'என் தவறுகளுக்கு என் குழந்தைகள் பலியாக வேண்டாம்!’ மனதைக் கனக்கச் செய்யும் உண்மைக் கதை

விழுப்புரம் மாவட்டம் சிதலிங்கமாடத்தில் வாழ்ந்த குமார் என்பவரை மணந்தார் மலர்.
'என் தவறுகளுக்கு என் குழந்தைகள் பலியாக வேண்டாம்!’ மனதைக் கனக்கச் செய்யும் உண்மைக் கதை


 
விழுப்புரம் மாவட்டம் சிதலிங்கமாடத்தில் வாழ்ந்த குமார் என்பவரை மணந்தார் மலர். திருமணம் நடந்த சில வருடங்களிலேயே இரண்டு குழந்தைகளையும் விட்டுவிட்டுச் சென்ற குமார் இன்றுவரை திரும்பவில்லை. இப்போது மலர் மகள் ரேணுகாவையும் மகன் பாலாவையும், வயதான மாமனாரையும் தனி ஆளாகப் கவனித்து வந்தார். இந்த நிலைமையை அவரால் தொடர்ந்து சமாளிக்க முடியவில்லை. எனவே வாழ்க்கை அழுத்தங்கள் நிரம்பிய சூழலில் ஒரு வேலை வாய்ப்பு வந்ததும் தனக்கும் தன் குழந்தைகளுக்கும் என்ன நேரப் போகிறது என்பதை அறியாமல் சம்மதித்துவிட்டார்.

கரூரைச் சேர்ந்த முத்து என்பவர் ஒரு செங்கல் சூளை முதலாளி. இவர் சிதலிங்கமாடத்திற்கு வந்து முன்தொகை கொடுத்து வேலைக்கு ஆட்கள் எடுத்து அவர்கள் வாழ்க்கை முழுவதும் கொத்தடிமைகளாக வைத்து வந்தார். ஐந்தாயிரம் ரூபாயுடன் தங்க இடம், வேலை முடிந்ததும் வீடு திரும்பிவிடலாம் என்று வாக்குறுதி அளித்ததால், ஏழ்மையில் வாடிய மலர் ஒப்புக் கொண்டார். தன்னுடன் ஏழு வயது மகளையும், ஐந்து வயது மகனையும் அழைத்துக் கொண்டு, தன் மாமனாரை உறவினரிடம் விட்டுவிட்டு கரூருக்கு செல்ல தயாரானார் மலர்.

சில குடும்பங்களுடன் ஒரு வாகனத்தில் ஏற்றி கரூர் மாவட்டம் புலியூர் கொண்டு செல்லப்பட்டார் மலர். கால்நீட்டும் அளவேயுள்ள கொட்டகையில் அவர்கள் அனைவரும் தங்க வைக்கப்பட்டனர்.

முன்பணத்தை திருப்பித் தர வேறு வழியில்லாமல் தாயுடன் ரேணுகாவும் உழைக்க வேண்டியிருந்தது. தாயும் மகளும் இப்பணிக்கு புதிது என்பதால் மண் எடுப்பது,  களத்தை சுத்தப்படுத்துவது, செங்கல் அறுப்பது என்பதை பற்றி எல்லாம் அவர்கள் அறிந்திருக்கவில்லை. குழந்தையாய் இருப்பினும் ரேணுகா பெரியவர்கள் செய்யும் வேலைக்கு சென்றார். ஒவ்வொரு நாளும் பெரியவர்களுடன் அவளும் இரவு 12 மணிக்கு வேலை செய்யத் துவங்கி மறுநாள் காலை 6 மணி வரை வேலை செய்ய வேண்டும். சமைத்து சாப்பிட்டு முடித்து மீண்டும் 9 மணிக்கெல்லாம் வேலைக்குத் திரும்ப வேண்டும்.

தன் அம்மாவுடன் ரேணுகா வண்டியில் மணலை ஏற்றி, தண்ணீர் ஊற்றி செங்கல் செய்ய ஏற்ற கையில் களிமண்ணை தயார் செய்ய வேண்டும். அவர்கள் அதை செங்கல்லாக்கி சரியான அளவில் அறுத்து வெயிலில் காய வைப்பார்கள். வேலைகளை முடிக்க இருவருக்கும் மாலை 6 மணியாகி ஆகிவிடும். மீண்டும் சமைத்து சாப்பிட்டு படுக்க ஏழு மணிக்கு மேல் ஆகிவிடும். மீண்டும் அதே போல 12 மணிக்கு வேலை தொடங்கும். மகன் பாலாவும் களத்தைச் சுத்தப்படுத்துவது செங்கல்லைக் காய வைப்பது என அவனால் முடிந்த உதவியை செய்வான். இவர்கள் மூவருக்கும் சேர்த்து வார இறுதியில் தரப்படும் சம்பளம் ரூபாய் 300 மட்டுமே. வாரம் முழுக்க, ஆறரை நாட்கள் உழைத்து கடுமையானச் சூழலில் வாழ்ந்து பணி புரிந்தாலும் சம்பளம் அவ்வளவே.

தொழிலாளர்களின் நடமாட்டத்தை கடுமையாகக் கட்டுப்படுத்தினார் முதலாளி. அவர்கள் கல்யாணம் கருமாதி என எந்த குடும்ப நிகழ்ச்சிக்கு கூட அனுமதிக்கப்படவில்லை. முத்து மலரையும் அவர் குழந்தைகளையும் அடிக்கடி ஆபாசமாகத் திட்டுவார். ஒருமுறை சம்பளம் பற்றி கேள்வி கேட்டதற்கு மலரை அடிக்கவும் செய்தார். தனக்கோ குழந்தைகளுக்கு உடம்பு சரியில்லை என்றாலும் கூட கூடுதல் பணம் தர மாட்டார். வார சம்பளத்தில்தான் பார்த்துக் கொள்ள வேண்டும்.  இந்தப் பணம் ரேஷனில் அரிசி வாங்குவதற்கே சரியாகி விடும். தேனீரோ, ஒரு துண்டு பிஸ்கெட் கூட வாங்க முடியாமல் தவித்தனர். பண்டிகைகளின் போது கூட அவர்களுக்கு விடுமுறை கிடையாது. வீட்டுக்கு அனுப்பவே மாட்டார்கள்.  முன்பணத்தை திருப்பி தரும் வரை அவர்கள் எங்கும் செல்ல முடியாது. ஒருநாள் தங்களை காண வந்த ஒருவரின் மூலம் உதவியைக் கோரினர்.

இறுதியாக, மாவட்ட நிர்வாகம் போலீஸின் உதவியுடன் 2019 மார்ச் 29-ஆம் தேதி அவர்களை விடுவித்தது. முன்பணத்தை ரத்து செய்து சுதந்திரமான வாழ்க்கையை வாழவும், உதவிகளை செய்தது மாவட்ட நிர்வாகம். கடுமையான பணிச்சூழல், அறியாமை, வெளியில் செல்ல முடியாமை தந்தையின் அரவணைப்பு வழிகாட்டல் இல்லாமை இவை அனைத்தும் ரேணுகாவை கடுமையாக பாதித்துள்ளது. பதின்வயதை எட்டும்போது ரேணுகா தனிமையில் கழித்ததால் அவரால் யாருடனும் பழக முடியவில்லை. குழந்தைப் பருவ மகிழ்ச்சிகள் எதையும் அவர் அனுபவிக்கவில்லை. உடன் விளையாட யாருமற்று, தனக்கு எது பிடிக்கும் பிடிக்காது என்பதைக் கூட அவரால் அறிய முடியவில்லை. ஆனால் இன்று சுதந்திரமாக குடும்பத்துடன் இருப்பதாக சொல்கிறார். பள்ளியில் சேர்ந்து கல்வி கற்க விரும்புகிறார் ரேணுகா.

இதுவரை குழந்தைப் பருவமும் கசப்பான கடந்த காலமும் தடையாக இருந்தது. இனி அப்படி இருக்காது. தன் கனவுகளை, சிகரங்களை எட்ட முடியும். சமூகத்தில் நலிந்த மக்களுக்கும் உதவ வேண்டும் என்று கூறும் ரேணுகா, "இனி செங்கல் அறுத்து காய வைக்க வேண்டியதில்லை, நான் சுதந்திரமாக உணர்கிறேன், எனக்கு என்று கனவுகள் இருக்கிறது. என்ன தடைகள் வந்தாலும் இனி சமாளித்து விடுவேன்." என்று நம்பிக்கையுடன் கூறுகிறார்.

செங்கல் சூளையில் அவர் மிகவும் வெறுத்தது முதலாளியின் வசவுகளையே. அவை அவளைக் காயப்படுத்தியுள்ளது. மற்றவர்களைப் போல வேலை செய்வதில்லை என எப்போதும் கடிந்திருக்கிறார். வேலை செய்த ஐந்து ஆண்டுகளில் தனக்குரிய நியாயமான உரிமைகளுக்காக அடி வாங்கியதை அவரால் மறக்க முடியவில்லை. "இன்று நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். யாருக்கும் கட்டுப்பட்டு இருக்க வேண்டியதில்லை, என் பிள்ளைகள் கல்வி, சுகாதாரம் பெற்று வாழ விரும்புகிறேன்" என்கிறார்.

உரிய நேரத்தில் அரசு உதவியதால் இக்குடும்பத்தைக் காப்பாற்ற முடிந்தது. அவர்களை விரைவில் மீட்டு இயல்பான வாழ்கையை வாழ வைக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர் அவரை மீட்க உதவி புரிந்த மனித நேய ஆர்வலர்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com