ஆசையைத் தக்க வைத்துக் கொள்வதை மட்டுமே முதன்மையாகக் கொண்டு ஆடும் அரசியல் பகடையாட்டம்.

இவர்களில், கடந்த ஆண்டு... தனது இறப்பு வரை முதல்வராக இருந்த ஜெயலலிதா மட்டுமே மக்களின் தேர்வு. அதற்குப் பின் முதல்வரான ஓ.பி.எஸ் மக்கள் தேர்வு அல்ல, அதிமுகவில் அவருக்கான ஒரே அடையாளம் ஜெயலலிதா வழக்குகளில் சிக்கிப் பதவியை இழந்த போதெல்லாம் நம்பிக்கையின் பேரில் அவரால் முதல்வராக்கப்பட்டவர் என்ற இமேஜ் மட்டுமே!

ஓ.பி.எஸ்ஸின் பணிவடக்கம் ஜெயலலிதாவுக்கு மட்டும் தான் தன்னிடத்தில் அவருக்கு அத்தனை பணிவு இல்லை என்று சசிகலா முடிவு செய்த அடுத்த நொடியில் தன்னைத் தானே தமிழக முதல்வராக்கிக் கொள்ள அவர் பிரம்மப் பிரயத்தனப் பட்டார். ‘ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்’ எனும் இளங்கோவடிகளின் சொல்லுக்கேற்ப சசிகலாவால் ஜென்மத்துக்கும் தமிழக முதல்வராக ஆக முடியாமலே போனது அவரது துரதிர்ஷ்டம் மட்டுமல்ல தமிழக மக்களின் அதிர்ஷ்டமும் கூட. ஆக மொத்தத்தில் ஓபி.எஸ்ஸோ, சசிகலாவோ கூட அவரவர் ஆசைக்குத் தான் முதலமைச்சர்களாக பேராசைப் பட்டார்களே தவிர அவர்களை முதல்வர்களாக ஏற்றுக் கொள்ளும் விருப்பம் தமிழ்நாட்டில் பெரும்பான்மை மக்களுக்கு என்றுமே இருந்ததில்லை.

இன்றைக்கு முதல்வராகி இருக்கிறாரே இ.பி.எஸ் அவரும் கூட மக்களின் முதல்வர் அல்ல! ஜெயலலிதாவின் வெற்றியால் ஆட்சியைப் பிடித்த அதிகமுனர் தங்களது பெரும்பான்மை பலத்தில் அதிகாரத்தைக் கையிலெடுத்துக் கொண்டு இ.பி.எஸ்ஸை முதல்வராக்கி இருக்கிறார்கள். ஆட்சிக்கு எந்த விதமான இடைஞ்சல்களும், இக்கட்டுகளும் இல்லையென்றால் அவரே இன்னும் அதிகாரம் மீதமிருக்கும் ஆண்டுகளுக்கு தமிழக முதல்வர். ஆனாலும் அவரை மக்களின் முதல்வராக ஏற்றுக் கொள்ள வேண்டுமெனில் மீண்டுமொருமுறை தேர்தல் நடந்து அதில் தன் முகத்தைக் காட்டி, இப்போதைய மூண்றாண்டுகளுக்கான தன் செயல் திறனைக் காட்டி முதல்வர் வேட்பாளராக ஓட்டுக் கேட்டு அவர் தமிழகம் முழுக்க மக்களைச் சந்தித்து ஓட்டுக்களைப் பெற்று ஜெயித்து வர வேண்டும். அப்போது ஒப்புக் கொள்வார்கள் தமிழக மக்கள் அவரையும் முதல்வர் என்று.

நேற்று மதுரையில் நடைபெற்ற மீட்டிங்கில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சொல்கிறார். ‘ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார்’ என்று நாங்கள் பொய் சொன்னோம் என்று;

இன்னும் சிலநாட்களில், ஜெ அப்பல்லோவில் நலமுடன் தான் இருக்கிறார் என்பதை நிரூபிக்க அன்று அப்பல்லோவிலிருந்த செவிலியர்கள், மருத்துவர்கள் எனச் சிலர் ஒன்று சேர்ந்து அனைத்து ஊடகங்களிலும்... 

‘ஜெயலலிதா உப்புமா சாப்பிட்டார், சாப்பிடும் போது ஒவ்வொரு உருண்டையை விழுங்கும் முன்பும் ஒவ்வொரு செவிலியின் பெயர் சொல்லி விழுங்கினார்’ 

- என்று சொன்னதும் பொய் தானென்று சொல்லி மீண்டும் ஒரு குட்டு உடைபடலாம்.

சில ஊடகங்கள் ஜெயலலிதா இறப்பின் போது அவருக்குக் கால்கள் இருந்தனவா? இல்லையா? என்று பகீர் சந்தேகத்தைக் கிளப்பி விட்டன. அதுவும் எந்த அளவுக்கு உண்மை அல்லது பொய் எனத் தெரியவில்லை.

இன்றைக்கு ஜெ மரணத்திலிருக்கும் மர்மத்தை அறிந்து கொள்ள விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும் என உறுதி அளிப்பவர்களால். அன்றைக்கு ஜெயலலிதா மருத்துவமனையிலிருக்கையில்.. அவரது உண்மை நிலையை அறிந்து கொள்ளும் தவிப்பில் ஏன் போர்க்குரலோ, சந்தேகக்குரலோ எழுப்ப முடியாமல் போனது?!

ஏனென்றால் இவர்கள் அத்தனை பேரும் அன்றைக்கு இப்போது அவர்கள் குற்றச்சாட்டுகிறார்களே அதே நபர்களின் ஆதிக்கத்தில் தான் இருந்திருக்கிறார்கள்... அதனால் தான் மறைந்த முதல்வர் குறித்த உண்மை நிலையை அப்போது அறிந்து கொள்ள முடியவில்லை என்பதை அவர்களால் பகிரங்கமாக ஒப்புக் கொள்ள முடியவில்லை. தமிழக மக்கள் ஓட்டுப் போட்டு இவர்களைத் தேர்ந்தெடுத்து சட்டமன்ற உறுப்பினர்களாக்கி பேரவைக்கு அனுப்பியது இப்படி மக்களுக்கோ, மக்கள் நலனுக்கோ சம்மந்தமற்ற அந்நியர்களின் ஆதிக்கத்தில் ஆழ்ந்திருப்பதற்காகத் தானா? பச்சை சுயநலம் இல்லையா இது?

இப்போது பொதுமக்கள் முன்னிலையில் ஜெயலலிதா மரணத்தின் தாக்கம் குறைந்து மக்கள் அன்றாட வேலைகளில் ஆழ்ந்திருக்கையில் இது தான் சமயமென்று அதிமுக நிர்வாகிகள் ஒவ்வொருவராக ஒப்புதல் வாக்குமூலம் அளிப்பதால் மட்டும் ஜெயலலிதா மரணத்தில் அவர்களுக்கிருக்கும் பங்கு குறைந்து விடுமா என்ன?  

இப்போது ஆட்சிபீடம் எனும் பாதுகாப்பு வளையத்தில் இருந்து கொண்டு எங்களுக்கு மரணத்தில் பங்கே இல்லை என்று இவர்கள் சொல்ல அதை மறுத்து டி.டி.வி தினகரன்,

‘அப்பல்லோவில் பல சமயங்களில் சசிகலாவுக்கே ஜெயலலிதாவைச் சந்திக்க அனுமதி இல்லாமலிருந்தது’

- என்று பதில் சொல்ல... இந்த வாக்குவாதங்கள் எல்லாம் காட்சி ஊடகங்களுக்குப் பிரேக்கிங் நியூஸ் அளிக்கப் பயன்படுமே தவிர... மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கு அல்ல!

இப்போது வரை ஜெயலலிதாவுக்கு அப்பல்லோவில் என்ன நடந்தது என்பதைப் பற்றிச் சொல்லக்கூடிய தகுதி வாய்ந்த ஒரே நபராக மக்கள் நம்புவது அப்பல்லோ இயக்குனர் பிரகாஷ் ரெட்டியை மட்டுமே!

அவர் வாய் திறப்பாரா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com