சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பெயர் பலகை மாற்றம்: முக்கியமான அந்த வார்த்தை மிஸ்ஸிங்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் முகப்புப் பகுதியில் "புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம்" என்று பெயர் பலகை வைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.
சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பெயர் பலகை மாற்றம்: முக்கியமான அந்த வார்த்தை மிஸ்ஸிங்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் முகப்புப் பகுதியில் "புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம்" என்று பெயர் பலகை வைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.

மேலும், ஒவ்வொரு நடைமேடைகளின் முன்பகுதியிலும், "எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம்" என்னும் பெயர் அடங்கிய சிறிய அளவிலான ஸ்டிக்கர் பொருத்தும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் பெரிய ரயில் நிலையங்களில் ஒன்றாகவும், சென்னையில் அடையாளச் சின்னங்களில் ஒன்றாகவும் சென்ட்ரல் ரயில் நிலையம் விளங்குகிறது. இந்த ரயில் நிலையத்துக்கு மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் பெயரைச் சூட்ட வேண்டும் என்று அதிமுக தரப்பில் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி கடந்த மாதம் 6-ஆம் தேதி சென்னை அருகே நடந்த பொதுக் கூட்டத்தில் பேசும்போது, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர் பெயர் சூட்டப்படும் என்று அறிவித்தார்.

இதையடுத்து, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர் பெயர் சூட்டுவதற்கு எந்தத் தடையும் இல்லை என்று தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் மூலமாக தெரிவித்தது. தொடர்ந்து, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு "புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம்' என்று பெயர் சூட்டப்படுவதாக தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டது. இதுபோல, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம் என பெயர் பலகை வைப்பதற்கான பணியை மேற்கொள்ள ரயில்வே உத்தரவிடப்பட்டது. இதற்கான பெயர் பலகை மாதிரியும் வெளியிடப்பட்டது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பெயரை மாற்றுவதாக அறிவித்து, அரசாணை வெளியிட்டு, தேர்தலுக்கு முன்பாகவே ரயில் நிலையங்களில் பெயர்ப்பலகை மாற்றும் பணிகளும் ஜரூராக நடைபெற்று வருகிறது.

எல்லாம் சரி, இதில் முக்கியமான விஷயத்தை அதிகாரிகள் அனைவருமே மறந்து போனது எப்படி? ஏன்? என்றுதான் தெரியவில்லை.

கீழ்கண்ட புகைப்படத்தைப் பாருங்கள்.

நீங்கள் முதல் முறையாக சென்னைக்கு வருகிறீர்கள் என்றால், தமிழும் தெரியாது, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பெயரை மாற்றியதும் தெரியாது. அப்படி இருக்கும் போது இதுதான் சென்னை சென்ட்ரல் என்பதை எப்படி கண்டுபிடிப்பீர்கள். சென்ட்ரல் இருக்கிறது. அந்த முக்கியமான வார்த்தை சென்னை எப்படி மிஸ் ஆனது. சென்னை தானே முக்கியமான அடையாளம். சென்னை ரயில்வே நிலையம் என்றால் கூட பரவாயில்லை. சென்னையைத் தூக்கிவிட்டு சென்ட்ரல் ரயில் நிலையம் என்பதை வைத்தது பயணிகளுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் என்று ரயில்வே அதிகாரிகளாவது சொல்லியிருக்க வேண்டாமா?

சென்னை என்பதுதானே இந்த ஊரின் பெயர். ஊரின் பெயரையே எடுத்துவிட்டு பெயர்ப்பலகை வைப்பது யாருக்காக? பயணிகளின் வசதிக்காக ஆங்காங்கே வைக்கப்பட்டிருக்கும் பெயர்ப் பலகையில் சென்னையே இல்லை.

இந்நிலையில், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் முன்பகுதியில் பெயர் பலகை அமைக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. இதுபோல, ரயில் நிலையத்தின் உள்ளே ஒவ்வொரு நடைமேடைகளின் முன்பகுதியில் "எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம்" என்னும் பெயரில் சிறிய அளவில் ஸ்டிக்கரில் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியது:

நிலையத்தின் முன்பகுதியில் பெரிய அளவில் தமிழ், ஆங்கிலம், இந்தியில் பெயர் பலகைகளும், நிலையம் முழுவதும், நுழைவு வாயில்கள், நிலைய உட்புற, வெளிப்புற சுவர்கள், நடைமேடைகளில் ஒட்டுவதற்கு ஏதுவாக, மூன்று மொழிகளில் பல அளவுகளில் ஸ்டிக்கர்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன. பெயர் பலகை மற்றும் ஸ்டிக்கர்கள் ஓரிரு நாளில் முழுமையாக பொருத்தப்பட உள்ளன' என்றார்.

376 ஆண்டுகால பாரம்பரியம் கொண்ட சென்னை மாநகரின் மகிமையை போற்றிப் பாதுகாக்க வேண்டாம். அதற்காக மக்கி மண்ணோடு மண்ணாக்காமல் இருக்கலாமே.

இதற்கு முன்பும் இதுபோன்று பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. ஆனால் ஊர்ப் பெயரை யாரும் விட்டுவிடவில்லை. பெங்களூரு ரயில் நிலையத்தை பெயர் மாற்றும் போது கேஎஸ்ஆர் பெங்களூரு என்றே அழைத்தனர்.

1873ம் ஆண்டு ராயபுரம் ரயில் நிலையத்தில் நெரிசல் ஏற்பட்டதால் சென்னை சென்ட்ரல் ரயில்நிலையம் கட்டப்பட்டது. அன்று முதல் மெட்ராஸ் சென்டிரல் என்று அழைக்கப்பட்டு வந்தது. பிறகு பெயர் மாற்றம் செய்யப்பட்டு திமுக ஆட்சி காலத்தில் 1996ம் ஆண்டு சென்னை சென்ட்ரல் என்று அழைக்கப்பட்டது.

டிக்கெட்டுகளில் எம்ஜிஆர் சென்னை சிடிஆர் என்று அச்சிடப்படும் நிலையில் ரயில் நிலையத்தின் பெயர்ப் பலகையில் சென்னை என்று இல்லாமல் இருப்பது நிச்சயம் ரயில்வே அதிகாரிகளால் கவனம் செலுத்தப்பட வேண்டிய முக்கிய விஷயம் என்பதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com