ரஜினிகாந்த் அவர்களே! நீங்களுமா இப்படி?

இத்தனை ஆண்டு அனுபவம் மிக்க உங்களுக்கு கதை இப்படித்தான் இருக்கும், அது இப்படித்தான் மக்களால் புரிந்துகொள்ளப்படும் என்பது தெரியாதா?
ரஜினிகாந்த் அவர்களே! நீங்களுமா இப்படி?

நாற்பது ஆண்டுகளைத் தாண்டிய கலைப் பயணத்தில் உங்கள் சினிமாக்கள் எங்களை சிரிக்க வைத்திருக்கிறது, சிந்திக்க வைத்திருக்கிறது, மிகக் குறைந்த அளவில் அழவும் வைத்திருக்கிறது. ஆனால் தியேட்டரில், அமர்ந்த இடத்தில் என்றுமே நெளிய வைத்ததில்லை. அந்தக் குறையை ‘காலா' படம் போக்கியிருக்கிறது.

இந்தப் படத்திற்கு கி. வீரமணி கதை எழுதி, சு.ப. வீரபாண்டியன் நடித்திருந்தால், படத்தைப் பற்றி யாரும் விமர்சனம் செய்திருக்க மாட்டார்கள். ஏனென்றால், இந்து மத எதிர்ப்பு அவர்களின் ரத்தத்தில் ஊறியது. ஆனால், ஆன்மீக அரசியலுக்கு பிள்ளையார் சுழி போட்ட ரஜினிகாந்திடமிருந்து, இந்து மதத்தை கேலி செய்யும் ஒரு படத்தை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

படத்தின் பல காட்சிகள் இந்துக்களுக்கு எதிராக இருப்பதை உணரமுடிகிறது. இவ்வளவு ஆண்டுகள் சினிமாத்துறையில் கொடிகட்டிப் பறக்கும் ரஜினி அவர்களே! இத்தனை ஆண்டு அனுபவம் மிக்க உங்களுக்கு கதை இப்படித்தான் இருக்கும், அது இப்படித்தான் மக்களால் புரிந்துகொள்ளப்படும் என்பது தெரியாதா?

ரஜினிகாந்த் ஏமாற்றப்பட்டார் என்று சிலர் சொல்கிறார்கள். ரஜினிகாந்த் அவர்களே! முதல் பட ஹீரோக்களுக்குத்தான் படத்தின் கதை, அதில் இடம்பெறும் வசனங்கள் ஆகியவற்றில் தலையிடும் வாய்ப்பு கிடைக்காது. இது உங்கள் முதல் படமல்லவே! அதனால், படத்தில் சொல்லப்பட்ட கருத்துக்கள் எல்லாம் உங்களுக்கு ஏற்புடையது என்று எடுத்துக் கொள்ளலாமா? அல்லது நடந்தவை எல்லாம், உங்களுக்குத் தெரியாமல் நடந்தது என்று எடுத்துக் கொள்ளலாமா? அல்லது மற்றவர்கள் சொல்வதைப் போல நீங்கள் ஏமாற்றப்பட்டீர்களா?

தொடர்ந்து படிக்கும் முன் ஒரு குட்டிக்கதையை படிப்போம்.

ஒரு வியாபாரி. காலத்திற்கும், நேரத்திற்கும் தகுந்தாற்போல வியாபாரம் செய்வான். சில நேரங்களில் பழங்கள் விற்பான். சில நேரங்களில் பூக்களை விற்பான். சில நேரங்களில் மிட்டாய்களை விற்பான். மக்கள் அனைவரும் அவன் விற்கும் பொருட்களை ஆர்வத்தோடு வாங்குவார்கள். அதற்கு காரணம் அவனுடைய வசீகரம், அன்பான பேச்சு, நேர்மை. அதோடு மட்டுமில்லாமல், வியாபாரத்தின் போது அவன் பாடும் இனிமையான பாட்டு. அது எல்லோரையும் கவர்ந்து இழுக்கும். அவனிடம் பொருட்களை வாங்குவதையே மக்கள் பெருமையாக நினைத்தனர்.

ஒரு நாள் வியாபாரியின் நண்பன் அவனை சந்தித்தான்.

‘வியாபாரியே! நீ அருமையாக வியாபாரம் செய்கிறாய். ஆனால், இன்றைய சூழலில் வியாபாரத்தில் புதிய யுக்தியை கையாள்வது அவசியம். ‘குறைந்த உழைப்பு, நிறைய லாபம்' என்பதே வியாபாரத்தின் குறிக்கோளாக இருக்க வேண்டும். வழக்கமாக நீ விற்கும் பொருட்களை ஒதுக்கி வை. என்னிடம் இருக்கும் பொருட்களை விற்பனை செய்', என்று சொல்லிய நண்பன் தன் வீட்டிலிருந்த கற்களை வியாபாரியின் கடையில் விற்பனைக்கு வைத்தான்.

வழக்கம்போல் மக்கள் கடைக்கு வந்தனர். வியாபாரியின் பாட்டை கேட்டனர். விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த கற்களை வாங்கிச் சென்றனர். வியாபாரம் அபாரமாக நடந்தது. எக்கச்சக்க லாபம். வியாபாரி பேசினான்.

‘நண்பனே! என்னிடம் கற்களை வாங்கியவர்களுக்கு மகிழ்ச்சி. கிடைத்த லாபத்தினால் எனக்கு மகிழ்ச்சி. என் மூலம் உன் கற்களை விற்றதால் உனக்கு மகிழ்ச்சி. உன்னுடைய புதிய வியாபார யுக்தி ஒரே நேரத்தில் எல்லோரையும் மகிழ்ச்சியடையச் செய்துவிட்டது', என்று பாராட்டினான்.

சில நாட்களுக்குப் பின் ஒரு சாது அந்த ஊருக்கு வந்தார். வியாபாரி அவரை சந்தித்தான். தனது புதிய வியாபாரத்தையும், தனது புத்திசாலி நண்பனையும் பற்றி அவரிடம் சொல்லி பெருமைப்பட்டான். எல்லாவற்றையும் பொறுமையோடு கேட்டார் சாது.

‘வியாபாரியே! என்னுடன் வா. உன்னிடம் பொருட்களை வாங்கிய பயனாளிகளை சந்திக்கலாம்', என்று கூப்பிட்டார் சாது.

சாதுவும், வியாபாரியும் புறப்பட்டனர். முதல் பயனாளியை சந்தித்தனர். அவன் பேசினான்.

‘ஐயா! வியாபாரியை எனக்கு மிகவும் பிடிக்கும். அவரிடம் பொருட்கள் வாங்குவதை பெருமையாக நினைக்கிறேன்', என்றான் அவன்.

‘நல்லது! வியாபாரியிடம் வாங்கிய பொருட்களை காட்டுங்கள்', என்று கேட்டார் சாது.

‘ஐயா! வியாபாரியிடம் பொருட்கள் வாங்குவதே எங்களுக்கு மகிழ்ச்சியான விஷயம். இதற்கு முன் இவரிடம் வாங்கிய பழங்கள், பூக்கள், மிட்டாய்கள் ஆகிய எல்லாவற்றையும் உபயோகப்படுத்திவிட்டோம். பொருட்களின் உபயோகத்திற்குப் பிறகு அவை திருப்தியாக உருமாறிவிட்டது', என்றான் அவன்.

‘அதெல்லாம் சரி. கடைசியாக வாங்கிய கற்களைப் பற்றி எதுவுமே சொல்லவில்லையே?' என்று கேட்டார் சாது.

‘அதோ அந்த மூலையில் கிடக்கிறது பாருங்கள்!' என்று சொல்லிவிட்டு அமைதியானான் அவன்.

அங்கிருந்து புறப்பட்ட இருவரும் ஒவ்வொரு பயனாளியின் வீட்டுக்கும் சென்றனர். எல்லா வீடுகளிலும் வியாபாரியிடம் வாங்கிய கற்கள் ஒரு மூலையில் கிடப்பதை பார்த்தார்கள். இறுதியில் சாது பேசினார்.

‘வியாபாரியே! இதற்கு முன் நீ விற்ற எல்லா பொருட்களுமே அவர்களுக்கு மகிழ்ச்சியையும், பொருட்களின் பயன்பாட்டிற்குப் பிறகு திருப்தியையும் கொடுத்தது. ஆனால், நீ கடைசியாக விற்ற கற்கள் அவர்களுக்கு உன்னிடம் பொருட்கள் வாங்கிய மகிழ்ச்சியை மட்டுமே கொடுத்திருக்கிறது. திருப்தியை கொடுக்கவில்லை. நீ யாரையும் ஏமாற்றவில்லை. ஆனால், அவர்கள் உன்னிடம் ஏமாந்துவிட்டார்கள்', என்றார் சாது.

‘நான் ஏமாற்றாமல் அவர்கள் எப்படி ஏமாற முடியும்?' என்று கேட்டான் வியாபாரி.

‘அதுவா! உன் நண்பன் உன்னை ஏமாற்றவில்லை. ஆனால், நீ எப்படி அவனிடம் ஏமாந்துவிட்டாயோ, அதுமாதிரிதான்', என்று சொல்லிவிட்டு சாது புறப்பட்டார்.

ஏமாற்றியது யார்? ஏமாந்தது யார்? என்பது அவரவர் அனுமானத்திற்கு விடப்படுகிறது. ஆயிரம் கவலைகளை மனத்தில் சுமந்து வரும் ரசிகனை ரஜினியின் திரைப்படங்கள் சிரிக்க வைக்கும். ரசிக்க வைக்கும். ரசிகனின் மனச்சுமையை இறக்கிவைக்கும். ஆனால், இன்று ரஜினிக்காக பல நெருடல்களை ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு ரசிகர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்பது வேதனையானது.

ஹரியும் சிவனும் ஒன்று அறியாதவன் வாயில மண்ணு', என்ற நம்பிக்கையுட தமிழக மக்கள் ராமனை நிந்திப்பவர்களையும், ராவணனை துதிப்பவர்களை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். இது ரஜினிக்கு தெரியாததல்ல.

‘ரஜினியின் திரைப்பட வாழ்க்கை வேறு, அரசியல் வாழ்க்கை வேறு', என்று இரண்டிற்குமிடையே மெல்லிய கோட்டை யாராவது வரைய நினைத்தால், அவர்கள் தன்னை ஏமாற்றிக் கொள்கிறார்கள் என்றுதான் அர்த்தம்.  ரஜினிகாந்த் அவர்களே! உங்கள் மன ஓட்டத்தை ‘பஞ்ச்' வசனங்கள் மூலமாக பல படங்களில் பேசியிருக்கிறீர்கள். அவையெல்லாம் உங்கள் கொள்கைகளாகவே மக்களிடம் இதுநாள்வரை சென்றடைந்திருக்கிறது. தற்போது அது தவறு, சினிமா வேறு, நிஜ வாழ்க்கை வேறு என்று சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? இந்த வார்த்தை ஜாலங்கள் தமிழக மக்களிடம் எடுபடாது.

கதையில் ரஜினியை ராவணனாகவும், வில்லனை ராமனாக சித்தரிக்கும் விதமாக காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. கதைக்கு வில்லனாக வருபவர்கள் காவி நிறத்தை அணிந்த இந்துக்கள் என்று சித்தரிக்கப்பட்டுள்ளது. தவறு நடக்கும் போது பல இடங்களில் பிள்ளையார் சிலை ஊர்வலம் தவறான குறியீடாக, மதவாத குறியீடாக காட்டப்படுகிறது. இது சரியா?

கிளைமாக்சில், வில்லன் ரஜினியை கொல்ல உத்தரவிடுகிறார். ‘ரஜினி ராவணனா? அவரை கொன்றுவிடுவீர்களா? என்று வில்லனை அவர் பேத்தி கேட்க, ‘வால்மீகி அப்படித்தானே எழுதி வைத்து இருக்கிறார்', என்று சொல்லிவிட்டு வில்லன் சிரிக்கிறார். இது சரியா?

ஒரு குறிப்பிட்ட கட்சியை அசிங்கப்படுத்தினால், எதிர்ப்பு அறிக்கைகள் வரும், பிறகு அதனை வைத்து படத்தை ஓட்டிவிடலாம்' என்ற வியாபார யுக்தி இந்தப் படத்தின் பின்னால் இருக்காது என்று நம்புவோம். எந்த மதத்தையும் ஏற்றுக்கொள்ளும் உரிமை எல்லோருக்கும் இருக்கிறது. அவரவருக்கு பிடித்த மதத்தை புகழ்ந்து பேசலாம். அது அவர்களது உரிமை. ஆனால், இந்துக்களின் நம்பிக்கையை தொடர்ந்து சிதைப்பது சரியான நடவடிக்கை அல்ல. இந்த நடவடிக்கைக்கு ரஜினியும் துணைபோனாரா? என்ற கேள்வி ஒவ்வொருவரின் மனத்திலும் இருப்பதை மறுக்கமுடியாது.

படத்தில், ‘எச். ஜாரா என்பவர் ‘சென்னை கிளீன் சிட்டி பற்றி ஒரு விளம்பர போர்டு வைத்திருப்பது போன்ற ஒரு காட்சி படத்தில் காட்டப்படுகிறது. எளிதில் உணர்ச்சிவசப்படும் ஒரு தமிழக தலைவரை வம்புக்கு இழுத்து, அவரை பேச வைத்து, அதன் மூலம் படத்தை உயரத்தில் பறக்கவிடலாம் என்று யாராவது நினைத்தால், அது அவர்களது சிறுபிள்ளைத்தனம். ரஜினிகாந்த் படத்திற்கு அப்படிப்பட்ட குறுக்குவழி வியாபார யுக்தி தேவையில்லை. இந்த யுக்தியை யாராவது புத்திசாலித்தனம் என்று நினைத்தால், அவர்களுக்கு ரஜினியின் மீது நம்பிக்கை குறைந்துவிட்டது என்றே நாம் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

ரஜினிகாந்த் அவர்களே, உங்கள் பெயரைச் சொன்னவுடன் கண்களை மூடிக்கொண்டு உங்கள் தடங்களை பின் தொடரும் உங்கள் பிள்ளைகள், இனி தடத்தை தட்டிப்பார்த்தே பயணிப்பார்கள். தங்கள் மீது ரசிகர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை இழந்துவிட்டார்கள் என்பதல்ல இதன் பொருள். தங்கள் தலைவனை யாரும் தவறாக பயன்படுத்திக் கொண்டுவிடக்கூடாது என்ற அக்கறையில் தட்டப்படும் தட்டுகளே அவை.

தமிழக தலைவர்கள் பலர் இந்துக்களை அசிங்கப்படுத்தியிருக்கிறார்கள். திரைப்படத் துறையச் சார்ந்த பலர் இந்துக்களின் மீதான வன்மத்தை திரைப்படங்களிலும் காட்டியிருக்கிறார்கள். ஆனால், ரஜினிகாந்த் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதில்லை. தன்னை இயக்குபவர்களையும் எல்லை மீற விட்டதில்லை. ஆனால், எல்லை மீறிவிட்டது போன்ற ஒரு தோற்றாம் ‘காலா' திரைப்படத்தின் மூலம் ஏற்பட்டுவிட்டது. இது வருத்தமான நிகழ்வு. இந்த நேரத்தில் ராமாயணத்தில் நடந்த ஒரு சம்பவத்தை பார்ப்போம். இது நம் எல்லோருக்கும் தெரிந்த கதைதான்.

ராமபிரான் ஒருமுறை குளிப்பதற்காக ஆற்றில் இறங்கினார். அதற்கு முன் தன்னுடைய அம்பை கரையில் ஊன்றிவைத்தார். குளித்து முடித்த பின், ஊன்றிய அம்பை கவனித்தார். அம்பு ஊன்றிய இடத்தில் ஒரு தவளை அம்பினால் குத்தப்பட்டு வழியும் இரத்தத்தோடு இருந்தது. அப்போது ராமபிரான் பேசினார்.

‘தவளையே! நான் அம்பை ஊன்றும் போது நீ கத்தியிருந்தால், உயிர் பிழைத்திருப்பாயே', என்றார்.

‘நான் எப்படி கத்துவேன் ராமா! என்னை யாராவது இம்சை செய்தால், ராமா . . . ராமா ...', என்று கத்துவேன். ராமனே என் மீது அம்பை ஊன்றும் போது யாரை உதவிக்கு கூப்பிடுவேன்?' என்றது தவளை.

அந்தத் தவளையின் நிலையில்தான் தமிழக மக்கள் இருக்கிறார்கள். குறிப்பாக இந்துக்கள். ரஜினிகாந்த அவர்களே! உங்களை நாங்கள் ராவணனாக என்றுமே பார்த்ததில்லை. அப்படி பார்க்கவும் விரும்பவில்லை. அம்பை விட கூராக வடிவமைகப்பட்ட காட்சிகளாலும், வசனங்களாலும் குத்துபட்டு நிற்கும் எம்மக்கள் சொல்வது, ‘ரஜினிகாந்த அவர்களே! நீங்களுமா இப்படி?'

- சாது ஸ்ரீராம்
saadhusriram@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com