மிஷன் சக்தி ரகசியமாக வைக்கப்பட வேண்டியது அல்ல; அது இந்தியாவின் சாதனை!

“விண்வெளித்துறையில் மிகப்பெரிய சாதனையை இந்தியா நிகழ்த்தியுள்ளது. நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக செயல்படும் செயற்கைக்கோளை தாக்கி அழிக்கும் “மிஷன் சக்தி”யை வெற்றிகரமாக இந்தியா செய்துள்ளது' என்று
மிஷன் சக்தி ரகசியமாக வைக்கப்பட வேண்டியது அல்ல; அது இந்தியாவின் சாதனை!

‘பிரதமர் ஒரு முக்கியமான விஷயத்தை நம்மிடைய பகிர்ந்துகொள்ளப் போகிறார்' என்ற செய்தி கடந்த மார்ச் 27ம் தேதி உலகம் முழுவதையும் சூடாக்கியது. ‘அதுவாக இருக்குமோ? இதுவாக இருக்குமோ?' என்று ஒவ்வொருவரும் தங்களை பரபரப்பில் தள்ளிக்கொண்டனர். கடைசியில் பிரதமரின் பேச்சு ‘விண்வெளிக்கலத்தை ஏவுகணையால் சுட்டு வீழ்த்தும் சோதனை தொடர்பானது' என்ற செய்தி பலரின் பதற்றத்தை ஒரு பெரிய பெருமூச்சோடு முடிவுக்கு கொண்டுவந்தது.

“விண்வெளித்துறையில் மிகப்பெரிய சாதனையை இந்தியா நிகழ்த்தியுள்ளது. நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக செயல்படும் செயற்கைக்கோளை தாக்கி அழிக்கும் “மிஷன் சக்தி”யை வெற்றிகரமாக இந்தியா செய்துள்ளது’’ என்று பிரதமர் பேசினார்.

இந்த சோதனை தொடர்பான சில கூடுதல் விவரங்களை தெரிந்துகொள்வது அவசியம்.

பாதுகாப்பு ஆய்வு மற்றும் வளர்ச்சி நிறுவனம் (டிஆர்டிஓ) இந்த தொழில் நுட்ப மிஷனை நடத்தியது. குறிப்பிட்ட இலக்கை சரியாக தாக்கி அழித்தது ஏவுகணை.
 

‘லோ எர்த் ஆர்பிட் சேட்டிலைட்’ எனப்படும் தாழ்வான உயரத்தில் பறக்கும் செயற்கைக்கோள் இந்த சோதனைக்கு பயன்படுத்தப்பட்டது.

முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இந்த சாதனையை விஞ்ஞானிகள் செய்துள்ளார்கள்.

அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்தபடியாக செயற்கைகோளை சுட்டு வீழ்த்தும் தொழில்நுட்பத்தை அடைந்த நான்காவது நாடு இந்தியா என்ற பெருமையை பெற்றது.

ஆயுத போட்டியில் நுழையும் நோக்கம் இந்தியாவிடம் இல்லை என்றாலும் விண்வெளியை அமைதி நோக்கத்திற்கு பயன்படுத்த இத்தகைய சோதனை அவசியம் என்பதை உலகுக்கு உணர்த்தியது.

இந்த நிலையில், பிரதமரின் பேச்சு எதிர்க்கட்சிகளிடம் புயலைக் கிளப்பியது. ‘தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது எப்படி பிரதமர் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிடலாம்?' என்று எதிர்க்கட்சிகள் எதிர்குரல் எழுப்பின. இதைத் தொடர்ந்து பிரதமர் பேச்சில் தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் இருக்கிறதா? என்பதை தேர்தல் ஆணையம் ஆராய்ந்தது. முடிவில், விதிமுறை மீறல் ஏதுமில்லை’ என்று சொல்லி பிரச்னையை முடித்து வைத்தது. ஆனால், எதிர்க்கட்சிகள் இந்த விஷயத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. பிரதமரின் பேச்சை கண்டித்து அறிக்கைகளை வெளியிட்டன.

‘டிஆர்டிஓ அமைப்புக்கு வாழ்த்துகள். பிரதமர் மோடிக்கு உலக நாடக தின வாழ்த்துகள்’ என்று நக்கலாக ஒரு கருத்தை வெளியிட்டார் ராகுல் காந்தி. சமீபகாலமாக அவர் பிரதமரை தரம்தாழ்ந்த வகையில் விமர்சனம் செய்து வருகிறார். இது நாகரீக அரசியலுக்கு ஏற்றதல்ல.

‘மோடி விண்வெளி ஆய்வு மையத்தில் பணியாற்றுகிறாரா? இல்லை, விண்வெளிக்கு போகப் போகிறாரா? எதற்காக தேர்தல் விதிகளை மீறி ‘மிஷன் சக்தி’ பற்றி அவர் உரை நிகழ்த்தினார்’ என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பினார்.

‘இன்று நரேந்திர மோடி டிவியில் தோன்றி, தேசம் சந்தித்துள்ள முக்கிய பிரச்னை’களை திசை திருப்ப முயன்றுள்ளார். நாட்டில் நிலவும் வேலை வாய்ப்பின்மை, கிராமப்புற பிரச்னைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து பிரதமர் மோடி பேச மறுக்கிறார்’ என்று உத்திரப் பிரதேச சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கருத்து வெளியிட்டுள்ளார்.

‘மிஷன் சக்தி திட்டத்தை 2012ம் ஆண்டிலேயே காங்கிரஸ் அரசு தயாரித்துவிட்டது. ஆகையால் மிஷன் சக்தி புதிதல்ல. பிற நாடுகளுக்கு இடையே தேவையில்லாமல் குழப்பம் ஏற்படாதிருக்க 2012ல் சோதனை செய்யவில்லை. இதைச் செய்ததற்காக விஞ்ஞானிகளுக்குத்தான் பாராட்டு தெரிவிக்க வேண்டும். ஆனால் மோடி தன்னுடைய அரசின் திட்டத்தைப் போல முன்னிறுத்துகிறார். மிஷன் சக்தி திட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல. இது போன்ற சோதனைகள் அடிக்கடி நடப்பது உண்டு. எனவே இதற்கு தேவையில்லாத முன்னுரிமை அளிக்க வேண்டியதில்லை. காங்கிரஸ் திட்டத்திற்கு மோடி சொந்தம் கொண்டாடுகிறார்’ என்று மக்களவை காங்கிரஸ் குழுத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

இவர்களின் கருத்துகளையெல்லாம் விழுங்கி ஏப்பம்விடும் அளவிற்கு அமைந்தது ப. சிதம்பரம் அவர்களின் கருத்து. அதையும் பார்ப்போம்.

‘விண்வெளிக் கலத்தை ஏவுகணையால் சுட்டு வீழ்த்தும் ஆற்றல் பல ஆண்டுகளாக நம்மிடம் இருக்கிறது. புத்திசாலி அரசுகள் இந்த ரகசியத்தை காப்பாற்றினார்கள். பாஜக அரசு இந்த ரகசியத்தை வெளியிட்டது துரோகம். தேர்தல் நேரத்தில் இந்த ரகசியத்தை வெளியிட வேண்டிய அவசியம் என்ன? தோல்வி பயமே காரணம்’ என்று ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

அதிபுத்திசாலிகளின் பேச்சு எப்போதுமே இப்படித்தான் இருக்கும். தன்னுடைய கருத்துகளை நியாயத்தைப்போல பேசுவார்கள். ஆனால், அதில் நியாயம் இருக்காது. அடுத்தவரின் கருத்துக்கள் நியாயமில்லாதவை போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவார்கள். ஆனால், அதில் நியாயம் மறைக்கப்பட்டிருக்கும்.

தொடர்ந்து படிக்கும் முன், ஒரு குட்டிக்கதையை படிப்போம்.

ஒரு சாது. யாத்திரைக்கு புறப்பட்டார். தனது இரண்டு சீடர்களை அழைத்தார்.

‘சீடர்களே! எனக்காக இவ்வளவு காலம் உழைத்தீர்கள். அதனால், உங்கள் இருவருக்கும் ஆளுக்கொரு ஒரு வரம் தருகிறேன். ஆனால் ஒரு நிபந்தனை. நீங்கள் எதை வரமாக கேட்டுப் பெறுகிறீர்களோ, அவை முப்பது நாட்கள் மட்டுமே உங்களுடன் இருக்கும். அதற்கு மேல் மறைந்துபோகும்’ என்றார் சாது. இருவரும் யோசித்தனர்.

‘குருவே! இந்த அறை முழுவதையும் தங்கக்கட்டிகளால் நிரப்பி, அதை எனக்கு வரமாக கொடுங்கள்’ என்று கேட்டான் முதல் சீடன்.

‘குருவே! என்னுடைய அறை முழுவதிலும் தாவரங்களின் விதைகளை நிரப்பி அதை வரமாக கொடுங்கள்’ என்று கேட்டான் இரண்டாவது சீடன்.

இருவருக்கும் வரத்தை கொடுத்துவிட்டு யாத்திரைக்கு புறப்பட்டார் சாது.

முதல் சீடன் தன்னிடமுள்ள தங்கக் கட்டிகளை இரண்டு பாகங்களாக பிரித்தான். ஒரு பாகத்தை அந்த நாட்டு அரண்மனை கஜானாவில் கொண்டு சேர்த்தான். அதற்கு நிகராக வைரங்களையும், தங்கங்களையும் அரசிடமிருந்து பெற்றான். இன்னொரு பாகத்தை உருக்கி, அதை கஜானாவிலிருந்து பெற்ற தங்கத்தோடு கலந்து, மக்களிடம் விற்றுவிட்டான். அதோடு நிற்காமல், சாது சொன்னது போல தங்கக்கட்டிகள் மறைந்து போகிறதா என்பதை தெரிந்துகொள்ள, மீதமிருந்த ஒரே ஒரு தங்கக்கட்டியை தனது அறையில் பத்திரப்படுத்தினான்.

இரண்டாவது சீடன், விதைகளை மலைகளிலும், காடுகளிலும், நகர்ப்புறங்களிலும் தூவினான். அவனும் ஒரு பிடி விதையை தனது அறையில் பத்திரப்படுத்தினான்.

முப்பது நாட்களுக்கு பிறகு சாது யாத்திரையை முடித்துக்கொண்டு திரும்பினார். சீடர்களின் அறையை திறந்து பார்த்தார். அறைகள் காலியாக இருந்தது. சாது சொன்னதைப் போலவே வைக்கப்பட்ட ஒரு தங்கக்கட்டியும், ஒரு பிடி விதையும் மறைந்துபோனது. சாது பேசினார்.

‘முதல் சீடனே! நீ ஒரு ஏமாற்றுக்காரன்’ என்று கோபத்தோடு கத்தினார் சாது.

‘குருவே! இரண்டாவது சீடன் தான் வரமாக பெற்றதை உருமாற்றம் செய்தான். நானும் வரமாகப் பெற்றதை உருமாற்றம் செய்தேன். ஆனால், என்னை மட்டும் ஏமாற்றுக்காரன் என்று சொல்கிறீர்களே! இது என்ன நியாயம்?’ என்று கேட்டான் முதல் சீடன்.

‘நீ பெற்ற தங்கத்தை அரசிடமும், மக்களிடமும் திறமையாக விற்றுவிட்டாய். நீ விற்ற தங்கம் தற்போது மறைந்துவிட்டது. அதை வாங்கிய மக்களும், அரசும் ஏமாற்றப்பட்டுவிட்டார்கள். அவர்கள் உன் மீது குற்றம் சுமத்தமுடியாது. ஏனென்றால் நீ விற்கும்போது அது நியாயமான விற்பனை. அந்த இழப்பை நீதான் ஏற்படுத்தினாய் என்பது யாருக்கும் தெரியாது. என்னால் உண்மையை வெளியில் சொல்ல முடியாது. சொன்னால் வரம் கொடுத்த எனக்கும் குற்றத்தில் பங்கிருக்கிறது என்று சொல்வார்கள். அதனால் நானும் அமைதியாக செல்கிறேன். உன்னுடைய மூளை ஒரே நேரத்தில் அரசு, மக்கள் மற்றும் வரம் கொடுத்த என்னையும் ஏமாற்றிவிட்டது’.

‘இரண்டாம் சீடனே! நீ விதைத்தது முப்பது நாட்களில் செடியாக வளர்ந்துவிட்டது. ஆகையால் செடிகளுக்கு பாதிப்பில்லை. மீதமிருந்த விதைகள் மட்டுமே மறைந்துபோனது’.

‘முதலாவது சீடனின் தந்திரம், அடுத்த பல தலைமுறைகளுக்கு அவன் குடும்பத்திற்கு சொத்தாக மாறிவிட்டது. ஆனால், இரண்டாவது சீடனின் தந்திரம், அடுத்த பல தலைமுறைகளுக்கு உலகத்திற்கு நன்மையை கொடுத்துள்ளது. முதலாவது சீடன் அவன் குடும்பத்தை வளர்த்தான். இரண்டாவது சீடன் நாட்டிற்கு வளத்தை வளர்த்தான். இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், முதலாவது சீடனின் ஏமாற்று வித்தையை வெளியே சொல்லமுடியாமல் போனதால், இரண்டாவது சீடன் செய்த நன்மையையும் வெளியே சொல்ல முடியாமல் போய்விட்டது. இதுவும் முதலாவது சீடனின் குதர்க்க புத்திக்கு கிடைத்த வெற்றி. குதர்க்க புத்திசாலி உயர்பதவிக்கு வந்தால், அவன் செய்த தவறு மட்டுமல்ல, மற்றவர்கள் செய்த நன்மையையும் அவன் விழுங்கிவிடுவான். இது இன்று நான் கற்றுக்கொண்ட பாடம்’ என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் சாது.

கதையில் சொன்ன முதலாவது சீடன் யார்? இரண்டாவது சீடன் யார்? என்று யோசித்து மண்டையை உடைத்துக்கொள்ள வேண்டாம். ஓ! இவரைத்தான் சொல்கிறீர்களா?' என்று நீங்களாகவே யாரையாவது நினைத்துக்கொள்ள வேண்டாம். கதை சொல்லும் அடிப்படை விஷயத்தை மட்டும் மனத்தில் கொள்வோம். தொடர்ந்து படிப்போம்.

மிஸ்டர் சிதம்பரம் அவர்களே! பிரதமர் மோடிக்கு தோல்வி பயம்! அதனாலேயே இந்த ரகசியத்தை வெளியிட்டார் என்று வைத்துக்கொள்வோம். ‘எங்கள் ஆட்சியின் போதே இந்த ஆற்றல் நமக்கு இருந்தது’ என்று இப்போது நீங்கள் சொல்வது எதனால்? இந்த வார்த்தைகள் எந்த பயத்தை போக்குவதற்காக சொல்லப்பட்டது?

இந்த சாதனைக்கு, முன்னால் பிரதமர்கள் நேருவும், இந்திரா காந்தியும் காரணம் என்று காங்கிரஸ் சொல்கிறார்கள். இது சரியா? பிரதமர் மோடி பெயரை சொன்னால் தவறு, நேரு மற்றும் இந்திரா காந்தி பெயரைச் சொன்னால் சரியா?

இந்த சாதனையை இரண்டு தரப்புக்கு பிரித்துக் கொடுக்கலாம். ஒன்று, விஞ்ஞானிகளுக்கு. ஏனென்றால் அவர்களின் முயற்சியால்தான் இந்த சாதனை எட்டப்பட்டது. மற்றொன்று, ஆட்சியாளர்களுக்கு. ஏனென்றால், விஞ்ஞானிகளின் சுதந்திர செயல்பாடுகளுக்கு ஆட்சியாளர்கள் அளித்த அனுமதியே காரணம். இந்த உண்மையை புரிந்துகொண்டால், ஏட்டிக்குப் போட்டியாக கேள்வி கேட்கத் தோன்றாது.

சிதம்பரம் அவர்களே! உங்களுக்கு மோடியை பிடிக்காமல் போயிருக்கலாம், பாஜகவை பிடிக்காமல் போயிருக்கலாம். அதற்காக விஞ்ஞானிகளின் உழைப்பையும், முயற்சியையும் குறை சொல்லாதீர்கள். ‘சோதனை செய்யுங்கள்’ என்று அனுமதியளித்தவர் அதை பெருமையோடு சொல்லக்கூடாதாம்! ‘சோதனையைச் செய்ய வேண்டாம்’ என்று சொன்னவர் அதை பெருமையோடு சொல்லிக்கொள்வாராம். எந்த ஊர் நியாயம் இது?

புல்வாமா தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்தியதை பெருமையாக பிரதமர் பேசினார். அப்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இல்லையே! ஆனாலும், எதிர்க்கட்சிகள் பிரதமரின் பேச்சை குறை சொன்னார்கள். தேர்தலை மனத்தில் கொண்டே பிரதமர் செயல்படுகிறார்’ என்று எதிர்க்கட்சிகள் முழங்கின. பிரதமர் என்பவர் வாயை மூடிக்கொண்டு அமைதியாக இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் நினைக்கிறதா?

'ரகசியம்’ என்று சொன்ன பிறகும், ரபேல் விவகாரத்தில் விவரங்களை வெளியிட வேண்டும்’ என்று வலியுறுத்திய காங்கிரஸே! உங்களுக்கு மட்டுமே ரகசியங்கள் சொந்தமானதா?

காங்கிரஸ் அரசு கடைப்பிடித்த அதே அணுகுமுறையை மற்ற அரசுகளும் கடைப்பிடிக்க வேண்டும் என்று எப்படி நினைக்கிறீர்கள்? நீங்கள் காப்பாற்றியதாக சொல்லப்பட்ட ரகசியம் நம் நாட்டிற்கு நம்பிக்கையை அளிக்கவில்லையே?

காங்கிரஸ் அரசின் ஊழல் வழக்குகள் பல யுகங்களை கடந்து, பல ஜாமீன் ஆணைகளையும் கடந்து இன்றும் நீதிமன்றங்களை நிரப்பிக் கொண்டிருக்கின்றன. இதுபோல் ஒரு நியாயமான குற்றப் பட்டியலை தற்போதைய பாஜக அரசின் மீது அளிக்க முடியுமா? எதிர்க்கட்சிகளின் பேச்சில் மோடி எதிர்ப்பைத் தவிர வேறேதும் இருப்பதாக தெரியவில்லை. மோடியை வீழ்த்த எதையும் செய்யும் நிலைக்கு எதிர்கட்சிகள் வந்துவிட்டது என்பதையே இவர்கள் பேச்சு நமக்கு காட்டுகிறது. இது சரியல்ல.

இந்த சோதனை தொடர்பாக விஞ்ஞானிகளின் கருத்தை படிப்போம்.

‘மிஷன் சக்தி பற்றி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலிடம் விரிவான அறிக்கை அளிக்கப்பட்டது. அவர் ஒப்புதல் அளித்த பிறகே சோதனையை துவக்கினோம். அவர் பிரதமரிடமும் இது பற்றி ஆலோசித்துள்ளார். இத்திட்டம் சில வருடங்களுக்கு முன்பே துவங்கப்பட்டுவிட்டது. ஆனால், ஆறு மாதங்களுக்கு முன்புதான் முழுமையான செயல்வடிவம் பெற்றது. கடந்த ஆறு மாதங்களில்தான் ஏ சாட் ஏவுகணை திட்டம் ‘மிஷன் மோட்’ என்ற நிலையை எட்டியது. சோதனைக்கான நாள் முடிவு செய்யப்பட்டது. சுமார் 100 விஞ்ஞானிகள் இதற்காக நேரம் காலம் பார்க்காமல் உழைத்தனர். ஏ சாட் ஏவுகணை 1000க்கும் அதிகமான கிலோ மீட்டர் வரை செல்லக்கூடியது’ என்று டிஆர்டிஓ தலைவர் சதீஷ் ரெட்டி விளக்கமளித்தார்.

‘மோடி பெருமையுடன் அறிவித்த ஏவுகணை சோதனைக்கான திட்டம் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் போடப்பட்டது என இப்போது காங்கிரஸ்காரர்கள் கூறிக்கொள்கிறார்கள். ஆனால் 2012-13ல் மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தால், ஏவுகணைச் சோதனை 2014-15ல் நடந்திருக்கும். தங்கள் ஆட்சிக் காலத்தில் இந்த திட்டம் தொடங்கியது என்று கூறும் காங்கிரஸ், ஏன் சோதனை நடத்த அனுமதிக்கவில்லை’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் முன்னாள் டிஆர்டிஓ தலைவர் சரஸ்வத். தன்னுடைய பதவிக் காலத்தில் இத்தகைய சாதனைகளை செய்ய அனுமதியளித்திருந்தால், தன்னுடைய உழைப்பும் இந்தச் சாதனைக்கு உதவியிருக்கும் என்று சரஸ்வத் நினைத்திருக்கலாம். அதில் தவறேதுமில்லையே!

ஒன்று தெளிவாகத் தெரிகிறது. காங்கிரஸ் ஆட்சியாளர்கள் அதிபுத்திசாலிகளின் புத்திசாலித்தனத்தை நல்ல முறையில் ஆட்சி செய்ய பயன்படுத்திக்கொண்டதைவிட, பாஜக அரசை எதிர்த்து அரசியல் செய்யவே அதிகம் பயன்படுத்திக்கொள்கிறார்கள். எது எப்படியோ, சோதனைக்கு பிரதமர் மோடி அளித்த ஒப்புதல் இன்று இந்தியாவின் பாதுகாப்பை வலுப்படுத்தியுள்ளது. மிஷன் சக்தி காங்கிரஸுக்கு மட்டும் சொந்தமான ரகசியமல்ல. அது இந்தியாவின் வெற்றி. அதற்காக விஞ்ஞானிகளுக்கும், பிரதமருக்கும் வாழ்த்துகள்.

- சாது ஸ்ரீராம்
saadhusriram@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com