சென்னை இது நம்ம ஊர் (விடியோ)

சென்னை - இங்கு அப்பா அம்மாவைத் தவிர எல்லாமும் கிடைக்கும். மிக விலை உயர்ந்த பொருட்கள் விற்கப்படும் கடைகளும் உண்டு
சென்னை இது நம்ம ஊர் (விடியோ)
Published on
Updated on
1 min read

சென்னை - நவீனத்தின் குறியீடாக அந்தக் காலத்திலிருந்து இன்றுவரை தொடர்கிறது. காரணம் கிராமங்களில் காணப்படாதவை நகரத்தில் இருக்கும். அது முன்னேற்றமாக இருந்தாலும் சரி, மாற்றங்களாக இருந்தாலும் சரி முதலில் அது பெரும் நகரங்களில்தான் ஆரம்பம் ஆகும்.

*

சென்னை - பல லட்சம் மனிதர்களை ஈர்த்துக் கொண்டே இருக்கும் ஊர் இது. பிழைப்புக்காக வருபவர்கள், இங்குள்ள வசதி வாய்ப்புக்களை பயன்படுத்தி முன்னேறிய பின் இங்கிருந்து செல்ல மனம் வராமல் சென்னையை சொந்த ஊராக வரித்துக் கொண்டு நிரந்தர வாழ்விடமாக்கிக் கொள்வதுண்டு.

*

சென்னை - பழமையும் புதுமையும் கலந்த ஒரு அபூர்வ நகரம். பீச், கோயில்கள், பழமை வாய்ந்த கோபுரங்கள், சர்ச்சுகள், மசூதிகள் என்று புராதனம் ஒரு புறம், விதவிதமான மால்கள், மெட்ரோ ரயில்கள், நான்கு வழிச் சாலைகள், இரண்டு அடுக்கு பாலங்கள், வானளாவிய கட்டடங்கள் என்று புதுமை ஒரு புறம் என தன்னுடைய வளர்ச்சியை விரிவுபடுத்திக் கொண்டேயிருக்கிறது.

*

சென்னை - இங்கு அப்பா அம்மாவைத் தவிர எல்லாமும் கிடைக்கும். மிக விலை உயர்ந்த பொருட்கள் விற்கப்படும் கடைகளும் உண்டு, ப்ளாட்பாரத்தில் பேரம் பேசி வாங்கக் கூடிய சிறிய கடைகளும் உண்டு. சென்னையின் அடையாளம் எனும் சொல்லும் அளவுக்கு தி.நகர் ரங்கநாதன் தெரு உள்ளது. இந்த மாயாலோகத்தின் உள்ளே சென்றால் ஷாப்பிங் செய்யாமல் வெளிவருவது சிரமம்தான்.

*

சென்னை - ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் நடக்கும் புத்தகத் திருவிழா அறிவுத் தேடலுக்கு வித்தாக அமைந்து சென்னையை சிறப்பித்து வருகிறது. கோடிக்கணக்கான மக்கள் புத்தகக் கண்காட்சிக்கு வருகை தந்து தங்களுக்குத் தேவையான புத்தகங்களை சலுகை விலையில் அள்ளிச் செல்வது வழக்கம். 2019-ம் ஆண்டில் 42-வது புத்தகக் கண்காட்சி வெற்றிகரமாக நடந்தது. வாசகர்கள் மட்டுமல்லாமல் எழுத்தாளர்கள் பலர் பங்கேற்று சிறப்பித்தனர்.

*

சென்னை - இங்குதான் மீடியா ஹப் உள்ளது. கோலிவுட் உள்ளது. சின்னத் திரையாகட்டும், பெரிய திரையாகட்டும் சென்னைதான் சினிமாவின் தலைநகரம். இங்குள்ள திரையரங்குகளும் உலகத் தரம் வாய்ந்தவை.

*

சென்னை - கிண்டி, அம்பத்தூர் உள்ளிட்ட இடங்களில் பலப்பல தொழிற்சாலைகள் உள்ளன. ஐடி தொழில்நுட்பம் சென்னையில்தான் அன்றும் இன்றும் கோலோச்சுகிறது. பள்ளி கல்லூரிகளுக்கும் சென்னைதான் தலைசிறந்த இடம் என்பது அனைவரும் அறிந்த உண்மை.

*

இப்படி வந்தோரை வாழ வைக்கும் சென்னையின் பெருமைகளை ஒருசில நிமிடங்களில் சொல்லிவிட முடியாது. காணந்தோறும் ஒரு அற்புதத்தை உருவாக்கிக் கொண்டிருக்கும் சிங்காரச் சென்னைக்கு இன்று சிறப்பான நாள். வாழ்த்துவோம், வாழுவோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com