மகளை எப்படியாவது படிக்க வைத்து விட வேண்டும்! இவர்கள் கனவு நிறைவேறியதா? முழுவதையும் படித்து தெரிந்து கொள்ளுங்கள்!

அழுக்கு படிந்த தலை இருள் படிந்த முகத்துடன் ஒரு ஊன்று கோலின் உதவியுடன் நிற்கும் மல்லிகாவைப் பார்க்கும் எவருக்கும் அவர் உடல்நிலை சரி இல்லாமல் இருப்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
மகளை எப்படியாவது படிக்க வைத்து விட வேண்டும்! இவர்கள் கனவு நிறைவேறியதா? முழுவதையும் படித்து தெரிந்து கொள்ளுங்கள்!

அழுக்கு படிந்த தலை இருள் படிந்த முகத்துடன் ஒரு ஊன்று கோலின் உதவியுடன் நிற்கும் மல்லிகாவைப் பார்க்கும் எவருக்கும் அவர் உடல்நிலை சரி இல்லாமல் இருப்பதைத் தெரிந்து கொள்ளலாம். அவரது கணவர் குமார் கிழிந்த துணிகளுடன் தயக்கத்துடன் மல்லிகாவின் பின்னால் நிற்கிறார். ஆனால் மல்லிகா தற்போது மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கொத்தடிமையாக இருந்ததை விட தற்போது நல்ல நிலையில் இருப்பதாகக் கூறுகிறார்.

தங்களது குழந்தையை பள்ளியில் சேர்ப்பதற்குப் பணம் தேவைப்பட்டதால் 3 கிராம் தங்கத்தைக் கால்நடைப் பண்ணை வைத்திருக்கும் ஒரு முதலாளியிடம் இருந்து கடனாகப் பெற்றுள்ளனர். 2018 ஆம் ஆண்டில் 3 கிராம் தங்கத்தின் மதிப்பு சுமார் 8000 ரூபாய் மட்டுமே. ஆனால் அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் அவர்கள் குழந்தையின் கல்விக்குப் பணம் செலுத்த வேண்டிய போது தங்கத்தைக் கொடுத்து உதவிய நல்ல உள்ளத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று மட்டுமே. படிப்பறிவில்லாத ஏழை மக்களின் அறியாமையை பயன்படுத்தி கொத்தடிமைகளாக மாற்றுவது ஒரு வகையான யுக்தி. மல்லிகாவும் குமாரும் கடனை திருப்பி செலுத்த சுமார் மூன்று ஆண்டுக் காலம் கொத்தடிமைகளாக இருந்துள்ளனர்.

தங்களது குடும்பத்தின் அன்றாட செலவுக்கே கஷ்டப்பட்டு வந்த நிலையில் மல்லிகாவும் குமாரும் தங்களது மகளை எப்படியாவது படிக்க வைத்து விட வேண்டும் என்று கனவு கண்டனர். அதனை நிறைவேற்றக் கால்நடை பண்ணையின் முதலாளி ஒருவர் கொடுத்த 3 கிராம் தங்கத்தை வாங்கிக் கொண்டு இதற்குப் பின் நடக்கப் போவதை அறியாமல் அவரிடம் வேலைக்குச் சேர்ந்தனர். அவர் கொடுத்த தங்கத்தை அடகு வைத்த அவர்கள் விடுதி வசதி உள்ள ஒரு பள்ளியில் முதல் தவணையைச் செலுத்தி தங்களது மகளைச் சேர்த்தனர்.

கொத்தடிமை வாழ்க்கை:-

முதலாளியின் கால்நடைப் பண்ணையில் மல்லிகாவும் குமாரும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகினர். ஒவ்வொரு நாளும் அதிகாலை முதல் மாலை வரை உணவு இல்லாமலும் இடைவேளை இல்லாமலும் அவர்கள் வேலை வாங்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு நாளும் இரவில் மட்டுமே சமைத்து இரு வேளைகள் மட்டுமே உண்டு நாள் முழுக்க வேலை செய்துள்ளனர். சற்று நேரம் மரத்தடியில் ஓய்வு எடுத்தாலும் முதலாளி மோசமான வார்த்தைகளால் அவர்களைத் திட்டியுள்ளார்.

'சிறிது நேரம் மரத்தின் அருகே நின்றாலோ தண்ணீர் குடிக்கச் சென்றாலோ முதலாளி நாங்கள் மீண்டும் வேலைக்குச் செல்லும் வரை தகாத வார்த்தைகளால் திட்டுவார்' என்கிறார் மல்லிகா.

பணியிடத்தில் நிலவிய பணிச்சுமை காரணமாக மல்லிகாவின் உடல்நிலை பாதிப்படைந்தது. மருத்துவமனைக்குச் சென்று வர அனுமதி கேட்டாலும் முதலாளி மறுத்து வந்துள்ளார். மல்லிகாவின் கை மற்றும் கால்கள் உணர்ச்சியற்று போனாலும் அவரை மருத்துவமனைக்குச் செல்ல அனுமதிக்காமல் கால்நடை பண்ணையிலேயே தங்கி வேலை பார்க்கக் கூறியுள்ளார். இந்நிலையில் மல்லிகாவும் குமாரும் பணியிடத்திலிருந்து தப்பி விடுவார்கள் என்ற சந்தேகத்தில், சில நாட்கள் கழித்து முதலாளி ஒரு மருத்துவரை அங்கு அழைத்து வந்துள்ளார். அங்கு வந்த மருத்துவர் முறையான மருத்துவம் பார்க்காமல் சில ஆயுர்வேத மருந்துகளை மட்டுமே கொடுத்ததால் மல்லிகாவின் உடல் நிலை மேலும் மோசமானது.

மல்லிகா கூறும்போது, 'தினமும் ஆடு மாடுகளின் சாணியை வெறும் கைகளால் அள்ளிப் போட வேண்டும். ஒரு நாள் என் கைகள் இரண்டும் மரத்துப் போய் உணர்ச்சியே இல்லாமல் ஆகிவிட்டது. நாங்கள் வீட்டிற்குச் சென்று மருத்துவம் பார்க்க முதலாளியிடம் அனுமதி கேட்டோம். ஆனால் அவர் தரவில்லை. பத்து நாட்கள் கழித்து ஒரு மருத்துவரை நாங்கள் வேலை செய்யும் இடத்திற்கு அழைத்து வந்தார். ஆனாலும் எனது கை கால் சீராகவே இல்லை'என்கிறார்.

'உடல்நிலை சரியில்லாமல் நான் அவதிப்பட்டு வந்த நிலையில் இரண்டு வாரங்கள் கழித்து எனக்குக் கூலி தருவதை முதலாளி நிறுத்திவிட்டார். ஆனாலும் என்னைத் தினமும் வேலை வாங்கினார். செயலிழந்த என் கை கால்களை வைத்துக் கொண்டு என்னால் எந்த வேலையையும் செய்ய முடியவில்லை.

நான் வேலை செய்யவில்லை என்றால் என்னை செருப்பால் அடிப்பேன் என்று கூறி என்னைத் தாக்க முயன்றார்' என்று கண்ணீர் மல்கத் தெரிவிக்கிறார் மல்லிகா.

'அப்படிப்பட்ட துன்பத்தை என்னால் இன்று நினைத்துப் பார்க்கக் கூட முடியவில்லை. இறுதியாக எங்களை மருத்துவமனைக்குச் செல்ல அனுமதித்தார். எங்களுடன் ஒரு நபரை அனுப்பி நாங்கள் தப்பித்துச் செல்லாமல் இருக்க கண்காணிப்பு வேலையையும் செய்தார்'

உரிய நேரத்தில் மருத்துவம் பார்க்காததால் மல்லிகா இன்று நடப்பதற்கே சிரமப்படுகிறார். வேறு எங்கும் சென்று வேலை செய்ய முடியாத நிலையில் உள்ளார்.

முதலாளி அவர்களது வெளியாட்கள் தொடர்பையும் நடமாட்டத்தையும் முடக்கி வைத்து இருந்துள்ளார். மல்லிகாவின் சகோதரர் மற்றும் சகோதரி இறந்த போதும் முதலாளி அவர்களுக்குத் தகவல் தெரிவிக்கவில்லை. கொத்தடிமையில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னரே அவருக்கு அந்த இறப்புச் செய்தி தெரியவந்துள்ளது.

மீதமுள்ள கடன் தொகை பற்றியோ கூலி உயர்வைப் பற்றியோ அல்லது சொந்த கிராமத்திற்குச் செல்வது பற்றியோ முதலாளியிடம் கேட்டால் அவர் மல்லிகாவின் மகளையும் கால்நடைப் பண்ணை கொண்டு வந்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

'நீங்கள் எங்குச் சென்று என்ன செய்வீர்கள் என்று பார்ப்போம். எந்த அதிகாரி இந்த காட்டிற்கு வந்து உங்களை காப்பாற்ற போகிறார்' என்று கூறியுள்ளார் அம்முதலாளி.

முதலாளியின் அச்சுறுத்தலுக்கு நேரெதிராக 2018 ஆம் ஆண்டு திருவள்ளூர் அருகிலுள்ள ஒரு கால்நடை பண்ணையிலிருந்து மல்லிகாவும் குமாரும் ஒரு அரசு சாரா நிறுவனத்தால் மீட்கப்பட்டனர். தற்போது அவர்கள் திருவண்ணாமலை மாவட்டத்தில் வசித்து வருகின்றனர்.

'நிரந்தரமாக வேலை ஏதும் இல்லை என்றாலும் நிம்மதியாக இருக்கிறோம். தற்போது யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லாமல் மகிழ்ச்சியாக இருக்கிறோம்' என்கின்றனர் குமாரும் மல்லிகாவும்.

கொத்தடிமை தனத்தால் அவமானத்துடன் வாழ்ந்த அவர்கள் நம்பிக்கையையும் உடல்நலத்தையும் இழந்துள்ளனர். ஆனால் அவர்களின் மகளைப் பற்றிக் கேட்கும்போது எல்லாம் அவர்களின் முகம் பிரகாசமாய் மின்னுகிறது. “அவள் நன்றாகப் படிக்கிறாள். அவள் பள்ளிக்குச் செல்வதே எங்களுக்கு மகிழ்ச்சி தான்.”

இன்று அவர்களது வாழ்க்கையை விழுங்கிய கடனிலிருந்து விடுதலைப் பெற்றுள்ளனர். கடந்த  மார்ச், 2019 அன்று மல்லிகாவிற்கு ஆதார் அடையாள அட்டை வழங்கப்பட்டது. மேலும் அவரது பெயரில் வங்கியில் ஒரு சேமிப்புக் கணக்கும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஆவணங்களைப் பயன்படுத்தி மல்லிகாவிற்கு முதற்கட்ட மறுவாழ்வு நிதியாக ரூபாய் 20 ஆயிரத்தை அரசிடமிருந்து பெற்று தர வேண்டிய நடவடிக்கைகளை இக்குற்ற வழக்கை நடத்தி வரும் வழக்கறிஞர் மேற்கொண்டிருக்கிறார்.

மல்லிகாவிற்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு அவருக்கு ஏற்பட்ட பாதிப்பு நிரந்தரமானதா இல்லையா எனக் கண்டறியப்படும். மேலும் கை கால் செயலிழப்பு நிரந்தரம் எனக் கண்டறியப்பட்டால் அவருக்கு மாற்றுத் திறனாளி அடையாள அட்டை மட்டுமல்லாமல் ஒரு மூன்று சக்கர மிதிவண்டியும் வழங்கப்படும். மேலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் வழங்கப்படும் '100 வீடுகள்" என்ற திட்டத்தின் மூலம் அவர் பயன் பெறுவார்.

ஒரு முதலாளியால் அடிமைப்படுத்தப்பட்டு சுயமரியாதையையும் உடல் நலத்தையும் இழந்த குமாரும் மல்லிகாவும் தற்போது நிம்மதியான எதிர்காலத்தை நோக்கிக் காத்திருக்கின்றனர்.

- டிவைன் ஆலிவா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com