பேசும் கல்லறைகள்! புகழ்பெற்ற கல்லறை வாசகங்கள்!!

ஒவ்வொரு கல்லறையிலும், இறந்தோரின் பெயர், மற்றும் அவர்களது பிறப்பையும், இறப்பையும் குறிக்கும் தேதிகள் பொறிக்கப்பட்டிருக்கும்.
பேசும் கல்லறைகள்! புகழ்பெற்ற கல்லறை வாசகங்கள்!!

ஒவ்வொரு கல்லறையிலும், இறந்தோரின் பெயர், மற்றும் அவர்களது பிறப்பையும், இறப்பையும் குறிக்கும் தேதிகள் பொறிக்கப்பட்டிருக்கும். அத்துடன் சில வாசகங்களும், வேறு பல கூற்றுகளும் பொறிக்கப்பட்டிருக்கும். அவை இன்று ”புகழ்பெற்ற கல்லறை வாசகங்களாக” விளங்குகின்றன.

புகழ்பெற்ற கவிஞர் கலீல் கிப்ரான் அவர்கள், தன் கல்லறையில் எழுதப்பட வேண்டிய வரிகளை, தன் நூல் ஒன்றில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“என் கல்லறையில் இந்த வார்த்தைகளை எழுதி வையுங்கள். நானும் உங்களைப்போல் உயிரோடுதான் இருக்கிறேன். உங்கள் அருகிலேயே நிற்கிறேன். கண்களை மூடி, சுற்றிலும் பாருங்கள்... உங்களுக்கு முன் நான் நிற்பதைக் காண்பீர்கள்.”

புகழ்பெற்ற கவிஞர் ஷெல்லி தனது தாயாரின் கல்லறையில் பொறித்திருந்த கல்லறை கவிதை.

“சப்தமிட்டு நடக்காதீர்கள் , இங்கே தான் என் அருமைத் தாயார் இளைப்பாறி கொண்டிருக்கிறார்கள்.”

***

உலகப்பேரழகி கிளியோபாட்ராவின் கல்லறை வாசகம்

“உலகத்திலேயே அழகானப் பிணம் இங்கே உறங்கிக்கொண்டு இருக்கிறது. நல்ல வேளை இவள் பிணமானாள், இல்லாவிட்டால் இந்தக் கல்லறைக்குள் ரோமாபுரி சாம்ராஜ்யமே பிணமாகியிருக்கும்.”

***

மகா அலெக்சாண்டரின் கல்லறை வாசகங்கள்.

“இந்த உலகம் முழுவதுமே போதாது என்று சொன்னவனுக்கு, 
இந்தக் கல்லறைக் குழி போதுமானதாக ஆகிவிட்டது.”

***

ஒரு தொழிலாளியின் கல்லறை வாசகம்

“இங்கே புதை குழியில் கூட இவன் கறையான்களால் சுரண்டப்படுகிறான்.”
 

***

அரசியல்வாதியின் கல்லறையில்,

“தயவு செய்து இங்கே கை தட்டி விடாதீர்கள், இவன் எழுந்து விடக்கூடாது.”

***

ஒரு விலை மகளின் கல்லறை வாசகம்.

“இங்கு தான் இவள் தனியாகத் தூங்குகிறாள், 
தொந்தரவு செய்யாதீர்கள், பாவம் இனி வர முடியாது இவளால்.”

***

ஒரு சில கல்லறைகளில், குறிப்பாக, மேற்கத்திய நாடுகளில் உள்ள கல்லைறைகளில், வேறுபட்ட வாசகங்கள் எழுதப்பட்டிருப்பதை நாம் காணமுடியும். இதோ, ஒரு சில வேறுபட்ட கல்லறை வாசகங்கள்: 

"நான் இப்போது இங்கு இல்லை. எனவே, இங்கு வந்து உங்கள் நேரத்தைச் செலவழிக்க வேண்டாம்"

"அப்பா, இப்போது, அமைதியில் இளைப்பாருங்கள். அது, உங்களுக்கு மிகவும் தேவைப்பட்டது"

"உங்களுக்குப் புரியாத ஒன்று, இப்போது எனக்குப் புரிகிறது"

கல்லறை வாசகங்கள், மரணத்தையும், மறுவாழ்வையும் குறித்து நாம் கொண்டிருக்கும் எண்ணங்களை வெளிக்கொணர்கின்றன.

குடிகாரன் ஒருவனின் கல்லறை வாசகம் இது:

"தண்ணீரில் மிதந்தவன்
தரையில் மூழ்கிவிட்டான்."

நடிகை ஒருத்தியின் கல்லறை மீது இப்படி எழுதப்பட்டிருந்ததாம்:

"தயவு செய்து திறந்து பார்த்துவிடாதீர்கள்,
மேக்கப் இல்லாமல் தூங்கிக்கொண்டிருக்கிறாள்."

ரஜினிஷ் கல்லறையில் எழுதப்பட்டிருப்பது

ரஜினிஷ் பிறக்கவுமில்லை; இறக்கவுமில்லை
அவர் இந்த உலகத்தைப் பார்வையிட வந்தார்.

மங்கோலிய மன்னன் தைமூர் அவரது கல்லறையில் எழுதப்பட்டது இப்படி: 

'இந்தக் கல்லறையைத் திறந்தால் மண்ணில் போர் மூளும்!’

கேத்ரின் தேக்கக்விதா கல்லறையில் மோகாக் மொழியில் கீழ்வரும் வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது

“கத்தேரி தேக்கக்விதா
செந்நிற மக்களிடையே பூத்த எழில்மிகு மலர் இங்கே துயில்கின்றது.”
 
என் கல்லறையில் மறக்காமல் எழுதுங்கள் 
'இங்கே ஒரு புத்தகப் புழு உறங்குகிறதென்று' 
- பெட்ரண்ட்ரஸல்

சர் ஐசக் நியூட்டன் கல்லறையில்..
"The Best and Invaluable Gem of Mankind" என்று பொறிக்கப்பட்டது. 

நியூட்டனுக்கு பலர் அஞ்சலி செலுத்தினாலும் போப் எழுதிய அஞ்சலி மிக ஆழமானது. இந்த வாசகம் நியூட்டன் பிறந்த அறையில் இன்றும் பொறிக்கப்பட்டிருக்கிறது!

"இயற்கையும் அதன் விதிகளும் இருளில் கிடந்தன,
கடவுள்... நியூட்டன் பிறக்கட்டும் என்றார்,
ஒளி பிறந்தது"

இவ்வளவு தானா வாழ்க்கை. ஆம் அதிலென்ன சந்தேகம். ஆனானப்பட்டவர்களின் ஆட்டமெல்லாம் அடங்கிப்போனது அடையாளம் தெரியாமல். உலகையே நடுங்க வைத்த ஹிட்லர் தன் சாவைக்கண்டு நடுங்கி ஒடுங்கி அடங்கிப்போனான்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com