காட்டு மாடுகளுக்குக் குடும்பக் கட்டுப்பாடா..?

மாவட்டத்தில் முதுமலைப் புலிகள் காப்பகம், முக்குருத்தி தேசிய பூங்கா, கூடலூர், நீலகிரி வனக் கோட்டம் எனப் பரந்த வனப்பரப்புகள் உள்ளன.
காட்டு மாடுகளுக்குக் குடும்பக் கட்டுப்பாடா..?


மாவட்டத்தில் முதுமலைப் புலிகள் காப்பகம், முக்குருத்தி தேசிய பூங்கா, கூடலூர், நீலகிரி வனக் கோட்டம் எனப் பரந்த வனப்பரப்புகள் உள்ளன. இந்த வனங்கள்தான் அழிவின் விளிம்பில் உள்ள பல வன விலங்குகளின் கடைசிப் புகலிடமாகவும் இருக்கிறது. வனச்சட்டங்கள் கடுமையாக்கப்பட்ட பிறகு யானை, கரடி, காட்டுமாடு, சிறுத்தை மற்றும் புலி போன்றவற்றின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன.

அதேவேளை மக்கள் தொகை பெருக்கம், சுற்றுலா, காடழிப்பு, பணப்பயிர், மலைக் காய்கறி போன்ற பல காரணங்களால் வனப்பகுதிகளும் வனத்தையொட்டிய பகுதிகளும் வேகமாகச் சூறையாடப்படுகின்றன. நீலகிரிக் காடுகளில் உள்ள மிகப்பெரும் தாவர உண்ணிகளான யானை மற்றும் காட்டுமாடுகள் உணவு தண்ணீர் ஆகியவற்றைத் தேடி விளைநிலங்களுக்கும், குடியிருப்புப் பகுதிகளுக்கும் வரவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

கூடலூர், பந்தலூர் பகுதிகளில் யானை - மனித எதிர்கொள்ளலும், குன்னூர் கோத்தகிரி பகுதிகளில் காட்டுமாடு - மனித எதிர்கொள்ளலும் அதிகளவு நடைபெறுகின்றன. அதிலும் குறிப்பாக, காட்டுமாடுகளை சமாளிப்பது வனத்துறைக்குப் பெரும் சவாலாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளாகக் காட்டுமாடு - மனித எதிர் கொள்ளல் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன. இதனைத் தடுக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட வனத்துறை தற்போது காட்டு மாடுகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த அவற்றுக்குக் குடும்பக் கட்டுப்பாடு செய்யத் திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டம் விவசாயிகள் மத்தியில் வரவேற்பைப் பெற்றாலும் காட்டுயிர் ஆர்வலர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

வனத்துறை அதிகாரிகளிடம் பேசினோம். ``நீலகிரி மாவட்டத்தில் காட்டு மாடுகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த முடியாததால் நாளுக்குநாள் மனித-விலங்கு மோதல்கள் அதிகரிக்கின்றன. குறிப்பாக குன்னூர், குந்தா வனச்சரகத்துக்குட்பட்ட பகுதிகளில் காட்டு மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இவற்றைத் தினமும் காட்டுக்குள் விரட்டபோதுமான ஊழியர்களும் இல்லை. மேலும், குன்னூர் பகுதியில் நாள்தோறும் மக்கள் வாழும் குடியிருப்புகள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் சாலைகளில் வரும் காட்டு மாடுகளால் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு வருகிறது.

எனவே, இவற்றின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முன்னதாக, இவற்றைப் பிடிப்பதற்கும் கையாள்வதற்கான பயிற்சிகள் ஊழியர்களுக்கு அளிக்கப்படவுள்ளது. ஆனைமலையில் பயிற்சி அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. பயிற்சி முடித்து வந்தபின், நீலகிரி மாவட்டத்தில் உள்ள காட்டுமாடுகளின் எண்ணிக்கை குறித்து கணக்கெடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். கணக்கெடுப்பு அடிப்படையில் மயக்க ஊசி செலுத்தி குடும்பக் கட்டுப்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

`` Indian Gaur எனப்படும் ஆசிய காட்டு மாடுகள் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கொள்ளை நோயில் கிட்டத்தட்ட இனமே அழிந்து போகும் நிலைக்குச் சென்று தற்போது மெல்ல மீண்டு வந்துள்ளன. எண்ணிக்கை அதிகரிப்பு என்று காரணம் காட்டி குடும்பக் கட்டுப்பாடு செய்வது மிக மோசமான முடிவு. இதற்குப் பதிலாகப் புலிகளின் எண்ணிக்கையை அதிகரித்தால் காட்டுமாடு எண்ணிக்கை தானாக சமநிலைக்கு வந்துவிடும். மேலும், வனப்பகுதிக்குள் உணவு தண்ணீர் கிடைக்க வழிவகை செய்வது அவசியம். எனவே, இந்தத் திட்டத்தை வனத்துறை கைவிட வேண்டும்”.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com