Enable Javscript for better performance
உலக அரசியல் களத்தில் மகளிர்!- Dinamani

சுடச்சுட

  

  உலக அரசியல் களத்தில் மகளிர்!

  By -  பா.ஜம்புலிங்கம்  |   Published on : 17th April 2019 11:20 AM  |   அ+அ அ-   |    |  

  mn4

  மகளிர் சக்தி பல துறைகளில் பரவி வருகின்ற நிலையில் அரசியல் களத்திலும் அவர்களுடைய சாதனைகளையும் அவர்கள் சமூகத்தின் மீது ஏற்படுத்துகின்ற தாக்கத்தையும் உணர முடிகிறது.  உலகின் பல நாடுகளில் பெண் அரசியல்வாதிகள் தலைமைப்பொறுப்பில் அதிபர்களாகவும், பிரதமர்களாகவும் தற்போது உள்ளனர்.  28 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தில் அண்மையில் ஸ்லோவாகியாவைச் சேர்ந்தவர் ஜனாதிபதி ஆகியுள்ளார்.  அவ்வகையில் 28 நாடுகளில் ஒரு பெண்மணியைத் தலைமைப் பொறுப்பில் கொள்கின்ற எட்டாவது நாடாக அந்நாடு திகழ்கிறது.

  ஐரோப்பிய ஒன்றியத்தில் ஜெர்மனி (ஏஞ்சலா மெர்கல்), ஸ்லோவாகியா (ஜுஜுனா கபுடோவா), குரோஷியா (கொலிண்டா கிராபர் கிட்டாரோவிக்), எஸ்தோனியா (கெர்ஸ்டி கல்ஜுலெய்ட்), லிதுவேனியா (டேலியா க்ரைபாஸ்கைட்), ருமேனியா (வியோரிக்கா தான்சிலா), மால்டா (மேரி லூயிஸ் கொலிரோ பெர்கா), பிரிட்டன் (தெரசா மே) ஆகியோர் தலைமைப் பொறுப்பில் உள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக இல்லாத பிற ஐரோப்பிய நாடுகளில் நார்வே (எர்னா சோல்பர்க்), ஐஸ்லாந்து (கட்ரின் ஜாகோப்டாடிர்), ஜார்ஜியா (சலோம் ஜெளராபிச்விலி), செர்பியா (அனா ப்னாபிக்) ஆகிய நான்கு நாடுகளில் பெண்கள் தலைமைப் பொறுப்பில் உள்ளனர். அவர்களைப் பற்றி சுருக்கமாகக் காண்போம்:

  ஏஞ்சலா மெர்கல்:  2005-இல் ஜெர்மனியின் முதல் பெண் அதிபராகப் பொறுப்பேற்று,  ஐரோப்பாவின் வளமான பொருளாதாரத்தை நடத்திச் செல்வதோடு, மார்ச் 2018- இல் நான்காவது முறையாக  வெற்றியும் பெற்றுள்ளார். "போர்ப்ஸ்' இதழ் வெளியிடுகின்ற சக்திவாய்ந்த பெண்களின் பட்டியலில் 12 ஆண்டுகளாக தொடர்ந்து இடம் பெற்றுவரும் இவர் ஏழு, ஆண்டுகளாக முதலிடத்தில் உள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் அனுபவம் வாய்ந்த தலைவராகக் கருதப்படுகிறார்.

  ஜுஜுனா கபுடோவா:  ஸ்லோவாகியாவில் ஊழலுக்கு எதிராகப் போராடி அதிபர் தேர்தலில் 58 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அத்தேர்தலானது நன்மைக்கும் தீமைக்குமான போராட்டம் என்று கூறியிருந்தார். 2016-ஆம் ஆண்டிற்கான  "கோல்ட்மேன்' சுற்றுச்சூழல் விருதினைப் பெற்றவர். ஸ்லோவாகியாவின் முதல் பெண் அதிபரான இவர் ஸ்லோவாகியா வரலாற்றில் குறைந்த வயதில் (45) அதிபரானவர் என்ற பெருமையைப் பெறுகிறார்.

   

  கொலிண்டா கிராபர் கிட்டாரோவிக்:  குரோஷியாவின் முதல் பெண் அதிபராக ஜனவரி 2015-இல் பொறுப்பேற்றார்.  2005 முதல் 2008 வரை வெளியுறவு அமைச்சராகவும், 2008 முதல் 2011 வரை குரோஷியாவின் அமெரிக்கத் தூதராகவும் பணியாற்றினார்.  2017-இல் "போர்ப்ஸ்' இதழ் இவரை உலகின் சக்தி வாய்ந்த 39-ஆவது பெண் என்று அறிவித்தது. நேட்டோ எனப்படுகின்ற வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பில் உதவிப் பொதுச் செயலாளராக 2011 முதல் 2014 வரை பணியாற்றியவர். 46 வயதில் அதிபர் என்ற பெருமையை பெறுகிறார்.

  கெர்ஸ்டி கல்ஜுலெய்ட்: எஸ்தோனியாவின் முதல் பெண் ஜனாதிபதியாக அக்டோபர் 2016-இல் பொறுப்பேற்றார். எஸ்தோனியா, ஆங்கிலம், பின்னிஷ், பிரெஞ்சு ஆகிய மொழிகளில் சரளமாகவும், குறிப்பிட்ட  அளவிற்கு ரஷ்ய மொழியிலும் பேசக் கூடியவர்.  இவரும்,  46 வயதில்  ஜனாதிபதியானவர் என்ற பெருமையை  பெறுகிறார்.  

  டேலியா க்ரைபாஸ்கைட்: லிதுவேனியாவின் முதல் பெண் ஜனாதிபதியாக 2009-இல் பொறுப்பேற்றார். இரண்டாவது முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரை இரும்புப் பெண்மணி என்று அழைக்கின்றனர்.  ஐரோப்பிய கமிஷனராக இவர் பணியாற்றியுள்ளார். மிகவும் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர். தந்தையார் எலெக்ட்ரீசியன் மற்றும் ஓட்டுநர் வேலை பார்த்துள்ளார். தாயார் ஒரு கடையில் விற்பனைப் பெண்ணாகப் பணியாற்றியவர். 

  வியோரிக்கா தான்சிலா: ருமேனியாவின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையைப் பெற்றவர். 2009 முதல் 2018 வரை ருமேனியாவின் சார்பில் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பில் இருந்துள்ளார். சமூக மக்களாட்சிக் கட்சியின் தலைவராவார்.

  மேரி லூயிஸ் கொலிரோ பெர்கா:  மால்டாவின் ஒன்பதாவது ஜனாதிபதியாக பிரதமரின் ஆலோசனைப்படி ஏப்ரல் 2014-இல் பொறுப்பேற்றார்.  அந்நாட்டின் இரண்டாவது பெண் ஜனாதிபதி ஆனார். மார்ச் 2013 முதல் மார்ச்  2014 வரை குடும்ப மற்றும் சமூக ஒற்றுமைக்கான அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். சமூக மற்றும் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்த முயற்சிகளை மேற்கொள்வதற்காக சமூக நன்மைக்கான ஜனாதிபதியின் அமைப்பு என்ற லாப நோக்கமற்ற அமைப்பினை  உருவாக்கினார். இவர்  55 வயதில்  அப்பொறுப்பினை ஏற்ற பெருமையையுடையவர்.

  தெரசா மே: மார்கரெட் தாச்சருக்குப் பின், ஜூலை 2016-இல் பிரிட்டனின் இரண்டாவது பெண் பிரதமராகப் பொறுப்பேற்றார்.  ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகல் தொடர்பான ஓட்டெடுப்பில் டேவிட் காமரூன் பதவி விலகிய போது இப்பொறுப்பினை ஏற்றார். நீண்ட  காலம்  உள்துறை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். ஒருங்கிணைந்த  பிரிட்டன் என்பது அவருடைய இலக்காக உள்ளது. "போர்ப்ஸ்' இதழின் சக்திவாய்ந்த பெண்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பெற்றவர்.

  எர்னா சோல்பர்க்: நார்வேயில் 2004 முதல் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராக இருந்து வருகிறார். 2013- இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று நார்வேயின் 28-ஆவது பிரதமராகப் பதவியேற்றார். இவர் நார்வேயின் இரண்டாவது பெண் பிரதமராவார். கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த அதிக காலம் பிரதமாக உள்ளவர் என்ற பெருமையினைப் பெற்றவர்.

  கட்ரின் ஜாகோப்டாடிர்:  ஐஸ்லாந்தின் 28-ஆவது மற்றும் தற்போதைய பிரதமராக 2017-இல் பதவியேற்றார். 2009 முதல் 2013 வரை இவர் கல்வி, அறிவியல், பண்பாடு மற்றும் நார்டிக் கூட்டுறவுத்துறையின் அமைச்சராக இருந்துள்ளார். இவர் ஜோஹன்னா சிகுரோர்டாடிருக்குப் பின்னர் பிரதமர் பதவியில் இருக்கும் இரண்டாவது பெண் பிரதமராவார். இடதுசாரி பசுமை இயக்கம் என்ற பொருளாதார சமூக அரசியல் கட்சியின் துணைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

  சலோம் ஜெளராபிச்விலி:  ஜார்ஜியாவின் ஐந்தாவது மற்றும் தற்போதைய ஜனாதிபதியாக 2018-இல் பதவியேற்றார். ஆறு ஆண்டுகள் இவர் இப்பதவியில் இருப்பார். இவர் பிரான்சின் முன்னாள் தூதருமாவார்.   இனிவரும் காலங்களில் நாட்டின் தலைவர் மறைமுகமாக தெரிவு செய்யப்படுகின்ற தேர்தல் முறை அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படவுள்ளதால், இவர் ஜார்ஜியாவின் பிரபலமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட  கடைசி ஜனாதிபதியாக இவர் கருதப்படுகிறார்.

  அனா ப்னாபிக்: செர்பியாவின் முதல் பெண் பிரதமராவார். இவர் 2017-இல் பதவியேற்றார். முன்னர் இவர் பொது நிர்வாகம் மற்றும் உள் சுயாட்சித் துறையின் அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். 2018-இல் "போர்ப்ஸ்' இதழ் இவரை உலகின் 91-ஆவது சக்தி வாய்ந்த பெண் என்றும்,  21-ஆவது சக்தி வாய்ந்த அரசியல் மற்றும் கொள்கைத் தலைவர் என்றும் குறிப்பிட்டுள்ளது.

  ஐரோப்பாவில் மட்டுமன்றி உலகின் பிற நாடுகளின் அரசியலிலும் தற்போது மகளிரின் செல்வாக்கு பரவலாகக் காணப்படுகிறது. சீனக்குடியரசின் முதல் பெண் பிரதமர் சாய் இங் வென், நேபாளத்தின் முதல் பெண் குடியரசுத் தலைவரான, இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள  வித்யா தேவி பண்டாரி,  மார்ஷல் தீவுகளின் பிரதமரான அந்நாட்டின் முதல் டாக்டர் பட்டம்  பெற்ற ஹில்டா ஹைன்,  பங்களாதேஷின் இரண்டாவது பெண் பிரதமரான ஷேக் ஹசீனா, ட்ரினிடாட் டொபாகோ குடியரசின் முதல் பெண் ஜனாதிபதியான பாலாமே வீக்கெஸ்   போன்றோர் அரசியலில் தம் பங்கினை அளித்துவருகின்றனர். 

  இந்த வரிசையில் முக்கியமான இடத்தைப் பெறும் மற்றொரு பெண்மணி ஜெஸிந்தா ஆர்டர்ன் ஆவார். இவர் தன் மனித நேயத்தாலும், அன்பாலும் அண்மையில் உலகையே தன்னைத் திரும்பிப் பார்க்க வைத்த நியூசிலாந்தின் 40-ஆவது பிரதமர் ஆவார். உலகிலேயே இளம் வயதில் (37) நாட்டின் உயர்ந்த பதவியை வகிக்கும் பெருமையை உடைய இவர் பதவியில் இருக்கும்போதே குழந்தையைப் பெற்றெடுத்த இரண்டாவது பெண்மணி ஆவார். குடிமக்கள்மீதான பற்று, மன உறுதி, ஆளுமைத்திறன், சமூக நலனில் அக்கறை போன்றவற்றின் காரணமாக அரசியல் களத்தில் மகளிரின் ஈடுபாடும் பங்களிப்பும் உயர்ந்து கொண்டே வருவதைக் காணமுடிகிறது. தாம் எவர்க்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதையும், தம்மால் சாதித்துக்காட்ட முடியும் என்பதையும் அவர்களுடைய ஆட்சி உணர்த்துகிறது.  

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  kattana sevai