பல வருடங்கள் கழிந்தாலும் சில ஆயிரங்கள் கழிவதேயில்லை

இப்பிரபஞ்சத்தில் படைப்புகளிலெல்லாம் சிறந்தது 'மனிதம்' என்பதை மறுக்க முடியாது
பல வருடங்கள் கழிந்தாலும் சில ஆயிரங்கள் கழிவதேயில்லை
Published on
Updated on
2 min read

 
இப்பிரபஞ்சத்தில் படைப்புகளில் எல்லாம் சிறந்தது 'மனிதம்' என்பதை மறுக்க முடியாது, ஏனெனில் மனிதன் தோன்றியது முதல் இன்று வரை அவனின் வளர்ச்சி பிரமிக்க செய்கிறது. எந்த ஒரு செயலும் மனிதனால் செய்யப்பட்டால் பேராற்றல் பெறுகிறது, இது எதனால் சாத்தியம் எனில், உலகம் அனைத்திலும் அவனுக்கு கிடைக்கப் பெற்ற பொக்கிஷம் வேறெந்த உயிர்களுக்கும் கிடைக்காத சுதந்திரமே. அத்தகைய சுதந்திரம் மனிதர்கள் எல்லாருக்கும் உண்டா என்றால் உண்டு, ஆனால் அது மறுக்கப்படுகிறது என்பதே மறுக்க முடியாத உண்மை.

காரணம், தன் ஆற்றலால் அனைத்தையும் ஆளத் துடிக்கும் மனிதன் தன் சொந்த இனத்தையும் அதைப் போலவே செய்ய விளைகிறான் என்பதில் தொடங்கியது இந்த 'முரண்பாடு' இன்று நாம் காணும் அடிமைத்தன 'பண்பாடு'. இந்த முரண்பாட்டில் தோன்றிய ஒன்றுதான் 'கொத்தடிமை' எனும் அடிமைத்தன முறை.

ஒருவனின் அறியாமை மற்றும் ஏழ்மையை வசமாக்கி அதன் மூலம் அவனை அடிமையாக்கி, அவனது குடும்பத்தையும் கட்டுக்குள் கொண்டு வரும் கொடுமையே கொத்தடிமை.'

வறுமையை எதிர்கொள்ள தான் வாங்கிய சிறு கடன் அவனின் உரிமையையும் உழைப்பையும் சுரண்டும் தூண்டில் என்று அறியாமல் மாட்டிக் கொள்கிறான். பல வருடங்கள் கழிந்தால் கூட, அவன் வாங்கிய சில ஆயிரங்கள் கழிவதேயில்லை. தனது குடும்பமும், குழந்தைகளின் எதிர்காலமும் விலை போனதை உணர்ந்தாலும் மீள முடியாத நிலையில் கொத்தடிமையில் சிக்கி கொண்டனர் பலர்.  அதை தட்டிக் கேட்க தைரியமும் இல்லை, அது தவறென்று தெரிவதுமில்லை.   

சமூகத்தின் பார்வையில், கடன் வாங்குவதும் கொடுப்பதும் தவறில்லை என்றாலும், அது அவனது உரிமையையும் உழைப்பையும் சுரண்டுவதாக அமைந்தால் சமூகம் அதை அனுமதிக்க கூடாது, இக்கொடுமையை கண்டிக்க சட்டங்கள் பல இருந்தாலும், நம் சமூகம் கண்டு கொள்ள தவறினால், இது போன்ற மனித சுரண்டல்கள் சுதந்திரமாக நடக்க வழி வகுக்கும். மனிதனால் மனிதனக்கு இழைக்கப்படும் அநீதியை; ஆண்டாண்டு காலமாக எல்லாவற்றையும் இழந்து விலங்குகள் போல நடத்தப்படும் நம் சக சொந்தங்களை;

கொத்தடிமை எனும் பூட்டப்பட்ட விலங்கில் இருந்து விடுவிக்க ஒன்றிணைவோம் ஓர் சமூகமாய்!

இவர்களையும் இணைத்துக் கொள்வோம், சுதந்திர தேசத்தில் ஓர் அங்கமாக்குவோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com