கண்ணுக்கு புலப்படாத அடிமைத்தனம்: கொத்தடிமை தொழில்முறை என்ற அரக்கன்

இந்தியாவில் மனித வணிகம் என்பது, பாலியல் உறவு, வேலை, உடல் உறுப்புகள் மற்றும் வீட்டில் அடிமையாக பணிபுரிதல் என்பவற்றிற்காக பரவலாக நடைபெற்று வருகிறது
கண்ணுக்கு புலப்படாத அடிமைத்தனம்: கொத்தடிமை தொழில்முறை என்ற அரக்கன்

இந்தியாவில் மனித வணிகம் என்பது, பாலியல் உறவு, வேலை, உடல் உறுப்புகள் மற்றும் வீட்டில் அடிமையாக பணிபுரிதல் என்பவற்றிற்காக பரவலாக நடைபெற்று வருகிறது. பாலியல் உறவு மற்றும் உடல் உறுப்புகளுக்காக மனித வணிகத்தில் ஈடுபடுவது குறித்து சட்டங்களும், சமூக விழிப்புணர்வும் மற்றும் நடைமுறைப்படுத்தக் கூடிய பொறுப்புறுதியும் திறம்பட இருப்பதோடு இச்செயல்பாடு ஒரு குற்றமாக கருதப்படுகின்றது. ஆனால், வேலை செய்வதில் அடங்கியிருக்கிற கொத்தடிமைத்தனம் மிக அதிகமாகவும் கண்ணுக்கு புலப்படாததாகவும் இருப்பதால் சமுதாயத்தால் இந்த மூன்று வகையினங்களுள், இதுவே இன்னும் சரியாக உணரப்படாமல் இருக்கிறது.

ஒழுங்குமுறை விதிகளும் மற்றும் தொழில்நுட்ப காரணங்களும் இதை ஒரு குற்றச்செயலாக காணப்படுமாறு சாதகமாக இல்லாத காரணத்தால் இக்குற்றமானது அடையாளம் காணப்படுவதில்லை. அப்படியே அடையாளம் காணப்படுமானால், கொத்தடிமைத் தொழில் நடைமுறையில் இருந்து வருவதை ஒப்புக் கொள்வதும், அக்குற்றத்திற்கு பொறுப்பாளிகளை அடையாளம் கண்டு நீதியின் முன் நிறுத்துவதும், கொத்தடிமைகளை விடுவித்து மறுவாழ்வளிப்பதும் தனது குடிமக்கள் மீது அரசு கொண்டிருக்கிற அக்கறை மற்றும் அரசியல் மனஉறுதியைச் சார்ந்ததாக இருக்கிறது. 2016-ம் ஆண்டில், எந்தவொரு குறிப்பிட்ட நேரத்திலும் நவீன அடிமைத்தனத்தில் 40.3 மில்லியன் நபர்கள் இருந்ததாக 2017-ம் ஆண்டு சர்வதேச தொழிலாளர் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில், 24.9 மில்லியன் நபர்கள் நிர்ப்பந்தத்தின் கீழ் கட்டாயமாக வேலை செய்பவர்களாவர். அதாவது, உலகில் ஒவ்வொரு 1,000 நபர்களுக்கும் நவீன அடிமைத்தனத்தில் 5.4 நபர்கள் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கின்றனர் என்பதே இதன் பொருளாகும்.

கட்டாய வேலை என்ற அடிமைத்தனத்தில் சிக்குண்டிருக்கிற 24.9 மில்லியன் நபர்களுள், வீட்டு வேலை, கட்டுமானப் பணி அல்லது விவசாயம் போன்ற தனியார் துறை பணிகளில் 16 மில்லியன் நபர்கள் சுரண்டப்பட்டு வருகின்றனர்; 4.8 மில்லியன் நபர்கள் பாலியல் தொழிலில் கட்டாயமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் மற்றும் 4 மில்லியன் நபர்கள் மாநில அரசு அதிகார அமைப்புகளால் நிர்ப்பந்தத்தின்கீழ் கட்டாய பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 2016-ம் ஆண்டின் இந்தியாவில் குற்றங்களுக்கான புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவெங்கும் கட்டாய வேலைக்காக 10,509 நபர்கள் மனித வணிகம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுள், 1200 நபர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். கொத்தடிமை தொழில்முறை என்பதும் கட்டாய / நிர்ப்பந்தத்தின் கீழ் செய்யப்படும் வேலையின் ஒரு வடிவமாகும். இதில், ஒரு கடன் அல்லது கடன் பொறுப்புக்கு பிணையாக, அக்கடன் முழுமையாக திருப்பிச் செலுத்தப்படும் வரை தனிநபர்கள் வேலை செய்யுமாறு நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். 1995-ம் ஆண்டில் மாண்புமிகு இந்திய உச்சநீதிமன்றத்தின் ஆணையின் பேரில் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில், 20 தொழில்பிரிவு வகையினங்களில் மொத்தத்தில் 10 லட்சம் கொத்தடிமை தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் இருப்பதாக மதிப்பிடப்பட்டிருந்தது. இதன் தொடர்ச்சியாக, 1997ம் ஆண்டில், தமிழக அரசு அதன் சொந்த முனைப்பில் ஒரு கணக்கெடுப்பை நடத்தி மாநிலத்தில் வெறும் 25,005 கொத்தடிமை தொழிலாளர்களே இருப்பதாக மதிப்பீடு செய்திருந்தது. தமிழ்நாட்டில் கொத்தடிமை தொழில்முறை நடைமுறை நேர்வுகளில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மிகப் பெரிய வேறுபாடு இருப்பதை இது காட்டுகிறது.

இத்தகைய கொத்தடிமை தொழில்முறை இன்னும் நடைமுறையில் இருந்து வருவதை முதலில் நான் கேட்ட போது, உண்மையில் இந்த கொடுமையான அமைப்புமுறை இருப்பதை என்னால் நம்ப முடியவில்லை. ஒரு குற்றவியல் வழக்குரைஞராக இந்த யுகத்தில் இத்தகைய அமைப்புமுறை இருந்து வருவதை என்னால் நம்ப முடியவில்லை. ஆனால், ஒரு வழக்கில் இது பற்றி அறிய வந்த செய்திகளும் மற்றும் சட்டத்தின் பயன்பாடும், கொத்தடிமை முறை வலுவாக இருந்து வருவதை வெளிப்படுத்தியது. தங்களது சிரமங்களையும் துயரத்தையும் பாதிக்கப்பட்ட நபர்கள் அரசு அதிகாரிகளிடம் பகிர்ந்து கொண்டபோது, அந்த எதார்த்த உண்மை எனது அறிவுக்கும் அப்பாற்பட்டதாக இருந்தது. இந்த நிகழ்வு தான், ஏற்றுக்கொள்ள மிகக் கடினமாக இருக்கிற இந்த உண்மையை அறியவும், புரிந்துகொள்ளவும் எனது கண்களை திறந்துவிட்டது.

படிப்பறிவில்லாத அப்பாவித்தனம், பாதிப்பிற்கு எளிதில் ஆளாகக்கூடிய நிலை, திறம்பட வேலை செய்யக்கூடிய ஆற்றல், மற்றும் தகுதியே இல்லாமல் தங்களது முதலாளிக்கு காட்டுகிற விசுவாசம் ஆகியவற்றைத் தான் அவர்களிடம் என்னால் பார்க்கமுடிந்தது. கொத்தடிமை என்ற மோசமான சுழலுக்குள் தாங்கள் சிக்கியிருப்பதைக்கூட அறிந்துகொள்ள முடியாத அளவிற்கு அப்பாவிகளாக அவர்கள் இருந்தனர். வாங்கிய கடனுக்காக தங்களது உரிமைகளையும், சுதந்திரத்தையும் இழந்திருக்கின்றனர் என்பது உண்மையை வெளிப்படுத்தும் அவர்களது வாக்குமூலங்களை சட்ட அடிப்படையில் பார்க்கும்போது தெள்ளந்தெளிவாக விளங்கியது. சில நேர்வுகளில், இந்த அடிமைத்தனத்தில் பல தலைமுறையினர் சிக்குண்டு இருந்தனர். தங்களது பெற்றோர்கள் வாங்கிய கடனை திரும்ப செலுத்துவதற்காக ஒரு வயது முதிர்ந்த நபரோடு மூன்று வயதாகும் ஒரு குழந்தையும் இந்த அடிமைத்தனத்தில் சிக்கியிருந்ததை காணமுடிந்தது.

தொடக்கத்தில், அரசு அதிகாரிகள் பாதிக்கப்பட்ட நபர்கள் / கொத்தடிமை தொழிலாளர்களின் நம்பிக்கையை பெறும் வரை பணி அமைவிடத்தில் தங்களது வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்து கொள்ள அவர்கள் தங்களது வாய்களை திறப்பதில்லை. அவர்களது முதலாளிகள், மேற்பார்வையாளர்கள் அல்லது முதலாளிகளின் நண்பர்கள் இருக்கின்ற இடத்திலிருந்து அவர்களை தனியாக ஒதுக்கி கொண்டு சென்ற பிறகு தான் தங்களது மனக்குமுறல்களையும், கவலைகளையும் மனம் விட்டு அவர்கள் சொல்லத் தொடங்கினார்கள். அந்த நேரம் வரை 'நாங்கள் நன்றாக இருக்கிறோம், எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை, முதலாளி நல்லவர், நாங்கள் மகிழ்ச்சியாகத் தான் இருக்கிறோம்...’ என்ற வார்த்தைகளையே அவர்கள் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தார்கள். இந்த பணி அமைவிடத்திற்கு சுற்றுச் சுவரோ, வாசலோ எதுவும் இருக்கவில்லை என்பதை பார்த்தது வியப்பளிப்பதாக இருந்தது.

வெளியேறி வேறிடத்திற்கு செல்வதற்கான அணுகுவசதி தடங்கலின்றி இருந்தாலும்கூட, தங்களது முதலாளி தங்களை எப்படியும் தேடிப் பிடித்து மீண்டும் வேலை செய்யுமிடத்திற்கு கொண்டு வந்துவிடுவார் என்ற அச்சம் அவர்கள் மனதில் நிறைந்திருந்த காரணத்தால் அவர்கள் தப்பிப்போக மாட்டார்கள். தங்களது தினசரி வேலையை அவர்கள் செய்து கொண்டிருந்ததைப் போலவே தான் வெளியே தெரியும். வெளியிலிருந்து பார்க்கும்போது, அங்கு நடப்பது எதுவுமே தவறானதாக இல்லை என்றே பிறருக்கு தோன்றும். அவர்கள் விடுவிக்கப்பட்டதற்குப் பிறகு இந்த அச்சமானது எப்படி அவர்களுக்குள் விதைக்கப்பட்டது மற்றும் எப்படி அது செயல்படுகிறது என்பதை புரிந்து கொள்வதற்கு பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுள் ஒருவரோடு நான் நடத்திய உரையாடல் உண்மை நிலையை அறிய எனக்கு உதவியது. அவர்களுள் ஒருவர் முன்பு தப்பிப்பதற்கு முயற்சித்த போது, அந்த நபரை தேடிப்பிடித்து அழைத்து வந்து பிறருக்கு முன்னால் நிறுத்தி அடித்து கொடுமைப்படுத்தியதோடு முதலாளியை ஏமாற்றிவிட்டு தப்பித்ததற்காக காவல் நிலையத்தில் அத்தொழிலாளிக்கு எதிராக ஒரு வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் அவர்கள் அனைவருக்கும் அறிவிக்கப்பட்டது என்ற தகவலை நான் அறிய நேர்ந்தது.

வாங்கிய கடனை திரும்பச் செலுத்துவது அல்லது ஒரு வழங்கிய பொறுப்புறுதியை பின்பற்றி நடப்பது சரியானது மற்றும் நியாயமானது; இதற்கு எதிரான எந்தவொரு நடவடிக்கையும் சட்டத்திற்கு மற்றும் நியாயத்திற்கு புறம்பானது என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஆனால் இது எப்படி சிக்கவைக்கும் பொறியாக எப்படி மாறுகிறது மற்றும் ஒரு நபரை கசக்கி பிழிந்து சுரண்டுகிற ஒரு குற்றமிழைப்பவரின் நோக்கமாக இது எப்படி மாறுகிறது?

விவரமான எந்தவொரு நபரும் கடன் வாங்குபவர் அதனை திரும்பச் செலுத்துவதற்கான திறனை பரிசீலித்த பிறகே உத்தரவாதமளிப்பவர் அல்லது உத்தரவாதமளிக்கும் ஆவணத்தை பரிசீலித்த பிறகே கடன் தருவார். ஆனால், இதுபோன்ற பெரும்பாலான நேர்வுகளில் கடனை திரும்ப செலுத்துவதற்கான திறன் கடன் வாங்குபவருக்கு இல்லை என்பது தெளிவாகவே தெரியும். பணியமைவிடத்தில், தொழிற்சாலையில் அல்லது அவர் வேலை செய்கிற நிறுவனத்தில் உற்பத்தி திறனுக்காக தனது திறன்களை / பணியை வழங்குவதன் மூலமே அவரால் கடன் தொகையை திரும்பச் செலுத்த முடியும் என்பது தெரிந்திருக்கும். இத்தகைய நேர்வுகளில், நல்ல கூலி மற்றும் ஒரு சிறந்த எதிர்காலம் கிடைக்கும் என்று வேலைக்கு ஆட்சேர்ப்பவர்கள் கூறும் பசப்பு வார்த்தைகளால் ஈர்க்கப்பட்டு தங்களது சொந்த முனைப்பின் பேரில் அல்லது விருப்பமுடிவின் பேரில் ஒரு ஒப்பந்தத்தை பாதிக்கப்படுபவர்கள் செய்து கொள்கின்றனர். கிராமங்களில் உள்ள ஏஜென்ட்கள் / வேலைக்கு ஆளெடுப்பவர்கள், அவர்களது சம்மதத்தைப் பெறுவதற்காக அந்த குடும்பத்தின் வறுமையான, மோசமான தேவையையும், சூழ்நிலையையும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர். பெரும்பாலான இத்தகைய நேர்வுகளில் உயிர் பிழைத்து வாழ்வதற்கு கிடைக்கிற வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் அல்லது பட்டினி கிடந்து சாகவேண்டும் என்ற இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருப்பதால் இந்த இரண்டில் சிறந்த வாய்ப்பாக தோன்றுவதை தேர்வு செய்யுமாறு தூண்டி, சட்டத்தால் தடை செய்யப்பட்டிருக்கிற கொத்தடிமைத்தனம் என்ற இந்தக் கொடுமையான பொறிக்குள் அவர்களை சிக்கவைக்கின்றனர்.

நாம் பயன்படுத்துகிற பல தயாரிப்பு பொருட்கள் அடிமைத்தனத்தின் கறைகளை கொண்டிருக்கக் கூடும். எந்தவொரு தொழில்துறையிலும், எந்தவொரு இடத்திலும் பொருள் வழங்கல் சங்கிலி தொடரின் ஏதாவதொரு முனையில் இது இருக்கக்கூடும். இந்த நாட்டின் சட்டமானது, முன்தடுப்பு, ஒழுங்குமுறைப்படுத்தல் மற்றும் அமலாக்கத்திற்கான சட்டங்கள் இருப்பதன் காரணமாக தொழில்துறைக்கு ஆதரவாகவும் மற்றும் தொழிலாளர் நலனை கருத்தில் கொண்டதாகவும் இருக்கிறது. இதை தவறாது உரிய இடைவேளைகளில் சரியான நேரத்தில் அமலாக்கம் செய்வது கொத்தடிமை தொழில்முறை இல்லாத மாவட்டமாக இருப்பதை உறுதிசெய்ய மாவட்ட நிர்வாகத்திற்கு நிச்சயம் உதவும். 1976-ம் ஆண்டின் கொத்தடிமை தொழில்முறை (ஒழிப்பு) சட்டம், நலிந்த பிரிவினர், பொருளாதார ரீதியாக, உடல்ரீதியாக மற்றும் இவ்விஷயத்தோடு தொடர்புடைய மற்றும் அதன் தொடர்ச்சியாக இருக்கின்ற விஷங்களினால் தவறாக பயன்படுத்தப்பட்டு, சுரண்டப்படுவதிலிருந்து தடுப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது.

அரசால் குறித்துரைக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியத்தைப் பெறுவதற்கான ஒரு தனிநபரின் உரிமை அல்லது விரும்புகிற இடத்திற்கு செல்வதற்கான உரிமை / தனது சொத்தை கையகப்படுத்துகிற உரிமை / உழைப்பின் மூலம் உருவாகிற பொருட்களை சந்தைவிலையில் விற்பனை செய்கிற உரிமை அல்லது பிற இடங்களில் பணியாற்றுவதற்கான சுதந்திரம் / வாழ்வாதாரத்திற்கான பிற வழிமுறைகள் ஆகியவை, அவரால் அல்லது அவரது முன்னோர்களால் / வாரிசுகளால் பெறப்பட்ட ஒரு கடன் / முன்பணம் அல்லது ஒரு வழக்கமான / சமூக கடமைப்பொறுப்பு அல்லது பொருளாதார ரீதியிலான பொருளுக்காக இழக்கப்படுகிறதோ அல்லது பறிக்கப்படுகிறதோ / கைவிடுமாறு செய்யப்படுகிறதோ அப்போது அது கொத்தடிமை தொழில்முறையாகும். ஒப்பந்த தொழிலாளர் மற்றும் மாநிலங்களுக்கு இடையே புலம்பெயரும் தொழிலாளர்களை பொறுத்த நேர்வுகளிலும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள அவர்களது உரிமைகள் அல்லது சுதந்திரம் ஏதாவது பறிக்கப்படுமானால் / இழக்கப்படுமாறு செய்யப்படுமானால் அவர்களும் கொத்தடிமை தொழிலாளர்கள் தான் என்று அறிவிக்கப்படுகிறது.

பந்துவா முக்தி மோர்ச்சா வழக்கில் 'கொத்தடிமை தொழிலாளர்களை அடையாளம் காண்கிற, விடுவிக்கிற மற்றும் மறுவாழ்வளிக்கிற தனது கடமைப்பொறுப்பிலிருந்து மறுக்கவோ அல்லது விலகவோ மாநில அரசானது அனுமதிக்கப்பட முடியாது’ என்று மாண்புமிகு உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது. கொத்தடிமை தொழில்முறையின் கீழ் வேலை செய்கின்ற ஒவ்வொரு நபருக்கும் விடுதலைச் சான்றிதழ் கட்டாயமாக வழங்கப்பட வேண்டும். இந்த கொடுமையான கொத்தடிமை அமைப்பிலிருந்து விடுதலை செய்யப்பட்டவர்களாக அவர்களை அறிவிக்கிற மற்றும் குற்றம் இழைப்பவர்களால் எதிர்காலத்தில் தொந்தரவு அல்லது நெருக்கடி தரப்படுவதை நிறுத்துகிற முதன்மையான ஆவணம் இதுவே.

பாதிப்பிற்குள்ளான இவர்களுள் அநேகருக்கு, இந்நாட்டின் குடிமக்களாக இருப்பதற்கு சான்றாக உள்ள ஒரே ஆவணமாக இது இருக்கிறது. மாண்புமிகு மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின்படி கொத்தடிமை தொழிலாளர்களின் விடுதலைச் சான்றிதழின் ஒரு நகலானது, அவர்களுக்கு பெறுவதற்கு உரித்தான பலன்கள் / சலுகைகளை வழங்குவதற்கான அடையாள சான்றாக கருதப்பட வேண்டும்...’ மற்றும் மறுவாழ்வுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதன் சான்றாக இது திகழ்கிறது. அத்தகைய நபர்களின் வாழ்க்கையில் கொத்தடிமைத்தனம் மீண்டும் நிகழாமல் இருப்பதற்கு இது அவர்களுக்கு உதவும்.

பணி வழங்குநர்கள், தொழில் மேற்கொள்வதற்கான ஒழுங்குமுறை விதிகளுக்கு இணக்கமாக நடப்பதோடு குறைந்தபட்ச ஊதிய சட்டம் மற்றும் அவ்வப்போது பிறப்பிக்கப்படுகிற விதிகளை பின்பற்றவும் மற்றும் பணியாளர்களை சுரண்டுகிற / சுய இலாபத்திற்கு நடவடிக்கைகளில் ஈடுபடாமல் தவிர்ப்பது அவசியமாகும். பணி வழங்குநர் மற்றும் பணியாளர்களுக்கு இடையேயான உறவுமுறையில் தான் நாட்டின் பொருளாதாரம் சார்ந்திருக்கிறது. தனக்கு கீழே பணியாற்றுபவர்களின் செயல்நடவடிக்கைகளுக்கு முதன்மை பணி வழங்குநர் தான் பொறுப்பானவர். ஒரு சக மனிதர் மீது தான் கொண்டிருக்கும் பொறுப்புகளை ஒவ்வொரு நபரும் நன்கு அறிந்திருக்க வேண்டும்.

தன்முனைப்புடன் பல்வேறு நடவடிக்கைகள் வழியாக கொத்தடிமை தொழில்முறையில் பாதிக்கப்பட்ட நபர்களை அடையாளம் காண்பது, மீட்பது மற்றும் அவர்களுக்கு மறுவாழ்வு வழங்குவது ஆகிய செயல்பாட்டின் வழியாக இந்த கொடுமையான கொத்தடிமைத்தனம் என்ற பிரச்னைக்கு தீர்வுகாண தீவிரமாக முற்படுவதில் தமிழ்நாட்டின் மாநில அரசு முன்னோடியாக வழிகாட்டுகிறது. வெளிப்படையாக கண்ணுக்கு புலப்படாத இந்த கொத்தடிமை அமைப்பு முறையானது பரவலாக நடைமுறையில் இருப்பதை குறைப்பதற்காகவும் சக மனிதர்களுக்கு எதிரான இக்கொடுமையை முற்றிலுமாக அகற்றவும் இந்த வலுவான செயல்முறையானது தொடர்ந்து வலுவாக செயல்படுத்தப்பட வேண்டும்.

- வழக்கறிஞர் ரோசியான் ராஜன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com