காதலுக்குத் தடையா?
By ராக்கி | Published On : 12th February 2018 11:49 AM | Last Updated : 13th February 2021 12:31 PM | அ+அ அ- |

தமிழர்களின் கலாசாரத்துக்கு எதிரான காதலர் தின கொண்டாட்டங்களுக்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மாநிலச் செயலர் ஜெ. சுவாமிநாதன் வெளியிட்ட அறிக்கை: ஐரோப்பிய நாட்டில் பிறந்த வாலன்டைன் இறந்த நாளான பிப்ரவரி. 14-ஆம் தேதியை அந்த நாட்டிலுள்ள சிறு பிரிவினர் காதலர் தினமாக கொண்டாடினர். தமிழகத்திலும் கடந்த சில ஆண்டுகளாக இந்த நிகழ்வு அரங்கேற்றப்பட்டு வருகிறது. இது நமது தேசத்தின் அடிப்படையையே கொச்சைப்படுத்துவதாகும். இந்து மதமும், இந்து மக்கள் கட்சியும் காதலுக்கும், காதலர்களுக்கும் என்றைக்கும் எதிரானவர்கள் அல்ல.
நமது புராணங்கள், இதிகாசங்களில் காதலின் புனிதம் போற்றப்பட்டுள்ளது. தமிழர்களின் இல்லற வாழ்க்கையை அற்புதமாக எடுத்துரைக்கும் அகநானூறு போன்ற பல காப்பியங்கள் நம்மிடையே உள்ளன. நாட்டின் பண்பாட்டையும், கலாசாரத்தையும் பாதிக்காத கொண்டாட்டங்களையோ, பழக்க வழக்கங்களையோ நாம் ஏற்றுக்கொள்ள ஒரு போதும் தயங்கியதில்லை. ஆனால், தேச விரோத, பண்பாட்டு சீரழிவுக்கான நிகழ்வாக காதலர் தினம் உள்ளது.
பிப்ரவரி 14-ஆம் தேதி தமிழகத்தில் உள்ள சுற்றுலாத்தலங்கள், கோயில்கள், பூங்காக்கள், கடற்கரை போன்ற இடங்களில் காதலர் தினம் என்ற பெயரில் கொண்டாட்டங்களில் ஈடுபடுவதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் உணவகங்களில் காதலர் தின கொண்டாட்டங்கள் என்ற பெயரில் ஜோடியாக வருபவர்களுக்கு இலவசமாக மது வழங்கப்படும் என்று கவர்ச்சி அறிவிப்புகள் வெளியிட்டு ஏற்பாடு செய்யப்படும் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும். பொது இடங்களில் மக்களுக்கு இடையூறாக நடைபெறும் ஆபாச காதலர் தின கொண்டாட்டங்களை தமிழக அரசு உடனடியாக தடை செய்ய வேண்டும் என அந்த அறிக்கையில் இந்து மக்கள் கட்சி வலியுறுத்துகிறது .