எது உண்மையான பெண்கள் தினம்? கேளிக்கைகள் கொண்டாட்டங்கள் மட்டுமே என நினைக்கிறீர்களா? ஒரு நிமிடம் ப்ளீஸ்

பெண்களின் இன்றைய நிலை உண்மையில் என்னவென்று யாரேனும் யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா?
எது உண்மையான பெண்கள் தினம்? கேளிக்கைகள் கொண்டாட்டங்கள் மட்டுமே என நினைக்கிறீர்களா? ஒரு நிமிடம் ப்ளீஸ்

பெண்களின் இன்றைய நிலை உண்மையில் என்னவென்று யாரேனும் யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? பெண் சுதந்திரம் என்று பேசுபவர்கள் அந்த சுதந்திரம் என்பதன் உண்மை அர்த்தம் என்னவென சிந்தித்ததுண்டா? 

மகளிர் தினத்தை ஒரு கொண்டாட்டமான தினமாக மாற்றிவிட்டார்கள், உண்மையில் எதற்காக தொடங்கப்பட்டது என்பதை மறப்பது சரியல்ல என்கிறார்கள் சிலர். பெண்கள் தினக் கொண்டாட்டங்கள் சமீபமாக வணிக லாபத்துக்கான ஒரு தளமாகிவிட்டது, பெண்கள் சம்பந்தப்பட்ட பொருட்களுக்கான விளம்பரமும் விற்பனையும் செய்து சூழலில் லாபம் பார்க்கிறது ஒரு கூட்டம் என்கிறார்கள் இன்னும் சிலர். பெண்கள் இப்படித்தான் இருக்கவேண்டும், இந்த உடைகள் தான் அணிய வேண்டும். இந்த நேரத்துக்குள் வீடு திரும்பிவிட வேண்டும், இல்லையெனில் அவர்களின் பாதுகாப்புக்கு யாரும் பொறுப்பல்ல என்று உரத்த குரலில் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள் கலாச்சார காவலாளிகள் சிலர். 'ஒரு நாளை ஓட்டறதே பெரிய கஷ்டம், இதில் பெண்களுக்கான ஒரு நாளுன்னா எங்க பிரச்னை தீர்ந்திடுமா’ என்று வேதனையுடன் ஒலிக்கும் குரல்கள் ஒரு பக்கம்.

நன்றாகப் படித்து முடித்திருந்தாலும் குடும்பம் எனும் கூட்டில் அடைபட்டு, என் திறமைகளை வெளிக் கொண்டு வர முடியவில்லை, இதில் மகளிர் தினம் ரொம்ப முக்கியம் என்று புலம்பும் இல்லத்தரசிகள் பலர். இப்படி நாலா பக்கமும் பெண்கள் தினத்தை மறுப்பவர்கள் இருக்கவே செய்கிறார்கள். அந்தக் குற்றச்சாட்டுகள் ஒருபுறம் இருக்கட்டும். உண்மையில் மகளிர் தினம் என்று தனிப்பட்ட ஒரு தினம் தேவையா? அந்த ஒரு நாளில் ஏதேனும் நல்ல விஷயங்கள் நடக்கின்றனவா? உலகம் முழுவதும் உள்ள பெண்களின் விழிப்புணர்வு மேம்பட்டுள்ளதா? 

என்னைப் பொருத்தவரையில் மகளிர் தினத்தைப் பற்றி கலவையான ஒரு உணர்வு தான் எப்போதும் ஏற்படும். பத்திரிகையில் பணிபுரிந்து கொண்டிருந்த காலக்கட்டத்தில் மற்றவர்களுக்கு மார்ச் மாதம் வரவேண்டிய மகளிர் தினம் எங்களுக்கு மட்டும் பிப்ரவரி மாதமே வந்துவிடும். காரணம் வரவிருக்கும் இதழுக்கான முன் தயாரிப்பாக எல்லா வேலைகளையும் முன்பே முடித்துவிடுவோம். நாங்கள் தயாரிக்கும் அந்த மகளிர் ஸ்பெஷல் இதழில் வாசகியரின் கலந்துரையாடல் இருக்கும், அதன் பின் பெண் படைப்பாளிகளிடமிருந்து கவிதை, ஆவேசமான கட்டுரை, அல்லது சிறுகதை இருக்கும். தவிர வெற்றிப் பெற்ற பெண்களின் பேட்டிகள் குறைந்தது பத்தாவது அதில் இடம்பெறும்.

எல்லாவற்றுக்கும் உச்சமாக கடந்த வருடம் சாதனைப் பெண்களின் பட்டியலில் இருந்த அதே பத்து பேர் இருந்தால், இந்த வருடமும் தொடர்வார்கள். அதில் பெரிய மாற்றங்கள் இருக்காது அல்லது ‘ஊடக’ வெளிச்சத்திற்கு வந்திருக்காது. மீறி வந்தால் பத்து ஒரு பதினைந்தாக உயர்ந்திருக்கும் அவ்வளவே. எவ்வளவு பெரிய முன்னேற்றம் இது!!!. இவை எல்லாம் எங்கோ கடைக் கோடி கிராமத்திலிருக்கும் வளர் இளம் பெண்ணுக்கோ, நகரத்தில் வசித்து வேலைப் பார்க்கும் பெண்ணுக்கோ ஏதோ ஒரு வகையில் பயனுள்ளதாக இருக்கலாம். ஆனால் அந்தக் கட்டுரையைப் படித்தபின் சில நாட்களில் மறந்துவிடக் கூடியவை தானே? இவை என்ன தாக்கத்தை படிப்பவர் மனத்தில் ஏற்படுத்திவிட முடியும்? சுவாரஸ்யமாக சொல்வதினால் அந்தந்த பத்திரிகைகளின் விற்பனை வேண்டுமானால் அதிகரிக்கலாம். 

பெண்கள் பத்திரிகைகளின் வேலை என்ன? அவை திரும்பத் திரும்ப ஒரே ரீதியில் அதே பானை அதே கூழ் என்று வகைமைக்குள் சிக்கியவர்களாக மாறிவிட்டது வேதனையே. பக்கங்கள் அதிகம் கொடுப்பதல்ல வளர்ச்சி கூறும் விஷயங்களின் ஆழத்தில்தான் உள்ளது உண்மையான அக்கறை. மகளிர் தினத்தன்று நூறு வாசகிகளைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குப் பரிசு கொடுப்பதில் முடிந்துவிடுவதில்லை பெண்கள் பத்திரிகைகளின் பணி. பெண்களின் உண்மையான வளர்ச்சிக்குத் தேவையான காத்திரமான படைப்புக்கள், அவர்களை நேரடியாக வாழ்க்கையெனும் களப்பணியில் ஈடுபடுத்த தேவையான பயிற்சிகளைக் கற்றுக் கொடுக்கும் ஒரு கையேடாக ஒவ்வொரு பத்திரிகையும் மலர இனி வரும் காலங்களிலாவது கவனம் செலுத்த வேண்டும். 

பத்திரிகைகள் இப்படி என்றால் தொலைக்காட்சி சானல்களில் அவற்றின் நீட்சியாகத் தான் செயல்படுகிறது. உன்னைச் சொல்லிக் குற்றமில்லை என்னைச் சொல்லி குற்றமில்லை என்று புலம்பும்படியாகத் தான் சூழல் பெரும் சிக்கலில் உள்ளது. இதில் முரண் நகை என்னவென்றால் தாங்கள் செய்வது மகத்தான பணி என்று அவர்கள் நம்புவதுதான். எல்லா சேனல்களிலும் மகளிர் தின செய்தியை கேட்டு பொதுவெளியில் மைக்கை நீட்ட, பதில் சொல்ப்வர்களும் தங்களுக்குத் தெரிந்த தெரியாத, நம்பிய நம்பாத கருத்துக்களை அபத்தமாக பதிவு செய்வார்கள். இத்தகைய நிகழ்ச்சிகளைப் பார்த்து அலுத்தும் சலித்தும் போய்விட்டது. 

மகளிர் தினத்தென்று வேறு என்ன தான் செய்ய வேண்டும் என்று என்று கேட்கிறீர்களா? உண்மையில் அன்று ஒரு நாளாவது பெண்களின் நிலை குறித்து அவரவர் மனசாட்சியிடம் கேள்வி கேட்டு அதற்குப் பதில் தேடினால் போதும். மாற்றத்தின் முதல்படி தொடங்கிவிட்டது என்று அர்த்தம். அந்தக் கேள்விகள் இப்படியாகக் கூட இருக்கலாம். 

  • காலகாலமாக இருக்கும் பாலின பிரச்னைகள் ஓரளவுக்கேனும் தீர்க்கப்பட்டதா? 
  • நூறு சதவிகிதம் பெண் கல்வி எப்போது கிடைக்கும்? 
  • பல இடங்களில் பெண்களுக்கு பெண்களே எதிரி எனும் நிலை மாறிவிட்டதா?
  • பாதுகாப்பான ஒரு பயணம் பெண்களுக்கு முழுமையாக சாத்தியப்படுமா? 
  • விளம்பரங்களில் பெண்களை இழிவு படுத்துவதை தடுக்கமுடியுமா? 
  • பெண்களுக்கு எங்கும் எதிலும் சம வாய்ப்பு, சம உரிமை எனும் கனவு மெய்ப்படுமா? 
  • மகளிர் தினத்தை சாக்குக் காட்டி ஆதாயம் தேடும் போலி பெண்ணியவாதிகளை அடையாளம் தெரிகிறதா? 

இன்னும் நிறைய கேள்விகள் உள்ளன. அவை ஒரு அலையாக மாறி நம்மை மூழ்கடிக்கக் கூடிய அபாயம் உள்ளது எனவே இத்துடன் நிறுத்திக் கொள்ளலாம். 

நம் சமூகத்தில் இன்னமும் கூட ஆணாதிக்கத்தை வளர்த்தெடுப்பது ஆண்கள் மட்டுமல்ல, சில பெண்களும் தான். தன்னை விட ஆண் ஏதோ ஒரு வகையில் உயர்ந்தவன் என்று பெண்களின் மரபணுவில் பதியப்பட்டிருப்பதால் அவர்கள் அதை அப்படியே நம்பும் நிலை இன்னும் நீடிக்கிறது. போலி பெண்ணியவாதிகள் எவ்வளவு ஆபத்தானவர்களோ அதே போலத்தான் இந்தப் பெண்களும். இவர்களை முதலில் சரி செய்தால் தான் சம உரிமை, பெண்ணை உடலாக மட்டும் ஆண் பார்க்கும் தன்மையிலிருந்து விடுபடுதல் சாத்தியம். எப்போதும் ஒருவன் தன்னை உயர்ந்தவனாகவே நினைத்துக் கொண்டிருந்தால் அங்கு ஒடுக்குமுறைகள் அழிக்கப்படவே முடியாது. எனவே பெண்கள் தங்கள் மனத்திலிருந்து செயல்படும் நிலையிலிருந்து மாறி புத்தியிலிருந்து சிந்திக்கும் நிலை வர வேண்டும். சமூகம் ஆண் பெண் பாகுபாடற்ற சீரான சமூகமாக மறுமலர்ச்சி அடையும் வரையிலேனும் அவர்கள் தங்களை அப்படியே தக்க வைத்துக் கொள்ள வேண்டும். 

மகளிர் தினங்கள் ஏன் கொண்டாடப்பட வேண்டும் என்று பெண்களுக்கு முதலில் தெளிவு ஏற்பட வேண்டும். பெண்களைப் பற்றி மட்டுமே கவன ஈர்ப்பு செய்வதை விட்டுவிட்டு ஆண்கள் சிறுவர்கள் பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும். சமீபத்தில் ஆறு வயது சிறுவன் ஒருவனை கல்லால் அடித்துக் கொன்ற ஆறாம் வகுப்பு மாணவனைப் பற்றி செய்தித் தாள்களில் படித்திருப்போம். அந்தச் சிறுவனை சிறுவர் சீர் திருத்தப் பள்ளியில் சேர்த்து விட்டாலும், அவனுடைய பெற்றோர்களுக்கு முக்கியமாக அவன் தாய்க்கு தீராத பழி ஏற்பட்டுவிட்டது நிதர்சனம். ‘புள்ளையை வளர்த்தாளா… இல்லை கொலைகாரனை வளர்த்தாளா…’ என்று சமூகம் விரல் சுட்டி கேள்வி கேட்கும். பெண்ணியவாதிகள் பத்திரிகையாளர்கள், மீடியாக்கள் முதலில் இது போன்ற தாய்மார்களை தேடிப் பிடித்து அவர்களிடம் பேச முன் வர வேண்டும். அவர்களின் வலியை முதலில் பதிவு செய்ய வேண்டும். ‘நான் சரியாகத் தான் வளர்த்தேன், ஆனால் எங்கே தவறு நிகழ்ந்தது என்று தெரியவில்லை’ என்று சொல்பவர்களிடம் இங்கே தான் என்று அவர்களின் வளர்ப்பு முறையில் எங்கே பிரச்னை என்று கண்டு பிடித்து சொல்லவேண்டும்.

இதற்கு மனநல ஆலோகர்களின் உதவியும் நிச்சயம் தேவை. காரணம் சமீப காலமாக சிறுவர் குற்றங்கள் அதிகம் பெருகி வருகின்றன. அதற்கான காரணம் என்ன என்பதை தீவிரமாக ஆராய வேண்டும். எங்கே தவறு நிகழ்கிறதோ அந்த இடத்தில் தான் அது சீரமைக்கப்பட வேண்டும். ஒரு சானலின் அறையில் நான்கைந்து அறிவு ஜீவிகளின் தொடர் பேச்சுக்கள் அந்தந்த சானல்களின் டி ஆர் பி கணக்குகளில் ஏற்றங்களை விளைவிக்குமே தவிர சமூக மாற்றத்திற்கான தீர்வு அதில் கிடைக்க வாய்ப்பில்லை.

மார்ச் 8, 2018 இன்றைய பெண்கள் தினத்தன்று ஒரு பெண்ணின் (செய்திகளில் வந்துள்ள) பிரேதப் பரிசோதனை நடந்து கொண்டிருக்கிறது நம் மனத்தை வருத்தவில்லையெனில் நாமென்ன பெண்கள்? கர்ப்பிணிப் பெண்ணான உஷா செய்த தவறென்ன? இதுதான் இன்றளவும் சராசரிப் பெண்களின் அவல நிலை. இது ஆயிரம் ஆயிரமாண்டுகளாக தொடர்ந்து வரும் நிலை. இதை எப்படி மாற்றுவது? யார் மாற்ற முடியும்? பெண்களுக்கு எதிரே நடக்கும் குற்றங்களுக்கான தண்டனையை தீவிரப்படுத்துவதுதான் அதற்கான வழி. அச்சம் இருப்பவர்கள் குற்றம் செய்ய ஒரு நிமிடமேனும் தயங்குவார்கள். அந்த ஒரு நிமிடத்தைப் பயன்படுத்தி ஒரு பெண்ணால் தப்பிவிட முடியுமெனில் தண்டனைகள் ஏன் இன்னும் இழுபறி நிலையில் உள்ளன. பாலியல் குற்றங்களுக்கு எதிராக வழக்குகளைப் பதிவு செய்யவே ஒரு பெண் அச்சப்படுகிற சமூக சூழலில் பெண்களின் பாதுகாப்பு குறித்து பட்டிமன்றங்களில்தான் தீர்வுகள் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. யதார்த்தம் தேய்ந்த செறுப்பாகி அறுந்துக் கிடக்கின்றது.

இந்த ஊர் இப்படித்தான், இந்த உலகம் இப்படித்தான் என்று அடுத்தவர் மீது பழி சுமத்துவதை விட்டுவிட்டு, பெண்களாகிய நாம் அதிக பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டிய காலகட்டம் வந்துவிட்டது. வீட்டில் மட்டுமல்லாது நாம் வாழும் சமூகத்திற்காகவும் சிறிதேனும் நம்மால் இயன்ற பங்களிப்பை செய்ய வேண்டும். பெண்களில் ஒரு சாரார் நல்ல படிப்பு, பதவி என்று முன்னேறிவிட்டவர்கள். அவர்களின் பிரச்னை முற்றிலும் வேறு. அது ஆதிக்கம் சார்ந்தது. அந்த போராட்டத்தில் அவர்கள் சக மனுஷிகளை மறந்துவிடுகிறார்கள். அல்லது நினைக்க நேரமில்லை. நினைத்தாலும் நம்மால் என்ன செய்ய முடியும் என்று ஒதுங்கிப் போய்விடுவார்கள். அவரவர் பிரச்னை நம்மால் என்ன செய்யமுடியும் பரிதாபப்படுவதைத் தவிர என்று புறம்தள்ளி பார்ட்டிகளுக்கும், தங்களுடைய சுயத் தேவைகளுக்காகவும் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். நான் என்னுடைய சுய முன்னேற்றம் என்னுடைய வெற்றிகள் என்ற சிறிய வட்டத்திலிருந்து சற்று விலகி வந்து நம்மைச் சுற்றியும் ஒரு உலகம் உள்ளது என்பதை முதலில் உணர வேண்டும். அதன் அமைதியைக் குலைக்கும் செயல் சிறியதாக இருந்தாலும் அதில் முதலில் நாம் ஈடுபடக் கூடாது, அதன் பின் நம் குழந்தைகளையும் சூழல் குறித்த விழிப்புணர்வுடன் வளர்க்க வேண்டும்.

'எந்தக் குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே அது நல்லவனாவது தீயவனாவதும் அன்னையின் வளர்ப்பினிலே ’ என்ற வைர வரிகள் எல்லா காலத்துக்கும் பொருந்தும். குழந்தை வளர்ப்பில் அதிக கவனத்துடன் செயல்பட்டு, நல்லவனவற்றை குழந்தைகளின் இளம்மனத்தில் பதித்துவிட வேண்டும். பாடம் படித்து மனப்பாடம் செய்து மார்க்குகள் அள்ளிக் குவிக்கும் இயந்திரமாக அவர்களை வளர்க்காமல் நன்னெறிகளை அறிந்தவர்களாய் நல்லவர்களாய் வளர்த்தெடுக்கவேண்டியது நம் கடமை. அடுத்தவருடைய உணர்வுக்கு மதிப்பு தர வேண்டும், அடுத்த உயிரின் வலியை உணர வேண்டும் என்ற அடிப்படை விஷயங்கள் தெரிந்திருந்தால் ஆத்திரத்தில் கூட இன்னொரு சிறுவனின் தலையில் கல்லைப் போட்டிருக்க மாட்டான் அவன். எனவே ஒரு புதிய சமூகத்தை உருவாக்கும் மிகப் பெரிய பொறுப்பு பெண்களாகிய நம்மிடம், நம்மிடம் மட்டுமே உள்ளது. நாம் அதைத்தான் செய்து கொண்டு இருக்கிறோம். என்றாலும், இன்னும் மிகச் சரியாக செய்ய வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் ஒரு காந்தியும் ஒரு கலாமும் தோன்றினால் உலகம் பூந்தோட்டமாகவே மாறிவிடுமல்லவா? அத்தகைய பூந்தோட்டத்தில் மகளிர் தினத்தை கொண்டாடுவது எவ்வளவு சிறப்பாக இருக்கும்!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com