ஜீவஜோதி கணவர் கொலை வழக்கு: 19 ஆண்டுகள் கடந்து வந்தத் துயரப் பாதை!

பி ராஜகோபால்.. சரவணபவன் ஹோட்டல் குழுமத்தின் நிறுவனர். வெற்றி பெற்ற தொழிலதிபர். தனது நிறுவன ஊழியர் ஒருவரைக் கொலை செய்த வழக்கில் இவருக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்திருக்கிறது உச்ச நீதிமன்றம்.
ஜீவஜோதி கணவர் கொலை வழக்கு: 19 ஆண்டுகள் கடந்து வந்தத் துயரப் பாதை!


பி ராஜகோபால்.. சரவணபவன் ஹோட்டல் குழுமத்தின் நிறுவனர். வெற்றி பெற்ற தொழிலதிபர். தனது நிறுவன ஊழியர் ஒருவரைக் கொலை செய்த வழக்கில் இவருக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்திருக்கிறது உச்ச நீதிமன்றம்.

ஆரம்பத்தில் மளிகைக் கடையைத் தொடங்கி அதில் வெற்றி பெற்று பிறகு சரவண பவன் எனும் மிகப்பெரிய ஹோட்டல் குழுமத்துக்குச் சொந்தக்காரரானவர்.

இவரது ஹோட்டலில் வேலை செய்த பிரின்ஸ் சாந்தகுமாரின் மனைவி ஜீவஜோதியை 3வதாக திருமணம் செய்ய விரும்பினார். ராஜகோபாலின் இரண்டாவது மனைவியும், தனது ஹோட்டலில் வேலை செய்த ஊழியரின் மனைவியாவார்.

ஜீவஜோதியின் தந்தை ராமசாமியும் சரவணபவன் ஹோட்டலில் பணியாற்றிய ஊழியர் என்பதும், அவர் வேறு பணிக்காக மலேசியா சென்றுவிட்டதும் வேறு கதை. 

ராஜகோபாலின் விருப்பத்தை ஜீவஜோதி ஏற்கவில்லை. 1999ம் ஆண்டு அவர் பிரின்ஸ் சாந்தகுமாரை திருமணம் செய்து கொண்டார். இவர் டியூஷன் டீச்சராக இருந்து, ஜீவஜோதியின் மீதான காதலால் சரவண பவனில் வேலைக்குச் சேர்ந்தவர். 

திருமணம் ஆன நாள் முதலே ராஜகோபால் சாந்தகுமார் - ஜீவஜோதி தம்பதியரை மிரட்டி வந்துள்ளார். திருமணத்தை ரத்து செய்துவிட்டு விலகிவிடுமாறு மிரட்டி வந்தார்.

ராஜகோபால் ஏவிய கூலிப்படையினரால் இருவரும் கடத்திச் செல்லப்பட்டு மிரட்டியும் கூட தம்பதியினர் பயப்படவில்லை. உள்ளூர் காவல்நிலையத்தில் ராஜகோபாலுக்கு எதிராக புகார் கொடுத்தனர்.

அதன்பிறகுதான் ராஜகோபால் தனது நடவடிக்கையை தீவிரமாக்கினார். 2001ம் ஆண்டு சாந்தகுமாரை ஆள் வைத்துக் கடத்திக் கொலை செய்தார். கணவர் காணாமல் போனதாக ஜீவஜோதி 2001 அக்டோபர் 1ம் தேதி புகார் அளித்தார். அதன்பிறகுதான் 31ம் தேதி சாந்தகுமாரின் உடல் கொடைக்கானலில் கண்டெடுக்கப்படுகிறது.

உள்ளூர் ஊடகங்களில் இந்த தகவல் விஸ்வரூபம் எடுக்கிறது. நவம்பர் 23ம் தேதி நீதிமன்றத்தில் சரண் அடைகிறார் ராஜகோபால். விரைவில் ஜாமீனில் விடுதலையாகிறார்.

2003ம் ஆண்டு ஜீவஜோதிக்கு பணம் கொடுத்து வழக்கைத் திரும்பப் பெற முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில்தான் பூந்தமல்லி நீதிமன்றம் ராஜகோபலுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது. மேலும், ரூ.55 லட்சத்தை அபராதமாகவும், இதில் ரூ.50 லட்சத்தை ஜீவஜோதிக்கு நஷ்ட ஈடாக அளிக்கவும் உத்தரவிடுகிறது.

இதனை எதிர்த்து ராஜகோபால் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, கீழமை நீதிமன்றம், கொலை வழக்கின் கீழ் தண்டனை வழங்கத் தவறியதை எடுத்துக் கூறி, இந்திய அரசியலமைப்புச் சட்டம் 302ன் கீழ் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.

இதனை எதிர்த்து குற்றவாளிகள் உச்ச நீதிமன்றத்தை நாடினர். சம்பவம் நடந்து சுமார் 19 ஆண்டுகளுக்குப் பிறகு, ராஜகோபால் உள்ளிட்ட குற்றவாளிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்து இன்று தீர்ப்பளித்துள்ளது.

இந்த வழக்குக் கடந்து வந்த பாதை...

2001 அக்டோபர் 1ம் தேதி
சாந்தகுமார் - ஜீவஜோதி தம்பதியினர் தாங்கள் கடத்தப்பட்டு மிரட்டப்பட்டதாக உள்ளூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கின்றனர்.

2001 அக்டோபர் 26ம் தேதி
சென்னையில் இருந்து சாந்தகுமார் கடத்தப்பட்டு, கொடைக்கானல் கொண்டு செல்லப்பட்டு அன்றைய தினமே கொலை செய்யப்படுகிறார். கணவர் காணாமல் போனதாக காவல்நிலையத்தில் ராஜகோபாலுக்கு எதிராக ஜீவஜோதி புகார் அளிக்கிறார். 

2001 அக்டோபர் 31
ஜீவஜோதியின் கணவரான சாந்தகுமாரின் உடல் கொடைக்கானல் பகுதியில் பெருமாள்மலை என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து விசாரணை நடத்திய போலீஸார், ஜீவஜோதியை மணப்பதற்காக சாந்தகுமாரை கொலை செய்ததாக பிரபல ஹோட்டல் அதிபர் ராஜகோபால் மீதும், அவருக்கு உதவிய சிலர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

2004 ஏப்ரல் 26ம் தேதி
வழக்கை விசாரித்த சென்னை பூந்தமல்லி கூடுதல் நீதிமன்றம், சரவண பவன் உரிமையாளர் ராஜகோபால் மற்றும் அவருக்கு உதவிய டேனியல், கார்மேகம், ஸாகிர் ஹுசைன், காசி விஸ்வநாதன், பட்டுராஜன் உள்ளிட்டோருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. மேலும் தமிழ்செல்வன், சேது, முருகானந்தம் ஆகியோருக்கு 3 ஆண்டு கடுங்காவல் சிறை விதித்தது.

2009 மார்ச் 19ம் தேதி
இதனை எதிர்த்து குற்றவாளிகள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள், ராஜகோபால் மற்றும் 5 பேருக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டுக் கடுங்காவல் சிறைத் தண்டனையை ஆயுள் தண்டனையாக உயர்த்தியது. மற்ற 3 பேருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்தது.

2009 அக்டோபர் 7ம் தேதி
சாந்தகுமார் வழக்கில் ராஜகோபால் உள்ளிட்ட குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

2012 மார்ச் 20ம் தேதி
கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற குற்றவாளி ராஜகோபால் (66) சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல வசதியாக, தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்குமாறு கோரி மனு தாக்கல் செய்தார். 

2019 மார்ச் மாதம் 29ம் தேதி
இந்த வழக்கில் ராஜகோபாலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் விதித் ஆயுள் தண்டனையை உச்ச நீதிமன்றம் சுமார் 19 ஆண்டுகளுக்குப் பிறகு உறுதி செய்துள்ளது. ராஜகோபால் வரும் ஜூலை 7ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் சரணடையுமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com