இருட்டறையில் ஆண்களை அடைத்துப் பெறுவதா பெண் சுதந்திரம்? ஆண்களின் கண்ணீரை துடைப்பதும் பெண்ணியம் தான்!

ஆண்களின் உணர்ச்சிக்கு இந்தச் சமூகம் என் மதிப்பளிப்பதில்லை? ஆண்களும் மனிதர்கள் தான் அவர்களுக்கும் மனதுண்டு, அந்த மனதில் ஆசைகளும் உண்டு. அவர்களுக்கும் அழுகை வரும் ஆனால்
இருட்டறையில் ஆண்களை அடைத்துப் பெறுவதா பெண் சுதந்திரம்? ஆண்களின் கண்ணீரை துடைப்பதும் பெண்ணியம் தான்!
Published on
Updated on
3 min read

ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் அப்பாவாக, சகோதரனாக, தோழனாக, கணவனாக, மகனாக ஆண்கள் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளனர். அந்த ஆண் சமூகம் பெண்களுக்கு எதிராகப் பல அநீதிகள் இழைப்பதாகக் குற்றம் சாட்டி பெண் விடுதலைக்காக இன்றும் நாம் போராடிக் கொண்டிருக்கிறோம். ஆனால், இந்தச் சமூகம் ஆண்களையும் நிம்மதியாக வாழ விடுவதில்லை என்பதை நாம் கவனிக்க தவறி விட்டோம். 

ஆண்களின் உணர்ச்சிக்கு இந்தச் சமூகம் ஏன் மதிப்பளிப்பதில்லை? ஆண்களும் மனிதர்கள் தான் அவர்களுக்கும் மனதுண்டு, அந்த மனதில் ஆசைகளும் உண்டு. அவர்களுக்கும் அழுகை வரும் ஆனால் அந்த அழுகை மற்றவர்கள் கண்ணில் படக்கூடாது, ஏனென்றால் அழுகின்ற ஆணை இந்தச் சமூகம் பேடி எனக் கிண்டல் செய்யும். இவர்களது அழு குரலை கேட்பது யார்? கண்ணில் இருந்து வழியும் கண்ணீரை துடைப்பது யார்? இவர்களுக்காகக் குரல் கொடுப்பதும் ஒரு வகையில் பெண்ணியம் தானே? 

சமீபத்தில் ஆண்களின் மன குமுறலை இளம் கவிஞரான சிமர் சிங் என்பவர் ஆங்கிலத்தில் ‘ஹவ் டூ பீ எ மேன்’ (How to be a Man) என்கிற தலைப்பில் கவிதை ஒன்றை எழுதி அதை ‘அன் எரேஸ் பொயட்ரி’ (Unerase poetry) தளத்தில் தானே கூறியும் உள்ளார். அதில் அவர் குறிப்பிட்ட சில விஷயங்கள் ஆணாக இருப்பதில் இவ்வளவு கஷ்டம் உள்ளதா என நம்மைச் சிந்திக்க வைக்கின்றது. அதில் அவர் கூறி இருப்பதாவது...

“ஆணுக்கு வலிக்காது, ஆண் அழ மாட்டான், ஆண் என்றால் உண்ர்ச்சிவசப்படக் கூடாது!
இப்படி ஒரு தவறான கருத்தைக் கற்பிக்கும் வீட்டில் தான் நாங்கள் வளர்கிறோம். 
நான் கூடிய விரைவில் இந்த வீட்டின் குடும்ப தலைவராக மாறிவிடுவேன் என்றார்கள்,
எனக்கு அப்போது வயது வெறும் 6 தான்.

இது அவர்களின் தவறு இல்லை, இது சமூக அமைப்பின் தவறு,
இதைத்தான் நூற்றாண்டுகளாக இந்த சமூகம் நமக்கு கற்றுக் கொடுக்கிறது.
அதாவது ஆணுக்கு வலிக்காது, ஆண் அழ மாட்டான், சிறு பிள்ளையாக இல்லாமல் ஒரு ஆண் மகனைப் போல் நடந்து கொள் என்று.

நான் சிறுவனாக இருந்த போது ஒருமுறை பொது இடத்தில் அழுதேன்,
அதைப் பார்த்து என்னைச் சுற்றி இருந்த அனைவரும் சிரித்தார்கள்,
என்னவோ நான் அழுவது அவர்களுக்குப் பிடித்து இருப்பதைப் போல். 

அந்தச் சிறுவன் தன் கண்ணில் இருந்து வழியும் கண்ணீரை துடைத்துக் கொண்டு,
பொய்யான சிரிப்பு ஒன்றை தன் முகத்தில் மலரச் செய்தான்.

அவனால் ஒரு நல்ல எழுத்தாளராக மாறியிருக்க முடியும்
ஆனால், என்ஜினீயர் என்று சொல்லி கொள்வதையே இந்தச் சமூகம் அறிவாளிதனமாக பார்த்தது.

எப்போது தான் எங்களுடைய மன போராட்டங்களை பற்றி நாங்கள் பேசுவது?
இந்த மௌனமான சித்திரவதையை எப்போது தான் நாங்கள் உடைப்பது? 
கதவுகள் இறுக்கிப் பூட்டப்பட்ட எங்களது உலகத்திற்குள் உங்களை அழைத்துச் செல்கிறோம்;
உள்ளே வந்ததும் ‘ஏன் இந்தக் கதவை திறக்க இவ்வளவு நேரம்? இங்கு ஏன் இருள் சூழ்ந்துள்ளது’ என்று கேட்காதீர்கள்!

இது தான் உங்கள் வாழ்கையில் இருக்கும் ஒவ்வொரு ஆணின் உலகம்!
உங்களுடைய தந்தை, சகோதரன், மகன் என இவர்களுக்காகப் போராடுவதும் பெண்ணியம் தானே?.

எத்தனை இரவுகள் தான் தலையணையை எங்களது கண்ணீரால் நாங்கள் நனைப்பது?
மீண்டும் அடுத்த நாள் காலை எழுந்ததும் எதுவுமே நடவாதது போல் அந்த நாளையும் எதிர் கொள்வது!
சுக்குநூறாக உடைந்து கீழே விழுந்தாலும் நாங்கள் சிரித்தோம்!
மீசை முளைத்திருந்தோம் இன்னும் நாங்கள் குழந்தை தான்!

ஒவ்வொரு முறையும் இதைப் பற்றி மற்ற யாரிடமாவது பேசலாம் என்று நினைத்த போதெல்லாம்...
எங்கிருந்து துவங்குவது என்று கூட எங்களுக்கு தெரியவில்லை!
மிகவும் தவறாக இருக்கும் இந்தச் சமூக அமைப்பின் தயாரிப்புகளில் நாங்களும் ஒன்றாக மாறினோம்!
எங்கள் மனதில் நினைப்பதைப் பேசுவதும் கூடப் இந்த சமூகத்தில் பாவமாக தான் பார்க்கப்படுகிறது!

ஊமையாகிப் போன வார்த்தைகளுக்கு மத்தியில் எங்களது கண்களில் இருந்து வழியும் கண்ணீரை பாருங்கள்!
அந்த அமைதியை உடைத்தெறிந்து எங்களிடம் பேச முயற்சியுங்கள்!!

செல்லுங்கள்;
உங்கள் தந்தையிடம் பேசுங்கள்!
அவரிடம் கேளுங்கள் அவருடைய கனவுகள் என்னவாக இருந்தது? அவர் உண்மையில் என்னவாக ஆசைப் பட்டார் என்று!

உங்களின் மூத்த சகோதரரிடம் பேசுங்கள்!
அவனிடம் கேளுங்கள் தன் வாழ்க்கையில் என்னென்ன போராட்டங்களை அவன் எதிர் கொள்கிறான்?
எப்படி அவன் சிறிதும் விரும்பாத இந்த வேலையில் வந்து சிக்கி கொண்டான் என்று!
நீங்கள் அவனை மிகவும் விரும்புவதாகக் கூறுங்கள்; அப்போதாவது அதிக நேரத்தை உங்களுடன் வீட்டில் அவன் கழிக்கட்டும்!
இனியும் அவனது புத்தகங்களை அவன் மறைத்து வைக்க அவசியமில்லை என்று சொல்லுங்கள்!!

உங்கள் மகனிடம் பேசுங்கள்!
ஒருவேளை அவன் சிறு பிள்ளையாக இருக்கலாம்,
ஆனால் அவனது மனதில் தோன்றுவதை வெளிப்படையாகப் பேச அவனுக்கு கற்றுக் கொடுங்கள்!!
பொது இடத்தில் அழுவதால் அவன் பலவீனமானவன் கிடையாது என்று புரிய வையுங்கள்!!!

அவர்களிடம் பேசுங்கள்!
ஒருவேளை அவர்கள் உங்களிடம் எதுவும் சொல்லாமல் போகலாம்,
அல்லது பகிர்ந்து கொள்வதற்குச் சிறிது காலம் எடுக்கலாம்,
ஆனால், தங்களின் பிரச்னைகளை கேட்பதற்கு ஒருவர் இருக்கிறார் என்கிற மன நிம்மதியை எங்களுக்கு அது கொடுக்கும்!

மிகவும் முக்கியமாக ஆண்களே உங்களிடம் பேசுங்கள்!
கண்ணாடியைப் பார்த்து ஒரு சின்ன சிரிப்பு சிரித்து பாருங்கள்!!”

இந்தக் கவிதை ஆண்கள் தங்கள் வாழ்வில் சந்திக்கும் அனைத்துப் போராட்டங்களை பற்றியும் சொல்லவில்லை என்றாலும், ஆணாகப் பிறந்ததால் அவர்கள் வலிமையானவர்கள் அவர்களுக்கு உணர்ச்சிவசப் பட தெரியாது என்கிற பொய்யை இனியும் நாம் நாம்பக் கூடது என்பதை நமக்கு புரிய வைக்கிறது. பெண்களைப் போல் அவர்களுக்கும் சோகம், அழுகை, வலிகள் உண்டு என்பதைப் புரிந்து கொள்வோம். ஒருவேளை அவர்கள் அதைச் சொல்லாமல் மறைத்து வைத்து தனக்குள்ளேயே புழுங்கலாம், ஆனால் அவர்களும் கண்ணீர் விட்டு அழ மடி கொடுத்து, தலை சாய்க்க தோள் கொடுத்து தேற்றுவோம், ஒரு வகையில் இதுவும் பெண்ணியம் தான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com