பாடி பில்டிங் ஆண்களுக்கானது, பெண்ணான நீ அதைச் செய்து என்ன சாதிக்கப்போறே! கேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த சாதனையாளர் ரூபி!

ராசிபுரத்தில் அக்டோபர்  ஏழாம் நாள்  நடந்த  உடல்  கட்டமைப்புப்  போட்டியில் அகில இந்திய பெண் அழகி
பாடி பில்டிங் ஆண்களுக்கானது, பெண்ணான நீ அதைச் செய்து என்ன சாதிக்கப்போறே! கேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த சாதனையாளர் ரூபி!

ராசிபுரத்தில் அக்டோபர்  ஏழாம் நாள்  நடந்த  உடல்  கட்டமைப்புப்  போட்டியில் அகில இந்திய பெண் அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் சென்னை ஆலம்பாக்கம் அஷ்டலக்ஷ்மி நகரைச் சேர்ந்த ரூபி. உடல் கட்டமைப்பு (Body building) பிரிவில் தங்கப்பதக்கம்  மற்றும் கோப்பையைப் பெற்றிருக்கும்  ரூபி, ஆறு வயதாகும் மகனுக்குத் தாய். இந்த ஆண்டு  தொடக்கத்தில் அஸ்ஸாமில் நடந்த அகில இந்திய போட்டியிலும் உடல் கட்டமைப்புப் பிரிவில் தங்கப்பதக்கம் பெற்றவர் இவர். அடுத்த ஆண்டு ஆசிய அளவில் நடைபெறவுள்ள போட்டியில் இந்தியாவின்  சார்பில்   கலந்து கொள்ளப் போகிறவர்.  

ஆசிரியையாக  இருந்த  ரூபி எப்படி  'பாடி பில்டிங்'   பக்கம் வந்தார்..? ரூபி  விளக்குகிறார்:

'எட்டு   ஆண்டுகளுக்கு முன்  திருமணம். ஓர் ஆண்டில்  மகன் பிறந்தான். பிரசவத்திற்குப் பிறகு பருமனாகிப் போனேன். இதனால், கணவரின் கோபத்திற்கு ஆளானேன்.  சில மாதங்களில்  கணவர்  என்னை விட்டு பிரிந்து சென்று விட்டார். பருமனைக்  குறைக்க, நடக்க ஆரம்பித்தேன். மூன்று மாதம் நடந்ததினால் உடல் பருமன் கொஞ்சம்தான் குறைந்தது. பிறகு 'டோனிங்' செய்து கொள்ள உடல் பயிற்சி நிலையத்திற்குப் போக ஆரம்பித்தேன். அங்குதான் உடல் பயிற்சியில் ஒரு பிரிவான 'பாடி பில்டிங்'  பற்றி  அறிந்தேன். அதில் எனக்கு ஈடுபாடு ஏற்பட, அதற்கான பயிற்சியில் இறங்கினேன். உடல் பயிற்சி செய்வதில் கூந்தல்  இடையூறாக இருக்க, முதல்படியாக ஆசையாக வளர்த்த கூந்தலைக்  கிராப்பாக  மாற்றினேன்.

'ஆரம்பக் காலத்தில் உடல் பயிற்சி நிலையத்தில் என்னை விசித்திரமாகப் பார்த்தார்கள். என்னை யாரும் சட்டை செய்ய மாட்டார்கள். உதவிக்கு அழைத்தாலும் கேட்காதது மாதிரி  இருந்து விடுவார்கள். உடல் பயிற்சிக்கே இத்தனை ஏளனங்கள். 'பாடி பில்டிங்' செய்யணும் என்றதும் 'நீயா பாடி பில்டிங்கா' என்று கேலியாக சிரித்தார்கள். பயிற்சியாளர் ஸ்ரீதர்தான் என்னை ஊக்குவித்தார். உடல் பயிற்சி செய்து உடல் தசைகளை கட்டமைப்பு செய்வதில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறினேன். ஆனால் பிறர் கண்ணுக்கு நான் ஆணாக  மாறி வருகிறேன் என்று தோன்ற ஆரம்பித்துவிட்டது.

வீட்டிலும் அதே கதைதான். பாடி பில்டிங்  ஆண்களுக்கானது.  பெண்ணான  நீ 'பாடி பில்டிங் செய்து என்ன சாதிக்கப்போறே.  அப்படி செய்தால், நீ நீயாக இல்லாமல்  உடல் ரீதியாக  மாறப்போறே'' என்று என் அம்மாவே  கேள்விகளை  எழுப்பினார்.  

'பாடி பில்டிங்'  செய்வதால் பெண்களுக்கான   அழகு,  நளினம்   போய் ஆண் போன்ற தோற்றம் ஏற்பட்டுவிடும் என்று சொல்லப்படுவதில் உண்மையில்லாமல் இல்லை. இந்த' பாடி பில்டிங்'கை சுமார் இரண்டரை ஆண்டுகளாகச் செய்து வருகிறேன். ஜிம்மிற்கு புதிதாக வருபவர்கள்  'ப்ரோ (BRO) கொஞ்சம்  தள்ளுங்க..' என்று  கை வைத்து தள்ளுவார்கள்.  நான் பெண்  என்று தெரிந்தவுடன் 'ஸாரி.. சிஸ்டர்'  என்பார்கள்.   

உடை மாற்ற  பெண்களுக்கான அறைக்கு சென்றால் பையன் என்று நினைத்து ஒதுங்குவார்கள்.  இப்போது போட்டிகளில் வெற்றி பெற்று வருவதால் ஆண் போல  ஆகிவிட்டேன் என்ற விமர்சனங்கள் குறைந்து வருகின்றன.

'திருமணமாகி  குழந்தைப்  பிறந்ததும்  பெண்கள் உடலைப் பேணுவதே இல்லை. 'குழந்தை பிறந்த பிறகு  அழகு போயிருச்சு... அசிங்கமா  தொப்பை வந்திருச்சு.. சதை போட்டிருச்சு..'   என்று புலம்புவாங்க. ஆனால்  எதுவும் எங்கேயும்  போகல. நாம தொலைச்சிட்டோம் அவ்வளவுதான்.  இந்தத்   தப்பை நானும் செய்தேன், பிறகு திருத்திக் கொண்டிருக்கிறேன். அதற்காக எல்லா பெண்களும் 'பாடி பில்டிங்' செய்யுங்க  என்று சொல்லவில்லை.  உடலை கட்டாக வைக்கவில்லை என்றாலும் சீராக வைத்திருக்க தேவையான உடல் பயிற்சிகளை செய்ய வேண்டும். எடை தூக்கினால் கர்ப்பப்பை இறங்கிவிடும். முதுகு வலி வரும்  என்று சொல்வதெல்லாம் ஆதாரமற்றவை. கர்ப்ப காலத்தில் கூட உடல் பயிற்சி செய்யலாம். ஆனால் முறையான பயிற்சியாளர்கள் அறிவுறுத்தலோடு செய்ய வேண்டும். 

உடல் பயிற்சி செய்ய அதிகாலையில் எழுந்திருக்க முடியாதே என்று நினைத்தால் எந்த வேலையையும் செய்ய முடியாது. தொடர்ந்து ஒரு வாரம் அதிகாலையில்  எழுந்துவிட்டால்,  பிறகு தானாக  விழிப்பு வந்துவிடும்.  

மேலும், உடலை சீராக வைத்துக் கொள்ள ’ஸும்பா' நடனப் பயிற்சியாளராகவும் இருக்கிறேன்.  எப்படியும்  ஒரு நாளைக்கு   ஏழு மணி நேரம்  உடல்ரீதியாக உழைக்கிறேன். 

சர்வதேச அளவில் பெண் அழகியாக நான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அந்த திசையில் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறேன். போட்டி நாட்களில் மகனையும் அழைத்துப் போவதால் அவனுக்கும் பாடி பில்டிங்கில் ஆர்வம் வந்துள்ளது. வீட்டில்  உடல் பயிற்சி செய்து வருகிறான்.  பெரியவன் ஆனதும் அவனையும் ஆண் அழகனாக்கிப் பார்க்க வேண்டும்'' என்கிறார் ரூபி.

- பிஸ்மி பரிணாமன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com