வந்தபிறகு கலங்குவதை விட வருமுன் காப்போம்

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழைக்கு கேரளம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் மழை, வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர் காரணமாக 1,400 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 70 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வந்தபிறகு கலங்குவதை விட வருமுன் காப்போம்


இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழைக்கு கேரளம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் மழை, வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர் காரணமாக 1,400 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 70 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ள பாதிப்புகளில் நாட்டில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது கேரள மாநிலம்தான். அங்கு வௌளம், நிலச்சரிவுக்கு 400க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். தவிர 14 லட்சம் பேர் வீடு, உடைமைகளை இழந்து முகாம்களில் தவிக்கின்றனர்.

கேரளம் தவிர, உத்தரப்பிரதேசம், மேற்குவங்கம், கர்நாடகம்,  அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களும் மழை, வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளன. உத்தரப்பிரதேசத்தில் 204 பேரும், மேற்கு வங்கத்தில் 195 பேரும், கர்நாடகாவில் 161 பேரும் அஸ்ஸாமில் 46 பேரும் உயிரிழந்துள்ளனர்.

தேசிய பேரிடர் நிர்வாக ஆணையம் எடுத்துள்ள ஒரு கணக்கெடுப்பின்படி மழை, வெள்ளத்துக்கு ஆண்டுதோறும் சராசரியாக 1,600 பேர் உயிரிழப்பதாகவும், ரூ.5,000 கோடிக்கு வீடுகள், வாகனங்கள் சேதமடைவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2017ம் ஆண்டில் வெள்ளம், நிலச்சரிவுக்கு 1,200 பேர் பலியாகியுள்ளனர்.

பிகாரில் அதிகபட்சமாக 54 பேரும் மேற்கு வங்கத்தில் 261 பேரும், அஸ்ஸாமில் 160 பேரும், மகாராஷ்டிராவில் 124 பேரும், உத்தரப்பிரதேசத்தில் 120 பேரும் உயிரிழந்துள்ளனர். 2016ம் ஆண்டு வெள்ள பாதிப்பின்போது பெரிய வித்தியாசமில்லை. நாடு முழுவதும் மொத்தம் 936 பேரும், பிகாரில் 254, மத்தியப்பிரதேசத்தில் 184, மகாராஷ்டிரத்தில் 145, உத்தரகண்டில் 102 பேரும் உயிரிழந்துள்ளனர்.

உலக அளவில் பார்த்தால் வெள்ளத்தில் உயிரிழப்புகள் ஏற்படும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 5வது இடத்தில் உள்ளது. மழை, வெள்ளத்தால் நாட்டின் 12% நிலப்பரப்புகள் நீரில் மூழ்கிவிடுகின்றன. பருவநிலை மாற்றம் காரணமாக இனி வரும் காலங்களில் மழையின் அடர்த்தியும், மழை பெய்யும் காலங்களும் அதிகரிக்கக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். எனவே, வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை நாம் சரிவர மேற்கொள்ளாவிட்டால் எதிர்காலத்தில் நிலைமை மோசமடைவதையும் தடுக்க முடியாது.

பருவ மழையின் சீற்றம் ஒருபுறம் இருந்தாலும் மறுபுறம் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்காமல் இருப்பது, நதிகளின் கரையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள், ஆறுகளை சரிவர தூர்வாராதது, அணைகளை சரிவர பராமரிக்காமல் இருப்பது உள்ளிட்ட காரணங்களால் வெள்ள பாதிப்பை நம்மால் தடுக்க இயலவில்லை.

மேலும் மழை, வெள்ளம் வந்தால்தான் நாம் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் கவனம் செலுத்துகிறோம். வருமுன் காப்போம் குறித்து நாம் சிந்திப்பதில்லை. பருவமழை குறித்தும், வெள்ள அபாயம் குறித்தும் எச்சரிக்கை விடுக்கப்படும் போதே நாம் தடுப்பு நடவடிக்கை தொடர்பான திட்டங்களுடன் ஆயத்தமாக இருக்க வேண்டும். வெள்ள பாதிப்பு ஏற்படும் இடங்கள் எவை என்பது குறித்து முன்கூட்டியே கண்டறிந்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

ஆறுகள், நதிகள் ஆகியவற்றை குறித்த நேரத்தில் தூர்வாரியும், கரைகளை பலப்படுத்தியும் ஆக்கிரமிப்புகளை அகற்றியும் நாம் தயார் நிலையில் இருக்க வேண்டும். இல்லையெனில் மழை, வெள்ளத்தால் உயிர்களுக்கும், உடைமைகளுக்கும் பெரும் சேதம் ஏற்படுவதை நாம் தடுக்க முடியாது. கால்வாய்களை ஆழப்படுத்துவது, தடுப்பணை மற்றும் கதவணைகளை கட்டுவதும் வெள்ள பாதிப்பை தடுக்கும்.

நாட்டில் பருவமழை காரணமாக வெள்ளம் வருவதும் பேரிடர் இழப்புகள் ஏற்படுவதும் வழக்கமான ஒன்றுதான். ஆனால் சமீபகாலமாக நாட்டில் மழையின் அளவும், மழை பெய்யும் காலங்களும் அதிகரித்து வருகின்றன.

கடந்த 5 ஆண்டுகளில் உத்தரகண்ட், ஜம்மு - காஷ்மீர், தமிழ்நாடு, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டன. இப்போது கேரளத்தில் மழை தனது சீற்றத்தை காண்பித்துள்ளது.

முன்பெல்லாம் மழை பெய்தால் ஆறுகள், நதிகளின் கரையோரங்களில் பூமி மழை நீரை இழுத்துக்கொள்ளும். இதன் மூலம் நிலத்தடி நீரும் பெருகும். ஆனால் இப்பாது எல்லா இடங்களிலும் குடிசைகள், கான்கிரீட் கட்டடங்கள் என மாறிவிட்டன. இதனால் தண்ணீர் போக வழியில்லாமல் அந்த இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.

வெள்ளம் வந்த பிறகுதான் நாம் மீட்புப் பணிகளில் கவனம் செலுத்துகிறோம். அதற்காக கோடி கணக்கில் செலவிடுகிறோம். அவ்வாறு இல்லாமல்  தேசிய, மாநில மற்றும் மாவட்ட அளவில் தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டால் பெருமளவில் உயிர்ச்சேதத்தையும், பொருள் சேதத்தையும் நாம் தடுக்க முடியும்.

- ரா.வெ. சுப்பிரமணியன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com