வேலை வாய்ப்பு என்ற பொய்யான வாக்குறுதியை நம்பி ஏமாறும் மக்கள்!

அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா போன்ற நாடுகளில்கூட மனிதர்களைக் கட்டாயப்படுத்தி அவர்களின் உழைப்பைச் சுரண்டுவது வாடிக்கையாக உள்ளது.
bonded labour
bonded labour
Published on
Updated on
2 min read

கொத்தடிமை முறை என்பது மனித கடத்தலின் ஒரு வகையாகும். இம்முறை உலகிலுள்ள பல்வேறு நாடுகள் தங்களது குடிமக்களுக்கு வழங்கியுள்ள அடிப்படையான சுதந்திரத்திற்கு எதிரானது என்ற போதிலும் அதிகம் கவனம் பெறாமலேயே உள்ளது. இதனைத் தடுக்க கடுமையான சட்டங்கள் இயற்றப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா போன்ற நாடுகளில் கூட மனிதர்களைக் கட்டாயப்படுத்தி அவர்களின் உழைப்பைச் சுரண்டுவது வாடிக்கையாக உள்ளது. கொத்தடிமைத்தனம் என்பது ஒருசிலரின் லாபத்திற்காக ஒரு தனி மனிதனையோ அல்லது அவரின் குடும்பத்தையோ கட்டாயப்படுத்தி அவர்(களின்) உழைப்பை வாங்கிக்கொண்டு ஏமாற்றும் சட்ட விரோத செயலாகும்.

கொத்தடிமை முறை உற்பத்தி மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களில் பரவலாகக் காணப்படுகிறது. உலகெங்கும் உள்ள பேராசை பிடித்த உற்பத்தியாளர்கள்/ முதலாளிகள் அவர்களின் லாபத்தைப் பன்மடங்கு பெருக்க இவ்வகையான முறையற்ற செயலில் ஈடுபட்டு ஏழை எளிய மக்களின் வாழ்க்கையுடன் விளையாடுகின்றனர். உழைப்புச் சுரண்டலுக்காக கடத்தப்படும் நபர்களுக்கும் பாலியல் ரீதியான சுரண்டலுக்கு உள்ளாகும் நபர்களுக்கும் பல ஒப்புமைகள் இருந்தாலும் கடுமையாக உடல் உழைப்புச் சார்ந்த வேலைகள் வாங்கப்பட்டு துன்புறுத்தப்படுகின்றனர். பாலியல்ரீதியான சுரண்டலுக்கு உள்ளாகும் நபர்கள் எப்படி சிறிய பொறியில் சிக்கிக் கொள்கின்றனரோ அதேபோல உழைப்பு சுரண்டலுக்கு உட்படுபவர்களும் சிக்கிக் கொள்கின்றனர். வேலை வாய்ப்பு என்ற பொய்யான வாக்குறுதியை நம்பி மக்கள் இடைத்தரகர்கள் அல்லது மனித கடத்தலில் ஈடுபடும் நபர்களிடம் சிக்கிக் கொள்கின்றனர். உழைப்புச் சுரண்டலின் மற்றொரு வகை தான் கொத்தடிமை முறை என்று கூறினால் மிகையாகாது.

கொத்தடிமை முறையில் தொழிலாளர்கள் ஆதாயம் பெறும் வகையில் சிறு தொகையை முன்பணமாகப் பெற்றுக்கொண்டு அதனைத் திருப்பி செலுத்த தங்களது உழைப்பைத் தருகிறோம் என்று கூறி முதலாளி/கடன் வழங்குபவர்களிடம் ஒப்புக்கொள்கின்றனர். ஆனால் இதில் உடன்பட்ட பின்னர் கடன் வழங்கியவர் அவருக்கு ஏற்றவாறு விதிகளை மாற்றிக் கொள்கிறார். மேலும் தொழிலாளர்களை உடல் மற்றும் மனரீதியாக முதலாளிகள் துன்புறுத்த முனைகின்றனர். படிப்பறிவு இல்லாத காரணத்தால் முதலாளிகள் தொழிலாளர்களை எளிதில் ஏமாற்றி விடுகின்றனர். கடனாக வாங்கிய சிறு தொகைக்குக் கூட அதிகப்படியான வட்டி தொகை, அன்றாட செலவுகளுக்கு வாங்கும் பணத்தை முன்பணத்துடன் சேர்த்து தொழிலாளர்கள் தங்களது வாழ்நாள் முழுக்க உழைப்பின் மூலம் அந்த முன்பணத்தைத் திருப்பி செலுத்த கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.

சில நேரங்களில் அடுத்தடுத்த தலைமுறைக்குக் கூட கடந்து பெற்றோர் வாங்கிய கடனை திருப்பி அடைக்கும் சம்பவங்கள் அரங்கேறுகின்றன. மேலும் இடைத்தரகர்களை நம்பிச் செல்லும் தொழிலாளர்களை மொழி தெரியாத ஊர்களுக்கு அனுப்பி வைத்து அங்கிருக்கும் முதலாளிகளிடமிருந்து தப்பித்து வர முடியாமல் பலர் தவித்து வருகின்றனர். பழக்கப்படாத சூழலில் பல கட்டுப்பாடுகளுக்கும் வசைச் சொற்களுக்கும் ஆளாகும் அவர்களின் வாழ்க்கை இருளில் மூழ்கிவிடுகிறது.

பொதுச் சமூகம் நம்ப முடியாத அளவிற்கு ஒருபுறம் கொத்தடிமை முறை நவீன யுகத்திலும் நிலவி வருகிறது வேதனை அளிக்கிறது. ஆட்கடத்தல் காரர்களின் எளிதான இலக்காக ஏழைகள் மற்றும் புலம்பெயரும் மக்கள் இருக்கிறார்கள். அது தென் இந்தியாவில் உள்ள ஒரு செங்கல் சூளை ஆனாலும் கலிபோர்னியாவில் உள்ள ஒரு விவசாயத் தோட்டம் ஆகட்டும் பாதிக்கப்படுபவர்கள் தங்கள் பணத் தேவைகளுக்காகவும் ஆசைகளுக்காகவும் சிக்கிக் கொள்கின்றனர் என்பது தெளிவாகிறது. கொத்தடிமை முறையில் சிக்குவதற்கு ஒரு சிறிய தொகை அல்லது எல்லை கடந்து கடத்தல் தொழில் ஆகியவையே போதும். அதில் மாட்டிக் கொண்ட பின்னரே கடத்தல்காரர்களின் கோர முகம் தெரிய வருகிறது.

கொத்தடிமை முறை நம் சமூகத்தில் பல நூறு ஆண்டுகளுக்கு மேலாக வளர்ந்து புரையோடிப் போயுள்ளது. பண்டைய கிரேக்க நாகரிகம் தொட்டு இந்நாள்வரை நம் சமூகத்தில் இக்கொடிய முறை நிலவி வருகிறது. அமெரிக்காவை காலனியாதிக்கத்தின் கீழ் கொண்டு வந்த ஐரோப்பியர்கள் பரந்து விரிந்த நிலப் பரப்புகளில் வேலை செய்ய ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து கறுப்பின மக்களை அடிமைகளாக்கி அங்குக் கொண்டு சென்றனர். சந்தையில் விற்கப்பட்டும் வாங்கப்பட்டும் அம்மக்களை அடித்துத் துன்புறுத்தி அவர்களின் உழைப்பைச் சுரண்டி வளர்ந்தது அமெரிக்கா. இதே போலத் தான் நவீனக் காலத்தில் நடக்கும் கொத்தடிமை முறையும்.

ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தொழிலாளர்கள் வாங்கும் சொற்ப கடன் தொகை பின்னாளில் அவர்களுக்கு பெரும் தொல்லை ஆகிறது. ஏழை எளிய மக்களை இது போன்ற அடக்குமுறைகளுக்கு உள்ளாகும் சூழல் எந்த ஒரு நாட்டிற்கும் நல்லதல்ல. கொத்தடிமை முறையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமானால் அடக்குமுறையை ஏறுபவர்களை சட்டத்தின் முன் நிறுத்தித் தண்டிப்பது மட்டுமல்லாமல் ஏழை எளிய மக்களுக்கு உள்ள உரிமைகள் மற்றும் சட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு அவசியம்.

கொத்தடிமை முறைக்கு ஆட்களைக் கடத்தும் சம்பவங்களில் ஒரு பொதுத்தன்மை இருக்கிறது. கட்டாயப்படுத்தப்பட்டு உடல் உழைப்பைச் சுரண்டுவதற்காக ஆட்களைக் கடத்தும் நிலையில் நம் சமூகத்தில் நிலவும் ஏழ்மையும் முக்கிய பங்காற்றுகிறது. பல நேரங்களில் கொத்தடிமைகளாகச் சிக்கும் பலர் சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் இருக்கின்றனர்.

மனிதர்கள் வெவ்வேறு இடங்களுக்கு புலம்பெயரும் போது இடைத்தரகர்களிடம் சிக்காமல் இருக்கச் சர்வதேச உதவியும் ஒத்துழைப்பும் அவசியம் இருந்தால் மட்டுமே மனித சமூகத்தில் கொத்தடிமை முறையை முடிவுக்குக் கொண்டுவர முடியும். மேலும் தொழிலாளர்களைப் பணி அமர்த்தும் நிறுவனங்கள் அவர்களுக்கு சட்டரீதியாகவும் பாதுகாப்பான பணிச் சூழலையும் ஏற்படுத்தித்தர அதிக கவனம் செலுத்த வேண்டும்.

இறுதியாக ஏழை எளிய மக்களைக் கொத்தடிமை முறை மற்றும் அதன் ஆபத்துகளைப் பற்றி விளக்கும் வகையில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். சர்வதேச அளவில் அரசுகள் பொறுப்புணர்வுடன் செயல்பட்டால் நம் சமூகத்திலிருந்து கொத்தடிமை முறையை வெகுவாக குறைத்து அதனை அப்புறப்படுத்திவிட முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com