
வண்ணத்துப்பூச்சிகளைப் பார்க்கும்போது ‘ஆஹா! என்ன அழகு!’ என வியக்கிறோம். பல வண்ணங்களில் அழகழகாய் காட்சியளிக்கும் வண்ணத்துப்பூச்சியின் வாழ்விலும் ஒரு அலங்கோல ஆரம்பம் உண்டு! வருத்தும் உருக்குலைவும் உண்டு.
அழகிய வண்ணத்துப்பூச்சியாய் இன்று வலம் வரும் செல்வியின் வாழ்க்கையில் இந்த அலங்கோலமும் உருக்குலைவும் உருவான இடம் தான் ‘கொத்தடிமைத்தனம்’ என்னும் இருள் சூழ்ந்த அந்த அரிசி ஆலை. சுட்டெரிக்கும் கோடைவெயிலில் சற்றும் நிற்பதற்கோ, ஓய்வெடுப்பதற்கோ கூட வழி ஏதும் இல்லாமல் பெற்றோருடன் பற்பலகையை பிடித்துக் கொண்டு, அந்தப் பெரிய நெற்களத்தில் நெற்களை காய வைப்பதும் காய்ந்த நெல் மணிகளை துடைப்பத்தால் பெருக்கிச் சேர்ப்பதும்தான், எட்டு வயது நிரம்பிய செல்வியின் தலையாய வேலையாக இருந்தது.
வெயிலின் உக்கிரம் ஒருபுறம், வருத்தும் பசியின் கொடுமை மறுபுறம் என, இவ்விரண்டின் மத்தியில் கொத்தடிமைகளாக வேலை செய்து கொண்டிருந்த செல்வி மற்றும் அவள் பெற்றோரின் தூக்கமின்றி சிவந்த கண்கள் வைத்த கோரிக்கை ஒன்றுதான் - ‘ஐயா! எப்படியாவது இங்கிருந்து எங்களை காப்பாற்றுங்கள்!’ செல்வியின் குடும்பத்தின் நிலையை உணர்ந்த அரசு அதிகாரிகளின் சீரிய முயற்சி எடுத்து அவர்களை மீட்டது. மறுவாழ்விற்காக அவர்களை சொந்த ஊருக்கே திருப்பி அனுப்பவும் வழி வகுத்தது. செல்வியின் அலங்கோலம் அலங்காரமாக மாறத் துவங்கின அந்த நாளை என்னால் மறக்க முடியாது.
செல்வியின் தந்தை கொத்தடிமைத்தனத்திலிருந்து விடுதலை ஆகியும், தன் சுய குடிப்பழக்க அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறமுடியாமல் போராடிக் கொண்டிருந்த அந்த நேரம் துரதிர்ஷ்டவசமாக செல்வியின் தாய் திடீர் மாரடைப்பால் காலமானார். அன்று வரை பள்ளியில் சேர்ந்து தன் கனவுகளை வளர்த்து வந்த செல்வியின் கனவுகள் மீண்டும் ஒருமுறை தகர்ந்தது. குடிக்கு அடிமையான தன் தகப்பனால் தன்னுடன் பிறந்த ஐந்து சிறு சகோதர, சகோதரிகளுக்கு உணவு கூட கொடுக்க திராணியில்லை என்பதை உணர்ந்த செல்வி தன் குழந்தைப் பருவத்தை தியாகம் செய்ய முடிவெடுத்தாள். தனது சகோதர, சகோதரிகளுக்கு எப்பாடுபட்டாவது உணவு சேகரிப்பதையே தன் கடமையாக கொண்டிருந்தாள்.
இந்தச் சூழ்நிலையில் அவளது இரண்டரை வயது கடைசி தங்கை கீதா நோயுற்று மரணத் தருவாயில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். தாய் இல்லாத காரணத்தால் தன் தங்கைக்குத் தாய் போலவே மாறிய செல்வி, இரவு பகலாக மருத்துவமனையிலேயே தங்கி, கீதாவை கண்ணும் கருத்துமாக கவனித்து வந்தாள். ‘என்ன சோகம்! ஒரு குழந்தையை ஒரு குழந்தையே பராமரிக்கிறதே!’ எனச் செல்வியைப் பார்த்து பிற நோயாளிகள் வருத்தப்பட்டும் பயன் ஏதும் இல்லை. இத்தனை வருத்தங்களுக்குப் பின்னால் ஒருவழியாக கீதா குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வெளியேறினாள். அதே சமயம் செல்வியின் தந்தைக்கு ஊரார் மற்றும் நலம் விரும்பிகள் பலரும் அறிவுரைகளும், ஆலோசனைகளும் கூற, அதன் விளைவாய் ஆச்சர்யப்படும்விதமாக அவருக்கு மனமாற்றம் ஏற்பட்டது. தன் பிள்ளைகளை குழந்தைகள் பராமரிப்பகத்தில் சேர்த்து பள்ளிக்கும் அனுப்பத் தீர்மானித்தார்.
அவ்வண்ணமே செல்வி தன்னுடன் பிறந்தவர்களுக்காக தியாகம் செய்த பள்ளிப் படிப்பைத் மீண்டும் தொடரலானாள். கல்வி அவளுக்கு ஆர்வமூட்டும் ஒன்றாக மாற, தனது கனவுகளுக்கு மீண்டும் உயிரூட்ட தொடங்கினாள் அந்தச் சின்னஞ்சிறு பெண். கல்வி மாத்திரம் இல்லாது விளையாட்டிலும் மிகுந்த ஆர்வம் செலுத்தி வரும் செல்வி, தான் இழந்திருந்த குழந்தைப் பருவத்தின் சந்தோஷத்தை மீண்டும் பெற்று இன்று தன் சகோதர, சகோதரிகளுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறாள்.
தனது இந்த வளர்ச்சி தன்னோடு நின்று விடக்கூடாது என்று கொத்தடிமைத்தனம் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுக்க துவங்கினாள் செல்வி. ‘பாரத யாத்திரை’ என்னும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளை எதிர்க்கும் ஒரு மாபெரும் பிரச்சார நடைப்பயணத்தை நோபல் பரிசாளர் கைலாஷ் சத்யார்;த்தி மற்றும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியோடு இணைந்து கொடியசைத்து துவக்கி வைக்கும் ஒரு வாய்ப்பினை பெற்றாள் செல்வி.
உருக்குலைய வைக்கக் கூடிய வறுமை, கொத்தடிமைத்தனம், குடும்ப சூழ்நிலை, என இவைகளையெல்லாம் தாண்டி இன்று அழகிய வண்ணத்துப்பூச்சியாய் உருவாகிவரும் செல்வியின் ஒரே கனவு என்னவெனில் தன்னைப் போல இன்னல்களில் சிக்கி உருக்குலைந்து கிடக்கும் பலரை சந்தித்து, அவர்களுக்கு ஊக்கமளித்து உதவி வாய்ப்புக்களை உருவாக்கித் தர வேண்டும் என்பதே அக்கனவு. இதை நிறைவேற்ற தனது தன்னலமற்ற சேவையின் மூலம் முயன்று வருகிறாள். கொத்தடிமைத்தனம் என்னும் இருளில் சிக்கி உருக்குலைந்த செல்வியின் வாழ்க்கையை தேடிச் சென்று மீட்டு இன்று வண்ணத்துப்பூச்சி போல் உருவாக உறுதுணையாக இருந்த அரசின் சீறிய முயற்சியை வணங்குகிறேன். கொத்தடிமைத் தொழில்முறையை ஒழிப்பதில் முன்னோடி மாநில அரசாக திகழும் தமிழக அரசு செல்வியைப் போன்று கொத்தடிமைத்தனத்தில் சிக்கி அடிப்படை உரிமைகளையும் இழந்து விடுதலைக்காக ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான மக்களை தேடிச் சென்று அவர்களையும் விடுவிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு.
இன்று செல்வியைப் பார்க்கும்போது இது சாத்தியம்தான் என்று உறுதியாய் உணர்கிறேன்.
சாலமோன் - சமூக சேவகன், ஐ.ஜே.எம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.