எது தாம்பத்யம்?

நாகர்கோவிலிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் வழியில் உள்ள மருத்துவமனைக்கு உறவினர் ஒருவரைப் பார்க்கச் சென்றிருந்தேன்.
எது தாம்பத்யம்?

மனித வாழ்க்கையில் ஒவ்வொரு உறவும் தன்னளவில் முக்கியமான ஒன்றாக இருந்தாலும், சில உறவுகள் ஆழமானவை...சில உறவுகள் ஆத்மார்த்தமானவை, இன்னும் சில உறவுகள் இறுதி மூச்சு வரை தொடரும் அனுபந்தமானவை. அத்தகைய ஒரு உறவுதான் கணவன் மனைவி. அந்த உறவை மேன்மைப்படுத்தும் விதமான சம்பவம் ஒன்றினை அண்மையில் காண நேர்ந்ததை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

சில மாதங்களுக்கு முன்னர், நாகர்கோவிலிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் வழியில் உள்ள மருத்துவமனைக்கு உறவினர் ஒருவரைப் பார்க்கச் சென்றிருந்தேன். பார்த்துவிட்டு வெளியே வரும்போது நண்பகல் மணி 12- ஐ தாண்டிவிட்டது. அங்கிருந்து லோக்கல் பஸ் பிடித்து வடசேரி பஸ் நிலையம் வந்து சேரும்போது மதியம் ஒரு மணியாகிவிட்டது. இனி பஸ்ஸில் ஊர் சென்று இறங்கும் போது பிற்பகல் 2:30 மணிக்கு மேலாகிவிடும் என்று நினைத்துக் கொண்டு சாப்பிடுவதற்காக ஹோட்டலை நோக்கி நடந்தேன்.

அன்றைய தினத்தில் கொளுத்தும் வெயில்!. நடக்கும் போதே வியர்த்துக் கொட்டியது. பசி வேறு அதிகரிக்கவே, ஹோட்டலுக்குள் வேகமாக நுழைந்தேன். கை கழுவிவிட்டு இருக்கையில் அமர்ந்தேன்.

'என்ன வேணும்!' , என்றார் சர்வர். சொன்னேன். சொன்ன பதார்த்தங்கள் அனைத்தும் வந்தது. சாப்பிட ஆரம்பித்தேன்.

அச்சமயத்தில் 60 வயதை தாண்டிய தம்பதியினர் ஹோட்டலுக்குள் நுழைந்தனர். கணவரின் கையில் A4 size அளவுள்ள 'துணிப் பை'. துணிக்கடையில் துணி வாங்கியதற்காக கிடைத்திருக்கலாம். நாகர்கோயிலில் உள்ள ஒரு துணிக்கடையின் விளம்பரம் அதில் இருந்தது. பழசாகி கசங்கிய நிலையில் இருந்த அந்த கவரில் ஒரு தண்ணீர் பாட்டில் எட்டிப் பார்த்தது. இன்னும் சில பொருட்கள் பையில் இருப்பதற்கு அடையாளமாக பையானது சற்று வீங்கிப் போயிருநதது.

மெதுவாக நடந்து வந்து நான் சாப்பிடுக் கொண்டிருந்த மேஜையின் எதிர் பக்கத்தில் அமர்ந்தனர். மெலிந்த தேகம், குழிவிழுந்த கன்னம், நாலைந்து நாட்களாக ஷேவ் செய்யாத முகம், தலையில் வழுக்கையின் ஆரம்பம் இதுதான் அந்த கணவர். சட்டையையும் வேஷ்டியையும் துவைத்துப் போட்டிருந்தாலும் அவரின் ஏழ்மை அந்த துணியில் அப்பட்டமாகத் தெரிந்தது. வேலை செய்து முறுக்கேறிய கைகளில் வயோதிகத்தின் அடையாளமாக நரம்புகள் மட்டும் புடைத்துக் கொண்டிருநதது.

அந்தப் பெண்மணியின் கழுத்தில் மஞ்சள் கயிறு மட்டுமே! காதிலும் மூக்கிலும் கவரிங் நகைகள் பொலிவிழந்து நானும் இருக்கின்றேன் என்றது.

'என்ன வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டே சர்வர் அவர்கள் அருகில் வந்தார்.
'பிரியாணி எவ்வளவு?’ என்றார் அந்த பெரியவர்.

' ஃஆப் பிரியாணி 110 ரூபாய்’ -சர்வர்

அந்த கணவர், சட்டைப்பையில் விரலை விட்டு ரூபாயைப் பார்த்தார். பின் சர்வரிடம், 'குவாட்டர் பிரியாணி’ என்றார்.

'இரண்டா?’ இது சர்வர்.

'இல்லை, ஒன்று போதும்’ என்றார் கணவர். பேச்சிலேயே பசி மயக்கம் பெரியவரிடத்தில் நன்றாகத் தெரிநதது. மேஜையிலிருந்த ஒரு டம்ளர் தண்ணீரையும் ஒரே மடக்கில் குடித்தார். பிரியாணியை பெரியவர் முன் கொண்டு வந்து வைத்தார் சர்வர்.

தன் மனைவியிடம் அந்த பிளேட்டை நகர்த்தி வைத்து 'சாப்பிடு’ என்றார். மனைவியும் சாப்பிட ஆரம்பித்தார்.

பெரியவர் எச்சில் முழுங்குவது அவரின் தொண்டை காட்டிக் கொடுத்தது.

'அந்த இறைச்சித் துண்டுகளை சாப்பிடு’ என்று கரிசனத்தோடு தன் மனைவியிடம் கூறினார். மனைவி, கொஞ்சம் சாப்பிட்டு முடித்த பின், தன் கணவரிடம் பிளேட்டை நகர்த்தி சாப்பிடச் சொன்னார்.

தான் சாப்பிட்டு தன எச்சில்பட்ட மீதியை சாப்பிடச் சொல்லும் கணவன்மார்கள் மத்தியில், தன் மனைவியின் பசியை முதலில் போக்கி, பின் தன் பசிக்காக சாப்பிட்ட அந்த கணவர் உண்மையிலேயே மிகவும் உயர்ந்தவராகத் தெரிந்தார்.

படபடவென்று சாப்பிட்டு முடித்தார்.

பிரியாணி சாப்பிட வேண்டும் என்ற தன் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது போன்ற மகிழ்ச்சி அந்த பெண்மணியின் முகத்தில். தன் மனைவியின் ஆசையை பூர்த்தி செய்து விட்ட திருப்தி அந்த கணவனிடம்.

மனைவி கணவரைப் பார்த்தார். ‘வயிறு நிரம்பிவிட்டதா?’ என்று கேட்பதாய் இருந்தது அது. பதிலுக்கு கணவரும் ஆம் என்று தன் தலையை ஆட்டினார்.

என்ன ஒரு புரிந்து கொள்ளல்!

கண்டிப்பாக இருவருக்குமே வயிறு நிறைந்திருக்காது. ஆனால் ஒருவருக்கொருவர் காட்டிய அன்பு இருக்கிறதே! அது அளப்பரியது.

முதலிரவில் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு, விட்டுக் கொடுத்து கட்டிக் கொண்டு காமனை வென்றவர்கள், இன்று தங்கள் பார்வையாலேயே ஒருவருக்கொருவர் தங்கள் உணர்வுகளை பரிமாறிக் கொண்டார்களே! இந்த அன்புதானே உண்மையான தாம்பத்யம்! இந்த சுகத்திற்கு ஈடு இணை உண்டா? 'அந்த உறவில்’ கிடைக்காத இன்பம் இந்த ஒரு பார்வையிலேயே கிடைத்து விட்டதே!

ஒரு நாள் மட்டுமாவது அந்த தம்பதியரை பெரிய international ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று அவர்கள் விரும்பியதை சாப்பிட வைக்க வேண்டும் என்று மனதுக்குள் நினைத்தேன்.

இருவரும் கை கழுவி விட்டு வந்தனர். நானும் அவர்களின் பின்னால்!

பெரியவரின் முதுகைத் தட்டினேன். திரும்பினார்.

'ரூபாயை பத்திரமாக வச்சிக்குங்க! நீங்க கை கழுவ கீழே குனியும் போது, உங்கள் பாக்கெட்டிலிருந்து இது கீழே விழுந்து விட்டது’ என்று  ரூபாயை நீட்டினேன்.

'தம்பி! அது என் பணமில்லை!’ என்றவர், பில்லுக்கான பணத்தை கட்டிவிட்டு, தன் மனைவியுடன் தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தார்.

அவரின் தன்மானத்தை மனதுக்குள் மெச்சிக் கொண்டே நானும் வெளியில் இறங்கி நடக்க ஆரம்பித்தேன். மதிய வெயிலைக் காட்டிலும் அவரின் தன்மானம் என்னை அதிகமாக சுட்டெரிக்க ஆரம்பித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com