காவிரி நீரில் தமிழகத்தின் உரிமையை பெற்றுத்தரும் முயற்சிகள் ஒருபுறம் தொடரட்டும். ஆனால், தமிழகத்தின் பல பகுதிகளில் இருக்கும் கண்மாய், ஏரிகள், குளங்கள் என சிறு நீர்நிலைகள் மூலமாக தமிழக விவசாயம் மிகச்சிறப்பான முறையில் செயல்பட்டிருந்தது. ஆனால் அவற்றில் பெரும்பாலானவை இன்று மிக மோசமான நிலையில் உள்ளன. பல கைவிடப்பட்டிருக்கின்றன. பல காணாமல் போயிருக்கின்றன. விவசாயத்தின் முக்கியத்துவம் மறந்திருந்த காலங்களில் விளைந்த நிகழ்வே இது. ஆனால் இன்று விவசாயத்தின் முக்கியத்துவம் உணரப்பட ஆரம்பித்திருக்கிறது. இது நல்ல அறிகுறி என்றாலும், அந்த உணர்வு, ஆர்வம், ஆக்கப்பூர்வமான முறையில் செயல்பட்டு விவசாயத்தின் மறுசீரமைப்பிற்கு வழி வகுப்பதாக இருக்கவேண்டுமே தவிர, வெறும் போராட்டங்களில் நமது சக்தியை வீணடிப்பதாக இருக்கக் கூடாது. அதற்கான வழிமுறை ஒன்றைக்காண்போம். செயல்படுத்துவோம்.