Enable Javscript for better performance
osho tells about politicians- Dinamani

சுடச்சுட

  
  Osho-guru-Rajneesh

  'மக்களாட்சி என்பது பலருடைய அரசாங்கம்' என்று கிரேக்க அறிஞர் பிளேட்டோவும்,  'மக்களால்... மக்களுக்காக... மக்களே நடத்தும் ஆட்சி மக்களாட்சி' என்று  ஆப்ரகாம் லிங்கனும் மக்களாட்சியை வரையறுத்தனர். ஆனால் இன்றைய மக்களாட்சியில் பொதுமக்கள் தங்கள் கருத்தைக் கூறுவதற்கோ, தங்களது கோரிக்கைகளை முன்வைப்பதற்கோ அனுமதி இல்லை!   

  ஏ.சுப்பராயலுவைத் தொடர்ந்து, சி.இராஜகோபாலாச்சாரி,  த.பிரகாசம், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், பூ.ச.குமாரசாமி ராஜா, கே.காமராஜர், எம். பக்தவத்சலம், சி.என்.அண்ணாதுரை என நம் தமிழகத்தை ஆண்டவர்களின் நல்லாட்சிப் பட்டியல் நீளும்.  அவர்கள் இன்றைக்கும் புகழ்ந்து பேசப்படுவதற்குக் காரணம், அவர்கள் அரசியலை தொழிலாகக் கருதாமல் தொண்டாகக் கருதி நல்லாட்சி செய்ததால்தான். 

  அரசியல்வாதியாக வேண்டும் என்பவர்கள் கவனத்திற்காக தத்துவ ஞானி ஓஷோ ஓர் அற்புதமான பதிவை முன்வைத்துள்ளார். 298 சூத்திரங்கள் உள்ள 'அஷ்டாவக்ர-ஸம்ஹிதா'வில் 133 முதல் 163 சூத்திரங்கள் சார்ந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதிலில் இந்தப் பதிவு உள்ளது. 'நான் குடும்பஸ்தனாக, சுகங்கள் நிறைந்த வாழ்க்கை நடத்த வேண்டும் என்று கனவு கண்டேன். பிறகு எழுத்தாளர், அரசியல்வாதி என்றெல்லாம் வளர்ச்சி பெற விரும்பினேன். 

  எந்தத் துறையிலும் எனக்கு வெற்றி குறைவாகவும் தோல்வியே அதிகமாகவும் கிடைத்தது. கடைசியில் உங்களிடம் வந்து சேர்ந்து விட்டேன். நான் சேரவேண்டிய இடம் எது'  என்று  ஒருவர் தத்துவ ஞானியைப் பார்த்துக் கீழ்வருமாறு  கேட்கிறார் (அஷ்டாவக்ர மகாகீதை, பக். 70,73,74).   

  அதற்குத் தத்துவஞானி சொல்கிறார்: 'உன் கனவுகள் பலிக்கவில்லை என்பது கடவுளின் அருள்தான்! அவை பலித்திருந்தால் நீ கடவுளை என்றுமே நினைத்திருக்க மாட்டாய்.  தோல்வியின் வேதனை தூண்டுகோலாக அமைந்து மனிதனை சத்தியப் பாதையில் இட்டுச்செல்லும்.  கனவுகள் பலித்தால் மனிதன் உலக வாழ்க்கையில் அழுந்திப் போகிறான். பிறகு அவன் சத்தியத்தை ஏன் தேடிப்போவான்?  

  அகங்காரம் அதிகரித்தால் கடவுளை நோக்கிப் பயணிப்பது கடினமாகிவிடும். பாவி கடவுளை அடைய முடியும். ஆனால், திமிர் பிடித்தவனால் அடைய முடியாது. நீ தோற்றது நல்லதே. உன் தோல்வியில் கடவுளின் வெற்றி அடங்கியுள்ளது. நீ (நான்)அழிவதால், அவர் (கடவுள்) தோன்ற வாய்ப்பு உண்டாகிறது.

  ஒருவர்  அரசியல்வாதியாக முடியவில்லை என்பதற்குக் காரணம், கடவுளுக்கு அவன் மீது மிகுந்த கருணை இருப்பதுதான். எந்த அரசியல்வாதியும் சுவர்க்கத்திற்குப் போக முடிந்ததாக நான் கேள்விப்பட்டதில்லை. அரசியல் சுவர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும் பாதையுமன்று. அரசியலில் நடக்கும் அக்கிரமங்கள், ஏமாற்று வேலைகள், சதிகள், கபடங்கள் முதலியவை நரகத்துக்கே பொருத்தமானவை.

  ஒருவர் அரசியலில் சேர்ந்து பாவச் செயல்கள் காரணமாக நரகம் செல்ல நேர்ந்தால் ஒரு பிரச்னை. அங்கு அவருக்கு முன்னால் சென்ற ஏராளமான அரசியல்வாதிகளால் ஒரே அடைசலாக இருக்கும். அங்கும் அவர்கள் பலவிதமான மோசடிகளிலும் சதிகளிலும் ஈடுபட்டிருப்பார்கள். நரகத்தின் ஆட்சியைக் கைப்பற்றவும் முயல்வார்கள். அவர்களின் பதவி ஆசை நரகத்துக்கும் அவர்களுடன் வருகிறது' என்கிற ஓஷோ, மேலும்  ஒரு குட்டி நிகழ்ச்சியைக் கூறி விளக்குகிறார்:

  "ஒருமுறை சித்திரகுப்தனின் தப்புக் கணக்கால் ஓர் அரசியல்வாதி சுவர்க்க வாசலுக்கு வந்துவிட்டார்.  அதே சமயம் இரண்டு சாதுக்களும் இறந்து சுவர்க்கத்தை வந்தடைந்தனர். சுவர்க்கக் காவலர்கள் அவர்களை ஓரமாக ஒதுங்கிக் காத்திருக்கச் சொல்லிவிட்டு, அரசியல்வாதியை வரவேற்கச் சென்றனர். சிவப்புக் கம்பளம் விரிக்கப்பட்டது. சாரங்கி,  தபேலா முதலிய இசைக்கருவிகள் முழங்கின. தேவகன்னியர் நடனமாடினர். மலர்மாரி பொழியப்பட்டது.

  சாதுக்கள் வருத்தப்பட்டனர். 'பாவியான இவன் மண்ணுலகில் ஆரவாரமாக வாழ்ந்தது போலவே இங்கும் கோலாகலமாக இப்படி வரவேற்கப்படுகிறானே' என்று வேதனையடைந்தனர். நம்மை சுவர்க்க அலுவலர்கள் காத்திருக்கும்படி சொல்கிறார்களே என்று திகைத்தனர். 

  அரசியல்வாதியை வரவேற்ற தேவர்களின் கூட்டம் அப்படியே முன்னேறிவிட்டது. அவர்கள் சாதுக்களை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. சாதுக்கள் வாயில் காப்பவரை அணுகி, 'இது என்ன தலைகீழாக இருக்கிறதே. ஏதாவது தப்புக் கணக்கா? எங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட வரவேற்புக் கொண்டாட்டம் கவனக்குறைவால் அந்த ஆளுக்கு அளிக்கப்பட்டுவிட்டதா? அந்த ரகசியத்தை எங்களுக்குத் தெரிவி' என்று கேட்டனர்.

  வாயில் காப்பவர் ஆறுதல் கூறுகிறார்: 'சாதுக்களே, பதற்றப்படாதீர்கள். உங்களைப் போன்றவர்கள் எப்போதும் சுவர்க்கத்திற்கு வந்தபடிதான் உள்ளனர். ஓர் அரசியல்வாதி இங்கு வருவதோ இதுதான் முதல் தடவை. எனவேதான் இத்தனை  கொண்டாட்டம். எங்கோ, ஏதோ தவறு நடந்துவிட்டது. இதை இனி மாற்ற முடியாது. 

  சாதுக்கள் இங்கு வருவது வாடிக்கை. இதில் விசேஷமில்லாததால் வரவேற்பில்லை' என்று  கூறும் தத்துவஞானி, தன்னிடம் கேள்வி கேட்டவரைப் பார்த்து, "உலக முயற்சிகளில் தோல்வியை ஒரு வரமெனலாம். தோற்றவனுக்கு தெய்வம் துணை. வென்றவன் திமிர் பிடித்து யாரிடமும் ஆலோசனை கேட்கமாட்டான். அதிர்ஷ்டவசமாக நீ தோற்றாய். அதனால்தான் என்னைத் தேடி வந்தாய். 

  இப்போது இங்கே நீ வந்துவிட்டதால், 'நான்' என்னும் உணர்வை உதறிவிடு. 'நான்' என்பதைக் கைவிட்டதும் நீ போய்ச் சேரவேண்டிய இடம் தெளிவாகிவிடும். குடும்ப வாழ்க்கையில் நாட்டம், அரசியல் ஆர்வம், எழுத்து மூலம் புகழ், ஆசை ஆகியவை மிகச் சிறு அளவிலாவது உன் மனத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும். 'நான்' என்னும் உணர்வு நீங்கினால் அந்தக் கறைகளும் மறைந்துவிடும்' என்கிறார் ஓஷோ. அதனால்தானோ என்னவோ பலரும் அரசியலுக்கு வர அஞ்சுகின்றனர்!

  - இடைமருதூர் கி. மஞ்சுளா

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai