குடியரசு தினம் என்றால் என்னவெல்லாம் உங்கள் நினைவுக்கு வரும்?

குடியரசு தினம் என்றால் நமக்கு தேசியக் கொடி நினைவுக்கு வரும். நமது நாட்டின் சுதந்திரத்துக்காக பாடுபட்ட தியாகிகளின் நினைவு வரும்.
குடியரசு தினம் என்றால் என்னவெல்லாம் உங்கள் நினைவுக்கு வரும்?

குடியரசு தினம் என்றால் நமக்கு தேசியக் கொடி நினைவுக்கு வரும். நமது நாட்டின் சுதந்திரத்துக்காக பாடுபட்ட தியாகிகளின் நினைவு வரும். சிலருக்கு தேச பக்தியை சிறப்பிக்கும் வகையில் எடுக்கப்பட்ட திரைப்படங்கள் நினைவுக்கு வரலாம். இது தவிர உங்கள் நினைவுக்கு வர வேண்டியது நமது குடியரசு தினத்தின் வரலாறு மற்றும் நமது பாரத நாட்டின் பெருமைகள் மற்றும் அடுத்து நாம் செய்ய வேண்டிய பணிகள் இவற்றைப் பற்றி சிந்தப்பதும் முக்கியமானது.

உலகிலுள்ள மக்கள் யாவரும் தம்முடைய வாழ்க்கையில் முன்னேற்றி செல்ல அவரவர் நாடு மிக முக்கியமானது.  கண்டங்கள், நாடுகள் எல்லைகள் என எதுவும் இல்லையெனில் இங்கு எந்நாளும் எப்போதும் போர் இருந்து கொண்டே இருக்கும். மக்கள் கொதிநிலையில் வாழ்ந்து மடிவார்கள். அல்லது வலியர்கள் மட்டுமே ஜெயித்து எளியவர்களை விலக்கி வைத்துவிடுவார்கள்.

நமது நாடு பழமையான ஒரு நாடு. தற்போது உள்ளது போல பாரதம் அந்தக் காலத்தில் தனித் தனி மாநிலங்கள் இருக்காது. சிற்றரசு, பேரரசு என சிறு சிறு பகுதிகளாகப் பிரிந்து அவரவர் எல்லையைப் பொறுத்து குறுநில மன்னர்கள்,  ஆட்சி செய்தார்கள். இந்த அரசர்களிடம் ஒற்றுமை இல்லை.

எல்லாருமே இந்தியாவைச் சிறு சிறு பகுதிகளாகப் பிரித்து ஆட்சி செய்தனர். இப்படிப் பிரிந்து கிடந்ததாலும், ஒற்றுமை இல்லாததாலும் பரங்கியர் என்று அழைக்கப்பட்ட ஆங்கிலேயர்கள் இந்தப் பிரிவினையை தந்திரமாகப் பயன்படுத்திக் கொண்டார்கள். மன்னர்களிடம் நைச்சியமாகப் பேசி சூழலைப் பயன்படுத்தி நமது நாட்டுக்குள் வஞ்சகமாக நுழைந்து, நம்மை அடிமைப்படுத்தி வைத்திருந்தனர்.

மன்னர் கால ஆட்சியில் அவர்கள் வைத்ததே சட்டம். மக்கள் சுயமாக தனித்து செயல்பட முடியாது. கருத்துக்களை கூற முடியாது. ஏன் தாமாக சிந்திக்கவும் கூட முடியாது. சுதந்திரம் பற்றி கனவு காண முடியாது. மன்னர் இறந்தால், அவருடைய நேரடி வாரிசு அடுத்த மன்னராகிவிடுவார். இத்தகைய முடியாட்சியின் வரி வசூல் செய்த ராச்சியங்களின் கொடுங்கோன்மையால் ஏழை எளியவர்களுக்கு துன்பமே மிஞ்சியது. அதன் பின் வந்த ஆங்கிலேயர்கள் படிப்படியாக இந்தியாவை அடிமைப்படுத்தியபோது சுதந்திரம் பற்றி மக்களுக்கு எந்த விழிப்புணர்வும் வரவில்லை. அவர்களின் கொடுங்கோல் ஆட்சிக்கு அளவில்லாமல் போனது. அத்தகைய கொடுங்கோல் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து, 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் நாள் இந்தியா விடுதலைப் பெற்றது.

இந்திய விடுதலைக்குப் பிறகு, மக்களாட்சியால் மட்டுமே ஒரு நாட்டின் வளர்ச்சி ஏற்படும் என்று முடிவு செய்து, டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதையொட்டி 1950 ஜனவரி 26 முதல் குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது. அந்நாளில் தாய்நாட்டினை அந்நியர்களின் பிடியிலிருந்து காப்பாற்றி, இந்தியாவின் விடுதலைக்காக பாடுபட்ட தேசத் தலைவர்களையும், நம் மண்ணுக்காக உயிர் நீத்த தியாகிகளையும் நினைவு கூறும் வகையில், ஜனவரி 26-ம் தேதியன்று தேசிய விடுமுறை அளிக்கப்பட்டு, நாடு முழுவதிலும் அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அலுவலகங்களிலும் தேசிய கீதம் பாடப்பட்டு கொடியேற்றி, இனிப்புகள் வழங்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியா ஒரு குடியரசாக மாறிய நாள், இந்த தேசத்தின் வாழ்வில், இந்த தேசத்தில் உள்ள மக்களின் வாழ்வில் மிக மிக முக்கியமான ஒரு நாளாகும்.

இன்றைய பொழுதில் இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்பதில் பெருமைக் கொள்கிறோம் எனில், அதன் பின்னணியில் லட்சக்கணக்கான தியாகிகளின் தன்னலமற்ற சேவை இருக்கிறது. அவர்களின் ஆன்ம பலம் இணைந்துள்ளது என்பதை யாராலும் மறுக்க இயலாது. சுமார் நூறு கோடிக்கும் மேல் மக்கள் தொகையைக் கொண்ட நாடாக இருந்தாலும், சாதி, மதம், மொழி எனப் பல வேறுபாடுகள் இருந்தாலும், அனைவரும் இந்தியர் என்பதில் பெருமை கொள்கிறோம். தலைமுறை தலைமுறையாக இந்த ஒற்றுமைக்காக தன்னலமின்றி பாடுபட்டு தங்கள் வாழ்வையே அர்ப்பணித்து இருக்கிறார்கள் சுதந்திர போராட்ட வீரர்கள். அவர்களின் கனவை இன்று நாம் நினைவாக்கியிருக்கிறோமா? அவர்களது தியாகத்தையும் உழைப்பையும் நாம் சரியாக பயன்படுத்தியுள்ளோமா? கேள்விக்குரியதாகவும் கேலிக்குரியதாகவும் இன்றைய சமூக அரசியல் இருந்தாலும், இதை மாற்றவும் ஏற்றத் தாழ்வுகளை, சாதி மதப் பிரிவினைகளை களைந்து  புதியதொரு சமுதாயத்திற்கான கனவுகளைக் காணும் ஒருசில புண்ணிய ஆத்மாக்கள் இன்னும் இருக்கிறார்கள். அவர்களின் வழிகாட்டுதலால்  உலகின் பிரச்னையை மட்டுமல்லாமல் நம்முடைய நிலவி வரும் பிரிவினைகளைத் தவிர்த்து ஒட்டுமொத்த மானுடத்தின் வளர்ச்சிக்கான பாதைக்கு திரும்ப முடியும். அது சாத்தியமானால் உலகம் முழுவதுமே தங்களது நலனுக்கு இந்தியாவை நோக்கி வர விரும்பும்.

இந்தியாவின் பெருமைகளைப் பற்றிக் கூற பல விஷயங்கள் இருந்தாலும் இன்று மேற்குலகம் மொத்தமும் நம்மைத் திரும்பிப் பார்க்கச் செய்வது இந்தியாவின் ஆன்மிகத்தன்மை எனலாம். நம்முடைய நாட்டை நோக்கி காலந்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் தொடர்ந்து வருகை புரியக் காரணம் அவர்கள் எங்கு தேடினாலும் கிடைக்காத அமைதி மற்றும் ஆன்மிக வளர்ச்சிக்கான வேர் நமது புண்ணிய பூமியில்தான் உள்ளது. இதை அவர்கள் ஆய்வுகள் மூலமாகவும் நேரடி அனுபவம் மூலமாகவும் உணர்ந்துள்ளார்கள்.

இந்தியா ஆன்மிகத்தை ஆதாரமாக வாழ்வியலைக் கொண்டுள்ள நாடு. நம்முடைய எளிய வாழ்க்கையின் அடிப்படை பண்பை விட்டுக்கொடுக்காமல் நாம் எப்போதும் பராமரித்து வருவதால் நம்முடைய கலாச்சாரம் உலகிற்கே எடுத்துக்காட்டாய் திகழ்கிறது. இதில் ஒவ்வொரு இந்தியரும் பெருமை கொள்ளலாம். ஒரு மாபெரும் தேசமாக இந்த பரந்துபட்ட உலகின் முன் தலைநிமிர்ந்து நாம் நிற்கிறோம். உலகின் மற்ற பகுதிகளில் இருக்கும் வன்முறை, விழிப்புணர்வு அற்ற நிலை இவையெல்லாம் இங்கும் நிலவினாலும், ஒட்டுமொத்தமாக நமது வேரினை நாம் இழந்துவிடவில்லை.  எல்லாவிதமான கேள்விக்கும் பதில் நம்மிடம் உள்ளது, குழப்பத்திற்கு தீர்வு இங்குதான் உள்ளது. அதை நாம் முதலில் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்தியா வல்லரசாக வேண்டும் என்பது இங்குள்ள அரசியல்வாதிகளின் கனவு எனலாம். ஆனால் அது நல்லரசாக இருக்க வேண்டும் என்பதே ஒவ்வொரு இந்தியனின் கனவாகும். நல்லரசாக மட்டுமல்லாமல் அமைதியும் மகிழ்ச்சியும் நிலைத்திருக்கும் விதமாக, சமூக வேறுபாடுகள் அற்ற மக்களாட்சி உண்மையிலேயே ஏற்பட வேண்டும். 

இனி வரும் காலங்களில், மக்களின் வறுமையைப் போக்குவதில் நம் தேசம் பாடுபட வேண்டும் மிகப் பெரும் மக்கள் திறனைக் கொண்டு, வாழ்க்கையை இப்போதிருக்கும் நிலையிலிருந்து அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அது நம் கண் முன்னேதான் உள்ளது. நிச்சயம் ஒவ்வொருவரும் மனது வைத்தால் நம்மால் நல்ல மாற்றங்களை நிகிழ்த்த முடியும். ஒரு தேசமாக நாம் ஒற்றுமையோடும், விழிப்போடும், கவனத்தோடும் செயல்பட்டால் இக்கனவு ஈடேறும். நல்லதே நினைத்து நல்லதே செயல்படுத்தினால், வானம் கூட வசப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com