

நாளிதழ்களில் இப்போதெல்லாம் நாள் தவறினாலும் ஏதேனும் ஒரு தற்கொலைச் செய்தி மட்டும் தவறுவதில்லை. திரும்பிய, திருப்பிய பக்கமெல்லாம் தற்கொலை பற்றிய தகவல்கள்தான்; ஒவ்வொன்றுக்குப் பின்னாலும் ஒவ்வொரு துயரக் கதைகள்.
போட்டியும் பொறாமையும் நிறைந்த இந்த உலகில், தன்னுடையதைத் தக்கவைத்துக்கொள்வதற்குக்கூட ஓயாமல் ஓடித்தான் தீர வேண்டும் என்பதை உணராமலும், தேவைப்படும் எல்லாம் சிரமமின்றித் தனக்குக் கிடைத்துவிட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்தான் இவற்றை எட்ட முடியாதபோது, தற்கொலை செய்துகொள்கிறார்கள்; தங்களை மாய்த்துக் கொள்வதுடன் ஒரு பாவமும் அறியா பிஞ்சுகளையும் நஞ்சு வைத்துக் கொன்றுவிடுகிறார்கள். வன்மத்தைத் தன் மீது திருப்பிக்கொண்டால் தற்கொலை, அதை மற்றவர்கள் மீது திருப்பினால் கொலை.
சிறுவயதினர் தொடங்கி வயது வேறுபாடின்றிப் பல்வேறு காரணங்களுக்காகத் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தற்கொலை முயற்சிகளின் எண்ணிக்கையோ பல மடங்கு.
ஊடகங்கள் வாயிலாக வெளிப்படும் தற்கொலைகளைவிட, வெளிவராதவை எத்தனை எத்தனையோ. இந்தியாவில்தான் தற்கொலை என்ற பெயரில் கொலைகள் அதிகமாக நடைபெறுவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் விழுப்புரத்திலும் கொடை ரோடு ரயில்நிலையத்திலும் நடந்த குடும்பத் தற்கொலைகள் துயரமான எடுத்துக்காட்டுகள்.
நகைப்பட்டறைத் தொழிலில் நசிவுற்ற நிலையில் லாட்டரிச் சீட்டுகள் வாங்கி வெற்றி பெற நினைத்தவர் தோற்றுப் போய் தன்னை மாய்த்துக் கொண்டதுடன் மனைவியையும் குழந்தைகளையும் பலிகொடுத்துவிட்டார். உயிர் காக்கும் மருந்து விற்பனைக் கடை நடத்தியவர், தொழில் நஷ்டத்தால் கொடை ரோட்டில் மனைவியையும் குழந்தைகளையும் இறுக்கிப் பிடித்துக்கொண்டு ரயில் முன் விழுந்துவிட்டார். இவ்விரு சம்பவங்களிலும் ஆண்களின் தோல்விகளைத் தவிர்த்து, பெண்களும் குழந்தைகளும் செய்த பாவம் என்ன?
தற்கொலை எண்ணம் உருவாவதற்கான காரணங்கள், நபர்களைப் பொருத்து வேறுபட்டாலும், நடக்கும் எந்த விஷயத்துக்கும் ஒரு தீர்வாக, தற்கொலைதான் முடிவுகளாக இவர்களால் நம்பப்படுகிறது என்கின்றன உளவியல் ஆய்வுகள். ஒருவருக்கு வேலைப் பளுவால் ஏற்படக்கூடிய அழுத்தமும் மற்றொருவருக்கு வேலையில்லாத விரக்தியும் தற்கொலையை நோக்கித் துரத்துகின்றன.
தான் நினைத்தது நடக்கவில்லை என்ற ஏமாற்றம், வேலையின்மை, கடன், விவசாயத்தில் நஷ்டம், தொழிலில் நஷ்டம், தோல்வி பயம், காதல் தோல்வி, குற்றவுணர்வு, அவமானம், எதிர்பார்ப்புகளில் ஏமாற்றம், போதைக்கு அடிமையாதல், கல்விச் செலவு, நோய், மருத்துவச் செலவு, வரதட்சிணைப் பிரச்சினை, விபத்து, விவாகரத்து, உறவுகளைப் பிரிந்துவிட்டோம் என்ற ஏக்கம், பாலியல் வன்கொடுமை, முறையற்ற கர்ப்பம், குழந்தையின்மை, சட்டச் சிக்கலில் மாட்டிக்கொள்வது, பணிச் சுமையால் ஏற்படும் மனச் சோர்வு, மற்றவர்களுக்கு நாம் சுமையாக, பாரமாக இருக்கிறோமோ என்ற எண்ணம், தேர்வில் தோல்வி, உடல்ரீதியான குறைபாடு, எதிர்பாராத செலவுகள், கந்துவட்டிக் கடனை நோக்கிக் கை நீட்டியதன் விளைவு என எத்தனையோ காரணங்கள் தற்கொலைக்குக் காரணமாகின்றன.
தவிர, இயந்திரத்தனமான வாழ்க்கை உள்பட பல்வேறு காரணங்களால் குடும்ப உறவுகளில் விரிசல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இது பெரிய சேதங்களை உருவாக்கிவருகிறது. பணம் மற்றும் சொத்துக்காக உடல் மற்றும் மனரீதியாக துன்புறுத்தப்படுவது வேதனையளிக்கிறது.
சுயமதிப்பும் தன்னம்பிக்கையும் இல்லாதவர்கள் மட்டுமே தற்கொலை செய்துகொள்வதில்லை. சமூகத்தில் மிக உயர்ந்த நிலையில் இருந்தவர்களும் இருப்பவர்களும், பிரபலங்களும் பலருக்குத் தன்னம்பிக்கை உணர்வை ஊட்டியவர்களும்கூட தற்கொலை செய்துகொள்கிறார்கள்.
சமூகச் சூழலின் நெருக்குதலைச் சமாளிக்க முடியாமல் பெரியவர்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். கூடவே எந்தப் பாவமும் அறியாத தங்களுடைய குழந்தைகளையும் சேர்த்து, தற்கொலை என்ற பெயரில் கொலை செய்துவிடுகிறார்கள்.
இவற்றுக்கான முக்கியமான காரணங்களில் ஒன்று, பாரம்பரியமான நம்முடைய கூட்டுக் குடும்ப முறை முற்றிலுமாக அழிந்துபோனதுமாகும். பெரியவர்கள், சிறியவர்கள் என சகல வயதினரும் உறவுகளும் கலந்து வாழும்போது எந்தவொரு பிரச்சினை என்றாலும் விவாதமும் பரஸ்பர ஆற்றுப்படுத்தலும் எளிதாக இருந்தது. துணிக்கப்பட்ட குடும்பங்களில் எல்லா அழுத்தங்களையும் அவரவரே தாங்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது; தாங்க முடியாதபோது உடைந்து விடுகிறார்கள்; உடைத்தும் விடுகிறார்கள்.
பெற்றோர்கள் நமக்குப் பாரம் என்ற எண்ணத்தை முதலில் தூக்கி எறிந்துவிட்டு, அவர்கள் நம்முடைய பொக்கிஷம் என்ற எண்ணம் இன்றைய இளைய தம்பதியினரிடையே உருவாக வேண்டும். இளமை என்ற இறுமாப்பைத் தளர்த்தி முதுமை பற்றிய தெளிவான அறிவைப் பெற வேண்டும்.
மனிதராகப் பிறந்த பலருக்கும் ஏதாவதொரு சூழலில் தற்கொலை எண்ணம் வந்திருக்கும். அதிலிருந்து மீண்டு வரும்போது அவர்களில் பலர் சாதனை படைக்கிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
உண்மையான வாழ்க்கையின் உன்னதம் எது என்பதை அறியாமல்போனதும் எது வாழ்க்கை என்பதை ஒவ்வொருவரும் தெளிவாகப் புரிந்து அறிந்துகொள்ளாததுமே தற்கொலை - கொலைகள் பெருகக் காரணங்களாக அமைகின்றன. உள்ளபடியே கீழே விழுவது மீண்டும் எழுவதற்கே என்ற விவேகாநந்தரின் கூற்றை எப்போதும் நினைவில்கொள்ள வேண்டும்.
பாசம், பரிவு, அன்பு குறித்த அறிதல் இல்லாமல் போனதும் ஒரு காரணம். அதாவது உண்மையில் இருந்து பேருண்மையை நோக்கி, ஒளியிலிருந்து பேரொளியை நோக்கிச் செல்வதுதான் மனித வாழ்வின் உன்னதம் என்ற விவேகாநந்தரின் அறிதலை அறிய மறந்து. மனதில் ஈரம் இல்லாமல் போனதுதான் தற்கொலை போன்ற கொலைகள் நாளுக்குநாள் அதிகரிக்கிறது.
பொருளாதாரத்தைத் தேடி ஓடும் தறிகெட்ட இன்றைய வாழ்க்கை முறை இந்த எண்ணிக்கையை வரும் ஆண்டுகளில் இன்னும் அதிகமாக்கும் என்றே தோன்றுகிறது.
பிள்ளைகள் கேட்கும் பொருள்களைத் தாராளமாக வாங்கிக் கொடுக்கும் பெற்றோர், தங்களுடைய நேரத்தில் சிறிதளவைக்கூட அவர்களுக்குத் தரத் தவறுவதால் சமூக வலைத்தளம் எனும் மாய உலகில் சிக்கிச் சீரழியும் இளையோர்களின் எண்ணிக்கை இன்று ஏராளம் ஏராளம். இவர்கள்தான் நிழல் உறவுகளை நிஜமென்று நம்பி நம்பிக்கை நாசமாகும்போது அதை ஏற்க இயலாமல் துன்பத்தில் துவண்டு தற்கொலை முடிவுக்கு தள்ளப்படுகின்றனர்.
மதிப்பெண்களோ பணமோ முக்கியமல்ல என்பதைக் குழந்தைகளிடம் வீட்டிலிருந்தே பெற்றோர் ஆழமாகப் பதிய வைக்க வேண்டும். குழந்தைகள் வளர்ப்பு, குடும்ப நிர்வாகம், இக்கட்டான சூழ்நிலைகளையும் எளிதாகக் கையாளும் முறை போன்றவற்றை இப்போதிருந்தே கற்றுக்கொடுக்க வேண்டும். குழந்தைகளின் போக்கை அறிந்து அதற்கேற்றவாறு ஆலோசனை, மனநல மருத்துவம் போன்றவற்றால் சரி செய்ய முயல வேண்டும். நண்பர்களும் பதின்ம வயதில் வித்தியாசமான போக்குடைய மாணவர்களை அறிந்து, பெற்றோரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்.
போதைப் பொருள்களை உட்கொள்கிறவர்களே அதிகம் தற்கொலை செய்துகொள்ள சாத்தியம் இருக்கிறது. முதியவர்களின் தனிமையைப் போக்கும் சூழலும் அவசியம். இவற்றை ஒரே நாளில் மேற்கொண்டுவிட முடியாது. ஆனால், இவை குறித்த விழிப்புணர்வு அவசியத்தை அனைத்துத் தரப்பினரும் உணர்தல் வேண்டும்.
தன் வாழ்க்கைப் பயணத்தின் நோக்கத்தைப் பற்றிய தெளிவும், அதனை அடைவதற்கான வழிமுறைகளையும் அறிதல் அவசியம். நல்ல விஷயங்களில் தம்மை ஈடுபடுத்திப் பிடிப்பை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். நேர்மறையான எண்ணங்களை மனதில் கொள்ள வேண்டும். வாழ்க்கையில் எதிர்ப்படும் சிறுசிறு சவால்களைத் துன்பங்களாகக் கருதாமல் அனுபவமாகக் கருதி எதிர்கொள்ளப் பழகிக்கொள்ள வேண்டும்.
நேர்மையான எண்ணம் கொண்டவர்களை நண்பர்களாகக் கொள்வதும், எதிர்மறை எண்ணம் கொண்டவர்களை விட்டுவிலகி இருத்தலும் வேண்டும். குடும்பத்தில் பெற்றோர்கள் குறைகூறுபவர்களாக மட்டுமில்லாமல், பிள்ளைகளின் திறமைகளை ஊக்குவிப்பவர்களாகவும், பாராட்டுபவர்களாகவும் இருக்க வேண்டும்.
நமக்கு வரும் துன்பங்களைத் தூசுபோல் கருதி அதன் மேலேறி வெளிவரப் போகிறோமா என்பது ஒவ்வொரு தனி மனிதனையும் பொருத்தது. இந்த மனவலிமை நம் ஒவ்வொருவருக்குள்ளும் உள்ளது. சந்தர்ப்ப சூழலால் சற்றே தளர்ந்து போய் மனஅழுத்தம் மிகுந்திருக்கும் போது உடனிருப்பவர்கள் அவர்களோடு மனம்விட்டுப் பேசினாலே பாதிப் பிரச்சினை தீர்ந்து விடும்.
தன்னை ஒருவன் அறிந்தால்தான் தன்னிடமிருக்கும் பலமும் பலவீனமும் புரியும். இதயத்தில் மண்டிக்கிடக்கும் அறியாமை இருட்டு அகன்று நல்லறிவு பெறும்.
வாழ்க்கைப் பயணத்தில் வழி தவறி விழுந்துவிட்டு விதியை நொந்துகொள்வதும், சோம்பேறிகளுக்குச் சொர்க்கமில்லை என்ற மூதாதையர்களின் முதல் அறிவுரையை மறந்துபோய்விட்டு எல்லாம் என்னுடைய தலையெழுத்து என்று சொல்லித் தோல்விக்குத் தானே சமாதானம் தேடுவதும், அந்த ஆண்டவனுக்கும் கண்ணில்லாமற்போனது என்று கண்ணீர் விடுவதும் உளிதரும் வலியைப் பொறுத்துக் கொண்டால்தான் பாறையும் சிற்பமாகும் என்பதைச் சிந்திக்க மறந்ததால்தான்.
உயிர் முக்கியமா? உணவு முக்கியமா? என்ற இழந்தால் பெற முடியாத உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் உந்துதலுடன் ஓடும் ஓர் உயிரும், பசிக்கு இரை தேடும் உந்துதலுடன் ஓடும் மற்றோர் உயிரும் தனக்கான உந்துதலுடன்தான் ஓடுகின்றன. ஆனால், உணவின் உந்துதலைவிட உயிரின் உந்துதலே பெரிது.
உந்துதலின் அளவுதான் ஒவ்வொரு மனிதனுடைய உயரத்திற்குமான அடித்தளம் என்பதை உணர வேண்டும்.
உந்துதல் இல்லாத மனித வாழ்க்கையில் சாதனைகளுக்கோ, சரித்திரங்களுக்கோ இடமில்லை. பயிற்சியும் முயற்சியும் உழைப்பும் இல்லாத மனிதனுக்கு வாழ்க்கையுமில்லை, வளர்ச்சியுமில்லை.
உழைப்பின்றி உண்ணும் உணவு திருட்டுக்குச் சமம் என்பதை உணராதவன், தன்னுடைய வியர்வையின் விளைச்சலில் பசியாறுவதுதான் சுயமரியாதை என்பதை மறுப்பவன், மறந்தவர்கள்தான் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.
வாழ்க்கையில் ஒவ்வொருவரும் ஏதாவதொன்றை நோக்கிதான் வாழ்க்கைப் பயணத்தை மேற்கொண்டு வருகிறோம். அந்தப் பயணத்தில் நம்முடைய தேடுதல் என்ன, பயணம் சரியானதா, திட்டமிடப்பட்டதா, முடிவானதா, இடர்பாடுகள் என்ன, இடர்பாடுகளைக் களைவதற்கான தீர்வுகள் என்ன, என்ற அறிந்து தெளிபவனே வெற்றி நடைபோடுகிறான்.
மனம்தான் மனித மாளிகையின் மைய மண்டபம். மனிதனை ஆட்டிப் படைப்பதும் அலைக்கழிப்பதும்கூட மனம்தான்.
மனதில் எழுகின்ற எண்ணங்களுக்கு ஏற்பவே ஒவ்வொரு மனிதனின் உயர்வும் தாழ்வும் அமைக்கின்றன. அந்த மனதை மனம் வீசும், மாசற்ற மாளிகையாய் மாற்றத் தெரியாதவர்கள்தான் மனம் சொல்லாத செய்திகளை - செயல்களைச் சேமிக்கும் உண்டியலாய் வைத்திருப்பதால்தான் உயிர்ப் பலிகள் நிகழ்கின்றன.
இன்றைக்குத் தற்கொலை செய்துகொள்ளும் பலருடைய மனமும் மனம் ஒரு மலிவான குப்பைக்கூடை, வேண்டாதவற்றை வேண்டித்தேடி தேவையின்றித் தாங்கும் சுமைதாங்கியாகவும், கடந்த கால கழிவுகளை நினைவுகளாகப் புதைத்து வைக்கும் கல்லறை என்று எண்ணியதன் விளைவாலே மரணத்தைத் தேடுகிறார்கள். அதாவது ஒன்றுதல் இல்லாமை. எதைச் செய்கிறோமோ அதைச் சரியாகச் செய்வதற்குக் கிடைக்கும் பெயர்தான் யோகம் என்பார்கள். அதைப் பெறுவதற்குத் தேடுதல் இல்லாதவர்களே இதுபோன்ற தற்கொலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
எட்டுத் திசையிலும் பார்வையைத் திருப்பாமல், எந்தத் திசை வேண்டுமோ அந்த திசையையே தீர்க்கமாகத் தீர்மானம் செய்வதுதான் முக்கியம். மனதின் உறுதியும், வெற்றிக்கான மூல மந்திரம், ஒரு மனம் ஒன்றே எண்ணம் என்ற மந்திரம் தெரியாதவர்களே தற்கொலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
ஆடையின்றிப் பிறந்த ஒவ்வோர் உயிருக்கும் ஆண்டவன் தந்த சாபந்தான் ஆசை. அந்த சாபத்தை மனிதனுக்கு ஏன் தந்தான் என்ற கேள்விக்கு, எப்படியெல்லாம் வாழக் கூடாதோ, அப்படியெல்லாம் வாழ்ந்த நான், இப்படித்தான் வாழ வேண்டும் என சொல்லக் கூடிய யோக்கியதை எனக்கு இருக்கிறது என்று கூறிய கண்ணதாசன், குற்றங்களும் பாவங்களும் அற்றுப்போய் விட்டால் மனிதனுக்கு அனுபவங்கள் இல்லாமற் போய்விடுகின்றன. அனுபவங்கள் இல்லையென்றால் நன்மை, தீமைகளைக் காண முடியாது. தவறுகள் மூலமே உண்மையை உணர முடியும் என்பதற்காகவே இறைவன் ஆசையைத் தூண்டிவிடுகிறான் என்று விளக்கமளிக்கிறார்.
அதாவது, மனிதனின் வேதனைகளுக்கும் கவலைகளுக்கும் ஆறாத ரணங்களுக்கும் காரணங்களாக இருப்பது ஆசைதான்.
ஒன்றை நினைப்பதால் வருவது பற்று. அது ஆசையாய் பரிணமிக்கிறது. அது சினமாக உருவெடுப்பதால் மனம் மயங்குகிறது. அதனால் நினைவு அழிகிறது. அந்த அழிவால் புத்தி நாசமடைகிறது. அதனால் மனிதன் அழிகிறான் என்று ஆசையின் சீரழிவைப் பட்டியலிடுகிறது பகவத் கீதையின் சாங்கிய யோகம்.
ஒவ்வோர் இன்பத்தின் மடியிலும் துன்பம் துயரமற்றுத் தூங்குவதையும், இன்பத்தின் நிழலாய்த் துன்பம் நீங்காமல் தொடர்வதையும் மனிதர்களாகிய நாம் மறந்துவிடுவதே பல்வேறு பிரச்சினைகளுக்குக் காரணங்களாக அமைந்துவிடுகின்றன.
தன்னிடம் பல்வேறு செல்வங்கள் இருந்தபோதிலும் தன்னிடம் இல்லாத ஒன்று அடுத்தவரிடம் இருந்துவிட்டால் அவ்வளவுதான், எவ்வளவு பெரிய மனிதனுக்கும் பொறாமைப் பேய் பிடித்து ஆட்டிவிடும். 1991 இல் அமெரிக்க உளவியல் ஆய்வாளர் ஷார்ப்ஸிடீன் என்பவர் பொறாமை உணர்வானது அச்சம், கோபம், கவலை ஆகிய உணர்வுகளின் கலவையாக வெளிப்படுகிறது என்று தனது ஆய்வில் தெரிவித்துள்ளார்.
ஆசைப்படும் பொருள்களை அனுபவிப்பதால் ஒருபோதும் ஆசை அடங்குவதில்லை. கோடி செல்வம் இருந்தாலும் ஆசை இருக்கும் வரை மனிதன் ஏழைதான் என்ற ஞானம் ஒவ்வொரு மனத்துக்குள்ளும் எப்போது கனியுமோ அப்போதுதான் இதுபோன்ற தற்கொலைகளுக்கும் கொலைகளுக்கும் கொள்ளி வைக்க முடியும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.