அன்று முதல் இன்று வரை சமூகத்தில் பெண்கள் சம உரிமையுடன் வாழ்கிறார்களா?

இன்றைய சமூதாயத்தில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் விளங்குகின்றனர். அரசாங்கம் மற்றும் தனியார் அலுவலகங்களிலும் பெண்கள் பலர் பணியாற்றுகின்றனர்.
அன்று முதல் இன்று வரை சமூகத்தில் பெண்கள் சம உரிமையுடன் வாழ்கிறார்களா?


இன்றைய சமூதாயத்தில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் விளங்குகின்றனர். அரசாங்கம் மற்றும் தனியார் அலுவலகங்களிலும் பெண்கள் பலர் பணியாற்றுகின்றனர். பல நிறுவனங்களில் உயர் பதவி வகிக்கின்றனர். லாரி, பஸ் ஆட்டோ, ரயில்  போன்றவைகள் மட்டுமல்லாமல் ஆகாய விமானங்களையும் ஓட்டுகின்றனர். காவல் துறையிலும், ராணுவத்திலும் சிறப்பாகப் பணியாற்றுவதைக் கண்டு பெருமை அடைகிறோம். ஆண்களுக்கு சமமாக  அனைத்துத் துறைகளிலும்  பணிபுரிந்து வருவதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறோம்.

பண்டைய நாளிலும் அரசர்களுக்கு  இணையாக  தேவியர்களும் அமர்ந்து தானங்களை அளித்ததாகச் செப்பேடுகளும், கல்வெட்டுகளும்  எடுத்துக் கூறுகின்றன. ஆண்களைப் போன்று பெண்களும் அதிகாரிகளாக பணியாற்றியுள்ளனர் என்பதைக் கல்வெட்டுகளினால் அறிய முடிகிறது. அரசர்களைப் போல அரசிகளும் திருக்கோயில்களை எடுப்பித்து தானங்களை அளித்துள்ளனர். திருக்கோயில் பணிகளை மேற்கொள்ளவும், திருமுறைகளை ஓதுவதற்கும் பெண்கள் நியமிக்கப்பட்டனர் என்பதை கல்வெட்டுகளினால் அறியமுடிகிறது. 

சென்னைக்கு அருகாமையில் செங்கற்பட்டிலிருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் சாலையில் 3.கி.மீ. தொலைவில்   வல்லம் என்ற ஊரில்  உள்ள  சிறிய குன்றில்  பல்லவர் கால குடைவரைக் கோயில்கள் மூன்று  உள்ளன.  இதில் வசந்தீசுவரம் எனப்படும் குடைவரைக் கோயில் பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் காலத்தில்  மகள் லக்கசோமாதிரியார்  (தேவ குலம்) இதனை எடுப்பித்தாள் என்று இங்கு காணும்  கல்வெட்டினால்  அறிய முடிந்தது. இக்கோயில் 'தேவகுலம்' என அழைக்கப்படுகிறது. மற்றொரு கோயில் திருமாலுக்காக  எடுக்கப்பட்டதாகும்.  இக்கோயிலில் காணப்படும் கல்வெட்டில் பல்லவ  பேரரசர் மகள்  'கொம்மை தேவகுலம்'  எனக் குறிப்பிடப்படுகிறது.

இரண்டு கோயில்களும் பல்லவர் காலத்தில் இரண்டு பெண்களால்   தோற்றுவிக்கப்பட்டதை  அறிகிறோம்.

காஞ்சிபுரத்தில் அழகிய  சிற்பங்கள் அடங்கிய  கைலாசநாதர்  கோயில் உள்ளது. இதனை பல்லவ மன்னன்  ராஜசிம்மன்  என்பவன்  தோற்றுவித்தான். இம்மன்னனுடைய அரசி ரங்க பதாகை என்பவள்  அழகின் சிகரம் போன்றவள். கொடி போன்றவள். ராஜசிம்மன்  தோற்றுவித்த  கைலாசநாதர் கோயில் முன்பாக  சிறு ஆலயம் கட்டினாள்.

'நிர்மாபிதம் இதம் தர்ம தயா  சந்திர சிகாமனே
பதாகயேவ  நாரீணாம் ரம்யம்  ரங்க பதாகயா'
எனக் கல்வெட்டு  குறிப்பிடுகிறது.'

இரண்டாம்  விக்ரமாதித்தன் என்ற சாளுக்கிய மன்னன் காஞ்சிபுரத்தின் மீது படையெடுத்தபோது இக்கோயிலின் அழகினைக் கண்டு வியந்து கர்நாடக மாநிலத்தில் பட்டடக்கல் என்ற இடத்தில் இதே போன்று  கோயில் எடுப்பித்தான். அக்கோயில் லோகமகாதேவீச்சுரம் எனப்பட்டது. இன்று விருபாஷர்  கோயில் என அழைக்கப்படுகிறது. இருமாநில  கலை, பண்பாட்டு ஒற்றுமைக்கு சிறந்த  எடுத்துக்காட்டாக  விளங்குகிறது.

சோழர் காலம் கோயிற் கலையின் பொற்காலம்  எனக்குறிப்பிடலாம். இக்காலத்தில்  முத்தரையர்கள்,  இருக்கு வேளிர்,  பழுவேட்டரையர்  போன்ற குறுநில மன்னர்கள்  பல திருக்கோயில்களைக் கட்டியுள்ளனர்.  அரசிகளும் கோயில்களைக் கட்டியுள்ளனர்.  திருச்சிக்கு  அருகே உள்ள திருச்செந்துறை திருக்கோயிலை  'பூதி ஆதிச்ச பிடாரி'  என்ற  பெண் எடுப்பித்தாள் என்பதை அறிய முடிகிறது. 

சோழ மாமன்னன் ராஜராஜ சோழனுடைய (அக்காள்) தமக்கை குந்தவை பிராட்டியார்.  ராஜராஜசோழன்  தன்னுடைய  தமக்கை  மீது அளவற்ற  அன்பும் பாசமும் மதிப்பும் வைத்திருந்த காரணத்தால்  தன் மகளுக்கும்  குந்தவை எனப் பெயரிட்டு மகிழ்ந்தான் அவள் பல திருக்கோயில்களுக்குத் தானம் வழங்கினாலும், திண்டிவனம் அருகே உள்ள  தாதாபுரத்தில்  சிவன், பெருமாள், சமணக் கோயில்களை  எடுப்பித்தாள்.  தனது  தந்தையின் பெயரால்  "சுந்தர சோழ   விண்ணகர்  ஆதுலர் சாலை'  என்ற   மருத்துவமனை எடுத்துள்ளதை ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது.  இதே  போன்று  சோழ பேரரசி செம்பியன் மாதேவியாரும்  முக்கிய இடம்  பெற்று விளங்குகிறார். 

ராஜராஜசோழன்  தஞ்சை  பெரிய கோயிலில்  பணிகளை மேற்கொள்ள,  ஆடல் மகளிர் 400 பேரை  'தளிச்சேரி பெண்டுகளாக'  நியமித்தார்  என்பதை  அறிய முடிகிறது.

சோழர்  காலத்தில் பெண்கள் சம உரிமை பெற்றிருந்ததோடு  அதிகாரிகளாக பணியாற்றியிருக்கிறார்கள் என்பதை அறிய முடிகிறது. அவர்களும் கோயில்களுக்கு தானம் அளிக்கும்  உரிமை பெற்று விளங்கியிருக்கின்றனர். ராஜராஜசோழனின் தேவியான லோகமகாதேவி இட்ட  ஆணையை  எருதன் குஞ்சரமல்லி  என்ற  "அதிகாரிச்சி'  நிறைவேற்றியுள்ளார் என   திருவையாறு கோயில்  கல்வெட்டு குறிப்பிடுகிறது.  

முதலாம் ராஜேந்திர  சோழனின்  மைந்தனான  ராஜாதிராஜன்  காலத்தில் சோமயன் அமித்திரவல்லி என்ற அதிகாரிச்சியும்,  இரண்டாம்  ராஜேந்திரனின் தேவி திரைலோக்கியமுடையாளுக்கு முத்தான  பொன் நங்கை என்ற அதிகாரிச்சியும் பணியில்  இருந்ததை அறிய முடிகிறது.   சோழ அரசில் அதிகாரிகளின் மனைவியர்களும் தானம்  அளித்துள்ளனர் என்று திருமழப்பாடி  கோயில்  கல்வெட்டு  குறிப்பிடுகிறது.

முதலாம் குலோத்துங்க சோழனின்  தேவியாரின் அதிகாரிச்சி பற்றி திருப்புகலூர் கோயில்  கல்வெட்டு  குறிப்பிடுகிறது. எனவே,  சோழர்  காலத்தில் பெண்கள் அதிகாரிச்சிகளாக  பணியாற்றியுள்ளனர்  என்பதை அறியும் பொழுது  அக்கால நிர்வாக  வரலாற்றின்  சிறப்பை உணர முடிகிறது.

திருச்சி அருகே உள்ள குமார வயலூர் அக்னீசுவரசுவாமி கோயிலில் காணப்படும் பராந்தக சோழன் காலக் கல்வெட்டில் அக்கோயிலில் திருப்பதிகங்கள் (தேவாரத் திருமுறைகள்) ஓதுவதற்கு மூன்று பெண்கள் நியமிக்கப்பட்டனர் எனக் குறிப்பிடுகிறது. பொதுவாக திருக்கோயில்களில் ஆண்கள்தான் திருமுறைகள் ஓதுவதற்கு  நியமிக்கப்படுவார்கள். இக்கோயிலில் பெண்கள்  திருமுறைகளை ஓதுவதற்கு  நியமிக்கப்பட்ட  செய்தி  மிகவும்  சிறப்பானது.

விஜய நகர,  நாயக்க  மன்னர்கள் காலத்திலும்  பெண்களுக்கு முக்கிய இடம் அளித்திருப்பதை  அக்கால  சிற்பங்களில்  காணலாம்.  அரசனோடு, அரசியும் உடன் இருப்பதை  சிற்பங்களில் காணலாம்.

மதுரை  நாயக்க  மன்னர்களும்,  சேதுபதி மன்னர்களும்  மதுரை மீனாட்சி அம்மன், இராமநாதபுரம் ராஜராஜேஸ்வரி அம்மன் பிரதிநிதியாக  ஆட்சி செய்து வந்தனர் என்பதை  மதுரைக் கோயில் ஓவியங்கள்,  திருவிழாக்கள், சேதுபதி மன்னர் அரண்மனையில்  காணப்படும்  ஓவியங்களின் மூலம் அறிகிறோம்.

பெண்களுக்கு சிறப்பான இடத்தை அளித்திருக்கிறார்கள் என்பதை கல்வெட்டுகள், சிற்பங்கள், ஓவியங்கள் வாயிலாக அறிந்து மகிழ்ச்சி அடைகிறோம்.

- கி.ஸ்ரீதரன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com