‘பண்டமாற்று முறை இருந்திருந்தால் இவன் என்றோ எங்கோ உயர்ந்திருப்பான்’: வைரலாகும் விவசாயி பாடல்! (விடியோ) 

ஃபேஸ்புக்கில் பதிவிடுவதால் அவர்களுக்குக் காவிரி நீர் கிடைத்து விடப் போகிறதா? டிவிட்டரில் டிவீட் செய்வதால் கடன் தொல்லை தீரப் போகிறதா? பாடல் வரிகளை எழுதி இசைப்பதால் அவர்களின் லாபம் பெருக போகிறதா?
‘பண்டமாற்று முறை இருந்திருந்தால் இவன் என்றோ எங்கோ உயர்ந்திருப்பான்’: வைரலாகும் விவசாயி பாடல்! (விடியோ) 
Published on
Updated on
2 min read

விவசாயிகள் படுகிற பாட்டை பற்றி சமூக வலைத்தளத்தில் பல பதிவுகள் வந்து கொண்டே தான் இருக்கின்றன. “இதனால் என்ன பயன்? ஃபேஸ்புக்கில் பதிவிடுவதால் அவர்களுக்குக் காவிரி நீர் கிடைத்து விடப் போகிறதா? டிவிட்டரில் டிவீட் செய்வதால் கடன் தொல்லை தீரப் போகிறதா? பாடல் வரிகளை எழுதி இசைப்பதால் அவர்களின் லாபம் பெருக போகிறதா?” என்றெல்லாம் கேள்வி கேட்பவரா நீங்கள்? 

ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள் இதனால் நேரடியான மாற்றம் ஒன்றும் நிகழப் போவதில்லை என்றாலும், நகரத்தில் விவசாயத்தைத் தவிர்த்து வேறு ஏதோ ஒரு தொழிலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு மத்தியிலும் விவசாயிகள் பற்றிய கவலையும், விவசாயத்திற்கான ஆதரவும் இருக்கிறது என்பதைக் காட்டும் ஒரு அளவு கோளாக இது இருக்கிறது. மாற்றம் உடனே வரப்போவதில்லை, ஆனால் நிச்சயம் ஒரு நாள் மாற்றம் வரும் என்பதை நோக்கிய பயணத்தின் படிகள் தான் இவை.

‘ஸ்மியூல்’ எனப்படும் இந்த ஆப்பில் பல பிரபலமான பாடல்களின் பின்னிசை மட்டும் இருக்கும் பாடல் வரிகளை நாம் பாடி பதிவு செய்து அதைச் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து கொள்ளலாம். இந்நிலையில் அலைபாயுதே படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வந்த பாடல் ஒன்றின் இசையில் சுகன்யா என்கிற ஒரு இளம் பெண் தன்னுடைய இனிமையான குரலில் தனது தந்தை இந்தப் பாடல் வரிகளை எழுதியதாகக் கூறி பாடிப் பதிவேற்றி உள்ளார். அந்தப் பாடல் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகப் பரவி வருகிறது. பாடல் வரிகளாக அமைந்த அந்த அற்புத கவிதை இதோ; (இதை ‘எவனோ ஒருவன் வாசிக்கிறான்’ பாடல் மெட்டில் வாசியுங்கள்)

எவனோ ஒருவன் ஏர் பூட்டினான்! தினமும் நமக்கு அவன் சோறூட்டினான்...

எவனோ ஒருவன் ஏர் பூட்டினான்! தினமும் நமக்கு அவன் சோறூட்டினான்...


தவம் போல் இருந்து உழுதவனோ! அவன் கடனில் விழுந்து அழுதவனோ!!
கேட்டு உதவி செய்ய யாரும் இல்லை; கேட்பதை எவனும் அறியவில்லை...
நாத்து காற்று அது வீசும் முன்னே...! இவன் மூச்சின் காற்று போனதெங்கே...?


எழுவான், உழுவான் விவசாயி; அவன் வாழ்க்கை தினமும் புயலாகி...
வங்கிக் கடனின் பாரத்திலே...! வாழ்க்கை கண்ணீர் ஈரத்திலே...!!
நெல்மணி கதிரின் சிரிப்பினிலே...! தன் தொல்லைகள் யாவும் மறந்திருப்பான்...!!
பண்டமாற்று முறை இருந்திருந்தால்; இவன் என்றோ எங்கோ உயர்ந்திருப்பான்... 


எத்தனை எத்தனை நிறுவனங்கள்; அது அத்தனையும் கடன் கட்டியதா?
உறக்கம் இல்லா இரவுகளில்... உழவனின் வாழ்க்கை விடிகிறதா? 
வரப்பு உயர நீர் உயரும், நீரும் உயர நெல் உயரும்...
நெல்லும் உயரக் குடி உயரும்...! இது தெரிந்தும் இறைவா அருளில்லையா...!?


எவனோ ஒருவன் ஏர் பூட்டினான்! தினமும் நமக்கு அவன் சோறூட்டினான்...

தவம் போல் இருந்து உழுதவனோ! அவன் கடனில் விழுந்து அழுதவனோ!!
கேட்டு உதவி செய்ய யாரும் இல்லை; கேட்பதை எவனும் அறியவில்லை...
நாத்து காற்று அது வீசும் முன்னே...! இவன் மூச்சின் காற்று போனதெங்கே...?

சுகன்யாவின் குரலில் இந்தக் கவிதை இசை வடிவம் பெற்ற விடியோ இதோ...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com