உங்களுக்கு ஷீரடி சாய்பாபாவின் ஆசிர்வாதம் பரிபூர்ணமாக வேண்டுமா?

சீரடியில் உள்ள சாய்பாபா கோயிலில், சாய்பாபாவின் சிலை 1954-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
Sai Baba
Sai Baba
Published on
Updated on
2 min read

சீரடியில் உள்ள சாய்பாபா கோயிலில், சாய்பாபாவின் சிலை 1954-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.  இதனை உருவாக்கித் தந்தவர் சிற்பி பாலாஜி வசந்த் தலிம். ஸ்ரீசாய்பாபா சன்ஸ்தன் டிரஸ்ட் மூன்று பேரிடம் சாய்பாபா சிலை உருவாக்கச் சொல்லியிருந்தது. எது சிறப்பாக உள்ளதோ அதனைத் தேர்வு செய்து கொள்வோம் என்று அறிவித்திருந்தது. ஆனால், சாய்பாபாவின் நேரடி புகைப்படம் மட்டுமே கையில் இருந்தது. இதனை வைத்து சிலை செய்ய பி.வி.தலிமுக்கு இஷ்டமில்லை. அவர், பக்கவாட்டில் பார்த்தபடி இருக்கும் பாபாவின் படம் இருந்தால் உதவியாக இருக்கும் எனத் தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தார். இது பாபாவுக்கே பொறுக்கவில்லை என்பது போல் ஒரு சம்பவம் நடந்தது.

பி.வி.தலிமின் கனவில் பாபா தோன்றி 'இதோ வந்துவிட்டேன். உனக்கு பக்கவாட்டுத் தோற்றம்தானே காண வேண்டும். இதோ பார்த்துக் கொள்' எனன்று சொல்வது போல, அவ்வாறே காட்சிக் கொடுத்துவிட்டு மறைந்து விட்டார் உறக்கத்திலிருந்து விழித்தெழுந்து திகைத்துவிட்டார் பி.வி. தலிம். உடனடியாக சிலையை வடிக்க முன்வந்தார். சிலையை அவர் இத்தாலி மார்பிளில் செய்ய விரும்பினார். ராஜஸ்தான் மார்பிள் நிறுவனங்கள் பலவற்றில் முயற்சித்தும் அவருக்கு திருப்தியில்லை. இந்தச் சூழலில், ஒரு நண்பர் மும்பை போர்ட் டிரஸ்ட்டில், இறக்குமதியான மார்பிள் எடுத்துச் செல்ல, ஆள் இல்லாமல் கிடக்கிறது எனக் கூற, ஆவல் பொங்க சென்று பார்த்தவருக்கு திகைப்பு. எந்த இத்தாலி மார்பிளை தேடினாரோ அதுவே அங்கு கேட்பாரற்றுக் கிடந்தது. பிறகு என்ன, அதனை கேட்டு எடுத்து வந்து வேலையை முடித்தார்.

ஸ்ரீ சாய்பாபா சன்ஸ்தன் டிரஸ்ட் இறுதியில் இவர் வடித்த சிலையையே தேர்வு செய்து நிறுவியது. அதனைப் பார்த்து வியந்த பலர். அதே போன்று தத்ரூபமாய் சிலை செய்து தர வேண்டும் என வேண்ட நம்பினால் நம்புங்கள் இதுவரை 1500 சாய்பாபா சிலைகள் செய்து கொடுத்துள்ளாராம். அனைத்தும் அச்சு அசலாய் பாபாவையே பிரதிபலித்தன. இவற்றில் பல வெளிநாடுகளுக்கும் சென்றுள்ளன.

இதில் லேட்டஸ்ட் ஜப்பானின் ஒசாகா அருகில் உள்ள சிறு கிராமத்தில் பிரதிஷ்டை செய்ய எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. பிரபல நடிகர் மனோஜ் குமார், லதா மங்கேஷ்கர், முன்னாள் மகாராஷ்டிர முதல்வர் விலாஸ்ராவ் தேஸ்முக் ஆகியோரும் இவருடைய வாடிக்கையாளர்கள்தான்.

மந்திராலயாவில் உள்ள ஒரு தோட்டத்தில் 22 அடி மகாத்மா காந்தி சிலை அமைக்கப்பட்டுள்ளது. அதனை உருவாக்கிக் தந்தது இவர்களின் நிறுவனமே. 80 ஆண்டுகளாக இயங்கிவரும் இந்த சிற்ப நிறுவனத்தில் இன்று பி.வி. தலிமின் பேரன் பணியைத் தொடர்கிறார். முதலில் திரிபுவன் சாலையில் இயங்கியது. இன்று கிர்காவுன் பகுதியில் இயங்கி வருகிறது.

முதல் சாய்பாபா செய்ய பயன்படுத்திய பிளாஸ்டர் மோல்ட்தான் இன்றும் பயன்படுத்தப்பட்டு வருவது மற்றொரு சிறப்பு. சீரடி சாய்பாபாவின் சிலை 5 அடி 3 அங்குலம் உடையது. இதன் வண்ணம் மாறுகிறது என அழைப்பு வந்து, தலிம் போய் பார்த்தபோது, நெய் மற்றும் தேன் அபிஷேகம் நடத்தப்பட்டு, பிறகு அவை துடைக்கப்படுவதால் பாதிப்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, மாற்றாக, நிறைய தண்ணீரை பயன்படுத்த ஆலோசனை கூறினார். இது இன்று வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இப்போது சீரடி கோயிலின் சாய்பாபா சிலையைக் கண்டு வியக்காதவர்களே கிடையாது. காரணம். அவ்வளவு தத்ரூபம். கருணையின் வடிவான பாபாவின் முக தரிசனத்துக்காக கோடிக் கணக்கானோர் காத்துக் கிடக்கிறார்கள். அவர்கள் அத்தனை பேருக்கும் அருள் பாலித்து வருகிறார் சாய்பாபா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com