சுதந்திரமும் பாதுகாப்பும் தவிர வேறு எதுவும் அவசியமில்லை

ஜீவன் மற்றும் சுகுணாவின் பேச்சைக் கேட்கும்போது அவர்கள் கொத்தடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டவர்கள்  
சுதந்திரமும் பாதுகாப்பும் தவிர வேறு எதுவும் அவசியமில்லை


ஜீவன் மற்றும் சுகுணாவின் பேச்சைக் கேட்கும் போது அவர்கள் கொத்தடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டவர்கள் பேசும் போது ஏற்படும் உணர்வு ஏற்படவில்லை. வழக்கமாக விடுவிக்கப்பட்ட கொத்தடிமைத் தொழிலாளர்களுக்குப் பயமும் அறியாமையும் இருக்கும். ஆனால் ஜீவனும் சுகுணாவும் அப்படி அல்ல. இந்த இளம் தம்பதி தங்களது உரிமையை உரக்கப் பேசினாலும் அவர்கள் ஒன்பது மாதம் கொத்தடிமைகளாக இருந்ததன் வலி அதில் தெரிகிறது. 2016-ஆம் ஆண்டு அக்டோபர் 6-ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் இயங்கி வந்த ஒரு செங்கல் சூளையிலிருந்து தங்களது இரு மகன்களுடன் இத்தம்பதியினர் மீட்கப்பட்டனர்.

வழக்கமாகப் படிப்பறிவு இல்லாத தொழிலாளர்களைத்தான் ஏமாற்றி அவர்களின் உழைப்பை முதலாளிகள் சுரண்டுவார்கள். ஆனால் ஜீவனின் கதை வித்தியாசமானது. அவர் படித்தவர் மேலும் வெளிப்படையாகப் பேசக்கூடியவர். ஆனால்  குடும்பச் சூழலால் ஒரு செங்கல் சூளை முதலாளியிடம் உதவி கேட்டுத் தன் குடும்பத்துடன் ஒன்பது மாத காலம் கொத்தடிமையாகச் சிக்கிக் கொண்டார்.

ஜீவனும் சுகுணாவும் வெவ்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். இரு சமூகங்கள் மற்றும் குடும்பங்களின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே அவர்கள் காதலித்து திருமணமும் செய்து கொண்டனர். கிராமப்புறங்களில் சாதி மற்றும் சமூகம் சார்ந்த விஷயங்கள் ஆழமாக வேரூன்றியிருக்கும் நிலையில், இவர்களின் திருமணம் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று மட்டுமல்ல அவர்களை ஆணவ படுகொலை செய்யும் அளவிற்கு இழுத்துச் செல்லக் கூடியதும் ஒன்று. ஆதலால் அவர்களது சொந்த கிராமத்தை விட்டு வெளியேறி வேறு கிராமங்களுக்குச் சென்றாலும் அங்கிருக்கும் தத்தமது சாதியைச் சேர்ந்தவர்கள் இவர்களை விட்டு வைக்கவில்லை. நன்றாக பழகியவர்களும் இவர்களுடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்து ஊரை விட்டு ஒதுக்கி வைத்துவிட்டனர். ஆனாலும் ஜீவனும் சுகுணாவும் மனம் தளரவில்லை. இச்சமூகத்தில் எப்படியாவது வாழ்ந்து காட்ட வேண்டும் என்று உறுதியாக இருந்தனர் ஜீவன்

ஒரு சிறிய ரக சுமையை ஏற்றிச் செல்லும் டாட்டா ஏஸ் என்ற வாகனத்தை வாங்க முடிவு செய்தார். அவரிடம் சிறிது சேமிப்பு இருந்தாலும், அது ஒரு பழைய வாகனத்தை வாங்கக் கூட போதவில்லை. இச்சமயத்தில்தான் ஜீவன் தன் சகோதரி வேலை பார்த்த செங்கல் சூலையின் முதலாளியைச் சந்தித்து ரூபாய் 50 ஆயிரத்தைக் கடனாகப் பெற்றுள்ளார். சரக்கு ஏற்றிச் செல்லும் பழைய வாகனத்தை வாங்க மொத்தம் ரூபாய். 1,50,000 வரை ஆகும். எனவே தான் வைத்திருந்த 20 ஆயிரம் ரூபாயையும் முதலாளி கொடுத்த ஐம்பதாயிரம் ரூபாய் சேர்த்து ரூபாய் 70 ஆயிரத்தை முன்பணமாகத் தந்து மீதத்தைத் தவணை முறையில் செலுத்தத் திட்டமிட்டு வாகனத்தை வாங்கினார்.

ஆரம்பத்தில் இத்தம்பதி அதிகமான கஷ்டங்களை எதிர்பார்க்கவில்லை. ஆனால் செங்கல் சூளையில் வேலைக்குச் சேர்ந்த போது அதிகமான வேலை நேரம், போதிய உணவு, சுத்தமான குடிநீர் இல்லாமல் குறைந்த கூலிக்கு வேலை எனப் பல இன்னல்களை அனுபவித்தனர். முன் பணம் வாங்காத தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு வாரமும் ரூபாய். 210-ம், ஜீவன் மற்றும் சுகுணா போன்ற முன்பணம் வாங்கிய தொழிலாளர்களுக்கு வாரம் ரூபாய் 150 எனக் கூலி நிர்ணயிக்கப்பட்டு இருந்தாலும் அவர்களுக்கு ஒவ்வொரு சனிக்கிழமையும் வெறும் 100 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டது.

'நான் செய்த ஒரே தவறு முன்பணத்தை வாங்கியதுதான். ஆனால் இம்மாதிரி குடும்பத்துடன் கஷ்டப்படுவோம் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. எனக்கு கொத்தடிமைத் தொழிலாளர்கள் பற்றித் தெரியும் ஆனால் அது எல்லாருக்கும் நடக்காது, முக்கியமாக எனக்கு நடக்காது என்று.'  - ஜீவன்.

செங்கல் சூளையில் தினமும் காலை மூன்று மணிக்கே எழுந்து வேலையைத் தொடங்கினால் இரவு எட்டு மணி வரை வேலை செய்ய வேண்டும்.  மண்ணைக் குழைத்து, செங்கல் அறுத்துக் காய வைத்து அதனை சூளையில் அடுக்குவது வரை ஓயாமல் வேலை இருந்து கொண்டே இருந்தது. காலை ஒரு முப்பது நிமிட இடைவேளையில் பெண்கள் சமையலை முடித்து தங்கள் குடும்பத்துடன் சாப்பிட்டுவிட்டு மீண்டும் பணிக்குத் திரும்ப வேண்டும்.

செங்கல் சூளையில் வேலை செய்யும் பெண் தொழிலாளர்களுக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லை. பெண் தொழிலாளர்களுக்குக் குளிக்க மற்றும் கழிப்பிடம் செல்ல என எவ்வித மறைவிடமும் இல்லை. அனைவரும் குறித்த நேரத்திற்கு வேலைக்குப் புறப்படுவதால் ஆண்களும் பெண்களும் ஒரே நேரத்தில் குளித்து முடிக்க வேண்டிய நிலை இருந்தது என ஜீவனும் சுகுணாவும் நினைவு கூறுகின்றனர்.

ஜீவன் தனது மூத்த மகனைப் பள்ளிக்கு அனுப்ப முயன்றும் முதலாளி அதற்குச் சம்மதிக்கவில்லை. சுகுணாவின் இரண்டாவது குழந்தைப் பேற்றுக்கு ஜீவன் தனது வாகனத்தைப் பயன்படுத்தி அழைத்துச் செல்ல முடியாமல் அவர் நடந்தே மருத்துவமனைக்கு சென்று வந்திருக்கிறார்.

'முதலாளி எங்கள் ஒவ்வொரு அசைவையும் கவனித்தார். நாங்கள் வெளியில் எங்கும் செல்ல முடியாத அளவிற்கு எங்களைத் தடுத்தது மட்டுமல்லாமல் எனது வாகனத்தையும் என்னிடம் இருந்து பிடுங்க முயன்றார். என் மனைவி கர்ப்பமாக இருந்தபோது எனது சரக்கு வாகனத்தில் அவளை அழைத்துச் செல்ல அனுமதிக்கவில்லை. நான் உங்களிடம் இருந்து 50 ஆயிரம் ரூபாயைக் கடனாகப் பெற்றதால் இந்த வாகனம் உங்களுக்குச் சொந்தம் இல்லை என்று அவரிடம் கடுமையாக பேசினேன்' - ஜீவன்.

ஜீவனும் சுகுணாவும் கல்வியறிவு பெற்று தைரியத்துடன் இருக்கவே அவர்கள் மீது ஒரு நாளும் முதலாளி கை நீட்டியது இல்லை. ஆனால் அங்கு வேலை செய்யும் மற்ற தொழிலாளர்களை சரியாக வேலை செய்யவில்லை என்றாலும், ஓய்வு தேவைப்படும் நேரத்தில் கேட்டாலும் முதலாளி திட்டியும் தாக்கியும் உள்ளார். முதலாளியின் அடக்குமுறைக்கு எதிராக ஜீவன் தொடர்ந்து செயல்பட அவருக்கு மேலும் மேலும் பிரச்னைகள் வந்தன. ஜீவன் வாங்கிய 50 ஆயிரம் ரூபாய் முன்பணத்தைக் காட்டிலும் போலியான கணக்கு எழுதி அதிகமான தொகையை முதலாளி கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஜீவன் செங்கல் சூளையை விட்டுத் தப்பிச் செல்ல இதுதான் சரியான நேரம் என உணர்ந்துள்ளார்.

அவர்களை மீட்கும் நாளுக்கு முந்தைய நாள், ஆறு மாத கால கர்ப்பிணியாக இருந்த சுகுணா செங்கல் சூளையிலிருந்து தப்பித்து திருவள்ளூர் மாவட்ட மண்டல வருவாய் அலுவலரை (RDO) சந்தித்து மனு ஒன்றை அளித்தார். மனுவை ஒப்படைத்த பின்னர் சுகுணா மீண்டும் செங்கல் சூளைக்கே திரும்பிவிட்டார். அதுவரை முதலாளிக்கு அவர்களின் மீது எந்தவித சந்தேகமும் ஏற்படவில்லை. ஆனால் காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள் வருவதை அறிந்த முதலாளி அருகில் இருக்கும் மற்ற செங்கல் சூளைகளின் முதலாளிகளிடம் தெரிவித்துவிட்டுத் தலைமறைவாகி விட்டார். அதிகாரிகள் அங்கு விரைவதற்கு முன்பே மற்ற முதலாளிகள் சேர்ந்து ஜீவனையும் சுகுணாவையும் அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றுள்ளனர். ஜீவனுக்குக் அவரது பணமும் வாகனமும் திருப்பி தருவதாக கூறி சமாதானப்படுத்த முயன்றுள்ளனர். ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் ஜீவன் பிடிவாதமாக இருந்துள்ளார். ஜீவன் மற்றும் அவரது சகோதரியின் குடும்பங்களைத் தமிழக அரசு மீட்டது. இருப்பினும் அதே நாளில் கடன் தவணையைச் செலுத்தாததால் ஜீவனின் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

மற்ற கொத்தடிமைத் தொழிலாளர்கள் போலல்லாமல் ஜீவனும் சுகுணாவும் படித்தவர்கள். ஜீவன் ஐடிஐயில் பிட்டர் என்ற இயந்திரங்களைப் பழுது பார்த்துப் பராமரிக்கும் தொழிற்பயிற்சி பயின்றுள்ளார். ஜீவனுக்குத் தகுதி இருந்தும் தற்போது வேலை ஏதும் இல்லை. அவ்வப்போது கூலிக்காக டிரைவர் வேலைக்குச் சென்று குடும்பச் செலவுகளைச் சமாளிக்கிறார். தற்போது ஆட்டோ ஒன்றையும் அவர் வாங்கியுள்ளார். ஆனாலும் அவர் மாற்றுச் சமுதாயத்தினர் மத்தியில் வாழ்வதால் அவருக்குச் சவாரிகள் கிடைப்பதில்லை. ஆகையால் அதே கிராமத்தில் உள்ள பெரும்பான்மை சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரைக் கூலிக்கு அமர்த்தி தனது வருமானத்தை அவருடன் பகிர்ந்து கொள்கிறார். சொந்தமாக ஆட்டோ வாங்கியும் அவரால் அதன் முழு வருமானத்தைப் பெற முடியவில்லை.

'எனக்கு நிரந்தரமான வேலை இல்லை என்றாலும், ஒரு சுதந்திரமான அமைதியான வாழ்க்கையை வாழ முடிகிறது. இருப்பதை மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழ்ச்சியாக வாழ்கிறோம்' என்கிறார் ஜீவன்.

அரசு வழங்கிய மறுவாழ்வு தொகையைச் சரியாகப் பயன்படுத்தித் தங்குவதற்கு ஒரு வீட்டைக் குத்தகைக்கு எடுத்துள்ளனர். அவர்களின் இரு குழந்தைகளும் கொத்தடிமையிலிருந்து இருந்து தப்பித்து மற்ற குழந்தைகள் போல மகிழ்ச்சியாகப் பள்ளிக்குச் செல்கின்றனர். அவர்களுக்கு நிச்சயம் ஒரு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது.

இந்த குடும்பத்திற்குச் சுதந்திரமும் பாதுகாப்பும் தவிர வேறு எதுவும் அவசியமில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com