சென்னை - சேலம் 8 வழி பசுமைச் சாலை திட்டம் ஏன் வேண்டும்? ஓர் அலசல்!

ஆறுகளை சார்ந்து வளர்ந்த மனித நாகரிகமும், இனமும் இன்றைய பொருளாதார யுகத்தில் சாலைகளை சார்ந்தே தோன்றி வளர்கின்றன.
சென்னை - சேலம் 8 வழி பசுமைச் சாலை திட்டம் ஏன் வேண்டும்? ஓர் அலசல்!
Updated on
4 min read

ஆறுகளை சார்ந்து வளர்ந்த மனித நாகரிகமும், இனமும் இன்றைய பொருளாதார யுகத்தில் சாலைகளை சார்ந்தே தோன்றி வளர்கின்றன.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா போல் ஐரோப்பா போல், ஏன் ஆசியாவின் சிறிய நாடுகளான மலேசியா, சிங்கப்பூர் போல, இந்தியா ஏன் வளரவில்லை என்பதற்கு முழு முதல் காரணமாக தரமான அகலமான சாலைகள் இல்லாததாகத்தான் அத்தனை பத்திரிகைகளும் உலகம் முழுவதும் பயணிக்கும் வணிக வல்லுநர்களும், தொழில் முனைவோர்களும் கூறினார்கள்.

சீனாவும் அந்த நேரத்தில் எப்படி வேகமாக தன் நாடெங்கிலும் உலகத் தரம் வாய்ந்த அகலமான சாலைகளை அமைத்து வருகிறார்கள் எனவும் ஊடகங்களில் எழுதினார்கள். அடுத்த நூற்றாண்டு எவ்வாறு ஆசிய நூற்றாண்டாக இருக்கும் என்றும், அதே சமயம் இந்தியாவில் போதிய சாலைகள் இல்லாததால் எவ்வளவு பின் தங்கிவிடும் என்று பயம்காட்டியிருந்தனர்.

சாலைகள்..  துறைமுகங்களை இணைக்கும் இரத்த நாளங்கள். பெரிய பெரிய கப்பல்கள் மூலம் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் ஆப்ரிக்க ஆஸ்திரேலிய கண்டங்களிலிருந்து சரக்கு பெட்டகங்களைக் கொண்டுவந்து இறக்க பெரிய துறைமுகத்தை கட்டி அங்கிருந்து அனைத்து ஆசிய நாடுகளுக்கும் சிறிய கப்பல்கள் மூலம் பிரித்து அனுப்பி சிங்கப்பூர் துறைமுகம் எப்படி வளர்த்தது என்றும் படித்தறிகிறோம்.

சென்னை துறைமுகத்திலிருந்து 40 கி.மீ. தொலைவில் ஸ்ரீபெரும்புத்தூரில் அமைய வேண்டிய தொழிற்சாலைகள் ஆந்திராவுக்குச் சென்றன. அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு அதே 40 கி.மீ. தொலைவில் சென்னை - கொல்கத்தா சாலையில் இருக்கும் இடத்தை சிறப்பு தொழில் மண்டலமாக மாற்றி ஸ்ரீ சிட்டியில் மிகக் குறுகிய காலத்தில் அவ்வளவு தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டதையும் நாம் பார்க்கிறோம்.

எந்த சிறப்பு செலவுமின்றி சென்னை - கொல்கத்தா சாலையில் நெல்லூர் வரையில் தமிழக எல்லையிலேயே ஆந்திராவின் தொழில்நுட்ப முன்னேற்றம் ஏற்பட்டதைக் காணலாம்.

1990களில் சென்னையில் இருந்து குமரிக்கு நான்கு வழிச் சாலை போடப்பட்ட அந்த காலத்தில் இடிக்கப்பட்ட வீடுகள், நிறப்பப்பட்ட வயல் வெளிகள், உடைக்கப்பட்ட மலைகள் ஞாபகத்திற்கு வருகின்றன. 

நெல்லையில் செவந்திப்பட்டி மலை உடைக்கப்பட்ட பகுதியில்தான் சிங்கம் படப்பிடிப்பு நடந்தது. மூன்றடைப்பு என்ற ஊரிலே பறவைகள் சரணாலயமாக நின்ற பெரிய பெரிய மரங்கள் காணாமல் போய் அந்த ஊரே அடையாளம் தெரியாமல் நிற்கிறது. அத்தனை இழப்புகளுக்கும் நடுவில் பயணம் வேகமாக விபத்துகளின்றி சுகமானதாக இருக்கின்றது.

அவ்வளவு ஏன்? கவிஞர் வைரமுத்து அடிக்கடி குறிப்பிடும் அவர் பிறந்து வளர்ந்த மேட்டூர் எனும் அழகிய கிராமம் முழுவதுமாக தரைமட்டமாக்கப்பட்டுத்தான் வைகை அணை கட்டப்பட்டது.

மேதா பட்கர் எனும் சமூக போராளியை நமக்கு அடையாளம் காட்டிய நர்மதா நதிக்கரையின் குறுக்கே கட்டப்பட்ட சர்தார் சரோவார் அணை திட்டம்தான். இன்று உலகின் மிகப்பெரிய அணையாக வளர்ச்சியின் சாட்சியாக நிற்கிறது. குஜராத், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களின் மொத்தம் 12 மாவட்டங்கள், 62 தாலுகாக்கள் 3,393 கிராமங்களுக்கு வெள்ளத் தடுப்பணையாகவும், 74,000 ஏக்கர் பாசன வசதியும் அந்த நர்மதா கால்வாய்களின் மேல் வெயிலில் தண்ணீர் நீராவியாக மாறாமல் தடுப்பதற்காக அமைக்கப்பட்ட சூரிய மின் தகடுகள் மூலமாக பெறும் மின் சக்தியை தவிர 1,450 எம்.டபிள்யூ.  நீர் மின் சக்தியும் தருகிறது.

ஆக வளர்ச்சி என்பது ஒரு புறம் மாற்றம் முன்னேற்றம் என்றிருந்தால் அதற்கான விலையாக வீடுகளும், விலை நிலங்களும், மலைகளும், கிராமங்களும், நகரங்களும் மக்களின் இயற்கையின் தியாகமின்றி நடப்பது சாத்தியமல்ல.

என்எச்ஏஐ தேசிய நெடுஞ்சாலை அதிகாரம் என்ற அமைப்பு நமது மத்திய அரசாங்கத்தின் வரி வருமானத்திலிருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் வரியை திரட்டி 2.25 லட்சம் கோடி மற்றும் 15,000 கிலோ மீட்டர் தூரத்துக்கு நாடு முழுவதும் சாலைகள் போட திட்டமிட்டு அதில் ஒன்றாக தான் சென்னை - சேலம் சாலையை அமலாக்கத் திட்டமிட்டுள்ளது. இந்த சாலை 159 கிராமங்கள் 14 தாலுக்காக்கள் மற்றும் 5 மாவட்டங்கள் வழியாக செல்ல உள்ளது.

இதே போல் சென்னையின் பூவிருந்தவல்லி துறைமுகம் பாலம் கட்டமைக்கப்பட்டு மாநில நிர்வாகத்தால் தடை செய்யப்பட்டு நிற்கும் தூண்களும், கம்பிகளும் NHAI-யின் திட்டமே. சென்னை துறைமுகம் - செங்கல்பட்டு பாலம் திட்டமிடல் கைவிடப்பட்டதும் மாநில அரசின் ஒத்துழையாமையே.

தூத்துக்குடி - மதுரை, தூத்துக்குடி - குமரி சாலைகள் பொருளாதார வளர்ச்சியை சேர்ந்த சாலைகள்தான். ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளுக்கு ஒரு திட்டத்தின் அவசியம் உறுதியாக தெரிந்த பின்பு அதை மக்களுக்கு தெரியப்படுத்தி அந்த திட்டத்தினை செயல்படுத்துவது தொடர்பாக தெளிவான முடிவுகளை எடுத்து, அந்த திட்டத்தால் பாதிக்கப்படும் மக்களும் தங்களது வாழ்வாதாரத்தை இழக்காமல் தடுக்கவும் வழிவகைக் காண வேண்டும்.

அந்த திட்டத்தை செயல்படுத்துவது, அந்த மக்களுக்கும், அந்த வட்டாரத்திற்கும் எப்படி தேவையானது? திட்டம் எவ்வளவு இன்றியமையாதது? பயனாளிகள் யார்? அதற்கான இழப்புகள் என்ன? எத்தகைய மாற்று வழிகள் இழப்பீட்டை சரி செய்ய கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது? பொருளாதார - வாழ்வாதார இழப்பீட்டிற்கு, என்னென்ன மாற்று வழிகள் உள்ளன? என்பதை முதலில் அரசு கணக்கெடுத்து, அது குறித்து கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்தி, அதில் அரசு அதிகாரிகள், இயற்கை வல்லுனர்கள், இத்துறை சார்ந்த நிபுணர்கள் மக்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய வேண்டும். முழுமையான புரிதல்களை ஏற்படுத்த வேண்டும்.

இந்த சாலை அமைவதால் என்னென்ன பொருளாதார மாற்றங்கள் ஏற்படும், ஊர் மக்களுக்கு ஏற்படும் நன்மைகள், வேலை வாய்ப்பு, எரிபொருள் மிச்சம் போன்றவற்றை கிராம மக்களுக்கு எளிமையாக புரியும் வகையில் எடுத்துரைக்க வேண்டும். 

தங்களது பாரம்பரிய நிலத்தை, தங்களுக்கு சோறு போடும் நிலத்தை வெறும் பணத்துக்காக இழந்து விட எந்த விவசாயியும் துணிய மாட்டார். அதன் விளைவே சென்னை - சேலம் 8 வழிச் சாலை திட்டத்துக்கான எதிர்ப்பு.

எனவே, அவர்களுக்கு வெறும் இழப்பீடாக பணத்தை மட்டும் அளித்துவிட்டு எதுவுமில்லாத அனாதைகளாக்கப்படுவதற்கு பதிலாக அவர்களது வாழ்வாதாரமும் இந்த திட்டத்தின் மூலம் மேம்பாடு அடையும் வகையில் திட்டத்தை மாற்ற வேண்டும்.

உதாரணமாக, 
சென்னை - சேலம் 8 வழிச் சாலைக்கு நிலத்தை கையகப்படுத்தும் போது ஒரு விவசாயியின் 400 அடி விவசாய நிலத்தை எடுப்பதாக இருந்தால், அதற்கு பதில் 500 அடியாக கூடுதல் நிலத்தை எடுத்து, 100 அடி நிலத்தில் வாகன நிறுத்துமிடங்களை ஏற்படுத்தி  விவசாயிகளுக்குக் கொடுத்து அவர்களது வாழ்வாதாரத்துக்கு வித்திடலாம்.

இதுபோல சரக்கு வாகனங்கள் நிறுத்துமிடங்கள், கடைகள் கட்டித் தருதல், பார்க் அல்லது இரு சக்கர வாகன பார்க்கிங் பகுதிகளை ஏற்படுத்துதல் போன்றவற்றை அரசே ஏற்படுத்தித் தரலாம்.

அல்லது விவசாய நிலங்களைக் கொடுக்கும் குடும்பத்தில் ஒருவருக்கு அப்பகுதியில் போடப்படும் சுங்கச் சாவடிகளில் வேலை வாய்ப்பு வழங்குவதை உறுதி செய்யலாம்.

இதுபோல எண்ணற்ற திட்டங்களை நிலத்தை இழக்கும் விவசாயிகளுக்கு ஏற்படுத்தித் தருவதும், அவர்களிடம் இருந்து கைப்பற்றப்படும் நிலத்துக்கு ஏற்ப மேம்பட்ட பகுதிகளில் நிலங்களை ஒதுக்கீடு செய்வதும் கூட நியாயமான இழப்பீடாகவே அமையும்.

இந்த திட்டங்களை ஆந்திர அரசு ஏற்கனவே அறிமுகப்படுத்தியிருக்கிறது. ஆந்திராவின் தலைநகரம் அமராவதி கட்டுவதற்கு 33,000 ஏக்கர் நிலத்தை விவசாயிகளே முன் வந்து கொடுத்திருக்கிறார்கள். இந்த நிலங்கள் மூன்று போகம் விலையக்கூடிய கிருஷ்ணா நதிக்கரையோரம் அமைந்திருந்தது என்பதை மறந்து விடக் கூடாது.

இந்த திட்டத்திற்கு பெயர் (LPS - Land Pooling Scheme) இதன் மூலம் தேவைப்பட்ட 38,000 ஏக்கர் நிலத்தில் 89%  = 33,000 விவசாயிகள் முன்வந்து தந்தபடியால் அங்கே தலைநகரம் கட்டும் வேலை மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு ஏக்கராக விவசாயி முன் வந்து கொடுத்த நிலத்திற்கு இழப்பீடாக ஒரு மேம்பட்ட பகுதியில் ஆயிரம் சதுர அடி குடியிருப்பு நிலம், 450 சதுர அடி வியாபார நிலமும் திரும்பத் தரப்படும்.

இதுபோல மக்களுக்காக நடக்கும் முன்னேற்ற வளர்ச்சி திட்டங்களுக்கு மக்களை பங்குதாரர்களாக்கும் சமயோசித யுக்தியுடையவர்களாக ஆட்சியாளர்கள் இருக்க வேண்டும். அரசின் அனைத்து திட்டங்களுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் மக்களின் அறிவீனத்தை பயன்படுத்தி பயமுறுத்தும் சக்திகளுக்குக் கூட அரசின் தெளிவான எண்ணங்களும், தன்னலமற்ற செயல்பாடுகளும், மக்கள் சக்தியை அரசிடமிருந்து பிரிக்க முடியாமல் இருக்க வேண்டும்.

நாம் ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறோம் என்பதற்காக, நினைக்கும் திட்டத்தை நினைத்த வேகத்தில் செயல்படுத்த முனையாமல், பாதிக்கப்படும் மக்களுக்கு உண்மையிலேயே இழப்பீடு என்ற நியாயத்தை நியாயமான முறையில் வழங்கி, அவர்களே முன் வந்து நிலத்தை அளிக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com