சுஜித் மரணம்! அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள்!

ஒவ்வொரு முறை இத்தகைய செய்தியைப் படிக்கும்போதும், தொலைக்காட்சியில் (தற்போதெல்லாம் நேரலை வேறு) பார்க்கும் போதும் நெஞ்சம் மிகுந்த பதற்றத்துக்கு உள்ளாகிறோம்.
சுஜித் மரணம்! அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள்!

ஒவ்வொரு முறை இத்தகைய செய்தியைப் படிக்கும்போதும், தொலைக்காட்சியில் (தற்போதெல்லாம் நேரலை வேறு) பார்க்கும் போதும் நெஞ்சம் மிகுந்த பதற்றத்துக்கு உள்ளாகிறோம். 'யார் பெத்த புள்ளையோ நல்லபடியா பொழைச்சு வந்தா போதும் சாமி’ என்று வேண்டும் தாய்மார்கள் முதல், save the child pray for him / her என்று சமூக வலைத்தளங்களில் ஹேஷ்டேக்குடன் வேண்டுதலை முன் வைக்கும் நெட்டிசன்கள் வரை அனைவரின் பிரார்த்தனையும் எப்படியாவது அக்குழந்தை உயிருடன் மீட்கப்பட வேண்டும் என்பதே.

இந்தியா முழுவதும் இதுபோன்ற துயரச் சம்பவங்கள் கடந்த ஆண்டுகளில் நடந்துள்ளன. உலகம் முழுவதும் கூட இச்சம்பவங்கள் நடந்த போதிலும், குழந்தைகள் உடனடியாக மீட்கப்பட்டனர் என்பதுதான் வரலாறு. 

தமிழக அரசு உபயோகம் இல்லாத ஆழ்துளை கிணறுகளை முறையாக மூடி வைக்க வேண்டும் என்று பலமுறை அறிவுறுத்தி வருகிறது. ஆனாலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவது பெரும் சோகம். கடந்த 2009 முதல் கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் மட்டும் சுஜித் உட்பட 13 குழந்தைகள் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளன.  இவர்களுள் 4 குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டாலும், சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தனர்.  6 குழந்தைகள் உயிருடன் மீட்கப்படவில்லை. மேலும் 3 குழந்தைகள் மட்டும்தான் மீட்கப்பட்டபின் நலமுடன் இருக்கின்றனர். உயிர் பிழைத்த குழந்தைகளில் ஒரு குழந்தை 50 அடி ஆழத்திலும் மற்றொரு குழந்தை 18 ஆழமுள்ள கிணற்றிலிருந்தும் மீட்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

2009 பிப்ரவரி 22ம் தேதி ஆண்டிப்பட்டி அருகே ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 6 வயது சிறுவன் மாயி, 30 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மீட்கப்பட்டும் உயிரிழந்தான். அதே ஆண்டு ஆகஸ்ட் 27ம் தேதி திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டில் 3 வயது சிறுவன் கோபிநாத் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்து சடலமாக மீட்கப்பட்டான்.

2011 செப்டம்பர் 8-ம் தேதி நெல்லை மாவட்டம் விஜயநாராயணம் அருகே உள்ள கைலாசநாதபுரத்தில் 200 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன் சுதர்சன் உயிரிழந்தான்.

2012-ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் தளியை அடுத்த மலைக்கிராமமான கும்பளத்தூரில் விவசாய நிலத்தில் ஆறரை அங்குல அகல அளவுக்கு ஆழ்துளை கிணற்றில் ஆனந்த்-பத்மா தம்பதியின் குழந்தை குணா (3) ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது. 4 மணி நேர போராட்டத்துக்கு பின் காயங்களுடன் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது.

2013 ஏப்ரல் 28ம் தேதி கரூர் அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி முத்துலட்சுமி மீட்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தாள்.

அதே ஆண்டு செப்டம்பர் 28ம் தேதி திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே புலவன்பாடி கிராமத்தில் ஆழ்துளை கிணற்றில் 4 வயது சிறுமி தேவி தவறி விழுந்து பரிதாபமாக இறந்தாள்.

2014 ஏப்ரல் 5ம் தேதி திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே கிடாம்பாளையத்தில் துரை - ஜெயலட்சுமி தம்பதியின் ஒன்றரை வயது சுஜித் என்ற ஆண் குழந்தை ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது. 160 அடி ஆழம் உள்ள ஆழ்துளை கிணற்றில் 45 அடியில் சிக்கிய குழந்தை 24 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற போராட்டத்திற்கு பின்னர் சடலமாக மீட்கப்பட்டது.

அதே ஏப்ரல் 5ம் தேதி விழுப்புரம் அருகே பல்லகசேரி கிராமத்தில் ஆழ்துளை கிணற்றில் மதுமிதா என்ற மூன்று வயது சிறுமி தவறி விழுந்து, பல மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மீட்கப்பட்டு மறுதினம் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தாள்.

அதே ஆண்டு ஏப்ரல் 15 ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அருகே ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தையை ரோபோ இயந்திரம் மூலம் மீட்கும் முயற்சி தோல்வி அடைந்த நிலையில், 24 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் அக்குழந்தை சடலமாக மீட்கப்பட்டது.

கடந்த 2014-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி அன்று திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவில் அருகே உள்ள குத்தாலப்பேரியில் 3 வயதுச் சிறுவன் ஹர்ஷன் 18 அடி ஆழமுள்ள குழியில் தவறி விழுந்தான். ஆறு மணி நேரப் போராட்டத்திற்குப் பின்னர் அவனை மீட்டார்கள். இச்சம்பவத்தில் கை போன்ற கருவியை உள்ளே செலுத்தி குழந்தை மேலே இழுக்கப்பட்டது.  ஹர்ஷனை தான் கண்டுபிடித்த கருவியின் மூலம் மீட்டவர் மணிகண்டன்.

2015ம் ஆண்டு ஏப்ரல் 13-ம் தேதி வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே 350 அடி ஆழ்துளை கிணற்றில் சிக்கிய இரண்டரை வயது குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

செப்டம்பர் 23, 2018 - நாகப்பட்டினத்திலுள்ள புதுப்பள்ளியைச் சேர்ந்த கார்த்திகேயனின் மகள் சிறுமி திவ்யதர்ஷினி வீட்டின் பின்புறம் தோண்டப்பட்டிருந்த ஆழ்துளை கிணற்றில் விழுந்துவிட்டாள். இந்தக் கிணறு 18 அடி ஆழமானது. உடனே தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு அக்கிணற்றின் அருகில் பொக்லைனால் ஆழமான பள்ளம் தோண்டி போர்க்கால நடிவடிக்கையாக மீட்கப்பட்டாள்.

தற்போது மீட்புப்பணி தோல்வியடைந்து உயிரிழந்தோர் பட்டியலில் சுஜித் வில்சனும் சேர்ந்துவிட்டான். அவன் மீண்டுவருவான் என்று பிரார்த்தித்த அனைவரின் நம்பிக்கையையும் பொய்த்துவிட்டது. இந்த ஆண்டின் மிகப் பெரிய கொடிய நிகழ்வாக சுஜித்தின் மரணம் ஒவ்வொரு வீட்டிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆழ்துளை குழியினுள் தவறி விழுந்துவிட்ட குழந்தையை மீட்க அறம் படத்தில் காண்பிக்கப்பட்டது போல் கயிறு கட்டி இன்னொரு குழந்தையை ரிஸ்க் எடுத்து உள்ளே அனுப்பி குழியில் விழுந்த குழந்தையை காப்பாற்றுவது. இது மிகவும் ஆபத்தானது, கரணம் தப்பினால் மரணம் எனும்படியாக ஒரு குழந்தைக்கு பதில் இரண்டு குழந்தைகளுக்குமே ஆபத்து ஏற்படும் நிலை உள்ளதால் இதை தவிர்க்கின்றனர்.

இரண்டாவதாக திவ்யதர்ஷினியை மீட்டது போல் பக்கத்தில் மற்றொரு துளை போடப்பட்டு மீட்புக் குழுவினரின் அதிவிரைவான செயல்பாட்டால் காப்பாற்றப்பட்டாள். இதையும் மாதிரியாக எடுத்துக் கொள்வது சில வேளைகளில் சரியாக இருக்காது. காரணம் பள்ளம் தோண்டப்படும் போது ஏற்படும் மண் சரிவுகள் மற்றும் அதிர்வுகளால் குழந்தைகள் பாதிக்கப்படலாம். 

மூன்றாவது மணிகண்டன் கண்டுபிடித்த கருவி. இவற்றுள் எந்த முறையைப் பயன்படுத்தி குழந்தையைக் காப்பாற்ற வேண்டும் என்பதை ஆய்வு செய்து துரித நடவடிக்கை எடுக்கப்பட்டால் மட்டுமே குழந்தையை எவ்வித பாதிப்பும் இன்றி காப்பாற்ற முடியும். கூடுமானவரையில் 24 மணி நேரத்துக்குள் குழந்தையை மீட்க வேண்டும்.

மேற்சொன்ன முறையில் தவறி விழுந்துவிட்ட குழந்தைகளின் மீட்புப் பணி வெற்றி அடைந்ததற்கான காரணம் உடனடி நடவடிக்கை. ஒரு குழந்தை ஆழ்துளை கிணற்றினுள் விழுந்துவிட்டது என்ற செய்து அறிந்ததுமே முதலில் தீயணைப்பு துறைக்கு தகவல் அறிவிக்க வேண்டும். அவர்கள் மீட்புக் குழுவினருடன் உடனடியாக வருவார்கள். மேலும் குழியின் ஆழம் மற்றும் விட்டம் மிகவும் முக்கியம். மிக ஆழமானதாக இருந்தால் ஆழ்துளைக் குழிக்கு அருகிலேயே பொக்லைன் மூலம் இன்னொரு குழியை விரைவாக தோண்ட வேண்டும். அதன் பின் பக்கவாட்டில் பாதை அமைக்கப்பட்டு, குழந்தையை சுலபமாக மீட்கலாம். 

அண்மையில் சீனாவில் ஒரு குழந்தையை மீட்ட காணொளி வைரலானது. அதே போல பல நாடுகளில் குழந்தைகள் தவறி கிணறுகளில் விழுந்து விட்டால் அவர்களை மீட்க அதற்கேற்ற வகையில் அனேக கருவிகள் உண்டு. நம் நாட்டிலும் அது போன்ற அதிநவீன கருவிகளை உருவாக்கி தீயணைப்புத் துறை மற்றும் மீட்புக் குழுவினரிடம் வழங்க வேண்டும்.

ஆழ்துளை துளைக்குள் சிக்கி மரணம் அடைந்த சுஜித்துக்கு ஆழ்ந்த இரங்கல்...இனி ஒரு போதும் இத்தகைய செய்திகளை நாம் படிக்கக் கூடாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com