வாழ்வை மாற்றிய விடுதலை

வேலூர் மாவட்டம் கணியம்பாடியில் உள்ள ஒரு செங்கல் சூளையிலிருந்து கஸ்தூரி, வெங்கடேசன்  தம்பதி மற்றும் அவர்களின் பதிமூன்று வயது
வாழ்வை மாற்றிய விடுதலை

வேலூர் மாவட்டம் கணியம்பாடியில் உள்ள ஒரு செங்கல் சூளையிலிருந்து கஸ்தூரி, வெங்கடேசன்  தம்பதி மற்றும் அவர்களின் பதிமூன்று வயது இளைய மகன் சக்திவேலையும் மீட்டனர் அதிகாரிகள். மூன்று ஆண்டுகளாக அச்சுறுத்தப்பட்டு ஒடுக்கி வைக்கப்பட்டிருந்த அக்குடும்பம், இறுதியாக 2018 ஆம் ஆண்டு மார்ச் 2ஆம் தேதி அன்று  கொத்தடிமையிலிருந்து வெளியேறியது. தொழிலாளர்கள் சிலர் செங்கல்சூளையில் கொத்தடிமைகளாகச் சிக்கி இருக்கும் தகவல் தெரிய வரவே வேலூர் வருவாய் கோட்டாட்சியர், தொழிலாளர் நலத் துறை உதவி ஆணையர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் இணைந்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

கொத்தடிமையிலிருந்து விடுவிக்கப்பட்ட தொழிலாளர்கள் வாழும் பகுதிக்கு நாங்கள் செல்லும்போது அங்கு பெரும் அமைதி நிலவியது. மூன்று ஆண்டுகள் கழித்து முதன்முறையாகத் தனது குடிசையில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடக் கஸ்தூரி அப்போது ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார். தன் குடும்பம் கடந்து வந்த பாதை மற்றும் மீட்கப்பட்ட பின்னர் கழித்த ஆறு மாத அனுபவம் ஆகியவற்றை எங்களுடன் பகிர்ந்து கொண்டார். இந்த இடைப்பட்ட காலத்தில் தன் குடும்பத்தை யாரும் அச்சுறுத்தவில்லை என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

'இந்நேரம் நாங்கள் மட்டும் செங்கல் சூளையிலேயே இருந்திருந்தால், இந்த மாதிரிப் பண்டிகையையெல்லாம் குடும்பத்துடன் கொண்டாட முடிந்திருக்காது. எங்கேயாவது இந்நேரம் செங்கல் அறுத்துக் கொண்டிருப்போம்.' என்கிறார் கஸ்தூரி.

கஸ்தூரியும் தன் கணவர் வெங்கடேசனும் தங்களது மூத்த மகள் திருமணத்திற்காக ஒரு செங்கல் சூளை முதலாளியிடம் முன் பணம் பெற்றுள்ளனர். இதனால் அவர்கள் அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்குக் கொத்தடிமைகளாக இருக்க நேரிட்டது.

செங்கல் சூளையில் வேலை செய்ய ஆரம்பித்தபோது இம்மாதிரி கொடுமைகள் நடக்கும் என்று அவர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. முதலாளியின் கோபமான குணம் அவரிடம் மீதமுள்ள கடன் தொகை எவ்வளவு என்று கேட்க முடியாத அளவிற்கு அவர்களிடம் பயத்தை உண்டாக்கியது. கஸ்தூரி, வெங்கடேஷ் மற்றும் சக்திவேல் ஆகியோர் அங்கேயே தங்கி வேலை செய்தாலும் மூவருக்கும் சேர்த்து வார இறுதியில் ரூபாய் 500 மட்டுமே முதலாளி வழங்கியுள்ளார். அப்பணம் குடும்ப செலவிற்குக் கூட போதாமல் சில நாள் அவர்கள் பட்டினியிலும் கிடந்துள்ளனர்.

'சுத்தமாகப் பணம் இல்லாத நிலையில், என் மகனை வயிறு முழுக்க தண்ணீரைக் குடித்துவிட்டுத் தூங்கு என்று சொன்ன நாட்களும் இருக்கிறது.' என்று வருத்தமுடன் நினைவு கூறுகிறார் கஸ்தூரி.

'ஆனால் இன்று நல்ல சத்தான உணவை வயிறு நிறையச் சாப்பிடும் அளவிற்கு நிலைமை மாறியிருக்கிறது. கறி, மீன் என்று உடம்புக்குச் சத்தான பொருட்களை வாங்க உண்ண முடிகிறது. செங்கல் சூளையில் அரிசிக் கஞ்சி குடித்ததை விட இப்போது எவ்வளவோ மேல்' என்கிறார் அவர்.

ஒவ்வொரு நாளும் அதிகாலை 2 மணிக்குத் தொடங்கும் வேலை இரவு 7 மணி வரை நீடிக்கும். இதனால் அவர்கள் உடல் நலம் கடுமையாக பாதித்த போதிலும் மருத்துவமனைக்குச் செல்ல அவர்களுக்கு முதலாளி அனுமதி வழங்கவில்லை. மழையோ வெயிலோ அவர்களிடம் உழைப்பைச் சுரண்டுவதே முதலாளியின் நோக்கமாக இருந்தது. கஸ்தூரி தூக்கி வளர்த்த தன் சகோதரியின் மகள் இறந்தபோதும் கூட தன் கிராமத்திற்குச் சென்று இறுதிச் சடங்கு செய்து விட்டு வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அவர் மனதை ஆழமாகப் பாதித்துள்ளது.

போதுமான உணவு, தண்ணீர், ஓய்வு இல்லாமலும் குடும்ப சுக தூக்க நிகழ்ச்சிகளுக்குச் சென்று வர முடியாமலும் இச்சிறிய குடும்பம் செங்கல் சூலையிலேயே தங்கிக் குறைந்த கூலியைப் பெற்றுக்கொண்டு வேலை செய்ய பணிக்கப்பட்டுள்ளது. அப்போது அவர்களிடம் உயிர் மட்டுமே எஞ்சி இருந்தது.

அருகில் வசிப்பவர்களுடன் பேசக் கூடாது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் அவர்களுக்கு விதிக்கப்பட்டு இருந்தது. அந்த முதலாளி தொழிலாளர்களை லாவகமாகக் கையாண்டு அவர்களின் உழைப்பைச் சுரண்டுவார். அவர்கள் கொத்தடிமைகளாகச் சிக்கி ஓராண்டாக இருக்கும் வேளையில் அருகில் இருக்கும் செங்கல்சூளையில் அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தி அங்கிருந்த கொத்தடிமைகளை மீட்டுள்ளனர். ஆனால் கஸ்தூரியின் முதலாளி அவர்களைப் பாதுகாப்பது போன்று பாசாங்கு செய்து காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் செல்லும்வரை அருகில் இருக்கும் ஒரு தனி அறையில் அடைத்து வைத்துள்ளார். அவர்கள் வெளி வந்த பின்னரே அங்கு நடந்ததையும் அவர்களும் அதிகாரிகளின் கண்ணில் பட்டிருந்தால் மீட்கப்பட்டு இருப்பர் என்று அருகில் இருந்த தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்த முதலாளி சக்திவேலையும் பள்ளியிலிருந்து நின்று விடும் படி கூறிய நிலையில் பள்ளி செல்வதை விரும்பிய அவர் அதற்கு மறுத்துவிட்டார். இருப்பினும் சக்திவேல் பள்ளி செல்வது மட்டுமல்லாமல் காலையிலிருந்து மாலை வரை வேலை செய்ய வேண்டி இருப்பதால் பள்ளியிலிருந்து நின்று விடலாம் என்று அவராகவே முடிவு செய்தார். ஒரு சிறுவனாக இருக்கும்போதே குடும்ப சூழ்நிலையை உணர்ந்த அவர் செங்கல் சூளையில் வேலை செய்வதைவிட இறந்துவிடலாம் என்றும் எண்ணியுள்ளார்.

இன்று மீண்டும் பள்ளிக்குச் செல்லும் சக்திவேல் நன்றாகப் படித்து காவல்துறை அதிகாரியாக ஆக வேண்டும் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார். தன் தந்தையைப் போலவே அதிர்ந்து பேசாத அவர் தன் குடும்பத்திற்குச் சிறந்த எதிர்காலம் அமைத்துத்தரத் துடிப்புடன் உள்ளார். கொத்தடிமையில் சிக்கியிருந்த கசப்பான அனுபவம் அவரை நன்றாகப் படித்து முடித்து சட்டத்தை நிலை நிறுத்தி இது போன்ற குற்றங்களை தடுக்கும் ஒரு காவல் அதிகாரியாக வர வேண்டும் என்று சிந்திக்க வைத்திருக்கிறது.

'அன்றே நான் தைரியத்துடன் பேசியதால்தான், இன்று சுதந்திரமாக இருக்கிறோம்' என்று கூறுகிறார் கஸ்தூரி. அவர்கள் துன்புற்றது போலவே துன்புறும் மற்றவர்களைக் காப்பாற்றக் குரல் கொடுப்பேன் என்கிறார் அவர்.

தற்போது கஸ்தூரியும் வெங்கடேசனும் கல் உடைப்பது, மரம் வெட்டுவது, சுமைகளை ஏற்றி இறக்குவது போன்ற கூலி வேலைகளுக்கு சென்று தங்கள் குடும்பத்திற்குத் தேவையான அளவு சம்பாதிக்கின்றனர். அவர்கள் முகத்தில் இன்று பயமோ சோகத்தின் அடையாளமோ இல்லாமல் அவர்கள் வாழ்வில் வந்த வசந்தத்தை எண்ணி மகிழ்கின்றனர். ஒவ்வொரு நாளும் அவர்கள் மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com