90 களில் மாத நாவல்கள் மற்றும் தொடர்கதைகளின் முடிசூடா ராஜாவாகத் திகழ்ந்த பாலகுமாரன் நினைவுகள்!

அவரது பெரும்பாலான நாவல்களை வாசித்திருந்த போதும் இன்றும் நினைவில் நிற்பவை ஒரு சில மட்டுமே... அவற்றுள் என் கண்மணி தாமரை, அகல்யா, மெர்க்குரிப் பூக்கள், பொய் மான், வெற்றிலைக் கொடி, மஞ்சக்காணி
90 களில் மாத நாவல்கள் மற்றும் தொடர்கதைகளின் முடிசூடா ராஜாவாகத் திகழ்ந்த பாலகுமாரன் நினைவுகள்!

பாலகுமாரன் அல்ல சிலருக்கு அவர் என்றென்றும் ப்ரியமாக பாலா...

150 நாவல்கள், 100 சிறுகதைகள், 14 திரைப்படங்களுக்கு திரைக்கதை, வசனம். பிரபல தமிழ் வாரப் பத்திரிகைகளின் தொடர் எழுத்தாளர் என்று பன்முக அவதாரத்துக்குச் சொந்தக்காரரான எழுத்தாளர் பாலகுமாரன் இன்று நம்மோடு இல்லை. அவரது இழப்பு அவரது குடும்பத்தினருக்கு மட்டுமல்ல லட்சோபலட்சம் பாலகுமாரன் விசிறிகளுக்கும் தான்.

இணைய விவாதங்களிலும், நேரடி விவாதங்களிலும் பாலகுமாரனுக்காக உருகும் இவர்களுக்கு பாலாவைத் தவிர வேறு உன்னதமான எழுத்தாளர்கள் எப்போதும் கண்ணில் பட மாட்டார்கள். அந்த அளவுக்கு பாலகுமாரன் நாவல்களின் தாக்கம் அவர்களுக்குள் இருந்தது. காரணம் பாலகுமாரன் தனது நாவல்களில் பெரும்பாலும் விரித்து எழுதியது சாமானியர்களின் வாழ்நாள் அபிலாஷகள் குறித்தும் அவற்றின் நல்வினை, தீவினைகள் குறித்துமே என்பதால் வாசகர்களால் அவரது படைப்புகளுடன் இயல்பாக ஒன்றிப் பயணிக்க முடிந்தது. இது தான் பாலகுமாரன் நாவல்களின் மிகப்பெரும் வசதி. வாசிக்கும் எவரையும் தமது வாழ்வோடு ஒப்பிட்டுப்பார்த்துக் கொள்ளத் தக்க வகையிலான கதைகள் அவருடையவை. அதுவே பாலகுமாரன் நாவல்களின் வெற்றி.

முன்பெல்லாம் பணி நிமித்தம் ஆண்டுக்கணக்கில் வளைகுடா நாடுகளுக்குச் செல்பவர்கள் எதை எடுத்துச் செல்கிறார்களோ இல்லையோ மறக்காமல் பாலகுமாரன் நாவல்களை வாங்கிப் பத்திரப்படுத்திக் கொண்டு செல்வது வழக்கம். பாலா சொன்னால் அது சரியாகத்தான் இருக்கும். நான் என் வாழ்வின் அனுபவங்களை முறையாக அணுகக் கற்றுக் கொண்டது பாலகுமாரனை வாசித்த பிறகு தான். பாலைவன சுடுமணலில், குடும்பத்தின் அருகாமையற்ற கொடுங்கனவு போன்ற நாட்களை நகர்த்திச் செல்ல எனக்கு உறுதுணையாக இருந்தவை பாலாவின் நாவல்களே! என்று கூறுவதை வழக்கமாகக் கொண்ட பல நண்பர்களை நானறிவேன்.

80 களில் பிறந்த எனக்கு பள்ளியிறுதி நாட்களில் தான் பாலகுமாரன் அறிமுகமானார். அவரது நாவல்களில் முதல்முறையாக தூர்தர்ஷனில் தொடராகக் காண நேர்ந்தது ‘இரும்புக் குதிரைகள்’. அப்போது அது பெரிதாக மனதில் பதியவில்லை. இரும்புக் குதிரைகள் ஈர்க்க மறந்த கவனத்தை அவரது தாயுமானவன் கதை ஈர்த்துக் கொண்டது. வாகை சந்திர சேகர் நாயகனாக நடித்த அந்தத் தொடர் பாலகுமாரனின் கதை என்பதை பிறகெப்போதோ தான் அறிய நேர்ந்தேன். 

தொடர் நாடகங்களாகவும், திரைப்படங்களாகவும் மனதில் பதியத் தவறிய பாலா... பள்ளிக்கும், கல்லூரிக்குமான இடைவெளிகளில் நாவல் வடிவில் ஆகர்ஷித்துக் கொண்டார். அது ஒரு கனாக்காலம் என்று சொல்வதற்கேற்ப அப்போது விடுமுறை நாட்களை மொத்தமாக குத்தகைக்கு எடுத்துக் கொண்டு புத்தககங்கள் வாயிலாக ஆக்ரமித்த எழுத்தாளர்களில் சுஜாதா, ராஜேஷ்குமார், பாலகுமாரனுக்கு மிக முக்கியமான இடமுண்டு. இவர்களில் முதல் இருவரைக் காட்டிலும் பாலா நாவலை விடாது வாசித்த நண்பர்கள் பலர் அப்போது எனக்கு இருந்ததால் நாங்கள் அனைவரும் புத்தகங்களைப் பகிர்ந்து கொண்டு வாசித்தோம். அப்போது தான் பாலகுமாரன் எங்களுக்கு பாலாவானார்.

அவரது பெரும்பாலான நாவல்களை வாசித்திருந்த போதும் இன்றும் நினைவில் நிற்பவை ஒரு சில மட்டுமே... அவற்றுள் என் கண்மணி தாமரை, அகல்யா, மெர்க்குரிப் பூக்கள், பொய் மான், வெற்றிலைக் கொடி, மஞ்சக் காணி, ரகசிய சினேகிதியே, செப்பு பட்டயம், சரிகை வேட்டி, திருமணமான என் தோழிக்கு, அப்பம் வடை தயிர்சாதம், உடையார் போன்ற நாவல்கள் குறிப்பிடத் தக்கவை.

அகல்யாவில் பள்ளித் தாளாளராக வரும் பெண்மணி புடவை உடுத்தும் ஸ்டைல் பற்றி வெகு அழகாக ஸ்லாகித்திருப்பார் பாலகுமாரன். எட்டு ஃப்ளீட்ஸ் வைத்து பாந்தமாக சேலை கட்டும் அகல்யாவைக் கண்டு அவளது பள்ளிக்கு ஆசிரியையாகப் பணிபுரிய வரும் இளம்பெண் அதே போல புடவை உடுத்த தானும் ஆசைப்படுவாள். நாவலின் இறுதியில் அகல்யாவுக்கு நல்ல முடிவு இல்லை. ஆனால் இந்த நாவல் மனதில் எப்படியோ தேங்கிப் போனதற்கான காரணம் கதை அப்போது பல்கிப் பெருகத் தொடங்கியிருந்த மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் பூர்வோத்ரமத்தைப் பற்றி அக்கு வேறு ஆணிவேராக அலசிக் காயப்போடுவதைப் போல படைக்கப் பட்டிருந்ததில் இன்றளவும் இந்தக் கதை மனதில் நிற்கிறது.

என் கண்மணி தாமரை அபிராமி பட்டரின் வாழ்க்கை கதை. வாசித்த அளவில் பாலகுமாரனின் படைப்பாற்றலின் மீது மிகுந்த மரியாதையை ஏற்படுத்திய நாவல்களில் இதற்கு முதலிடம் தரலாம்.

பொய்மான் நாவல் கொங்கு மண்டலத் தொழிலதிபர் ஒருவர் தன்னிடம் பகிர்ந்த சொந்தக் கதையொன்றை தான் நாவலாக்கியதாக அதன் முன்னுரையில் பாலகுமரானே பகிர்ந்திருந்தார்.

அப்பம், வடை, தயிர் சாதம், உடையார் இரண்டும் வாசிக்கும் போது ஈர்த்தனவே தவிர அந்த நாவல்களில் பிற பாலகுமாரன் நாவல்களைப் போல தங்கு தடையின்றி ஆழ்ந்து போக முடியாத அளவுக்கு அதிலிருந்து ஏதோ ஒன்று தடுத்தது. 

மெர்க்குரிப் பூக்களைப் பற்றித் தனியாகச் சொல்ல ஏதுமில்லை. பாலகுமாரன் வாசகர்கள் அனைவருக்கும் சட்டென நினைவில் வரும் நாவல்களில் இதுவொன்று.

இவை தவிர பாலகுமாரனின் திரைப்பங்களிப்பு பற்றியெல்லாம் கல்லூரிக் காலத்தில் எனக்குப் பெரிதாக ஏதும் தெரிந்ததில்லை.

நாயகன், குணா, பாட்ஷா, காதலன், ஜென்டில் மேன், உல்லாசம், ஜீன்ஸ், முகவரி, சிட்டிஸன், மன்மதன், வல்லவன், புதுபேட்டை உள்ளிட்ட சுமார் 14 திரைப்படங்களுக்கு திரைக்கதை மற்றும் வசனகர்த்தாவாகப் பணிபுரியும் வாய்ப்பும் பெற்றிருந்தவர் பாலகுமாரன்.

அனைத்துக்கும் உச்சமாக 1988 ல் வெளிவந்த கே.பாக்யராஜின் ‘இது நம்ம ஆளு’ திரைப்படத்தின் இயக்குனராகப் பணிபுரிந்து அந்தத் திரைப்படத்தை தனது வசனங்கள் மூலமாக வெற்றிப்படமாக ஆக்கிய பெருமையும் பாலகுமாரனுக்கு உண்டு.

தமிழ் படைப்புலகில் சூப்பர் ஸ்டார்களாக ஜொலித்த எழுத்தாளர்களில் பாலகுமாரனுக்கு முக்கியமான இடமுண்டு. குக்கிராமத்தில் இருப்பவர்களுக்கு கூட பாலகுமாரன் நாவல்களென்றால் நிச்சயம் பரிச்சயமிருக்கும். கடந்த சில மாதங்களாக உடல்நலம் குன்றியிருந்த போதும்கூட இரண்டாம் உலகப்போர் காரணமாக இந்தியாவில் குறிப்பாக சென்னையில் நிகழ்ந்த பதற்றங்களை ‘வெள்ளைத்துறைமுகம்’ எனும் நாவலாக்கும் முயற்சியில் இருந்தார். சுமார் 500 பக்கங்கள் எழுதி முடித்த நிலையில் உடல்நிலை ஒத்துழைத்தவரையிலும் அதற்கான முனைப்புகளில் தொடர்ந்து ஈடுபட்டே வந்திருக்கிறார். அந்த முயற்சி முழுமை பெற்று நாவல் வெளிவந்த பிறகு காலன் அவரை அழைத்திருக்கலாம். அது ஒன்று மட்டுமே பாலகுமாரனைப் பொருத்தவரை நிறைவேறாத கடமையாக இருந்திருக்கக் கூடும். மற்றபடி ஒரு எழுத்தாளராகவும், குடும்பத்தலைவராகவும், அவர் தனது வாழ்வில் ஈட்டியது அனைவராலும் அத்தனை எளிதில் தொட்டு விட முடியாத உயரங்களையே!

தமிழில் நாவல் மற்றும் தொடர்கதை உலகில் பாலகுமாரன் சாதித்தது மிக அதிகம். வாரம் தோறும் அவரது கதைகள் பிரசுரமாகாத வார இதழ்கள் இல்லை எனுமளவுக்கு சிலகாலம் தமிழர்கள் பாலகுமாரன் பித்துப் பிடித்துப் போய்க் கிடந்தார்கள். அந்த அளவுக்கு சுஜாதாவைவை அடுத்து இளைஞர்களை அதிகம் ஆகர்ஷித்துக் கொண்ட எழுத்தாளர் என்றால் அது பாலகுமாரனே எனலாம்.

பெண் வாசகர்கள் அடுத்தடுத்து இலக்கியத் தரமாகவும் அதே சமயம் ஜனரஞ்சகமாகவும் எழுதக்கூடியவர்களான பெண் எழுத்தாளர்கள் சிவசங்கரி, இந்துமதி, அனுராதாரமணன், ரமணி சந்திரன் முதல் தீவிர இலக்கியப் படைப்பாளியான அம்பை வரை தங்களது ரசனையின் எல்லைகளை விரிவடையச் செய்துகொண்டு வாசிப்பின் எல்லையை மடைமாற்றம் செய்து கொள்ள ஆப்சன்கள் நிறைய இருந்த காலகட்டதில் ஆண் வாசகர்களுக்கு சுஜாதாவை அடுத்து தங்களது மனம் ஒப்பிக் கொள்ளும் அளவில் மரியாதைகுரிய படைப்பாளியாகக் கொண்டாடக் கிடைத்தது பாலகுமாரன் மட்டுமே.

அவரது சமகாலத்திலேயே அறிமுகமாகியிருந்தாலும் ஜெயமோகன் தமிழ் வாசகர்களுக்கு பரவலாக அறிமுகமானது  ‘நான் கடவுள்’ திரைப்படத்துக்குப் பிறகு தான்.  ஒருகாலத்தில் சாருநிவேதிதா, ஜெயமோகன் இலக்கியச் சண்டைகள் தெருக்குழாய்ச் சண்டையை விடக் கேவலமாக  இணையத்தில் நாறியது பலருக்கும் தெரிந்திருக்கக் கூடும். வழக்கம் போல அந்தச் சண்டைகளில் சாரு மட்டுமே கல்லெறிந்து கொண்டிருப்பார். ஜெமோ வாழைப்பழ ஊசியாக எதையேனும் சொல்லி விட்டு நல்ல பிள்ளையாக மெளனம் காப்பார். இந்தச் சண்டைகள் காரணமாக அவர்களது படைப்புகளைப் பற்றி பேசுவதைக் காட்டிலும் அவர்களது இலக்கியச் சண்டைகளை வேடிக்கைப் பார்க்கக் கூடும் கூட்டமே அதிகமிருந்தது ஒருகாலத்தில்.

இதனால் எல்லாமும் கூட பாலகுமாரனின் மவுசு முன்னைப் போலவே எந்தக் குறையும் இன்றி மேலும் சில காலம் மங்காமல் இருந்தது என்றும் சொல்லலாம்.

பாலகுமாரனை இன்றும் கூட வணிக எழுத்தாளர் மட்டுமே என்று கூறி இலக்கிய அங்கீகாரம் அளிக்காமல் புறம் தள்ளிப் பேசக்கூடியவர்கள் இருக்கலாம். அவர்களுக்குச் சொல்லிக் கொள்வது சுஜாதாவைப் போல மாத நாவல்கள் மற்றும் தொடர் கதைகளின் முடிசூடா ராஜாவாகத் திகழ்ந்தவரான பாலகுமாரனின் எழுத்துக்கு இப்போதும் புத்தகச் சந்தைகளில் பெரும் வரவேற்பு உண்டு. அவரது உடையார் விற்பனையில் சாதனை படைத்த நாவல் தொகுப்புகளில் ஒன்று என்பதை மறுக்க முடியாது.

ஒரு எழுத்தாளரை இலக்கியமல்லாது அவரது ஜனரஞ்சகப் படைப்புகளின் வெற்றிகளைக் கொண்டு  மட்டுமே அளக்க முடிந்தால் பாலகுமாரன் எப்போதும் சுஜாதாவைப் போலவே வணிக எழுத்தின் மகாராஜாவே! என்பதை யாராலும் மறுக்க முடியாது.

அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com