பிரதமரின் லாஜிக் இல்லாத பேச்சு: தோல்வியை மறைக்க முடியாமல் தடுமாறுகிறதா ஆளும் கட்சி?

பிரதம வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்ட போது இருந்த பேச்சுத்திறமை இன்று வரை தொடர்கிறது. 2014 தேர்தல் காலங்களில் இருந்த பாரதீய ஜனதா
பிரதமரின் லாஜிக் இல்லாத பேச்சு: தோல்வியை மறைக்க முடியாமல் தடுமாறுகிறதா ஆளும் கட்சி?

ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவித்து, பிரதமர் நரேந்திர மோடி புதன் கிழமை அன்று 90 நிமிடங்கள் மிகவும் ஆவேசமாக பேசினார். இதில் கவனிக்கப்பட வேண்டியது அவர் காங்கிரஸ் கட்சியை குறை கூறிய விதம். 90 நிமிட உரையில் தன்னுடைய அரசின் செயல்பாடுகளை பற்றி பேசியதை விட, முந்தைய காங்கிரஸ் அரசுகளை அதிகமாக வசை பாடினார். 

பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சு பல அம்சங்களை உள்ளடக்கியது. கடந்த வாரம் இரு அவைகளிலும் பிரதமர் மோடி உரையாற்றினார். மக்களவையில் பேசிய அவர் “பண்டிட் நேரு மற்றும் காங்கிரஸ் கட்சியால் இந்தியாவிற்கு ஜனநாயகம் கிடைத்தது எனத் தலைவர்கள் எப்படிச் சொல்ல முடியும்? இது தான் இந்தியாவின் வரலாற்றைப் படித்ததா? இது என்ன அகந்தை?” என்று காங்கிரஸ் கட்சியை நோக்கி கேள்வி எழுப்பினார். மேலும் முந்தைய காங்கிரஸ் அரசுகளின் தவறான செயல்பாடுகள், காஷ்மீர் பிரச்சினை, ஆந்திரா பிரிவினை, போபர்ஸ், செயல்படாத சொத்துகள் மற்றும் காங்கிரஸ் ஆட்சியின்போது சீனா பிரச்னையின் மீதான நிலைப்பாடு போன்றவற்றை முன்னிறுத்தி பேசினார். 

மாநிலங்களவையில் காங்கிரஸின் அவசரநிலை, சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை, பழைய இந்தியா, இந்திரா காந்தியின் இறப்புக்கு பின்னர் இராஜீவ் காந்தியின் பேச்சு, காங்கிரஸ் இல்லாத இந்தியா, அரசின் திட்டங்களின் பெயர் மாற்ற சர்ச்சை உள்ளிட்டவற்றை முன்னிலைப்படுத்தினார். இரு அவைகளிலும் அவர் எதிர்கட்சிகளை வசை பாடுவதில் ஆர்வம் காட்டினார். ஆனால் பிரதமராக அவர் மக்களுக்கு ஆற்ற வேண்டியது சொற்பொழிவல்ல; சேவை தான் என்பதை அவர் நினைவில் கொள்ள வேண்டும்.

பிரதம வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்ட போது இருந்த பேச்சுத்திறமை இன்று வரை தொடர்கிறது. 2014 தேர்தல் காலங்களில் இருந்த பாரதீய ஜனதா கட்சியின் ஊடகப்பிரிவும் செய்திப்பிரிவும் இன்றும் மிகவும் வலுவாக உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் அன்று தான் எதிர்க்கட்சி; இன்று ஆளும் கட்சி என்பதை உணர மறுக்கின்றது மோடி அரசு. ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னும் எதிர்கட்சிகளை நோக்கி கேள்வி எழுப்புவதையே வாடிக்கையாக கொண்டு வருகிறது மத்திய அரசு.

50 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் மலிந்து விட்டது. எங்களுக்கு ஒரு முறை வாய்ப்பளித்து பாருங்கள். ஆறு மாதங்களில் மாற்றிக்காட்டுவோம் என்று 2014 தேர்தலின் போது கூக்குரலிட்டது இன்றைய ஆளும் அரசு. வளர்ச்சியின் நாயகனாக தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக களம் இறங்கினார். மோடியின் கடின உழைப்பு, சிறந்த பேச்சாற்றல், பாரதீய ஜனதா கட்சியின் வலுவான சமூக ஊடகப்பிரிவு போன்ற பல காரணங்களால் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. 31% மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களித்து ஆட்சியில் அமர வைத்தனர்.

கிட்டத்தட்ட 4 ஆண்டு கால ஆட்சியில் அவர்களின் செயல்பாடு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. வளர்ச்சியின் நாயகனாக சித்தரிக்கப்பட்ட மோடியின் இந்த ஆட்சியில் வளர்ச்சி என்பது சமூகத்தில் ஏழை, நடுத்தர மக்களுக்கு சென்றடையவில்லை என்பதே நிதர்சனம். புதிய வேலைவாய்ப்பு, புதிய தொழில் தொடங்க ஏற்ற சூழ்நிலை மற்றும் விவசாயத்தை மேம்படுத்த சிறப்பு ஏற்பாடுகள் என முக்கிய பிரச்னைகள் எதிலும் போதிய நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டதாக சாமானியனின் பார்வைக்கு தென்படவில்லை.

குஜராத் மாதிரி என குஜராத் மாநில வளர்ச்சி முன்னிறுத்தப்பட்டு மோடி ஆட்சிக்கு வந்தார். அன்று முதல் இன்று வரை பெரும்பாலான மனித வள மேம்பாடு குறியீடுகளில் தமிழ்நாடு குஜராத்தை விட மேம்பட்டிருக்கிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்று. ஆனால் திராவிட கட்சிகளால் தமிழ்நாடு சீரழிந்துவிட்டதாக பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வளர்ச்சியின் நாயகன் மோடி ஆட்சி செய்த குஜராத்தை விட திராவிட கட்சிகள் ஆட்சி செய்த தமிழ்நாடு பல துறைகளில் மேம்பட்டு இருக்கும் இந்த முரண்பாட்டிற்கு இது வரை பாரதீய ஜனதா கட்சியிடம் இருந்து தெளிவான பதில் இல்லை.

மோடி ஆட்சியை பிடிக்க முக்கிய காரணங்களில் ஒன்று ஊழல் குற்றச்சாட்டுகள். காங்கிரஸ் ஆட்சியில் அலைக்கற்றை, நிலக்கரி உள்ளிட்டவற்றில் இமாலய ஊழல் செய்ததாக சொல்லி வாக்கு கேட்டு 31% மக்களின் ஆதரவோடு ஆட்சியை பிடித்தது. கடந்த ஆட்சியில் அலைக்கற்றை, நிலக்கரி ஊழல் குற்றச்சாட்டுகளை வெளிகொண்டுவந்தது Comptroller and Auditor General (CAG) அமைப்பு. இன்று ஊழல் நடைபெறவில்லை என்பதை விட அதை வெளி உலகிற்கு காட்டும் CAG போன்ற அமைப்புகள் இருக்கும் இடம் தெரியவில்லை என்பது வருத்தப்படக்கூடிய ஒன்று.

இன்றைய மத்திய அரசின் செயல்பாடுகள் காங்கிரஸ் கட்சி மீது அனுதாபத்தை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்க ஒன்று. இதை உணராமல் தான் ஆளும் கட்சி என்பதை மறந்து எதிர்க்கட்சிகள் போல வெறும் பேச்சில் மட்டுமே தீவிரமாக செயல்பட்டு வருகிறது ஆளும் கட்சி. பாரதீய ஜனதா கட்சிக்கு வாக்களித்தது “நல்ல ஆட்சியை கொடுக்கவே; காங்கிரஸ் மற்றும் எதிர்கட்சிகளை குறை கூற அல்ல” என்பதை அக்கட்சி உணர்வது இன்றைய காலத்தின் கட்டாயம். 

தனது பேச்சில் அடுத்த தேர்தலுக்கான பிரச்சார உத்தியை தொடங்கிய பிரதமர் மக்களின் அன்றாட பிரச்னைகளுக்கு பதில் சொல்லாதது பெருத்த ஏமாற்றமாகவே பார்க்கப்படுகிறது. அண்மைக் காலங்களில் இந்திய அரசியலில் மிகவும் திறமையான பேச்சாளர் பிரதமர் மோடி என்பது மறுக்க முடியாத உண்மையாகும். ஆனால் செயல்களை செய்யாமல் வெறுமனே உரக்க பேசினால் மீண்டும் ஆட்சி என்பது பகல் கனவாகவே இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com