மதபோதகரின் பேச்சுக்கு இந்துக்களின் பதிலடி ஒற்றுமை மட்டுமே: உணர்வுகளை இழக்காதீர்கள்!

அடுத்த மதத்தை இழிவுபடுத்தும் செயலில் இறங்கும் நம்மைச் சுற்றி வளர்ந்து நிற்கும் விஷச் செடிகளை அடையாளம் கண்டுகொள்ளுங்கள், விழித்துக் கொள்ளுங்கள்.
மதபோதகரின் பேச்சுக்கு இந்துக்களின் பதிலடி ஒற்றுமை மட்டுமே: உணர்வுகளை இழக்காதீர்கள்!

மதம் பிடித்த யானைக்கும், மதம் பிடித்த மனிதனுக்கும் என்ன வித்தியாசம்? ஒரே வித்தியாசம் தான். மதம் பிடித்த யானை எதிரில் தென்படுபவனையெல்லாம் துவம்சம் செய்யும். மதம் பிடித்த மனிதன் மாற்று மத நம்பிக்கைகளையும், மாற்று மதத்தையும் துவம்சம் செய்வான். கிண்டல் செய்வான். கேலி செய்வான். 

அடுத்தவர்களை வெறுப்பேற்றி, உசுப்பேற்றி சமுதாயத்தின் சமத்துவத்தை நாசம் செய்வான். பாதிப்பு மிக அதிகம். பல தலைமுறைக்கும் இந்த வெறுப்பு தொடரும். மதம் யானைக்கு மட்டும் பிடிக்கட்டும். மனிதனுக்கு வேண்டாம்.

நேற்றைய தினம் சமூக வலைத்தளங்களில் கிருஸ்தவ மத போதகர் பாஸ்டர் மோகன் சி. லாசரஸ் பேசும் ஒரு விடியோ உலவியது. மதபோதகர் என்பவர் ஒரு மதத்தின் பிரதிநிதி. இவர் பேசும் பேச்சுக்கள் அவர் சார்ந்த மதத்தின் ஒட்டுமொத்த கருத்து. ஆனால் அவர் துர்நாற்றம் வீசும் சாக்கடையை உறிஞ்சி அடுத்தவன் மீது உமிழும் செயலுக்கு ஒப்பான பேச்சுக்களை பேசிக் கொண்டிருந்தார். இதை சாதாரண மனிதன் பேசியிருந்தால் அது வெறுப்பு பேச்சு. அதையே ஒரு மதபோதகர் பேசினால் அது விஷ உமிழ்வு. அப்படி என்ன பேசிவிட்டார்?

'இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் தமிழ்நாட்டில் இருப்பது மாதிரி சாத்தானுடைய அரங்கு கிடையாது', என்று தொடங்குகிறது அவர் பேச்சு. அவர் சொல்லும் சாத்தானின் அரங்கு தமிழகத்தில் இருக்கும் இந்துக் கோவில்கள். எங்கள் கடவுள் சாத்தானா? என்ன பிதற்றல் இது?

அடுத்ததாக, ‘ஏன் தமிழ்நாட்டை குறிவைத்து சாத்தான் ஸ்டாக் பண்ணியிருக்கிறான்?' என்று கேள்வி எழுப்புகிறார். கும்பகோணம் மிகவும் மோசமாம். கிரஹிக்க முடியாத அளவுக்கு சாத்தான் அங்கே அத்தனை கோவில், அத்தனை இடங்களில் வேறூன்றி இருக்கிறானாம்.

அடுத்ததாக இவர் காஞ்சீபுரம் சென்றாராம். அங்குள்ள சங்கர மடத்திற்குள்ளே செல்வதற்கு ஆண்டவன் பலம் கொடுத்தாராம். அங்கே இரண்டு பேர் இருந்தார்களாம். அவர்கள் பூஜை பண்ணி, யாகம் பண்ணிக்கொண்டிருந்தார்களாம். “வேஷ்டி, பட்டுப் புடவையை எரிச்சு யாகம் பண்ணறாங்க. யாகம் பண்ணி அவர் காலில விழுந்து வணங்கறாங்க. ரூட் என்னன்னு பார்த்த மனுஷ வணக்கம்தான். அவங்க வெளியே சொல்லறதுதான் கோபுரம், சக்தியெல்லாம். ஆனா எல்லாம் அவரைத்தான் சாஷ்டாங்கமா விழுந்து கும்பிடறாங்க', என்று பேச்சு தொடர்கிறது.

இவையெல்லாம் என்ன பேச்சு? பதிலுக்கு இந்துக்கள் இவர் மீதும், இவர் சார்ந்த மதத்தின் மீதும், சர்ச்கள் மீதும் சேற்றை வாரி இறைத்தால் என்னாகும்? இப்படிப் பேசினால் மததுவேஷம் வளரும் என்று தெரியாதா? தெரியும்! தெரிந்தும் அப்படி பேசுகிறார் என்றால் அவருக்கு இந்த தைரியத்தை கொடுத்தது யார்?

தொடர்ந்து படிக்கும் முன் ஒரு குட்டிக்கதையை படிப்போம்.

ஒரு அரசன். ஆட்சியில் நேர்மையும், போர் என்று வந்துவிட்டால் கடுமையாக போராடுவதும், வெற்றி பெறுவதும் அவனது வழக்கம். அவன் பெயரைக் கேட்டாலே எதிரிகள் நடுங்குவார்கள். மக்கள் அவனுடைய ராஜ்ஜியத்தில் வாழ்வதையே பெருமையாக நினைத்தார்கள். அரண்மனையில் ஒரு மருத்துவர் இருந்தார். அவரிடம் ஒரு அபூர்வ சக்தி மிகுந்த வேர் ஒன்று இருந்தது. ஒவ்வொரு முறை அரசனின் உடலில் காயம்படும் போதும் அது அரசனுடைய காயங்களை வேகமாக குணப்படுத்தியது. காயத்தினால் ஏற்படும் வலியோ, தழும்போ இல்லாத அளவுக்கு அது குணப்படுத்தும் ஆற்றல் மிக்கது. இதனால் அரசனின் வெற்றிக்கும், நல்வாழ்க்கைக்கும் முக்கியமானவராக அரண்மனை வைத்தியர் பார்க்கப்பட்டார்.

ஒரு நாள் அந்த நாட்டிற்கு ஒரு சாது வந்தார். மக்கள் அவரை தரிசித்தனர். அரசனும் ஆசிபெற்றான்.

‘அரசே! உங்கள் பெருமைகளை கேள்விப்பட்டிருக்கிறேன். உங்களுக்கு ஒரு வரம் கொடுக்க ஆசைப்படுகிறேன். இன்று மாலை என்னை சந்தியுங்கள் நீங்கள் கேட்கும் வரத்தை தருகிறேன்', என்றார் சாது.

விடைபெற்று திரும்பினான் அரசன். சாதுவிடம் என்ன வரம் கேட்பது என்று யோசிக்கத் தொடங்கினான். இதுபோன்ற தருணங்களில் அரசனுக்கு உதவ ஒரு ஆலோசகர் இருந்தார். அவர் பேசினார்.

‘அரசே! அரசன் என்பவன் எப்போதும் அடுத்தவருக்கு உதவும் உயரத்தில் மட்டுமே இருக்க வேண்டும். யாரிடமும் உதவியை கேட்டுப்பெறும் தாழ்ந்த நிலையில் இருக்கக்கூடாது. ஒவ்வொரு முறை நீங்கள் காயப்படும் போதும் அரண்மனை வைத்தியனை நம்பி காலத்தை கழிக்க வேண்டியிருக்கிறது. உங்களின் தகுதிக்கு இது இழுக்கு. ஆகையால், இனி வைத்தியனின் உதவியை எதிர்பார்க்காத வகையில் ஒரு வரத்தை கேட்டுப் பெறுங்கள்', என்றார் ஆலோசகர்.

‘என்ன வரம் கேட்பது! அதையும் நீங்களே சொல்லுங்கள்', என்றார் அரசர்.

‘அரசே! போரில் ஏற்படும் காயத்தால் வலி ஏற்படுகிறது. அதனால் வைத்தியனை அணுக வேண்டியிருக்கிறது. ஆகையால், எத்தகைய காயம் ஏற்பட்டாலும் அது உங்களுக்கு வலியை தராதபடி வரத்தை கேட்டுப் பெறுங்கள்', என்று யோசனை சொன்னார் ஆலோசகர்.

மகிழ்ச்சியடைந்தான் அரசன். சாதுவை சந்தித்தான். ‘வலியே இல்லாத நிலையை', வரமாக கேட்டான் அரசன். சாதுவும் வரத்தை கொடுத்துவிட்டு புனித யாத்திரைக்கு புறப்பட்டார்.

ஒரு மாதம் சென்றது. யாத்திரையை முடித்துவிட்டு அரசனை பார்க்க வந்தார் சாது. அரசன் உடல் நிலை சரியில்லாமல் படுத்த படுக்கையாக இருந்தான்.

‘அரசே! நலமா?' என்று விசாரித்தார் சாது.

‘சாதுவே! என் உடலில் வலி, மயக்கம் ஆகிய எதுவும் இல்லை. ஆனால், என் உடல் இளைத்துக் கொண்டே செல்கிறது. நடக்க முடியவில்லை. இது ஏன்?' என்று கேட்டார் அரசர்.

படுத்திருந்த அரசனை புரட்டி அவரின் முதுகைப் பார்த்தார் சாது. முதுகு முழுவதும் கத்தியால் குத்திய காயம் இருந்தது.

‘அரசே! உன் முதுகில் இவ்வளவு கத்திக்குத்து இருந்தும் அவற்றை உன்னால் உணர முடியவில்லை. காரணம் நீ கேட்டுப் பெற்ற வலியில்லா வரம். வலியில்லாததால் முதுகில் குத்தியவர்களைப் பற்றி நீ கவலைப்படவும் இல்லை. உன்னைச் சுற்றி பல எதிரிகள் இருந்தாலும் அவர்களைப் பற்றி நீ இப்பொழுதெல்லாம் கவலைப்படுவதில்லை. அப்படிப்பட்ட எதிரிகளில் முதன்மை எதிரி யார் தெரியுமா? ‘வலியில்லா வரத்தை கேட்டுப் பெறச் சொன்ன அந்த அலோசகர்தான். அவர் உன் மீது அக்கறையுள்ளவராக இருந்திருந்தால் வைத்தியனிடம் இருப்பது போன்ற ‘மூலிகை வேரை' வரமாக கேட்டுப் பெற்றிருக்க முடியும். ஆனால் அவர் அப்படிப்பட்ட ஆலோசனையை வழங்கவில்லை. அப்படிப்பட்ட ஆலோசனையை வழங்கியிருந்தால் அவர் உன் மீது அக்கறையுள்ளவர், நல்ல சிந்தனையுள்ளவர் என்று அர்த்தம். அப்படியில்லாமல், அவரின் ஆலோசனையினால், உன் வலியையும், உணர்வுகளையும் மறக்கடிக்கச் செய்துவிட்டார். அதன் விளைவு உன்னுடைய தனித்தன்மையை இழந்து இன்று வெற்று மனிதனாக நிற்கிறாய். வலியில்லாத வாழ்க்கை சிறந்ததல்ல. அது உணர்வில்லாத வாழ்க்கை. மீண்டும் உனக்கு வலியை கொடுக்கிறேன். அது உன்னுடைய உணர்வுகளை தட்டி எழுப்பும். யாராவது உன்னை சீண்டினால் அதைக்கூட புரிந்துகொள்ள முடியாத வாழ்க்கை பிணத்துக்குச் சமமானது. விழித்துக்கொள், பிழைத்துக்கொள்', என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் சாது.

அரசன் வலியை உணர்ந்தான், உடன் இருந்து கெடுத்த துரோகிகளையும் உணர்ந்தான். வலி அரசனுக்கு வலிமையை கொடுக்கட்டும். நாம் தொடர்ந்து படிப்போம்.

அரசனுக்கு ஏற்பட்ட உணர்வற்ற நிலை இந்து மதத்திற்கும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலை தமிழகத்தில் மட்டுமே இருக்கிறது. நாத்திகம், பகுத்தறிவு என்ற போர்வையில் இந்து மத நம்பிக்கைகளையும், கோட்பாடுகளையும் நாசம் செய்துவிட்டனர் ஒரு தரப்பினர். இத்தனை காலமாக ஜாதீய வெறுப்புகளை முன்னிலைப்படுத்தி, இந்து மதத்திற்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிட்டனர். இத்தகைய நாத்திக சிந்தனையாளர்களின் கருத்துக்கள் எல்லாம் இதுநாள்வரை இந்துக்களுக்கு எதிராக மட்டுமே இருந்திருக்கிறது. கிட்டத்தட்ட பாஸ்டர் மோகன் சி. லாசரஸுடைய சிந்தனையைப் போலத்தான்.

பெரும்பான்மையினருக்கு எதிராக வெறுப்பான கருத்துக்களை பதியும் ஒருவர் தடுமாற்றமோ, பயமோ, நடுக்கமோ இல்லாமல் இவ்வளவு தைரியமாக பேசுகிறார் என்றால் ஜனநாயகமும், பேச்சுரிமையும் ஒரு தரப்பிற்கு மட்டுமே சொந்தமாக இருப்பது புரிகிறது. இத்தகைய வெறுப்பு பேச்சு குற்றம். இப்படி பேசினால் சட்டத்தினால் தண்டிக்கப்படலாம் என்பது அவருக்கு தெரியாதா? தெரியும்! ஒன்று மட்டும் புரிகிறது. அவருக்கு பெரும்பான்மையினரின் உணர்வுகளைப் பற்றி கவலையில்லை. அடுத்த மத உணர்வுகளைப் பற்றி கவலையில்லை, அடுத்தவர்களின் நம்பிக்கைகளின் மீது கவலையில்லை, சட்டத்தைப் பற்றியும் கவலையில்லை. இது கிட்டத்தட்ட தமிழகத்தின் மீது கட்டவிழித்துவிடப்படும் வன்முறைக்குச் சமம். எப்படி பேசினாலும் இந்துக்களில் சிலர் நம்மை ஆதரிப்பார்கள் என்ற தைரியம்.

நீங்கள் எந்த அரசியல் கட்சியைச் சார்ந்தவராக வேண்டுமானாலும் இருங்கள். எந்த மதத்தினராக வேண்டுமானாலும் இருங்கள், ஒரு மத போதகர் அடுத்த மத கடவுள்களை ‘சாத்தான்' என்று பேசுவதும், இந்துக் கோவில்களை ‘சாத்தான் கூடம்' என்று வர்ணிப்பதும் தவறு. இந்துக்களே விழித்துக் கொள்ளுங்கள். இந்தத் தருணத்தில் காந்திய வழியில், நமது எதிர்ப்பை பதிவு செய்வது அவசியம். வன்முறை தேவையில்லை. இப்படி பேசும் ஒரு மத போதகரின் மீது தாமாக வழக்கை நீதிமன்றம் பதிவு செய்யும் என்று நம்புவோம்.

இன்றுவரை அண்டைவீட்டு மாற்று மதத்தவர்களுடன் யாரும் மத ரீதியான மோதல் போக்கை கடை பிடிப்பதில்லை. இது போன்ற மதபோதகர்களின் விஷமப் பேச்சு வெறுப்பு விதைகளை நம்மிடையே விதைக்கிறது. ஒரு அரசியல்வாதியோ, சாதாரண மதவாதத்தில் ஆர்வமுள்ள ஒருவரோ அடுத்த மதத்தை இழிவுபடுத்துவதை பார்க்கிறோம், ஆனால், ஒரு மதபோதகர் இப்படி பேசலாமா? இந்துக்களின் ஒற்றுமை மட்டுமே இத்தகைய வெறுப்பு பேச்சுகளுக்கு பதிலாக அமைய வேண்டும். நீங்கள் எந்தக் கட்சிக்கு வேண்டுமானாலும் ஓட்டுப் போடுங்கள். யாரை வேண்டுமானாலும் ஆதரியுங்கள். ஆனால், மதத்தை விட்டுக்கொடுக்காதீர்கள். தான் சார்ந்த மதத்தின் அருமை பெருமைகளை மக்களிடம் கொண்டு சேர்க்காமல் அடுத்த மதத்தை இழிவுபடுத்தும் செயலில் இறங்கும் நம்மைச் சுற்றி வளர்ந்து நிற்கும் விஷச் செடிகளை அடையாளம் கண்டுகொள்ளுங்கள், விழித்துக் கொள்ளுங்கள்.

- சாது ஸ்ரீராம் (saadhusriram@gmail.com)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com