புலம்பெயர்வு, வேலைக்காக மனித வணிகம் மற்றும் கொத்தடிமை தொழில்முறை: ஒரு மீள்பார்வை

புலம்பெயரும் தொழிலாளர்களை வேலைக்காக சுரண்டுவதும், தவறாகப் பயன்படுத்துவதும் ஒரு சிக்கலான பிரச்சனையாகும்.
புலம்பெயர்வு, வேலைக்காக மனித வணிகம் மற்றும் கொத்தடிமை தொழில்முறை: ஒரு மீள்பார்வை


புலம்பெயரும் தொழிலாளர்களை வேலைக்காக சுரண்டுவதும், தவறாகப் பயன்படுத்துவதும் ஒரு சிக்கலான பிரச்னையாகும். திருட்டுத்தனமாக செயலாற்றும் இடையீட்டாளர்களின் வலையமைப்புகள் வழியாக சென்றடையும் மாநிலத்திற்கு / நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் பல புலம்பெயரும் தொழிலாளர்கள் கொத்தடிமை தொழில்முறை நிலைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர் என்பதை கிடைக்கக்கூடிய சான்றுகள் காட்டுகின்றன.

புலம்பெயர்வு / புலம்பெயர்தல்

2015-ம் ஆண்டில் புலம்பெயரும் தொழிலாளர்கள் மீது சர்வதேச தொழிலாளர் நிறுவனம் நடத்திய உலகளாவிய மதிப்பீடுகளின்படி 232 மில்லியன் சர்வதேச புலம்பெயர்வோர் இருக்கின்றனர். இவர்களுள் 206.6 மில்லியன் நபர்கள் 15 ஆண்டுகள் வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர். வேலை செய்யும் வயதுள்ள இந்த புலம்பெயர்வோர் மக்கள் தொகையில் 72.7 சதவீதம் அல்லது 150 மில்லியன் நபர்கள் புலம்பெயரும் தொழிலாளர்களாவர். இவர்களுள் 83.7 மில்லியன் ஆண்களும் மற்றும் 66.6 மில்லியன் பெண்களும் அடங்குவர். பல்வேறு பிராந்தியங்கள் மற்றும் பிரிவுகளில் வேலைக்காக புலம்பெயரும் செயல்பாட்டின் வறுமையையும், முக்கியத்துவத்தையும் இப்புதிய உலகளாவிய மதிப்பீடுகள் காட்டுகின்றன. இந்தியாவில், 2012 முதல் 2016 வரையிலான காலகட்டத்தில் கல்வி அல்லது பணிக்காக ஒவ்வொரு ஆண்டும் மாநிலங்களுக்கிடையே சராசரியாக 9 மில்லியன் நபர்கள் புலம்பெயர்ந்திருக்கின்றனர் என்று 2016-17 பொருளாதார சர்வே குறிப்பிடுகிறது.

2001-2011 காலகட்டத்தில் பதிவு செய்யப்பட்ட மற்றும் 2011ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கீட்டில் கண்டறியப்பட்ட மாநிலங்களுக்கிடையிலான புலம்பெயர்வு எண்ணிக்கையை விட இது ஏறக்குறைய இரு மடங்காகும். டெல்லி, மஹாராஷ்ட்ரா, தமிழ்நாடு மற்றும் குஜராத் போன்ற மாநிலங்களில், ஹிந்தி பேசும் மாநிலங்களான உத்தர பிரதேஷ், பீகார் மற்றும் மத்திய பிரதேஷ் ஆகிய மாநிலங்களிலிருந்து மிக அதிக எண்ணிக்கையில் புலம்பெயர்வோர்களை ஈர்த்திருக்கின்றன என்று இந்த சர்வே (கணக்கெடுப்பு ஆய்வு) வெளிப்படுத்துகிறது. இன்றைக்கு இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி என்பது தொழிலாளர்களின் நகர்வுத்திறனைச் சார்ந்திருக்கிறது மற்றும் இவர்களுள் பெரும்பான்மையோர், ஒழுங்கு முறைப்படுத்தப்படாத தொழில்துறைகளில் பணியாற்றுகின்றனர்.

அடிக்கடி குறைவான மழைப் பொழிவை எதிர்கொள்கிற அல்லது வெள்ளப் பெருக்கினால் அவதியுறுகிற அல்லது நில அளவோடு ஒப்பிடுகையில் மக்கள் தொகையின் அடர்த்தி அதிகமாகவுள்ள பிராந்தியங்கள் அல்லது தீர்வு காணப்படாத சமூக அல்லது அரசியல் மோதல்களையும், கலவரங்களையும் எதிர்கொள்கின்ற பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு தாங்கள் வசிக்கின்ற பகுதிகளிலிருந்து வெளியேறி வேறிடங்களுக்கு புலம் பெயர்வது அத்தியாவசியமாகியிருக்கிறது. வறுமை, உள்ளுர் அளவில் வேலை வாய்ப்பின்மை மற்றும் வேறிடங்களில் வேலை கிடைக்கும் நிலைமை ஆகியவை கிராமப்புறங்களிலிருந்து மக்கள் புலம்பெயர்வதற்கான காரணங்களாக அமைந்திருக்கின்றன. புலம் பெயர்வோரில் அநேகர், குறிப்பாக, பின்தங்கிய மற்றும் விளிம்புநிலை சமூகங்களைச் சேர்ந்தவர்கள் தங்களைத் தாங்களே தற்காத்து உயிர்பிழைப்பதற்காக புலம்பெயர்வு வழிமுறையை எடுக்குமாறு நிலவுகின்ற சூழ்நிலைகளினால் நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். புலம்பெயர்வு என்பது ஒரு முக்கியமான வாழ்வாதார செயல் உத்தியாகும். புலம்பெயர்ந்து வேலை செய்பவர்கள் அனுப்புகின்ற பணம் தான் அவர்களது கிராமத்தில் விட்டுவிடப்பட்டு வந்திருப்பவர்கள் செலவுகளை எதிர்கொள்ள உதவுகிறது. இத்தகைய நபர்களில் சூழ்நிலையானது நல்ல ஊதியம் மற்றும் வாழ்க்கை வசதிகளோடு தொலைதூர இடத்தில் நல்ல வேலையை பெற்றுத் தருவதாக வாக்குறுதியளித்து ஏமாற்றும் ஏஜெண்ட்கள் மற்றும் வேலை ஒப்பந்ததாரர்களை கவர்ந்திழுக்கிறது. வேலை சந்தைகளில் இத்தகைய தொழிலாளர்கள் நுழைவது, பல உள்ளடங்கிய பாதகங்களை கொண்டிருக்கிறது. மிக முக்கியமான திறன்கள், தகவல் மற்றும் பேரம் பேசும் ஆற்றல் இல்லாத நிலையில் கடுமையான, மோசமான மற்றும் ஆபத்துகரமான பணிகளில் வேலை செய்யுமாறு அவர்களை கட்டாயப்படுத்துகிற மற்றும் சுரண்டலுக்கு ஆளாகக்கூடிய வேலை ஏற்பாடுகளுக்குள் புலம்பெயரும் தொழிலாளர்கள் பெரும்பாலும் சிக்கிக்கொள்கின்றனர். 

வேலைக்காக மேற்கொள்ளப்படும் மனித வணிகம்

குடும்பத்திற்கு ஆரம்பத்திலேயே ஒரு முன் பணத் தொகையை வழங்குவதன் மூலம் தொழிலாளர்கள் அல்லது புலம்பெயரக்கூடிய நிலையிலுள்ள நபர்கள், புதிதாக வேலை செய்யக்கூடிய இடத்திற்கு இடம்பெயருமாறு கபடமாக கவர்ந்திழுக்கப்படுகின்றனர். ஏஜெண்ட் அல்லது இடையீட்டு முகவர், இத்தொழிலாளர்களை பணி அமைவிடத்திற்கு உடன் அழைத்துச் சென்று ஒரு நபருக்கு இவ்வளவு கமிஷன் என்ற கணக்கீட்டின் அடிப்படையில் பணத்தைப் பெற்றுக்கொண்டு முதலாளி அல்லது மேற்பார்வையாளரிடம் ஒப்படைத்துவிடுவார். காலப்போக்கில் நாட்கள் செல்ல செல்லத்தான், ஆண்கள் ஏமாற்றப்பட்டுவிட்டதாக இந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உணரத்தொடங்குவார்கள், வேறு வழியில்லாமல் கடுமையான மற்றும் மிக மோசமான பணி சூழ்நிலைகளில் வேறு வழியின்றி வேலை செய்ய கட்டாயப்படுத்தப்படுகின்றனர். வேலைக்காக ஆட்சேர்ப்பு, அவர்களை அழைத்துச் செல்வது, உரிமையாளரிடம் ஒப்படைப்பது மற்றும் இத்தொழிலாளர்களை பணி அமைவிடங்களில் பெற்றுக்கொள்வது ஆகியவை, இந்திய குற்றவியல் சட்டத்தின் 2013ம் ஆண்டில் திருத்தப்பட்ட பிரிவு 370-ன்படி வேலைக்காக மனித வணிக செயல்பாடாக கருதப்படக் கூடியதாகும்.

புலம்பெயர்வு என்பது இந்திய அரசமைப்பு சட்டத்தால் (பிரிவு. 19) பாதுகாக்கப்பட்டிருக்கிற ஒரு அடிப்படை உரிமையாகும். எனினும், வழக்கமான அல்லது பருவகால அடிப்படையிலான புலம்பெயர்வு என்ற பெயரில் செய்யப்படும் இந்த மனித வணிக செய்முறையானது சமீப ஆண்டுகளில் தவறாக பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. வேலைக்காக மனித வணிகத்தில் ஈடுபடுவது, திட்டமிடப்பட்ட கூட்டுச்சதி தொகுப்பின்கீழ் வருகிறது மற்றும் இந்த செயல்பாடு இதுவரை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கிறது. அதற்கு காரணம், இது திட்டமிட்டு நடத்தப்படுவது தான். தேசிய குற்ற பதிவகத்தில் பிரசுரிக்கப்பட்ட  இந்தியாவில் குற்றங்கள் 2016 அறிக்கையானது, 8,132 மனித வணிக குற்றங்கள் நடைபெற்றிருப்பதாகவும் மற்றும் இவற்றின் மூலம் வேலை சுரண்டல் நோக்கத்திற்காக 11,154 அப்பாவி நபர்கள் மனித வணிகம் செய்யப்பட்டிருக்கின்றனர் என்பதைக் காட்டுகிறது. தமிழ்நாட்டில், வேலைக்காக மேற்கொள்ளப்பட்ட 434 மனித வணிக நேர்வுகளின் மூலம் 1,201 நபர்கள் பாதிக்கப்பட்டதாக இந்த அறிக்கை வெளிப்படுத்துகிறது.  

தமிழ்நாட்டில் கொத்தடிமை தொழில்முறை

அநியாயமாக வேலை வாங்குவதற்காக மனித வணிகம் செய்யப்பட்ட நபர்கள் பல்வேறு தொழில் பிரிவுகளில் கொத்தடிமை தொழில்முறை சூழ்நிலைகளில் பணியாற்ற நேரிடுகிறது. ஊதியமே இல்லாமல் அல்லது குறைந்தபட்ச ஊதியத்திற்கும் மிகக்குறைவான கூலிக்கு நீண்ட மணிநேரங்கள் வேலை செய்யுமாறு அவர்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். அவர்கள் முன்பு வாங்கிய முன்பணத் தொகையை வட்டியோடு சேர்த்து முழுமையாக திரும்பச் செலுத்தும் வரை அவர்களது சொந்த கிராமங்களுக்கும், வீடுகளுக்கும் திரும்ப செல்வது மறுக்கப்படுகிறது. பணியமைவிடத்தின் உரிமையாளர்களும், மேற்பார்வையாளர்களும் வேலை நேர பதிவேடுகளையும் மற்றும் கடனுக்கான கணக்கு வழக்கு பதிவேடுகளையும் அவர்களுக்கு சாதகமாக எழுதிக்கொள்வதுடன், வாங்கிய முன்பணம்ஃகடன் மீது அநியாய வட்டி விகிதங்களை விதித்து பதிவுசெய்கின்றனர். இதன் மூலம் ஒவ்வொரு மாதமும் இத்தொழிலாளர்களின் கடனானது தொடர்ந்து பல மடங்கு அதிகரிக்கிறது. இதனால், புலம்பெயரும் இத்தொழிலாளர்களை கொத்தடிமை தொழிலாளர்களாகவே பல தலைமுறைகளாக அங்கேயே இம்முதலாளிகளால் வைத்துக்கொள்ள முடிகிறது. இத்தொழிலாளர்களின் சொந்த கிராமங்களில் பண்டிகைகள், திருமணங்கள், இறுதிச்சடங்குகள் அல்லது பிற விசேஷங்களுக்கு செல்வதற்குக்கூட இவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. கடனை திரும்ப செலுத்துவதற்காக வேறிடங்களில் பணி செய்வதற்கும் இவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. ஆகவே, அவர்களை இந்த கொத்தடிமையிலிருந்து மீட்பதற்காக அரசு நடவடிக்கை எடுக்கும் வரை அவர்களது பணி அமைவிடங்களில் பல தலைமுறைகளாக இவர்கள் கொத்தடிமையாகவே வாழ வேண்டியிருக்கிறது. 1971ம் ஆண்டின் கொத்தடிமை தொழில்முறை (ஒழிப்பு) சட்டத்தின்கீழ் மொத்தத்தில் கொத்தடிமை தொழில்முறை மீது 233 வழக்குகளை பதிவுசெய்யப்பட்டிருப்பதாக 2016ம் ஆண்டின் இந்தியாவில் குற்றங்கள் அறிக்கை கூறுகிறது.

எனினும், தமிழ்நாடு மாநிலத்தில் கொத்தடிமை தொழில்முறை நிலவிவருவது குறித்து இதற்கு முன்பு நடத்தப்பட்ட ஆய்வுகள் ஒரு மாறுபட்ட நிலையை வெளிப்படுத்துகின்றன. 1995ம் ஆண்டில் மாண்புமிகு இந்திய உச்சநீதிமன்றத்தால் பணிக்கப்பட்டபடி மேற்கொள்ளப்பட்ட ஆய்வானது, 20 தொழில் வகையினங்களில் சுமார் 10 லட்சம் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக இருப்பதை காட்டியிருந்தது. 1997ம் ஆண்டில், கொத்தடிமை நேர்வுகள் அளவை தீர்மானிப்பதற்காக மற்றொரு ஆய்வை தமிழ்நாடு அரசு நடத்தியது மற்றும் இதன்படி 25,005 கொத்தடிமை தொழிலாளர்கள் இருப்பதாக இந்த ஆய்வு குறிப்பிட்டது. கொத்தடிமை தொழில்முறை இருந்துவருவதில் ஒரு முழுமையான வேறுபாட்டை இந்த ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. 2012ம் ஆண்டில், ஹார்வேர்டு பல்கலைக்கழக ஆய்வாளர் சித்தார்த் காரா நடத்திய ஆய்வில், உலகில் ஏறக்குறைய 2.05 கோடி கொத்தடிமைத் தொழிலாளர்கள் இருப்பதாகவும் மற்றும் அவர்களுள் 85 விழுக்காட்டினர் தெற்கு ஆசியாவைச் சேர்ந்தவர்கள் என்றும் மதிப்பிட்டிருந்தார். அவரது ஆய்வின்படி உலகின் கொத்தடிமைத் தொழிலாளர்களுள் சுமார் 60 விழுக்காட்டினர் (1.07-1.27 கோடி நபர்கள்) இந்தியாவில் இருக்கின்றனர். 2015-ம் ஆண்டில் 11 தொழில் வகையின பிரிவுகளில் தமிழ்நாடு மாநிலத்தில் இரு அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் ஒரு ஒத்துழைப்பு ஆய்வை இணைந்து நடத்தின. 4.63 இலட்சம் கொத்தடிமைத் தொழில்முறை நிலைகளின்கீழ் இருந்து வருவதாக இந்த ஆய்வு வெளிப்படுத்தியிருந்தது. இதில் 70.4 சதவீத தொழிலாளர்கள், வேறு மாநிலங்களிலிருந்து, குறிப்பாக பீகார், ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலிருந்து புலம்பெயர்ந்து வந்திருப்பவர்கள் என்பது தெரிய வந்தது. 

இனி செய்ய வேண்டியது என்ன

பாதுகாப்பான புலம்பெயர்வு மற்றும் பணியமைவிடங்களில் தொழிலாளர்களை சுரண்டும் நிலை ஆகிய பிரச்சனைகளுக்கு தீர்வுகாண தன்முனைப்பு கொண்ட ஒரு அமைப்புமுறை நிறுவப்பட வேண்டுமென இந்த சூழல் அழைப்பு விடுக்கிறது. வேலைக்காக மனித வணிகம் மற்றும் பணியமைவிடங்களில் தொழிலாளர்களை சுரண்டுதல் ஆகிய நேர்வுகள் குறித்து தகவல்கள்ஃபுகார்கள் பெறப்படும்போது அதனை வெறும் தொழிலாளர் பிரச்சனை என்று கருதி ஒதுக்கி விடாமல் இது தொடர்பான சட்டங்கள் அமல்படுத்தப்பட வேண்டும். புலம்பெயரும் பணியாளர்களின் பங்களிப்பானது நம் நாட்டின் உள்நாட்டு உற்பத்திக்கு மிகப்பெரியதாகும். எனினும், அதற்கு பதிலீடாக அவர்களது பாதுகாப்பு மற்றும் நலனுக்காக எதுவும் செய்யப்படவில்லை. புலம்பெயர்வோரை பாதுகாப்பதை இலக்காகக் கொண்ட 1979ம் ஆண்டின் மாநிலங்களுக்கிடையிலான புலம்பெயரும் தொழிலாளர்கள் சட்டமானது, வழக்கொழிந்துவிட்டது மற்றும் எங்குமே இது செயல்படுத்தப்படுவதில்லை என்பதால் இதை தீவிரமாக மற்றும் கட்டாயமாக செயல்படுத்தப்பட வேண்டிய அவசியம் இருக்கிறது.

புலம்பெயர்வோரையும் மற்றும் அப்பகுதி மக்களையும் கொத்தடிமை தொழில்முறை நிலைகளின்கீழ் பணியில் அமர்த்தக்கூடிய வாய்ப்பு அதிகமுள்ள தொழில்துறை பிரிவுகளில் மாவட்ட அதிகாரிகளால் குறிப்பிட்ட காலஅளவுகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதிகாரிகளால் எடுக்கப்படும் உடனடியான மற்றும் கடுமையான நடவடிக்கையானது. தவறிழைக்கும் நபர்கள் மத்தியிலும் மற்றும் இந்த குற்றத்தை செய்யலாம் என்று கருதிக்கொண்டிருப்பவர்கள் மத்தியிலும் தண்டனை கிடைக்கும் என்ற அச்சத்தை உருவாக்கி இக்குற்றம் நிகழாமல் தடுக்கும்.

வறுமையை முடிவுக்கு கொண்டுவரவும், இந்த பூமியை பாதுகாக்கவும் மற்றும் அனைத்து நபர்களும் அமைதி மற்றும் வளத்தை பெற்று வாழ்வதை உறுதி செய்யவும் நடவடிக்கை மேற்கொள்வதற்காக விடுக்கப்பட்டுள்ள உலகளாவிய அறைகூவலாகத் திகழும், நிலைக்கத்தக்க வளர்ச்சி இலக்குகளை இந்தியாவில், முன்னிலைப் படுத்துவதும் மற்றும் செயல்படுத்துவதும், இந்த பிரச்சனைக்கு தீர்வுகாணும் முயற்சியில் இப்போதைய சூழல் அமைப்பையே திறம்பட மாற்றியமைக்கும். குறிப்பாக, குறிக்கோள் 8 (இலக்கு 7) கட்டாய தொழில்முறையை ஒழிக்கவும், நவீன அடிமைத்தனத்தையும், மனித வணிகத்தையும் முடிவுக்கு கொண்டுவரவும், குழந்தைகளை போராளிகளாக / ராணுவ வீரர்களாக ஆட்சேர்ப்பு செய்தது மற்றும் பயன்படுத்துவது உட்பட குழந்தை தொழிலாளர்களை பயன்படுத்துகின்ற மிக மோசமான முறைகளை அகற்றவும் மற்றும் நிகழாமல் தடுப்பதை உறுதிசெய்யவும் மற்றும் 2025ம் ஆண்டுக்குள் குழந்தை தொழிலாளர் முறையின் அனைத்து வடிவங்களையும் முடிவுக்கு கொண்டுவரவும் உடனடியான மற்றும் பயனளிக்கும் நடவடிக்கைகளை எடுப்பது;

இலக்கு 8: புலம்பெயரும் பணியாளர்கள், குறிப்பாக புலம்பெயரும் பெண்கள் மற்றும் இடர் செறிந்த பணியில் உள்ளவர்கள் உட்பட அனைத்து தொழிலாளர்களுக்கும் பாதுகாப்பான பணியாற்றல் சூழல்கள் கிடைக்கப் பெறுவதை ஏதுவாக்குவது மற்றும் தொழிலாளர் உரிமைகளை பாதுகாப்பது மற்றும் குறிக்கோள் 16 (இலக்கு 2: குழந்தைகளை தவறாகப் பயன்படுத்துவதை, சுரண்டலை, மனித வணிகத்தை மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையின் அனைத்து வடிவங்கள் மற்றும் சித்ரவதைகளை முடிவுக்கு கொண்டுவருவது) ஆகியவை சுரண்டல், வேலைக்கான மனித வணிகம் என்ற தீ செயலை தடைசெய்வதிலும் மற்றும் பாதுகாப்பான புலம்பெயர்வை உறுதிசெய்வதிலும் மிகப்பெரிய பங்காற்றும். புலம்பெயரும் போக்குகள் அதிக ஒழுங்குமுறையானதாக மாறும் என்றால், இதற்கான தேவை மற்றும் வழங்கல் தரப்பு பிரச்னைகள் விரிவாக புரிந்து கொள்ளப்பட வேண்டும். மனித வணிக செயல்பாட்டை எதிர்த்து போராடுவதற்கு வலுப்படுத்தப்பட்ட, விரிவான அணுகுமுறையை கொண்டிருக்க பிற குறிக்கோள்களிலும் முன்னேற்றங்கள் அத்தியாவசியமாகும். எடுத்துக்காட்டாக, வறுமை ஒழிப்பு (குறிக்கோள் 1), பாலின சமத்துவம் மற்றும் பெண்களை அதிகாரம் பெறச் செய்தல் (குறிக்கோள் 5), முழுமையான மற்றும் பயனுள்ள வேலைவாய்ப்பு மற்றும் கண்ணியமான பணி (குறிக்கோள் 8), நாடுகளுக்குள் மற்றும் நாடுகளுக்குகிடையே நிலவும் ஏற்றத்தாழ்வை குறைப்பது (குறிக்கோள் 10) மற்றும் நீதிக்கான அணுக்கவசதியை அனைவருக்கும் வழங்குவது மற்றும் திறன்மிக்க, செயல்பாட்டுக்கு பொறுப்பேற்கிற மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய அமைப்புகளை கட்டமைப்பது (குறிக்கோள் 16) ஆகிய பகுதிகளில் முன்னேற்றம் அவசியமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com