என்று முடியும் இந்த அவலம்? பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு குரல் கொடுங்கள் பெண்களே!

ஒரு பக்கம் சிறுமிகள், இன்னொரு பக்கம் பதின் வயதினர் உள்ளிட்ட எல்லா வயதுப் பெண்களும் பாலியல்
என்று முடியும் இந்த அவலம்? பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு குரல் கொடுங்கள் பெண்களே!

ஒரு பக்கம் சிறுமிகள், இன்னொரு பக்கம் பதின் வயதினர் உள்ளிட்ட எல்லா வயதுப் பெண்களும் பாலியல் வன்கொடுமைக்குட்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு வருகின்றனர். இன்னொரு புறம் அருப்புக்கோட்டை நிகழ்வைப் போல பெண்களை உடலாக ஒரு விற்பனைப் பொருளாக மாற்ற முயலும் சதிச் செயல்கள். அதையும் ஒரு பெண்ணே செய்திருக்கும் கேடு கெட்ட நிலை. நிலம், மதம், பணம், உடல் வெறி என பல்முனைக் கூர் கத்திகளால் ஒவ்வொரு நாளும் பெண்ணுடல்கள் கிழித்து போடப்பட்டு வரும் சமூகமாக இந்த நாடு மாறிக் கொண்டிருப்பது எதனால்?

தொழில்நுட்பங்கள் வளர வளர வசதிகள் பெருகியிருக்க வேண்டும். ஆனால் உண்மையில் அது வாழ்க்கையை மனிதத்தை குறுக்கிக் கொண்டிருப்பதை யார் கவனிக்கிறார்கள். இத்தனை ஆண்டுகள் கழித்து பெண்களுக்கு கல்வி, பொருளாதார சுதந்திரம் போன்றவை கிடைத்துள்ளன. ஆனால் அதற்கு விலையாக அவர்கள் உயிரும் அதைவிட பெரிதென நினைக்கும் மானமும் விலையாக முடியுமா? ஒரு பெண் ஒவ்வொரு நாளும் வீட்டிலிருந்து கிளம்பி பள்ளிக்கோ அல்லது அலுவலகத்துக்கோ சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்புதலே ஒரு சாகசமாக மாறிக் கொண்டிருக்கும் காலகட்டம் இது. 

கலைத்துப் போடப்பட்ட குருவிக் கூடாக நம் கலாச்சாரம் ஆகப் பெரிய சீரழிவுகளை சந்தித்துக் கொண்டிருக்கிறது. பூசி மொழுகி பேசிக் கொண்டிருந்தாலும் மாற்றங்கள் என்ற பெயரில் அனுமானிக்க முடியாத அசிங்கங்கள் நடந்தேறிக் கொண்டிருப்பதை நாம் கண்டும் காணாமல் அல்லது கண்ணை மூடிக் கொண்டும், அல்லது சமூக வலைத்தளங்களில் பொங்கி போலி புரட்சி செய்து கொண்டும் கடந்து விடுவோம். உண்மையில் யாருக்கும் எதன் மீதும் எவ்விதமும் எள்ளளவும் அக்கறை இல்லை என்பதே சுடும் நிஜம். அவரவர் சுய முன்னேற்றத்துக்காகவும் பணத்தின் பின்னும் வாழ்க்கையை அடகு வைப்பதிலேயே நேரம் சரியாக இருக்கிறது. சமூகமோ நாடோ அது என்னவோ நான் பத்திரம் என்றால் அது நாசமாகப் போனால்தான் என்ன என்று நினைக்கும் சதவிகிதத்தினரே இன்று அதிகம்.

காலை எழுந்தால் பெண்ணுக்கு எதிரான ஒரு வன்கொடுமைச் செய்தியையாவது படித்துவிடுகிறோம். பக்கம் பக்கமாக செய்திகளை மட்டும்  வெளியிட்டு தீர்வுகள் எதையும் கண்டடையாத ஊடகங்களை என்ன செய்வது? இத்தகைய செய்திகளைப் படிக்கும் போது சீறி விட்டு அவ்விஷயம் ஆறியதும் வெறொன்று. அதன் பின் பிறிதொன்று. நம்மால் என்ன செய்ய முடியும் என்று மெளனமாக இருந்துவிட்டால் இது தொடர்து கொண்டே இருக்கும். எங்கோ யாருக்கோ நடப்பது நம் தெருவில் நம் அருகில் நமக்கு தெரிந்தவருக்கு நடக்கும் வரை ஏன் காத்திருக்க வேண்டும்? பெண்களுக்கு எதிராக நிகழும் ஒவ்வொரு வன்கொடுமையை எதிர்த்து குரல் கொடுக்க முடிவு செய்வோம். பெண்களுக்கு எதிரான இத்தகைய அநீதிகளுக்கான தண்டனைகளை வலுப்படுத்த ஒவ்வொரு இந்தியப் பெண்ணும் முடிவு செய்து கை எழுத்து மூவ்மெண்ட் ஒன்றை தொடங்கி அரசுக்கு விண்ணப்பிக்க வேண்டும். தண்டனைகள் கடுமையாக இருந்தால் குற்றங்கள் நிச்சயம் ஓரளவுக்காவது குறையும். உடனடி நீதி, மரண தண்டனை போன்றவையே பெண்கள் குழந்தைகள் மீது பாலியல் வன்கொடுமை செய்தவர்களு

இந்தியாவில் ஆண்டுதோறும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட 7 வயது தொடங்கி 77 வயது வரையிலான பெண்கள் வன்கொடுமைக்குள்ளாகின்றனர் என்கிறது ஐ.நா. புள்ளிவிபரம். இது அதிகரித்து வருகிறதே தவிர குறைந்தபாடில்லை. மேலும் நம் நாட்டுக்கு சுற்றுலா வருவதற்கு வெளிநாட்டுப் பெண்கள் அச்சப்படக் காரணம் இங்குள்ள மனித வடிவில் உள்ள மிருகங்கள்தான். பெண்களை தெய்வமாக நினைக்கும் ஒரு நாட்டில் இந்தளவுக்கு பெண்களுக்கு எதிரே நிகழும் வன்முறைகள் முரணானது. இவற்றை தடுக்காமல் இதனை எதிர்க்காமல் அரசியல் கட்சிகள் ஓட்டைப் பெறுவது எப்படி என்ற சிந்தனையில் மட்டுமே 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. மக்களுக்கு அடிப்படையாக என்ன தேவை? உணவு, வசிப்பிடம் மற்றும் பாதுகாப்பு. எளிய மக்களுக்கு இவை மூன்றுமே கேள்விக்குரியதாக தான் இன்றளவும் இருந்து வருகிறது.

இந்த நாடு நமக்கு எதுவும் செய்யாது எனில் யார் தான் செய்ய முடியும்? நாமே தான் என்று தான் இதற்கான பதில். ஒவ்வொரு சகோதரியின் பிரச்னையையும் நம்முடைய பிரச்னையாக நினைத்து இன்றுமுதல் உங்களால் ஆன ஒரு சிறு உதவியை செய்யத் தொடங்குங்கள். சட்டங்களை திருத்த ஒரே ஒரு குரல் கொடுங்கள். அது உங்கள் வாட்ஸ் அப்பில் இருக்கலாம், உங்கள் பேஸ்புக்கில் இருக்கலாம். அல்லது நேரடி களப் பணியிலும் இருக்கலாம். நிர்ப்பயாவிற்காக மெழுகுவர்த்தியை ஏற்றுவதைவிடவும் நிர்ப்பயாக்கள் உருவாகாமல் இருப்பதை தடுக்கவே நாம் முயற்சி செய்ய வேண்டும். 

எங்கோ நடக்கும் வன்புணர்வை தடுக்க நம்மால் எப்படி இயலும் என்று நினைத்து எதையும் செய்யாமல் இருப்பது தவறு. நம் தெருக்களில் நம் ப்ளாட்டுகளில் நமக்கே தெரியாமல் நம் குடும்பங்களில் என எங்கும் குழந்தைகள் சிறு சிறு தொல்லைகள் முதல் பெரும் பிரச்னைகள் வரை சந்திக்கிறார்கள். பேசுங்கள் பேசுங்கள். பெண் குழந்தைகளிடம் அதிகம் பேசுங்கள். அவர்கள் தினமும் யாரிடம் பேசுகிறார்கள், அவர்கள் முகம் வாடியிருந்தால் அதற்கான காரணம் என்ன, அவர்கள் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியிருந்தால் அவர்கள் உடல்மொழியாவது அதை உங்களுக்குத் தெரிவித்துவிடும். நம்மை சுற்றியிருக்கும் ஒவ்வொரு பெண் குழந்தையின் பாதுகாப்பும் நமக்கு முக்கியமானதே. நம் பக்கத்து வீடுகளில் யார் இருக்கிறார்கள் என்றே தெரியாது என்று சொல்வதில் என்ன பெருமை இருக்கிறது? நமக்கென்ன என ஏன் ஒதுங்கிப் போகிறீர்கள்?

எனது நேரம் எனக்கு முக்கியம் என்று நினைக்கிறீர்களா? எல்லாருக்கும் அப்படித்தான் ஆனால் ஒரு குழந்தை நம்மிடம் ஹாய் என சொல்லும் போது அதற்கு பதில் அளித்து  அவர்களைப் பற்றிய குறைந்த பட்சம் சிறு விபரங்களையாவது தெரிந்து கொண்டால் ஹாசினிகளை ஏதோ ஒரு தருணத்தில் நாம் காப்பாற்றலாம். இத்தகைய கொடும் நிகழ்வுகள் பெரும்பாலும் தவிர்க்க கூடியதே. ஆண் வேறு பெண் வேறு ஆண் உடல் மற்றும் மனம் வேறு, பெண்ணுடல் இயங்கும் விதமே வேறு. ஆண் பெண் வித்யாசங்களை சிறு வயதிலேயே பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுத்து வளர்ப்பதுதான் நல்லது. நமக்கெங்கே நேரம் என்று நினைத்தால் நம்முடைய அடுத்த தலைமுறை பெண்கள் மலரும் முன்னரே உதிர்ந்துவிடக் கூடும். எனவே பெண்களுக்கு எதிராக வன்கொடுமை நேராது என்ற நிலை வரும் வரை, ஒன்றிணைந்து நம்மால் இயன்ற அளவுக்கு பெண் குழந்தைகளை பாதுகாப்போம். இதை ஒரு சத்திய பிரமாணமாக நமக்குள் எடுத்துக் கொள்வோம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com