திருடனை மடக்கிப் பிடித்த சிறுவனுக்கு ஏ.சி மெக்கானிக் வேலை! தேவை வேலையா? படிப்பா?!

நமது நாட்டில் சூர்யா போன்ற தீரமான சிறுவர்கள் சொந்த மன உந்துதலில் இப்படியெல்லாம் அந்நியருக்கு உதவுவது என்பது அதிசயத்திலும் அதிசயம்.
திருடனை மடக்கிப் பிடித்த சிறுவனுக்கு ஏ.சி மெக்கானிக் வேலை! தேவை வேலையா? படிப்பா?!
Published on
Updated on
2 min read

சென்னையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் அண்ணாநகர் பகுதியில் பெண் மருத்துவர் ஒருவரது கழுத்துச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு ஓடினான் திருடன் ஒருவன். அப்போது அந்தப் பக்கமாக வந்த சிறுவன் சூர்யா, துணிச்சலுடன் ஓடிச்சென்று அந்தத் திருடனை மடக்கிப் பிடித்ததோடு அவனது கையில் இருந்த சங்கிலியையும் மருத்துவருக்கு மீட்டுக் கொடுத்தார். இதன் காரணமாக அப்போதே காவல்துறையினர் சிறுவன் சூர்யாவை அழைத்துப் பாராட்டி பரிசுகள் வழங்கிய போதும் சூர்யாவுக்கென ஒரு ஏக்கம் இருந்து கொண்டே இருந்தது. ஏழைச் சிறுவனான சூர்யாவுக்கு தானும் படித்தவர்களைப் போல ஷர்ட், பேண்ட் அணிந்து கொண்டு அலுவலகத்துக்குச் சென்று பணிபுரிய வேண்டும் என்பது தான் அந்த ஏக்கம். சிறுவன் சூர்யாவின் அந்த ஏக்கம் தற்போது நிறைவேறியிருக்கிறது. அதற்கான மூலகாரணம் சிறுவன் ஏப்ரல் மாதத்தில் திருடனை மடக்கிப் பிடித்த சாகஸக் கதை தான். சூர்யாவைப் பற்றிக் கேள்விப்பட்ட தனியார் நிறுவனம் ஒன்று அவருக்கு ஏ.சி மெக்கானிக்காக தங்களது நிறுவனத்தில் பணிபுரியும் வாய்ப்பை வழங்கியிருக்கிறது. இது நிரந்தர வேலை வாய்ப்பு என்பதால் சிறுவன் சூர்யா தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டுள்ளார். 

சூர்யா பற்றிய காணொளி...

நிற்க இந்தச் செய்தியில் சிறுவன் சூர்யாவுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கிறது என்பது வரை இந்த தகவலை அறிந்து கொள்ளும் எவருக்குமே சந்தோஷமாகத்தான் இருக்கும். ஆனால், சிறுவன் சூர்யா பற்றிய இத்தகவலை மக்களிடையே பகிர்ந்து கொண்ட தனியார் ஊடகத்தின் காணொளிக்காட்சிக்கு அடியில் விரியும் கருத்துரைகள் வேறொரு கோணத்தில் யோசிக்கத் தூண்டுகின்றன.

நாட்டிலும் சரி, வீட்டிலும் சரி போகிற போக்கில் எவ்விதத் தவறுகளோ, குற்றங்களோ நேர்ந்தாலும் அதையெல்லாம் கண்டும், காணாமலும் போகக்கூடிய இளைய சமுதாயம் நிறைந்த நமது நாட்டில் சூர்யா போன்ற தீரமான சிறுவர்கள் சொந்த மன உந்துதலில் இப்படியெல்லாம் அந்நியருக்கு உதவுவது என்பது அதிசயத்திலும் அதிசயம். அப்படிப்பட்ட ஒரு சிறுவனுக்கு வெறும் ஏ.சி மெக்கானிக் உத்யோகம் பெற்றுத் தருவதோடு இந்த சமூகத்தின் கடமை முடிந்து விடுவதா?! அந்தச் சிறுவனின் துணிச்சலுக்கான பரிசு இதுவாகத் தான் இருக்க முடியுமா? அநீதியைத் தட்டிக் கேட்கும் துணிச்சல் கொண்ட அந்தச் சிறுவனை காவல்துறையினரே தத்தெடுத்து மேற்கொண்டு படிக்க வைக்க உதவக் கூடாதா? என்ற ரீதியில் சிலர் கருத்துரை இட்டிருந்தனர். அவர்களது கேள்வியும் நியாயமானது தான். 

ஒருவேளை அச்சிறுவனின் குடும்பச் சூழலோ அல்லது சுயவிருப்பமோ கூட அவரை வேலைக்குப் போகக்கூடிய மனநிலைக்கு உந்தியிருக்கலாம். ஆனால், அரசின், காவல்துறையின் கடமை என்ன?  திருடனை மடக்கிப் பிடிக்கும் அளவுக்கு திறமை உள்ள சிறுவனை ஏ.சி மெக்கானிக்காக மட்டுமே பணியமர்த்துவதை எப்படி பெரிய உதவியெனக் கருத முடியும். காணொளியில் காண்கையில் பூஞ்சையாகத் தோற்றமளிக்கும் அச்சிறுவனை மேலே படிக்க வைக்க உதவி செய்ய இந்த அரசால் உதவ முடியாதா என்ன? குடும்பத் தேவை காரணமாக அந்தச் சிறுவன் வேலைக்குப் போய்த்தான் தீர வேண்டுமென்றால்... வேலை செய்து கொண்டே படிப்பையும் தொடரும் படியான வசதியை ஏற்படுத்தித் தர வேண்டியது யார் பொறுப்பு? யோசிக்குமா அரசும், காவல்துறையும்?!
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com