பொருளாதார வீழ்ச்சியை மறைக்கவே ஒரே மொழி விவகாரமா? ஸாரி, மக்கள் விவரமாகவே இருக்கிறார்கள்!

ஒரே தேர்தல், ஒரே ரேஷன் கார்டு, ஒரே கல்விமுறை, ஒரே வரி , ஒரே தளபதி என்ற வரிசையில், நாடு முழுவதும் ஒரே மொழி இந்தி தான் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள
பொருளாதார வீழ்ச்சியை மறைக்கவே ஒரே மொழி விவகாரமா? ஸாரி, மக்கள் விவரமாகவே இருக்கிறார்கள்!

ஒரே தேர்தல், ஒரே ரேஷன் கார்டு, ஒரே கல்விமுறை, ஒரே வரி, ஒரே தளபதி என்ற வரிசையில், நாடு முழுவதும் ஒரே மொழி இந்தி தான் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்தி தினத்தை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சரும், பாஜ தலைவருமான அமித்ஷா டிவிட்டரில் விடுத்துள்ள செய்தியில், ‘இந்தியாவில் பல மொழிகள் உள்ளன. ஒவ்வொரு மொழியும் தனிச் சிறப்பு வாய்ந்தவை. ஆனால், உலகளவில் இந்தியாவின் அடையாளமாக ஒரு பொதுமொழி இருக்க வேண்டியது அவசியம். தற்போது நாட்டை ஒன்றிணைக்கும் திறன் வாய்ந்த மொழி ஒன்று உண்டென்றால், அது நாடு முழுவதும் பரவலாக பேசப்படும் இந்தி மொழிதான். எனவே, அதை தேசிய மொழியாக்க வேண்டும். மகாத்மா காந்தி, சர்தார் படேல் ஆகியோரின் கனவை நிறைவேற்ற இந்திய மக்கள் தங்கள் தாய் மொழியையும், இந்தியையும் முன்னேற்ற வேண்டும் என நான் விரும்புகிறேன்,’ என கூறியுள்ளார்.

மேலும், இந்தி தின நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பேசிய அமித்ஷா, ‘‘நாட்டில் உள்ள ஒவ்வொருவரையும், ஒவ்வொரு வீட்டையும் இந்தி சென்றடைய வேண்டும். அடுத்தாண்டு நாட்டின் பல பகுதிகளில் இந்தி தின நிகழ்ச்சிகளை நாம் நடத்துவோம். ஒவ்வொரு பெற்றோரும் குழந்தைகளுடன் தங்கள் தாய்மொழியில் பேச வேண்டும். உடன் பணியாற்றுபவர்களிடமும் தாய்மொழியில் பேச வேண்டும். நான் உள்துறை அமைச்சராக பொறுப்பேற்ற போது, முதல் 10 நாட்களில் ஒரு கோப்பு கூட இந்தியில் வரவில்லை. தற்போது 60 சதவீத கோப்புகள் இந்தியில் வருகின்றன,’’ என்றார்.

அமித் ஷாவின் இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அகில இந்திய மஜ்லிஸ் கட்சி தலைவர் ஒவைசி டிவிட்டரில் விடுத்துள்ள செய்தியில், ‘ஒவ்வொரு இந்தியருக்கும் இந்தி தாய் மொழி அல்ல. இந்த நாட்டில் உள்ள பல மொழிகளின் பன்முகத்தன்மையையும், அழகையும் போற்ற முயற்சிக்கக் கூடாதா?

இந்திய மொழிகள்
இந்திய நிலப்பரப்பில் மானிடவியல் கணக்கெடுப்பு நிறுவனத்தின் கணக்கெடுப்பு, இந்தியாவில் 12 மொழிக் குடும்பங்களைச் சேர்ந்த 325 மொழிகள் பேசப்படுவதாக குறிப்பிடுகிறது. 1300 க்கும் மேற்பட்ட மொழிகள் இருப்பதாக பேராசிரியர் அகத்தியலிங்கம் கூறுகிறார். 1951 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது 782 தாய்மொழிகள் இருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. 1961 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது தாய்மொழிகள் எண்ணிக்கை 1652 இருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது 102 ஆக இருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. 

தாய்மொழிக் கணக்கெடுப்பின் போது 10,000 க்கு மேற்பட்டோர் பேசினால் மட்டுமே அந்த மொழி கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என விதிகள் சேர்த்துக் கொள்ளப்பட்டது. 1981 கணக்கெடுப்பின் படி சமஸ்கிருதம் பேசுவோரின் எண்ணிக்கை 6,106 மட்டுமே..! ஆனால் 1991 இல் 8.1 மடங்கு கூடியது என்பது வியப்புக்குரியது.

கடந்த 2011ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொழிவாரியான ஆய்வு குறித்த தகவலை மக்கள் தொகை ஆணையர் அலுவலகம் வெளியிட்டது. 

இதில், 121 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில், 10 ஆயிரம் அல்லது அதற்கு மேற்பட்டவர்களால், 121 மொழிகள் அதிகளவில் பேசப்படுகிறது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 8வது அட்டவணையின் இந்த 121 மொழிகள் இரண்டாக பிரிக்கப்படுகிறது. இதில் 22 மொழிகள் அட்டவணையிடப்பட்டுள்ளன. அங்கீகரிக்கப்படாத 99 மொழிகள் உள்ளன. 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, இந்தியா முழுவதும் 19 ஆயிரத்து 569 தாய் மொழிகள் பேசப்படுகிறது என தெரிய வந்துள்ளது. மொத்த மக்கள் தொகையில், 96 புள்ளி 71 சதவீதம் பேர் அட்டவணையிடப்பட்ட 22 மொழிகளில் ஒன்றை தாய்மொழியாக கொண்டுள்ளனர். மீதமுள்ள 3 புள்ளி 29 சதவீதம் பேர், பிற மொழி பேசுபவராக உள்ளனர்.  அனைத்திந்திய அளவில் மொத்தம் 270 மொழிகள் அடையாளம் காணக்கூடிய, தாய்மொழிகளாக உள்ளன. இவற்றில் 123 மொழிகள் அட்டவணையிடப்பட்ட பிரிவில் வருகின்றன. மீதமுள்ள 147 மொழிகள் அட்டவணையிடப்படாத பிரிவில் உள்ளன.

தமிழை அடிப்படையாகக் கொண்ட மொழிகள் (Tamil Language Family)
உலகிலுள்ள மொழிக்குடும்பங்களில் தமிழ் மொழிக் குடும்பம் (Tamil language family) என்பது பெரியது. மரபு வழியாக இணைந்த கிட்டத்தட்ட 85 மொழிகளை உள்ளடக்கியதாகும்.கிட்டத்தட்ட 217 மில்லியன் மக்கள் இம்மொழிகளைப் பேசுகின்றனர். தென்னிந்தியாவைச் சேர்ந்த முக்கிய மொழிகளான, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்பன ஒன்றுடனொன்று நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருப்பதும், ஏனைய இந்திய மொழிகளிலிருந்து வேறுபட்டு இருப்பதும் அறியப்பட்டுள்ளது. தென்னிந்திய மொழிகள் பற்றி ஆராய்ந்து, 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' என்ற நூலையெழுதிய கால்டுவெல், 1856 இல், இந்த நான்கு மொழிகளுடன், தென்னிந்தியாவிலிருந்த, வேறு சில மொழிகளையும் சேர்த்துத் திராவிட மொழிகள் என்று பெயரிட்டார். திராவிட மொழிகள் இந்தியத் துணைக்கண்டத்தில் அவற்றின் புவியியற் பரம்பலைக் கருத்திற் கொண்டு ஐந்து பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை:

தென் திராவிடம், தென்-நடுத் திராவிடம், நடுத் திராவிடம், வட திராவிடம் வகைப்படுத்தப்படாதவை என்பனவாகும். இவற்றுள் தென் திராவிடப் பிரிவில் 34 மொழிகளும், தென்-நடுத் திராவிடப் பிரிவில் 21 மொழிகளும், நடுத் திராவிடப் பிரிவில் 5 மொழிகளும், வட திராவிடப் பிரிவில் 5 மொழிகளும், வகைப்படுத்தப் படாதவையாக 8 மொழிகளுமாக மொத்தம் 73 மொழிகள் கண்டறியப்பட்டுள்ளன.

திராவிட மொழிகளின் பட்டியல் - தென் திராவிட மொழிகள்
தமிழ்-கன்னடப் பிரிவு
கன்னடப் பிரிவு- படகு, ஹோலியா, கன்னடம், ஊராலி

தமிழ்-குடகு பிரிவு
குடகு, குறும்பா, ஆலுக் குறும்பா, ஜென்னுக் குறும்பா,  முள்ளுக் குறும்பா

தமிழ்-மலையாளம்
மலையாளம், ஆரநாடன், காடர், மலையாளம், மலப்பந்தரம், மலயரயன், மலவேடன், பழியான்
பனியா,ரவுலா,தமிழ்,இருளா,கைக்காடி, முதுவன், ஷோலகா, தமிழ், பெட்டாக் குறும்பா, யெருக்குல, மன்னான், தோடா-கோட்டா,கோட்டா, தோடா

துளு பிரிவு, பெல்லாரி, குடியா, கொரகா, கொற்ற கொரகா, முது கொரகா. துளு

தென்-நடுத் திராவிட மொழிகள்
கோண்டி-கூய், கோண்டி, தந்தாமி மாரியா, கிழக்கு முரியா, தூர மேல் முரியா
தென் கோண்டி, வட கோண்டி, கிர்வார், மாரியா, மேற்கு முரியா, நாகர்ச்சால்
பர்தான், கொண்டா-கூய், கொண்டா, மண்டா-கூய், கூய்-குவி, கோயா, கூய், குவி
மண்டா-பெங்கோ, மண்டா, பெங்கோ, தெலுங்கு, செஞ்சு, மன்னா டோரா,சவாரா வட்டர்

நடுத் திராவிட மொழிகள்

கோலமி-நைக்கி, வடமேற்குக் கோலமி, தென்கிழக்குக் கோலமி, பார்ஜி-கடாபா, மூதிலி கடாபா, பொட்டங்கி ஒல்லார் கடாபா, துருவா, 

வட திராவிட மொழிகள்
பிராகுயி, குமர்பாக் பஹாரியா, குறுக்ஸ், நேபாளி குறுக்ஸ், சௌரியா பஹாரியா மொழி

வகைப்படுத்தப்படாதவை
அல்லர், பாசிகர், பாரியா, காமர், கணிக்காரன், குறிச்சியா, மலங்குறவன், விஷாவன்

இந்தி திணிப்பு வரலாறு

பாரசீகமும் சமஸ்கிருதமும் கலந்த மொழி இந்தி என்கிறார்கள் மொழியல் ஆய்வாளர்கள். பிரம்ம சமாஜம், 1866-இல் கேசவசந்திர சென் தலைமையில் இயங்கத் தொடங்கிய போது, இந்தியை தேசியத் தொடர்பு மொழியாக பிரகடனப்படுத்திய முதல் தலைவர் என்கிறார் பெ.சு.மணி. சுவாமி தயானந்த சரஸ்வதி ஆரிய சமாஜக் கொள்கைகளை நிறுவுவதற்கு சமஸ்கிருதத்தைப் பயன்படுத்திய பொழுது இந்தியில் பிரசாரம் செய்யச் சொன்னவர் கேசவ சந்திர சென்.

இந்தியை பாரதத்தின் பொது மொழியாக  உருவாக்க முயன்ற ராம்மோகன்ராய் வரிசையில் இந்தி பேசாத இனத்தார் வரிசையில் குஜராத்தியரான தயானந்தரும் சேர்ந்தார்.1901- இல் தேவநாகரி எழுத்து வடிவிலான இந்திமொழியை, நீதிமன்ற அலுவல் மொழியாக ஏற்க வேண்டுமென ஆதரவாளர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர். அதன்பின்னரே இந்தி மொழியை கற்பிப்பதற்கென பள்ளிகள் உருவானது. தேவையான பாடநூல்கள் உருவாக்கப்பட்டன.

1905-இல் மதன்மோகம் மாளவியாவால் உருவாக்கப்பட்ட வாரணாசி பல்கலைகழகத்தில் புதிய இந்திமொழி முதன்மையான இடத்தைப் பெற்றது.  1927-இல் உத்திரப்பிரதேசத்தில் இடைநிலை வகுப்பில் இந்தி மொழிப்பாடம் புகுத்தப்பட்டது. 1901-இல் அலகாபாத், காசி பல்கலைக்கழகங்களில் இந்தி புகுத்தப்பட்டது. 1927-இல் இந்தி இலக்கியப் படிப்பாக வளர்ந்தது.

1908 இல் விடுதலை சிந்தனை வளர இந்தியை ஊக்குவிக்க வ.உ.சி.யும் பாரதியும் உருவாக்கிய சென்னை ஜனசங்கத்தில் இந்தி வகுப்பை தொடங்க திலகர் கடிதம் எழுதி அதன்படி, பாரதி  29..05.1908 நிறைய மாணவர்கள் வந்து சேர்வார்கள் என பதில் எழுதியுள்ளார். 1918-இல் தட்சிண பாரத இந்தி பிரசார சங்கம் தோற்றுவிக்கப்பட்டது.

மாநிலங்கள் வாரியான தாய்மொழிகள்


மொழிகளின் சட்டப் பாதுகாப்பு
அரசியல் சட்டத்தின் 8-வது அட்டவணையில் உள்ள மொழிகள்
அசாமி,பெங்காலி ,போடோ, டோக்ரி, குஜராத்தி, இந்தி, கன்னடம், காஸ்மீரி, கொங்கணி, மைதிலி, மலையாளம், மெய்தி, மராத்தி, நேபாளி, ஒரிய, பஞ்சாபி, சமஸ்கிருதம், சந்தாளி மொழி, சிந்தி, தமிழ், தெலுங்கு, உருது

அரசியலமைப்பு சட்டத்தின் ஷரத்து 29 “இந்தியாவின் எந்தப் பகுதியிலேனும் வசிக்கின்ற குடிமக்களின் எந்த ஒரு பிரிவினரும் தமக்கென்று பிரத்யேகமான மொழியையோ, எழுத்து வடிவத்தையோ, பண்பாட்டையோ கொண்டவர்களாக இருந்தால் அவற்றைப் பேணிக்காக்கும் உரிமை அவர்களுக்கு உண்டு’ என்கிறது.

ஒரு தேசத்துக்கு பொதுமொழி இயல்பாக இருப்பது தான், அதை வலிந்து திணிக்க வேண்டியதில்லை. இந்தி பேசும் மாநிலங்களில் வாழும் மக்களின் தாய்மொழிகள் பாதுகாக்கப்பட வேண்டும். தன் மொழியைப் போற்ற பிற மொழியை அழிக்க வேண்டியதில்லை.

பொருளாதார வீழ்ச்சியை மறைக்க எதையாவது சொல்லி திசை திருப்பினாலும் மக்கள் விவரமாகிவிட்டார்கள் என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.