பள்ளிகளில் தலைதூக்கும் சாதிய பாகுபாடுகள் வேரறுக்கப்படுமா?

மதுரை அருகே அரசுப் பள்ளி ஒன்றில் சாதி பெயரைக் கூறி மாணவர் ஒருவரின் முதுகில் சக மாணவர்கள் பிளேடால் கீறிய சம்பவம் பெற்றோர்கள், மாணவர்களினிடையே  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
பள்ளிகளில் தலைதூக்கும் சாதிய பாகுபாடுகள் வேரறுக்கப்படுமா?
Published on
Updated on
4 min read

மதுரை அருகே அரசுப் பள்ளி ஒன்றில் சாதி பெயரைக் கூறி மாணவர் ஒருவரின் முதுகில் சக மாணவர்கள் பிளேடால் கீறிய சம்பவம் பெற்றோர்கள், மாணவர்களிடையே  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மக்கள் பலரும் இந்த சம்பவம் குறித்து தங்களது கருத்துகளையும், கண்டனங்களையும் பதிவிட்டு வருகின்றனர். 

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே பாலமேட்டில் உள்ள அரசு உயா்நிலைப்பள்ளியில் 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவா் சரவணக்குமார். இவர், வழக்கம்போல் வெள்ளிக்கிழமை பள்ளிக்குச் சென்று, மாலையில் பள்ளி முடிந்ததும் வீடு திரும்புவதற்கு புறப்பட்டுள்ளார். அப்போது, சக மாணவா்கள் இவரது புத்தகப் பையை மறைத்து வைத்துள்ளனர். 

இது குறித்து சரவணக்குமார் கேட்டபோது, சாதிப் பெயரைச் சொல்லி அவரை சக மாணவர்கள் திட்டியுள்ளனர். தொடர்ந்து தனது புத்தகப்பையை சரவணக்குமார் கேட்கவே, சக மாணவர்கள் பிளேடால் முதுகில் கீறியுள்ளனர். வலி தாங்க முடியாமல் சரவணக்குமார் கூச்சலிட, அங்கிருந்த ஆசிரியா்கள் ஓடி வந்து அவரை மீட்டு, ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இதுகுறித்து சரவணக்குமாரின் தந்தை ராமு, பாலமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து அவர் கூறுகையில், 'எனது மகன் என்னிடம் வந்து அடிக்கடி கேட்பான். நாம் கீழ் சாதியா? என்று. நானும் ஒவ்வொரு முறையும் அவனை சமதானப்படுத்திப் பள்ளிக்கு அனுப்புவேன்.

மேலும், பல நேரங்களில் பள்ளி விட்டு வரும் போது அவனுடைய பொருட்களை காணவில்லை என்று கூறுவான். ஒருமுறை 'எதுக்குடா உனக்கெல்லாம்  சைக்கிள்' என்று கூறி சக மாணவர்கள் அவனது சைக்கிளை பஞ்சராக்கி விட்டுள்ளனர். எனது சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. காவல்துறையும், அரசும் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியுள்ளார். 

இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து பலரும் தங்களது கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்தச் சம்பவத்தின் மூலமாவது பள்ளிகளில் சாதியப் பாகுபாடுகளைக் களைய தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பெரும்பாலோனோரின் கோரிக்கையாக இருக்கிறது. 

கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழகத்தில் ஒரு சில அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தங்களது சாதிகளைக் குறிக்கும் வகையில் விதவிதமான வண்ணங்களில் கயிறுகளை அணிந்துள்ளனர். மஞ்சள், சிவப்பு, பச்சை, காவி உள்ளிட்ட நிறங்கள் மூலமாக, எந்தெந்த மாணவர்கள் எந்தெந்த சாதியைச் சேர்ந்தவர்கள் என்று தெரிந்துகொண்டு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஒன்றுசேர்ந்து தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த மாணவர்களை கிண்டல் செய்வதும் பல பள்ளிகளில் இருந்து வருகிறது. 

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தமிழக பள்ளிக்கல்வித்துறை ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதன்படி, 'தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் சாதிப்பிரிவுகளைக் குறிக்கும் வகையில் மாணவர்கள் வண்ணக் கயிறுகளைக் கட்டிக்கொண்டு வரக்கூடாது. அவ்வாறு வரும்பட்சத்தில் ஆசிரியர்கள் அதனை கண்டிக்க வேண்டும்.

தொடர்ந்து இதுபோன்று செயல்கள் நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதுபோன்று சாதிய அடையாளத்தைக் குறிக்கும் வகையில் நெற்றியில் திலகமிட்டு வர அனுமதிக்கக் கூடாது' என்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியது. 

உடனடியாக இதற்கு தமிழகத்தில் உள்ள பாஜக தலைவர் ஒருவர் கண்டனம் தெரிவிக்க, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், 'எனது கவனத்திற்கு வராமல் பள்ளிக்கல்வித்துறை இப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. பள்ளிகளில் பழைய முறையே தொடரும்' என்றார்.

இதற்கு தமிழக மக்கள் பலர் எதிர்ப்பு தெரிவிக்க,  'தமிழகப் பள்ளிகளில் சாதியப் பாகுபாடு இல்லை. அப்படி ஒருவேளை சாதிகளை குறிக்கும் வகையில், மாணவர்கள் கைகளில் கயிறு கட்டி வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று கூறினார். 

இதேபோன்று, மதுரையில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இரண்டு பெண் அங்கன்வாடி பணியாளர்கள் நியமிக்கப்பட்டதற்கு அப்பகுதியின் ஒரு சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அவர்களை இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டது. இதற்கு தமிழகம் முழுவதுமே எதிர்ப்பு தெரிவிக்க, அந்த இடமாற்றம் பின்னர் ரத்து செய்யப்பட்டது. திருப்பூரிலும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண் சமையலர் ஒருவரை சாதி வெறியால் இடமாற்றம் செய்த கொடூரமும் அரங்கேறியது. 

ஒரு சில பள்ளிகளில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் பள்ளிகளை சுத்தம் செய்ய உட்படுத்தப்படுகின்றனர். மேலும் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகள் சாப்பிடும் தட்டுகளை வீட்டில் இருந்து எடுத்துவர அங்கன்வாடிகளில் அறிவுறுத்தப்படுகிறது. முக்கியமாக தென் மாவட்டப் பள்ளிகளில் உள்ள மாணவர்களிடையே சாதிய பாகுபாடு அதிகம் காணப்படுகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பள்ளி மற்றும் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு அடிப்படையில் வரும் மாணவர்களையும் சக மாணவர்கள் மதிப்பதில்லை. இதைவிட கொடுமை என்னவென்றால் அம்பேத்கர் உள்ளிட்ட ஒரு சில தலைவர்களின் பாடங்களை வகுப்பில் எடுப்பதற்குக் கூட பள்ளியில் உள்ள ஒரு சில ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் புகார்கள் எழுகின்றன.  

முதலில் இந்த சாதியப் பாகுபாடுகள் தீண்டாமை என்ற நிலையை உருவாக்குவது குறித்து பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஒரு முழுமையான புரிதல் இல்லாத நிலைதான் தமிழகத்தில் நிலவுகிறது. பல இடங்களில் சாதி ரீதியான பாகுபாட்டினால் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கும் நிலைமை ஏற்படுகிறது. பல மாணவர்கள் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விடும் சூழ்நிலையும் ஏற்படுகிறது. 

இதையெல்லாம் பார்க்கும்போது, தமிழக அரசே இந்த விஷயத்தில் முனைப்பு காட்டவில்லை என்று தான் கூற வேண்டும். 'தீண்டாமை ஒரு பாவச் செயல்; தீண்டாமை ஒரு பெருங்குற்றம்; தீண்டாமை ஒரு மனிதத் தன்மையற்ற செயல்' என்று பள்ளிப் பருவத்தில் இருந்தே குழந்தைகளுக்கு புத்தகத்தின் வாயிலாக எடுத்துரைத்தாலும், ஒரு சில பள்ளிகளில் மாணவர்களிடையே சாதிய பாகுபாடு விரிந்து தான் கிடக்கிறது. 

பிஞ்சு நெஞ்சுகளில் புகுந்து கலந்துவிட்ட இந்த நஞ்சு எப்போது அழியும்? பிஞ்சுகளின் நெஞ்சுகளில் இந்த நஞ்சை விதைத்தவர்கள் யாராக இருக்கும்? 

சக மாணவன் முதுகில் ரத்தம் வழியும் அளவுக்கு பிளேடால் கிழிக்க முடிகிறது என்றால் அந்த மாணவனுக்கு இந்த தீண்டாமை என்ற அந்தப் பாடத்தை யார் புகட்டியிருப்பார்கள்? அந்த இரு மாணவர்களின் எதிர்காலம் எப்படி இருக்கும்? இப்படிப்பட்ட ஒரு சமூகத்தில் வாழும் மக்களாகிய நாம் இதனைக் களைவதற்கு என்ன முயற்சி எடுக்கப் போகிறோம்? 

எனவே, பெற்றோர்கள் சாதிய பாகுபாட்டினால் ஏற்படும் எதிர்கால  விளைவுகளை முழுமையாக புரிந்துகொண்டு, தங்களது குழந்தைகளுக்கும்  இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பள்ளிகளில் இதுபோன்ற  சம்பவங்கள் நடைபெற்றால் அதனை எதிர்த்து குரல் எழுப்ப வேண்டும். 

இந்தியா, மதச்சார்பின்மை கொண்ட நாடு பல மொழிகளைப் பேசுபவர்கள் பல ஜாதியைச் சேர்ந்தவர்கள் இங்கு இருக்கின்றனர் என்று கூறிவரும் நம் நாட்டில் சாதிய பாகுபாடுகள் மீண்டும் தலைதூக்கி வருகின்றன. இதனை முளையிலேயே கிள்ளி எறிவது மத்திய, மாநில அரசுகளின் தலையாய கடமையும் ஆகும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com